2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதீட்டுக்குள் பலி கொடுக்கப்பட்ட பிரதேச செயலகம்

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மறுக்கும் கதைதான் நமது நாட்டின் அநேக விடயங்களில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமும் நல்லதோர் உதாரணமாகும்.

2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் (மார்ச் 12) நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இந்தப் பாதீட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக்கூடாது என்ற வகையிலான கருத்துகள் பொதுவௌியில் முன்வைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும், கிழக்கைப் பொறுத்தவரையில்  வேறுவேறான தேவைகள், பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் சூடு பிடிக்கிறது.

கல்முனை தமிழ் உப - பிரதேச செயலகத்தைத்  தரமுயர்த்துவதற்கான ஏற்பாடுகள், பல தடவைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போதும், அதற்கு இடைஞ்சல்கள் முஸ்லிம் தரப்பினரால் வந்து கொண்டே இருந்தன.

இப்போது,  இந்த விவகாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருப்பதாகவே பேசப்படுகிறது.

கல்முனை தமிழ் உப - பிரதேச செயலகத்தை, பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தினால், பாதீட்டுக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற நிபந்தனையொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.  
இதையடுத்து, பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தினால் அரசாங்கத்தில் இருப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டிய நிலை வரும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிரட்டல் நிலைப்பாடொன்றை எடுத்தது. 
இதைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கான அரசியல் நெருக்கடியென்றே அரசியல் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. இவ்வளவு காலமாக இல்லாத ஒரு ‘கிடுக்குப்பிடி’யைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது ஏன் போட்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பமுடியாமல் இருக்க முடியவில்லை.  

இருந்தாலும் கடந்த வாரம், அமைச்சர் வஜிர அபேவர்தன, முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸுடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.

“நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கையில், முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையென கருதப்படும் கல்முனைக்குத் தனித் தமிழ்ப் பிரதேச செயலகம் கூட்டமைப்பின் பேச்சைக் கேட்டுத் தரம் உயர்த்தப்படுமானால், அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.  அதைவிட அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது நல்லது” என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், கட்சித்தலைமையான ரவூப் ஹக்கீமுக்குத் தெரிவித்தாகவும் கட்சியின் நிலைப்பாடும் அதுதான் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நிலத் தொடர்பான வகையில், கல்முனைத் தமிழ் பிரதேச செயலகத்தை அமைப்பதற்கு ஆலோசிக்கமுடியும் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்னொரு தரப்பினர் எண்ணம் கொண்டிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. 

கல்முனைத் தமிழ்ப் பிரிவு தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவை வழங்கியே வருகின்றனர். 

‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’, ‘ஒரு தாய்ப் பிள்ளை உறவு’, ‘அண்ணன், தம்பி உறவு’ என்றெல்லாம் வெறும் உதட்டளவில்  பேசிக்கொண்டு, விரிசல்களை வளர்த்துக்  கொண்டே செல்லும் அளவுக்கான தொடர் செயற்பாடுகள் முனைப்புப் பெற்று வருவது இருசமூகத்துக்கும் பயனற்றவை தான்.

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள்ளும்  தமிழ்ப் பிரிவினைவாதத்துக்குள்ளும்  சிக்குண்டு இருப்பதாகத்தான் பல்வேறு தரப்புகளும் பேசிக் கொள்கின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு ஒன்றே, தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்கான அடிப்படை என்று தமிழர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்காகத்தான், அஹிம்சை, ஆயுத வழிகளில்  போராட்டங்கள் நடைபெற்றன. 1987ஆம் ஆண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தமிழ், முஸ்லிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டபோது இருந்த நிலைமைக்கும், இன்றைய நிலைக்கும் குறிப்பாக, நிகழ்காலச் செயற்பாடுகள், எதிர்கால நிலைமைகள் குறித்துப் பலரும் பலவாறு பேசிக் கொண்டாலும் அடிப்படை உண்மையும் யதார்த்தமும் எந்த விடயத்திலும் இருந்தே தீரும். அதை யாராலும் மறுக்க முடியாது.  

1993.07.28ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் படி,  27 உப - பிதேச செயலகங்கள் 1994ஆம் ஆண்டில் இருந்து பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப்பட்டன.  இருந்தபோதும், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அல்லது கல்முனை பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) இன்று வரை தரமுயர்த்தப்படவில்லை.  

தரமுயர்த்தப்படாமைக்கான காரணம், தெட்டத் தெளிவாக இருக்கின்றது. இவ்விடத்தில், தரமுயர்த்தப்படுவதற்கான  தேவை அரசியல்வாதிகளுக்கானதா, மக்களுக்கானதா என்ற கேள்வியைத் தான் கேட்டுக் கொள்ள முடிகிறது.

முஸ்லிம் அரசியல்வாதிகள், நேரடியாகவே தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுவது அவர்களுடைய அரசியலுக்கானதாக இருக்கலாம். இருந்தாலும், மக்களும் அவ்வாறான சிந்தனையுடன் இருப்பதானது கவலையளிப்பதாகும். 

பன்மைத்தவம் பற்றியும் பன்மைத்துவம் சார் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்ற பொழுதிலும், செயற்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையிலும் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச சபை விவகாரம் பன்மைத்துவ மீறலுக்கு நல்லதோர் உதாரணமாக அமைகின்றது. 

இந்த இடத்தில்தான், தமிழ் மக்கள், தமது அரச கருமங்களைச் செய்து கொள்ளக்கூடிய கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அமைத்துக் கொள்வதால், முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள், பின்னடைவுகள், பாதிப்புகள் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

உண்மையில், அரச நிர்வாகத் திணைக்களங்கள் இன, மத ரீதியாகப் பிரிக்கப்படக்கூடாது என்ற கட்டாயம் இல்லாதிருப்பது நமது நாட்டின் ஒரு குறைபாடாகத் தெரிகிறது. 

வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், சாதாரணமாக ஏற்கெனவே இருக்கின்ற உப அலகை, பிரதேச செயலகமாக மாற்றிக் கொள்வதற்குக்கூட அனுமதிக்க முடியாது என்றிருக்கையில், இரு மாகாணங்கள் இணைப்புக்கு எப்போது சாத்தியம் கிடைக்கப் போகிறது, என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அரசியல் அதிகாரத்துக்கான உதாரணங்களாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இணைக்கப்பட்ட மட்டக்களப்பு மத்திய வலயம், அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திலிருந்து பிரித்து, பொத்துவில் கல்வி வலயம்,  கல்முனையிலிருந்து பிரித்து சாய்ந்தமருது தனிப் பிரதேச சபையை உருவாக்கும் முயற்சி, அதேபோன்று கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டமையைக் கூறமுடியும். .

இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலம், அதன் பின்னரான காலப்பகுதி, தற்போதைய நிலை என்று பார்க்கும் போது, பல்வேறு பாதுகாப்பு சார் பிரச்சினைகளைத் தமிழ், முஸ்லிம் மக்கள்  எதிர்கொண்டனர். இருந்தாலும் அவற்றிலிருந்து, இலகுவில் தப்பித்துக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்தான். 

கல்முனை நகரம், முஸ்லிம்களின் இதயம் என்று சொல்லிக் கொள்கின்ற அளவுக்கு, கல்முனை நகரம் இப்போது பெரும்பாலான முஸ்லிம்களால் நிரம்பி வழிவதற்கு முன்னரான காலப்பகுதி, யாராலும் ஞாபகப்படுத்தப்படுவதில்லை.

கல்முனைக்குடி, சாய்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர், மாளிகைக்காடு, அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, ஒலுவில் என ஏனைய கிராமங்களிலிருந்து வந்து, கல்முனையில் வாடகைக் கடைகளைப் பெற்று, வியாபாரத்தை மேற்கொண்டவர்கள், சொந்தமாகக் கொள்வனவு செய்து கொண்டவர்கள் என அந்த நிரம்பல் நடைபெற்றிருக்கிறது. அவை கொள்வனவு செய்யப்பட்ட விதங்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  

அது போன்று, இலங்கையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யாத நகரம் ஒன்று கூற முடியுமா? காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, கண்டி அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். 
தமிழ் மக்கள், தங்களை தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்று முயற்சிப்பதில் தவறு எங்கே இருக்கின்றது? என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம்  முன்னிலையில் வந்து நிற்கின்றது.

நல்லிணக்கத்துக்கான பல சமிக்ஞைகள் தமிழ் மக்களினால் பல தடவைகள் காட்டப்பட்டுள்ளது. இதற்கு, நல்லதோர் உதாரணம் கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியின் போது, பெரும்பான்மை இருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை  வழங்கியிருந்தது.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசியல் அதிகாரப் பரிமாறலில்போது, எப்போதும் முஸ்லிம் தரப்பு முன்நிற்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தெரிந்தோ தெரியாமலோ, தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், எப்போதும் எதிர்க்கட்சியாகவே இருந்து பழக்கப்பட்டுள்ளார்கள். இப்போது, அரசியல் அதிகாரப் பீடத்துக்குள் தீர்மானிக்கின்ற தரப்பாக வளர்ச்சி பெற முனைவது நடைபெறுகிறது. இது ஏற்கெனவே தீர்மானிக்கும் தரப்பாக இருந்தோருக்கு, சகிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கும்.

அதன் ஒரு செயற்பாடே, பாதீட்டின் இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவளித்து, கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் பலி கொடுக்கப்பட்டமையாகும். 

இலங்கையில் மனிதாபிமானம் என்பதைக் கடந்து, மதவாதமும் இனவாதமும் முனைப்புப் பெற்றுச் செல்வது, நடுநிலைமையுடன் சிந்திப்பவர்களை கவலை கொள்ளச் செய்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .