2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரசார ஆயுதமாகும் போர்க்குற்ற விசாரணை

கே. சஞ்சயன்   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கில் நீதி கோரும் மக்களின் போராட்டங்கள், தீவிரம் பெறத் தொடங்கி விட்டன.   

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள்; காணிகளைப் பறிகொடுத்து நிற்கிறவர்களின் போராட்டங்கள்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள்; இறுதிக்கட்டப் போரின் போது, நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதியை வழங்கக் கோரும் போராட்டங்கள், போன்றவை நடக்கின்றன.   

இத்தகைய போராட்டங்கள், போர் முடிவுக்கு வந்த பின்னர், சுமார் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது இவை தீவிரமடையும்; பின்னர் சில நாள்களில் தணிந்து போகும்.  

இலங்கை விவகாரம் ஜெனீவாவில் பேசப்படுகின்ற காலகட்டங்களில் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், அந்தக் கட்டத்தில் எழுப்பும் குரல்கள், ஐ.நாவின் காதுகளில் வலுவாக எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையில், இத்தகைய கூட்டத்தொடர் காலங்களில், நீதிகோரும் போராட்டங்கள் வலுவடைவது வழக்கம்.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர், வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தான், கடந்த சில வாரங்களாகவே, நீதி கோரும் மக்களின் போராட்டங்கள் தீவிரம் பெற ஆரம்பித்திருக்கின்றன.  

ஐ.நாவின் ஊடாகத் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விட வேண்டும்; தாம் எதிர்கொண்ட அநீதிகளுக்கு, நீதியைப் பெற்று விட வேண்டும் என்ற ஆவலில் தான், இத்தகைய போராட்டங்களைத் தமிழ் மக்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் கடப்பாட்டை, சர்வதேச அமைப்புகள் நிறைவேற்றத் தவறியிருக்கின்றன.   

போர்க்கால மீறல்கள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும் தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போதும், எதுவுமே நடந்திருக்கவில்லை.  

ஒட்டுமொத்தத்தில் போருக்குப் பிந்திய 10 ஆண்டுகளில் இலங்கையில் நிகழ்ந்த மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கின்ற முயற்சிகள், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.  

போரின் போது, தமிழர்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதை, போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதை, ஏற்றுக்கொண்ட சர்வதேச சமூகத்தால், ஐ.நா அமைப்பு முறைகளால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவோ, குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவோ முடியவில்லை.  

குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை நிரூபிக்க முடியாமல் போனதால், இந்த நிலை என்று கருத முடியாது. குற்றங்கள் நிகழ்ந்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் பல இருந்தும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும் உருப்படியான எந்தப் பொறிமுறையையும் சர்வதேச சமூகத்தால் உருவாக்க முடியாமல் போனதே, இந்த நிலைமைக்கான காரணம்.  

உருப்படியான ஒரு பொறுப்புக்கூறச் செய்யும் பொறிமுறை உருவாக்கலில் இதுவரை சந்தித்துள்ள தோல்விக்கு, சர்வதேச சமூகம் கையாண்ட வழிமுறை தவறா அல்லது வேறேதும் காரணமா என்று ஆராயப்பட வேண்டியுள்ளது.  

கடந்த நான்காம் திகதி கிளிநொச்சியில், நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், “இலங்கை விவகாரத்தை ஐ.நா பொதுச்செயலாளரிடம் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் காலம் வந்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.  

போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பான தீர்மானங்களை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியவர் விக்னேஸ்வரன். அவர், ஒரு முன்னாள் நீதியரசரும் கூட. ஆனாலும், அவரது எதிர்பார்ப்பும் கருத்தும், வியப்புக்கு உரியவையாக உள்ளன.   

ஏனென்றால், இலங்கை விவகாரத்தை ஐ.நா பொதுச்செயலாளரிடம் கொண்டு செல்லும் நேரம் வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஐ.நா பொதுச்செயலாளரிடம் இலங்கையில் நடந்த மீறல்கள் தொடர்பான விவகாரம் கொண்டு செல்லப்பட்டு, 10 ஆண்டுகளாகின்றன. போர் முடிந்த பின்னர், அதுபற்றி ஐ.நா பொதுச்செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரும் நேரில் வந்து, போர் நடந்த பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.  

போர் முடிந்து ஓர் ஆண்டுக்குப் பின்னரும், பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கை எடுக்காத நிலையில், அதுபற்றி ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவொன்றை 2010இல் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.  

அந்தக் குழுவின் அறிக்கை, 2011இல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் மீது, தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற நிலையில் தான், பான் கீ மூன் அதை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளைக்கு 2012ஆம் ஆண்டு அனுப்பினார்.   

அதை அடிப்படையாகக் கொண்டு தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த அறிக்கையை வைத்து, அவரால் எதுவும் செய்யக்கூடிய நிலை இருந்திருந்தால், பான் கீ மூன், அதை நவநீதம்பிள்ளைக்கு அனுப்பியிருக்கமாட்டார்.  

ஐ.நா பொதுச்செயலாளர் அந்த அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பியிருந்தால், அங்கு ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளாலும் நிராகரிக்கப்பட்டிருக்கும். அப்போதைய நிலையில் மாத்திரமன்றி, இப்போதைய நிலையிலும் கூட, ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாத நிலையே உள்ளது. அதை உணர்ந்தே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக, நெருக்கடி கொடுக்கட்டும் என்று, நவநீதம்பிள்ளைக்கு அந்த அறிக்கையை பான் கீ மூன் அனுப்பியிருந்தார்.  

எனவே, ஐ.நா பொதுச்செயலாளரின் கவனத்துக்கு இலங்கை விவகாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விக்னேஸ்வரனின் கருத்து, வலுவற்றதொன்றாகவே இருக்கிறது.  

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் அதிகாரமற்ற நிலையையும் அரசுகளின் அமைப்பான ஐ.நாவில், நீதி என்பதற்கு அப்பால், அரசுகளின் கூட்டுகளே கவனம் பெறுகின்றன என்பதையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது.   

இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளரிடம் இந்த விவகாரத்தை மீண்டும் கொண்டு செல்வதன் ஊடாக, எதையாவது உருப்படியாகச் சாதிக்க முடியுமா என்றால், அதற்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் தென்படவில்லை.  

அதைவிட, சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்தும் சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை ஒன்றின் ஊடாக, நீதி, பொறுப்புக்கூறலுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஐ.நா பொதுச்சபையை வலியுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.  

ஐ.நா பொதுச்சபை அல்லது பாதுகாப்புச் சபையின் ஊடாக, தமிழர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, உலகின் எந்த நாட்டிடமும் இருப்பதாகக் கூறமுடியாது. ஜெனீவாவில் தீர்மானம் கொண்டு வந்த நாடுகள் மத்தியிலும் அத்தகைய எண்ணப்பாடு இல்லை.  

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்களைக் கொண்டு வந்தமை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தவும் தான் என்ற கருத்துத் தவறானது. அந்த நாடுகள் தமது பூகோள அரசியல் நலன்களை அடைவதற்கு, இந்த மனித உரிமை மீறல் விவகாரத்தை, போர்க்குற்ற விவகாரத்தை ஒரு துருப்புச் சீட்டாகவே பாவித்தன.  

அவ்வாறில்லாவிட்டால், 10 ஆண்டுகளாக நீதிக்காக ஏங்கும் மக்களின் குரல்களை, அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது; அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்க  முடியாது.  

இலங்கையின் ஊடாக, தமது நலன்களை அடைய எத்தனிக்கும் நாடுகள், வரையறுக்கப்பட்ட அழுத்தங்களைக் கொடுக்கும் நகர்வுகளின் ஊடாக, தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டன.

அத்தகைய நாடுகளைப் பொறுத்தவரையில், பாதுகாப்புச் சபையின் ஊடாகவோ, பொதுச்சபையின் ஊடாகவோ இந்தப் பிரச்சினை அணுகப்படுவது சாதகமற்றது. அதனால், இதனை வைத்து, அந்த நாடுகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.  

அதைவிட, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெற்றுக் கொண்டதைப் போன்று, பாதுகாப்புச் சபையிலோ, பொதுச்சபையிலோ, இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தையோ, சுதந்திரமான ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைக்கும் தீர்மானத்தையோ இலகுவாக நிறைவேற்றி விட முடியாது. இந்த யதார்த்தம் வடக்கின் முன்னாள் முதலமைச்சருக்குத் தெரியாதது அல்ல.   

ஆனாலும், அவரும் அவரைப் போன்றவர்களும், இந்த விவகாரத்தை ஜெனீவாவில் இருந்து நியூயோர்க் நோக்கி நகர்த்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.  

ஏனென்றால் இது, எந்தக் காலத்திலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கைகொடுக்கக் கூடிய ஒரு மலிவான பிரசார ஆயுதமாக இருக்கிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .