2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பலஸ்தீனிய போராட்டம்: ஹமாஸ் - ஃபட்டா

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் (Hamas) மற்றும் ஃபட்டா (Fatah) ஆகிய இரண்டு பலஸ்தீனிய பிரிவுகளுக்கு இடையிலான, ஒரு தசாப்தகால யுத்தத்தையும் பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய பணிகளில் ஒன்றாக, இருபிரிவினரும் கெய்ரோவில் சமரச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காஸா (Gaza) நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை ஃபட்டா ஆயுதக்குழுவின் ஆதரவுடன் ஹமாஸ் இயக்கம், தொடர்ச்சியாகப் பேணலாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எகிப்தின் இராஜதந்திரிகளே, கெய்ரோவில் குறித்த இந்த இணக்கப்பாடு ஏற்பட, தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸா மற்றும் மேற்கு பலஸ்தீனியப் பிராந்தியத்தில், இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதல்களுக்குப் பின்னர், தனித்தனியாக ஆட்சி அமைந்திருந்தன. ஹமாஸ், முந்தைய ஆண்டுகளில் தம்மால் கட்டுப்படுத்தப்படும் பிராந்தியங்களில், நாடாளுமன்றத் தேர்தல்களை வென்றிருந்தது என்பதுடன், ஃபட்டா ஆயுதக்குழுக்களை குறித்த பிராந்தியத்திலிருந்து முழுமையாக அகற்றுவதன் மூலமாக, தமது அதிகாரத்தை வலுப்படுத்தும் செயல்பாட்டிலும் ஈடுபட்டிருந்தது. எனினும், கடந்த வியாழக்கிழமை எட்டப்பட்ட உடன்படிக்கையின் படி, பேச்சுவார்த்தையாளர்கள் புதிய உடன்பாடு அமுலுக்கு வரும் டிசெம்பர் மாத காலப்பகுதியில், காஸா பிராந்தியத்தின் நிர்வாகப் பொறுப்புகள், ஃபட்டா ஆதரவுடனான ஹமாஸ் இயக்கத்துக்கு வழங்கப்படும் அதேவேளை, காஸாவுக்கும் எகிப்துக்குக்கும் இடையிலான ரஃபா (Rafah) எல்லை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் நிர்வாகம், ஃபட்டா இயக்கத்துக்கு வழங்கப்படுகின்றது. இது, பலஸ்தீனிய வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமையும் என, ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸலாஹ் அல்-பர்தாவை நம்பிக்கை வெளியிட்டுள்ளமை, குறித்த ஒப்பந்தத்தின் வலிதான தன்மையை புலப்படுத்துகின்றது.

ஹமாஸ் இயக்கமானது, பலஸ்தீனிய  விடுதலைக்காகப் போராடும் இஸ்லாமிய குழுக்களில், அதிக எண்ணிக்கையான போராளிகளைக் கொண்ட இயக்கமாகும். இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் (Islamic Resistance Movement) என அறியப்பட்ட இக்குழு, 1987இல் பலஸ்தீனிய மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளில்  இஸ்‌ரேல் ஆட்சியாளர்களின் அத்துமீறிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக உருவானது. ஹமாஸ் இராணுவ பிரிவான இஜெடின் அல் கஸ்ஸம் படைப்பிரிவுகளின் (Izzedine al-Qassam Brigades) தலைமையில், இஸ்‌ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டமொன்றை நடாத்துதல் மற்றும்  சமூக நலத்திட்டங்களை வழங்குதல் என, இரட்டை நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்த இயக்கம், 2005இல் இருந்து, பலஸ்தீனிய அரசியல் செயல்முறைகளில் ஈடுபட்டிருந்தது. ஹமாஸ் இயக்கமானது, அரபு உலகில் இஸ்லாமியக் குழுவாக தேர்தல் வாக்குப்பதிவு மூலம் வெற்றிபெற்றிருந்த முதலாவது அமைப்பாகும். இஸ்‌ரேல், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, மற்றும் பிற மேற்கத்தேய நாடுகளின் நட்பு நாடுகளால், ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படையிலேயே மேற்கத்தேய நாடுகள், இஸ்‌ரேலின் காஸா மற்றும் மேற்கு பலஸ்தீனிய பிராந்தியத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டு மே மாதம், ஹமாஸ் ஆட்சியாளர்கள் முதன்முறையாக, தமது புதிய கொள்கை ஆவணத்தை வெளியிட்டிருந்தனர். இஸ்‌ரேல் அங்கிகரிக்க மறுத்த குறித்த கொள்கை ஆவணமானது, 1967க்கு முன்னர் அமைந்த இடைக்கால பலஸ்தீனிய அரசை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தைப் பிரகடனப்படுத்தியதுடன், யூத-விரோதக் கொள்கையையும் தளர்த்தியிருந்தது. குறித்த கொள்கை ஆவணமானது, ஹமாஸ் தன்னை ஒரு பயங்கரவாத இயக்க பட்டியலிலிருந்து நியாயமான போராட்ட குழுவாக சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட எதுவாகக் கொள்கை வகுத்திருந்தது என்ற போதிலும், 1987இல் குறித்த இயக்கமானது நிறுவப்பட்ட தேவையை ஹமாஸ் இயக்கம் தளர்த்தியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஃபட்டா இயக்கமானது, 1950 களில் யசீர் அரபாத்தினால், பலஸ்தீனிய தேசியவாதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இது அரபாத்தின் தலைமையின் கீழ், ஆரம்பத்தில் ஒரு பலஸ்தீனிய அரசு உருவாக்கத்துக்கான இஸ்‌ரேலுக்கு எதிராக ஆயுதப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. ஆனால் ஹமாஸ் இயக்கக் கோட்பாட்டுக்கு முரணாக, பிற்காலத்தில் இஸ்‌ரேலின் உரிமையை உறுதிப்படுத்தியது. இதன் அடிப்படையில் இஸ்‌ரேல் மற்றும் அன்றைய பலஸ்தீனிய தலைவரான யசீர் அரபாத், இரு நாடுகளுக்கு இடையில் சமாதானமான முறையில் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர். 1993இல் ஒஸ்லோவில், இஸ்‌ரேலுடனான முதல் இடைக்கால சமாதான உடன்படிக்கை, அரபாத் தலைமையிலான ஃபட்டா - பலஸ்தீனிய அரசு கையெழுத்திட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு அரபாத்தின் மரணம், ஃபட்டா அதன் தலைமையின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட வழிவகுத்தது. அதன் அடைப்படையில் 2006இல், பலஸ்தீனிய இயக்கமான ஹாமாஸை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருந்த ஃபட்டா இயக்கம், தேர்தல்களில் தோல்வியடைந்திருந்ததுடன், இதன் தொடர்ச்சியாக ஜூன் 2007இல், இரு பிரிவுகளுக்கும் இடையில் வன்முறை மோதல்களின் பின்னர், காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினால் ஃபட்டா இராணுவக் குழு, முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஃபட்டா இயக்கத்தின் தலைவராக மஹ்மூத் அப்பாஸ் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், அவர் பலஸ்தீனிய அரசாங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் தெரிவாகியிருந்தார். 2006ஆம் ஆண்டு தேர்தல்களில் ஹமாஸ் வெற்றியீட்டியிருந்த போதிலும், மஹ்மூத் அப்பாஸ் தனது பதவியைத் துறக்கவில்லை. இந்நிலையியிலேயே கடந்த மே மாதம் அவர், ஹமாஸ் தலைவர் கலீத் மிஷாலுடன் சேர்ந்து, எகிப்தின் தலைநகரான கெய்ரோவில், தங்கள் பல வருட பிளவுகளை முடிவுக்கு கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர்.

பலஸ்தீனியர்கள் இந்த உடன்பாட்டை வரவேற்றிருந்தாலும், இரு தரப்பினரும் தமது முக்கிய வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்த்து, பொதுவானதொரு பலஸ்தீன அரசை நிறுவுவதன் மூலம், ஒன்றாக இணைந்து செயல்படுவார்களா என்பது பற்றி இன்னமும் சந்தேகமே நிலவுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .