2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானின் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜனகன் முத்துக்குமார்

பயங்கரவாதத்தின் தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று, பாகிஸ்தானாகும். குறிப்பாக 2007- 2013 காலப்பகுதியில், கிட்டத்தட்ட 730 பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு இருந்தன; அவற்றால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரணித்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர். 2012ஆம் ஆண்டில் மட்டும், 217 பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பயங்கரவாதம் 1980களில் ஆப்கானியப் போரின் மூலம் தோன்றியிருந்தது. ஐக்கிய அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் “முஜாகிதீன்” இயக்கத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்யத்தொடங்கியிருந்தன. ஐ.அமெரிக்க இராணுவத்தினர், குறித்த இயக்க உறுப்பினர்களைப் பயிற்றுவித்தனர். ஐ.அமெரிக்க அரசாங்கம் அவர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக நிழல் போரொன்றில் பயன்படுத்தப்படுவதற்கு நிதியளித்தனர். பயங்கரவாதம், பயங்கரவாத வெறுப்பு ஆகியவை, பாகிஸ்தானிய சமுதாயத்தில் ஊக்குவிக்கப்பட்டன.

பாரம்பரியமாக, அமைதியானதும் சகிப்புத்தன்மையுள்ளதுமான சமுதாயமாகவே பாகிஸ்தான் இருந்திருந்தது. 1960கள், 1970களில் பாகிஸ்தான் மேற்கத்தேயச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஓர் இடமாகவும் இருந்திருந்தது. இயற்கை அழகு, நல்ல காலநிலை ஆகியவற்றைக் கொண்ட, மிகுந்த பாதுகாப்பான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். அந்தக் காலப்பகுதியில் பல மேற்கத்தேயச் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதன் மூலமாக, தனது பொருளாதாரத்தையும் அதிகரித்திருந்தது. அனைத்து மதப் பிரிவுகளும் மிகவும் சுமூகமான உறவை அனுபவித்திருந்தன. பாகிஸ்தான், பல இன சமுதாயமாக இருந்தது, வயதுவாரியாக இருந்து, சரியான இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தது. அந்நிலை, ஆப்கானியப் போர் மூலம் முழுமையாகவே மாற்றியமைக்கப்பட்டது.

உண்மையில், சோவியத் ஒன்றியம், ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெற்ற பின்னர், ஆப்கானிஸ்தானில் இருந்த குறித்த போராளிக் குழுமங்களை, ஐ.அமெரிக்கா தொடர்ச்சியாக மூலோபாய பங்காளிகளில் ஒன்றாகக் கருதவில்லை. ஐ.அமெரிக்க, மேற்கத்திய உலகில் நாயகர்கள் என்று ஒரு பொழுதில் கருதப்பட்ட அத்தகைய போராளிகள், வேலையில்லாமல் இருந்தனர். போரும் சண்டையும் தவிர, எந்தவொரு திறனுக்கும்  அற்றிருந்த அவர்கள், வேறெந்தத் தொழில் முனைவு, கல்வி, சமூக மேம்பாட்டுக்காகப் பயிற்றுவிக்கப்படவில்லை. அவர்களின் நிதியும் கூட நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், வெளிநாட்டு நிகழ்ச்சிநிரல்களின் உத்தரவின் பேரில் ஆயுதப் போரில் ஈடுபடுவது தவிர, அவர்களின் வாழ்வாதாரத்தை எளிதில் சம்பாதித்துக் கொள்வதற்கு தவிர வேறு வழி ஒன்றுமே இருக்கவில்லை.

2001இல் 9/11 தாக்குதலுக்குப் பின்னர், இந்த ‘நாயகர்கள்’ ஐ.அமெரிக்காவாலும் அதன் நட்பு நாடுகளாலும், “பயங்கரவாதிகள்” என்று பெயரிடப்பட்டனர். அவர்களை உலகளவில் எதிர்க்கும் பொருட்டு, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’, அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. இந்தப் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்’, பாகிஸ்தானும் ஐ.அமெரிக்காவும் நேட்டோவும் சேர்ந்து, குறித்த போரை முன்னெடுத்திருந்தன.

எனினும், 2014இன் பின்னரான அரசியல் நிகழ்ச்சிநிரல் முற்றிலும் மாறுபட்டதாகும். குறிப்பாக, 2018இல், ஜனாதிபதி ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், ‘பயங்கரவாதத்துக்கு’ பாகிஸ்தான் உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான டுவிட்டர் செய்தியொன்றைப் பரவவிட்டதுடன், மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது என்றே அறியலாம். எது எவ்வாறாயினும், ஐ.அமெரிக்காவின் இராஜதந்திர நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தல், பிராந்தியத்தில் செல்வாக்கைப் பேணுதல் என்பதற்குப் பாகிஸ்தானின் உறவுநிலை என்பது ஐ.அமெரிக்காவுக்கு மிகவும் வேண்டப்பட்டது என்பதும், ‘பயங்கரவாதத்துக்கு’ எதிரான தாக்குதல், இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராகத் தம்மை தயார்செய்தல், போரியல் தளவாடக் கொள்வனவுகளில் வல்லாதிக்கமான ஓர் அரசுடன் ஸ்திரமான நிலையைப் பேணுதல், ஆப்கான் - ஈராக் கைப்பற்றுதலைத் தொடர்ந்து மாற்றுப்பட்டிருக்கும் சர்வதேச வல்லாண்மைப் போட்டியில் மத்திய கிழக்குக்கு மிகவும் அண்மையிலான பூகோளவியல் அரசியலில் முக்கியம் பெரும் மூன்றாவது நாடாக (இஸ்ரேல், சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக) அமைத்தல் என்பதில், ஐ.அமெரிக்காவின் உறவுநிலை பாகிஸ்தானுக்கு வேண்டப்பட்டதாகும்.

இந்நிலையிலேயே அண்மையில் பாகிஸ்தானின் ஐ.அமெரிக்காவுக்கான தூதுவர், ஐ.அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியன அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள உள்ளார்ந்த முரண்பாடுகளுக்கு அப்பால், பல விடயங்களில் இணங்கிப்போதல் இரு நாடுகளுக்கும் அவசியமானது எனத் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது. தூதுவரின் இக்கருத்தானது, ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கு எதிரான டுவீட், அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் ஐ.அமெரிக்காவுக்கு ‘பயங்கரவாதம்’ தொடர்பாக தொடர்ச்சியாக வழங்கிவந்த (பேணிவந்த) உளவுப் பரிமாற்றத்தை நிறுத்தியமை, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனின் இருப்பிடம் பற்றி ஐ.அமெரிக்க உளவுத்துறைக்குத் தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் ஷாஹில் அப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தேசத்துரோகக் குற்றத்துக்காக மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஐ.அமெரிக்காவுக்கு நாடுகடத்துதல் தொடர்பில் ஐ.அமெரிக்காவின் வேண்டுகோளும் அதற்கு பாகிஸ்தான் எதிர்த்தமை ஆகியவை மத்தியிலேயே வந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இருந்து பார்க்கும் போது, பாகிஸ்தானின் தொடர்ச்சியான ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’, சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றது என்பது, மறுக்கமுடியாத ஓர் உண்மையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .