2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பல்லினப் பண்பாடு: இணங்கியே வாழ்வோமா?

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜெரா

நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வி, ஆங்காங்கே வெளிப்படத் தொடங்க, இலங்கை வாழ் இனங்களுக்கிடையில் பல்லினப் பண்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மேற்குலக நாடுகளது பணத்தில் பணிபுரியும் தொண்டு நிறுவனதாரர்கள், பல்கலைக்கழக புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், இக்கருத்தைப் பரவலாகப் பேசிவருகின்றனர். இலங்கை போன்று இனச்சிக்கலைக் கொண்ட நாடுகளுக்குப் பல்லினப் பண்பாட்டுச் சூழல் வாழ்க்கை முறையைப் போதிக்க முன்னர், அக்கோட்பாடு அறிமுகமாகிய நாடுகளில் அது வெற்றிகண்டுள்ளதா, என்னென்ன வகையில் தோல்வியடைந்துள்ளது என்பதை ஆராய்தல் வேண்டும்.

உலகம் கிராமமாகிய சூழலில், பண்பாடுகளும் பண்பாடு பற்றிய சித்தாந்தங்களும் மாற்றுவடிவம் பெற்று வருகின்றன. அனைத்தையும், வணிகம் நோக்கிய பாதையில் இழுத்துப் போகும் புதிய உலக ஒழுங்கானது, தனித்துவமானதாக இருந்த பண்பாட்டையும், தன்வழிக்குக் கெண்டுவந்து விட்டது; ஒவ்வொரு முடுக்கிலும் வாழுகின்ற பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களைப் பேதமற்று உள்ளீர்த்துக் கொள்கின்றது. இன்றைய உலகமயச் சூழலில் எதற்கும் எல்லைகள் கிடையாது. அனைத்தும், முதலாளித்துவச் சிந்தனை வட்டத்துக்குட்பட்டே ஜீவிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழுகின்றன. தம் எல்லைகளைத் தகர்த்தெறிகின்றன. அடிமைப்படுத்தலின் அல்லது நவகொலனித்துவப்படுத்தலின் வடிவமாய்ப் பரப்பப்படும் நுகர்வுக் கலாசாரம், வணிக நோக்கிலான கலாசாரக் கூறுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது. அது, மேலும் மேலும் நாடுகளெங்கும் விரிவடைந்து, முதலாளித்துவக் கால்கள் வலுப்பெறுவதற்கு, சமச்சிந்தனையும் சமப் பண்பாடும் உடைய மக்கள் தேவைப்படுகின்றனர். இது முக்கியமாய் உணரப்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட்டதே, “பல்லினப் பண்பாடு” எனும் கருத்துருவம் ஆகும். பத்தொன்பதாம் (19) நூற்றாண்டில் இப்பண்பாடானது, மேற்கத்தேய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டது. சில நாடுகள், வணிக ரீதியான வெற்றியை இதில் கண்டன.

இவ்வகையில் ஆரம்பமாகிய பல்லினப் பண்பாட்டுக்கு, காலத்துக்குக் காலம் வரைவிலக்கணப்படுத்தல்கள் இடம்பெற்று வந்துள்ளன. ஆரம்பத்தில் ஒரு நாட்டில் அல்லது வட்டாரத்தில் பல இன, மொழி, மத வேறுபாடு கொண்ட மக்கள் கூட்டாக வாழ்தலை, பல்லினப் பண்பாடு என வரைவிலக்கணப்படுத்தினர். ஆனால் இன்றைய நிலையில், இக்கருத்து மேலும் செழுமை பெற்று, குறிப்பிட்ட பிராந்தியத்தில், பன்மைப் பண்பாடுகளைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்வதோடு, அவர்களிடையே அரசியல், சமூக, சமய, பொருளாதார ரீதியில் பரஸ்பர புரிந்துணர்வு பேணப்படுதலே, சரியான பல்லினப் பண்பாடாக அடையாளம் காணப்படுகின்றது. பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனங்களின் வாழ்வு நிலைமைகளை நிராகரிப்பதையும், அவர்தம் பண்பாட்டுப் பேணலுக்கு அனுமதி மறுப்பதையும், சரியான பல்லினப் பண்பாடாக ஏற்கமுடியாது எனவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு, அறிவியல் ரீதியான கோட்பாட்டாக்கத்தைப் பெற்றுவிட்ட பல்லினப் பண்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், இன்று, நேற்று உருவானவையல்ல. பதினெட்டாம் (18) நூற்றாண்டில், அறிவார்ந்த தளமொன்று அதற்குக் கிடைத்ததே தவிர, அந்நூற்றாண்டில் உருவாகவில்லை. மனித பரிணாமத்தில், நாகரிக நிலையை அடையும் போதே, பல்லினப் பண்பாடு முகிழ்ப்புப் பெற்றுவிட்டதாக எண்ணப்படுகின்றது. பண்டைய காலத்தில் ஆறு, மலை, குகை, மேட்டுப் பகுதிகள் போன்ற இயற்கை எல்லைகளுக்குள் மனிதக் கூட்டம், தம்மை வரையறுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இனக்குழுமங்களுக்கிடையே தொடர்புகள் அரிதாகவே காணப்பட்டன. இனக்குழும வாழ்வு எழுத்தின் அறிமுகம், நகர உருவாக்கம், அரச உருவாக்கம், விவசாயப் பொருளாதார அறிமுகம் போன்றவற்றின் வருகையோடு, நாகரிக நிலையை அடைந்தது.

இந்நாகரிகங்கள் ஒவ்வொன்றும் கொண்டிருந்த தொடர்புகள், பல்வேறு பண்பாட்டுக் கொடுக்கல் வாங்கல்களுக்கு வழிசமைத்தது. உதாரணமாக சிந்துவெளி, தமாசப்பத்தேமிய, சுமேதிய, எகிப்திய, கிரேக்க நாகரிகங்கள், தமக்கிடையே பரிமாறிக் கொண்ட பண்பாட்டம்சங்களைக் குறிப்பிடலாம். நாகரிகங்களின் அஸ்தமிப்போடு உருவான வரலாற்றுக் காலமும் பேரரச உருவாக்கங்களும், அடிமைப்படுத்தல்களைத் தீவிரப்படுத்தின. நாடு விட்டு நாடாக, பெரும் படைகளோடு பரந்த படையெடுப்புகள், பண்பாட்டு நிர்மூலமாக்கல்களுக்கு வழிசமைத்தது. ஒன்றையழித்து, அதன் எச்சங்களைக் கொண்டு இன்னொன்று கட்டியெழுப்பப்பட்டது. புதிதாய் அறிமுகமாகும் ஒவ்வொரு பண்பாட்டிலும், பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் கலந்திருந்தன. பல்லினப் பண்பாட்டைப் பொறுத்தவரையில், 16ஆம் நூற்றாண்டு வரை, இந்நிலைமையே நீடித்தது. இந்நூற்றாண்டில், ஐரோப்பாவில் உருவான மறுமலர்ச்சி, கைத்தொழிற்புரட்சி, பிரான்சியப் புரட்சி, நாடுகாண் பயணங்கள், போக்குவரத்து விருத்தி போன்றன, அனைத்து இனங்களையும் உலகத்துக்கு அறிமுகப்படுத்தின.

விருத்தியடைந்த மேற்கத்தேயர்கள், பல விருத்தி குறைந்த தேசங்களையும் இனங்களையும் கண்டுபிடித்து, படையியல் ரீதியாகக் கைப்பற்றிக் கொண்டனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர், இப்பின்னணியில் தமது பண்பாடுகளை, உலகம் முழுவதும் பரப்பினர். அதுவும் ஒரு கொலனித்துவ ரீதியிலானதாகவே அமைந்தது. இக்காலகட்டத்துக்கு முடிவுகட்ட உருவான பிரான்சியப் புரட்சியானது, உலகம் முழுவதும் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற சிந்தனைகளை ஏற்படுத்தியது. அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டம், சுதேச இன அடையாளப்படுத்தல்களுக்கான தேடலைத் தொடக்கிவைத்தது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், பல இனங்களை அத்தேடல் கண்டடைந்தது. இதுவே தேசியவாதம் எனப்படுகின்றது. தேசியவாதத்தின் முதிர்ச்சியில் உருவான உலகமயமாதல், முதலாளித்துவத்தை விஸ்தீரணப்படுத்தியது. கம்யூனிசத்தின் சரணடைதலோடு பெருவிருட்சமாகிய முதலாளித்துவம், உலகைக் கிராமமாக்கி, நுகர்வுக் கலாசாரம் கொண்ட இனங்களை உருவாக்கக் கருமமாற்றியது. அதற்காக உருவாக்கப்பட்ட பண்பாட்டுக் கோட்பாட்டாக்கமே, பல்லினப்பண்பாடு. இதனை நடைமுறைப்படுத்துவதில் மேற்கற்தேய நாடுகள் முன்னின்றாலும், பல குறை - நிறைகளைக் கொண்டு காணப்படுகின்றது.

உலக மக்கள் அனைவரும், தம் சக மனிதரை, அவரது பண்பாட்டம்சங்களை ஏற்று மதித்து நடக்க வைத்தமை, பல்லினப் பண்பாட்டின் நிறைவானதோர் அம்சமாகும். கடந்த நூற்றாண்டுகளில், மிக மோசமான அடக்கு முறைக்குள்ளும் அடிமைப் படுத்தல்களுக்குள்ளும் வாழ்ந்த கறுப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்களால் சமநிலையில் வைத்து நோக்கப்படுகின்றனர். அவர்தம் மதத்தையும் கலைப் பாரம்பரியங்களையும் அவர்கள் வாழும் இடங்களிளெல்லாம் பேணிக் கொள்வதற்கான வாய்ப்பை, இது வழங்கியுள்ளது. அரசியல் ரீதியாக சமத்துவ நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது. உதாரணமாக, கறுப்பினத்தவர்களை மிக மோசமாக அடக்கிய அமெரிக்கர்களுக்கே, கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா, ஜனாதிபதியாக வந்தமையைக் குறிப்பிடலாம். இது, நிறைவானதோர் அம்சமாகும்.

முன்னைய காலங்களில், குறிப்பிட்ட இனத்தவர், தமது பண்பாடு நிலவும் இடங்களில் மட்டுமே வாழமுடியும். அதையே, தமது வாழ்வுப் பிரதேசமாக கட்டுப்படுத்திக் கொள்வர். ஆனால், பல்லினப் பண்பாட்டின் வரவால், பணமும் வசதியும் உள்ள ஒருவர், உலகில் எங்கு சென்று வாழவும், தமது பண்பாட்டைப் பேணுவதற்குமான அங்கிகாரத்தை இது வழங்கியுள்ளது.

கடந்த நூற்றாண்டு வரையில், இனங்களுக்கிடையில் சமூக நல்லிணக்கமும் மனிதநேய உணர்வும் மனிதவுரிமைகளைப் பேணுவதில் சிரமமும் நிலவியே வந்தது. இத்தொடர்ச்சியான குறைபாட்டினாலேயே, முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் ஏற்பட்டன. இனங்களுக்கிடையில் பன்மைத்துவத்தையும் இணங்கிவாழ்தலையும் போதிக்கும் பல்லினப் பண்பாடு, மேற்கண்ட சிந்தனைகள், உலக இயங்கியலுக்கு அனுகூலமான வழியில் அமைய உதவுகின்றன.

நாகரிக நிலையை மனித சமுதாயம் அடைவதற்கு முன்பு, தாய்வழிச் சமூகமே மேலாதிக்கம் பெற்றிருந்தது எனப்படுகின்றது. பேரரச உருவாக்கங்களோடு வீரியம் பெற்ற ஆணாதிக்கம், பெண் தலைமைத்துவத்தையும் உரிமையையும் பறித்துக் கொண்டது. பல்லினங்களுக்கிடையில் சம அந்தஸ்தை வலியுறுத்தி, அதனையே நடைமுறைப்படுத்தும் பல்லினப் பண்பாடு, பெண் கல்வி வரை வழிசமைத்துள்ளது.

உலகில் வரலாற்றுக் காலத்திலிருந்து நிலவிவரும் பெரும்பான்மை, சிறுபான்மை இனச்சிக்கலை, ஓரளவுக்காவது தணிப்பதில், பல்லினப் பண்பாடு வெற்றியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். மிகவும் இறுக்கமான சமூக, சமய, சாதிப் பண்பாடுகளைப் பேணும் சமூகங்களிடையே உடைவு ஏற்படுகின்றமை, அதற்கு ஆதாரமாய் அமைகின்றது. ஜனநாயக, சமஷ்டி அடிப்படையில், தமது அரசியல், மத உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், பெற்றுக் கொள்வதற்குமான சுதந்திரத்தை இது வழங்கியுள்ளது. உதாரணமாக, மிக இறுக்கமான சமூக நடைமுறைகளைப் பேணும் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் குறிப்பிடலாம். பெரும்பான்மை மதமாக இருக்கும் இந்து மதத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, சிறுபான்மை மதமான சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங், அதிகாரம் மிக்க தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமையைக் குறிப்பிடலாம். இவ்வாறு, பல நிறைவான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், சில மறையான பக்கங்களையும் இது கொண்டுள்ளது.

பல்லினப் பண்பாடு, அறிவார்ந்த நிலையில் ஏற்கக் கூடியதாக இருந்தாலும், ஆழ்மனதில் புரையோடிப்போன ஆண்டான் - அடிமை சிந்தனை, இதனை அமுல்படுத்துவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் நிலவும் நிலைமைகள், பல்லிணப் பண்பாடில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. ஐக்கிய அமெரிக்காவுக்கான நிரந்தரக் குடியுரிமையை பெறும் அனைவருக்கும், “கிறீன் கார்ட்” வழங்கப்படும். அதில் தேச. இன, மத, மொழி வேறுபாடு இருப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான “கீறீன் அட்டைகள்” தான். ஏனெனில், அதனூடாகப் பல்லினத்தன்மையை மதிக்கும் நாடு என்பதை, உலகத்துக்கு அந்நாடு காட்டிக் கொள்கின்றது. ஆனால் அண்மையில் ஆபிரிக்க கறுப்பர் ஒருவரினதும் அமெரிக்க வெள்ளையர் ஒருவரினதும் “கிறீன் அட்டை”களை இலத்திரனியல் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தியபோது, இரண்டுக்குமிடையில் பதிவு அடிப்படையில் வேறுபாடு கடைப்பிடிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு அண்மைய பேரனர்த்தங்களின் போது கூட, அமெரிக்க வெள்ளையர்களின் அபிவிருத்திப் பணிகளுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும், மாகாண அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில் பாரபட்சம் காட்டப்பட்டிருந்தது.

மேலும், பல்லினப் பண்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவந்த பிரான்ஸ், அண்மைக்காலமாக அதிலிருந்து விலகிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கடந்த ஆண்டில் அந்நாடு, இஸ்லாமியப் பெண்களது மதப் பண்பாடான பர்தா அணிவதைத் தடைசெய்திருந்தது. பர்தா அணிந்து வந்து ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியமையடுத்தே, இத்தடைச்சட்டம் அமுலுக்கு வந்தது. கடந்த வாரத்திலும், பல்லினப் பண்பாட்டுக்கு எதிராக, மேலும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. பிரான்ஸின் நிரந்தரக் குடியுரிமையைப் பெறுவதற்கு, அந்நாட்டின், மொழி, மத,கலாசார அம்சங்களைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் பல்லினப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அடுத்து, கடந்த வருடத்தில் பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரும் கலவரம், பல்லினத்துவத்தைப் பேணுவதில் உள்ள சிரமத்தையே வெளிக்காட்டியது. அகதி அந்தஸ்துக்கோரி, பிரித்தானியாவில் இக்கலவரம் வெடித்தது. இப்பாரபட்சம், பாரம்பரியமாக அங்கு இருந்து வருகின்றது. உதாணரமாக, பிரித்தானியாவில் குடியேறும் பிறநாட்டு புத்திஜீவிகளுக்கு, நகரை அண்டிய பகுதிகளில் வேலை வழங்குவதில்லை. மாறாக, விருத்தி குறைந்த பகுதிகளிலேயே வழங்கப்படும். இது, அந்நாடு பல்லினப் பண்பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ளாததைக் காட்டுகிறது.

எனவே, உலகளவில் கேள்விக்குரிய ஒன்றாக மாறிவிட்ட பல்லினங்கள் இணைந்து வாழும் பண்பாட்டுச் சூழலை, நமது பகுதிகளுக்கும் பொருத்திப் பார்ப்பது அறிவுடையதன்று. சிறுபான்மையினர்களாகிய தமிழர்கள், மேலுள்ள இனங்களால் சகல வழிகளிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்ற நிலையில், மேலுள்ள குறைபாடுகளுடன் கூடிய பல்லினப் பண்பாட்டுச் சூழலை, தமிழர்களே வலிந்து ஏற்றுக்கொள்வதானது, மேலும் அடிமைப்படுத்தலுக்கே வழிசமைக்கும்.

பல்லினங்களும் இணைந்துவாழும் நாட்டுச் சூழலை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, முதலில் அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கடுத்த நிலையில், மதத்தலைவர்கள் அதனை ஏற்று நடத்தல் வேண்டும். அதன் பின்னரே, இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும், பல்லினத்தன்மையை ஏற்றுக்கொண்டு, இனங்களுக்கிடையில் பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் வாழத்தலைப்படுவர். ஒவ்வொரு கிராமத்தையும் பிரதேசத்தையும், பிரித்துப் பிரித்து வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகளால், பல்லினச் சூழலை அவ்வளவு இலகுவில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதே, இன்றைய யதார்த்தம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .