2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள்

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஐரோப்பிய நாடுகள் மத்தியில், குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தை வலிமைப்படுத்துதல் தொடர்பிலான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் பெருமளவில் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியாக, ஐரோப்பிய பொருளாதார விடயங்களைப் பொறுத்தவரையில், அத்தகைய ஒத்துழைப்பு நடைமுறையில் இல்லை என்பது, ஐரோப்பியத் தலைவர்களைக் கவலைக்கு உட்படச் செய்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோன் வந்த பின்னர், ஜேர்மனிய, பிரெஞ்சு அதிகாரிகள், தங்கள் பொருளாதார மோதல்களை மறைக்க முயன்றனர். எனினும், உண்மையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் வலுவாகவே உள்ளன. மக்ரோன் யூரோப்பகுதியில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் நம்புகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளாக, குறிப்பாக ஐரோப்பிய எல்லைகளுக்குள் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை அங்கெலா மேர்க்கெல் வலியுறுத்துகின்றார்.

கடந்த ஆண்டுகளில், பேர்லினுக்கும் பரிஸுக்கும் இடையேயான வேறுபாடுகள் பொருளாதாரம் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் வெளிப்படையாக வெளிப்பட்டிருந்தன. குறிப்பாக, பிரான்ஸில் ஜனாதிபதியாக ஃபொஷ்வா ஒலாந்தே இருந்த காலத்தில், இரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்துவதற்கு எதிராக, சிரியாவுக்கு எதிராக இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளத் தலைப்பட்ட போதும், ஜேர்மன் அரசாங்கம், சிரியாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆயினும், பிரெஞ்சு ஜனாதிபதி ஒலாந்தே, அத்தகைய தாக்குதலை பிரித்தானியாவுடன் இணைந்து ஒரு முறை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் குறித்த தாக்குதலுக்கு, பிற நாடுகளும் தயாராகவேண்டும் என அவர் வெளியிட்ட கூற்றுக்கு, ஜேர்மனிய அரசாங்கத்தால் நேரடியாகவே மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சிரியாவில் தலையீடு செய்ய, ஜேர்மனிக்கு எந்த காரணமும் இல்லை என்று, ஜேர்மன் கூறியிருந்தது.

அதன் தொடர்ச்சியான முயற்சியாக, ஐ.நா பாதுகாப்புச் சபையின் உடன்படிக்கையில், சிரியாவில் இராணுவத் தலையீடொன்றைச் செய்வதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற பிரான்ஸ் திட்டமிட்டிருந்தபோது, அம்முயற்சியையும் ஜேர்மன், தனது இராஜதந்திர நகர்வுகளால் முறியடித்திருந்தது. இந்நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாகவே ஒரு புறம், மக்ரோன் நிர்வாகம், சிரிய அரசாங்கத்துக்கு எதிராகத் தொடர்ச்சியாகவே ஒலாந்தே அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துள்ள அதேவேளை, சிரியாவில் அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ நடவடிக்கைளை மேற்கொள்வதை பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது.

பேர்லின், பரிஸ் இரண்டும், இருவேறுபட்ட விடயங்களில் தற்போது இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகளை எடுத்துக் கொள்கின்றன. ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடியைப் பற்றி இமானுவல் மக்ரோனுடன் உடன்படுவதாகவும், இரு நாடுகளும் ஐரோப்பாவில் தற்போதைய நிதி, அரசியல் நெருக்கடியைத் தீர்க்க ஒன்றாக முயற்சி செய்வதாகவும், மேர்க்கெல் தொடர்ந்து கூறியுள்ளார், ஆனால் இருவரது கொள்கைகளும் வேறுவேறானவை. ஒரு புறம், மேர்க்கெலின் பொருளாதாரத் திட்டங்களுடன் தனது திட்டங்கள் முரண்படுவதாக, பிரெஞ்சு ஜனாதிபதி நம்புகிறார், மறுபுறம், மக்ரோன், ஐரோப்பாவில் ஒரு வளரும் தலைவராக இருக்கும் பட்சத்திலும், ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிற்பாடும், பிரான்ஸுடன் இணைகிப்போகவேண்டிய நிலை, ஜேர்மனுக்கு உண்டு, அதன் பிரகாரம், மக்ரோனை நேரடியாக எதிர்க்கமுடியாத நிலைக்கு, மேர்க்கெல் தள்ளப்படுக்கின்றார்.

எது எவ்வாறாயினும், மேர்க்கெலின் சிக்கனக் கொள்கைகள், ஐரோப்பியாவிலோ அல்லது ஜேர்மனிலோ பயன் தந்திருக்கவில்லை. மறுபுறத்தில், மக்ரோனின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பிரான்ஸிலும் ஐரோப்பிய நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதற்கு, அண்மைய “மஞ்சள் அங்கி” எதிர்ப்புப் போராட்டம் நல்லதொரு சான்றாகும்.

மேர்க்கெல், 2021இல் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்ரோனைப் பொறுத்தவரை, அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் பிரகாரம், அரசியல் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, நல்லதொரு நிலையில் அவர் இல்லை. மக்ரோனின் பிரபலமானது, 22 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிரான்ஸில் அடுத்த பொதுத் தேர்தல்களில் மக்ரோனோ அல்லது அவரது கட்சியோ வெற்றிபெறும் என்பதில், மிகவும் நம்பிக்கையீனமே காணப்படுகின்றது. பிரான்ஸில் பல அரசியல் ஆய்வாளர்கள், மக்ரோனின் அரசியல் விதி சார்க்கோசி அல்லது ஒலாந்தேயை விடச் சிறந்ததாக இருக்காது என்றே நம்புகின்றனர்.

எதிர்காலத்தில், பேர்லின், பரிஸ் இடையேயான தற்போதைய பிரச்சினைகள், சர்வதேச அமைப்புகளின் நெருக்கடி மேற்படி முரண்பாடுகளை வளர்க்கும், அல்லது, மேர்க்கெல், மக்ரோன் ஆகியோருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள், ஐரோப்பிய நிதிய நெருக்கடியின் மீது வலுவாகத் தாக்கம் செலுத்தும். எனினும், இரு தலைவர்களும் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. மாறாக, பேர்லின், பரிஸின் அரசியல், பொருளாதார உறவுகளில், மேர்க்கெல், மக்ரோன் ஆகியோர், ஒருவருக்கொருவர் அடுத்தவரது பொருளாதார, அரசியல் முடிவுகளைச் சவால்களுக்கு உட்படுத்தவே ஒவ்வொரு சாத்தியமான விதத்திலும் முயல்கின்றனர். பேர்லினுக்கும் பரிஸுக்கும் இடையிலான உறவுகளின் மோதல்கள் அனைத்தும், ஐரோப்பா முழுவதும் பரவி வருகின்ற நெருக்கடியின் தெளிவான உதாரணமாக உள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் அரசியல், பொருளாதாரக் கூட்டணியை இது வெகுவாகவே பாதிக்கின்றது. இவ்விடயம், விரைவில் முடிவுக்கு வரப்போகும் ஒன்றல்ல என்பதுடன், அது ஒட்டுமொத்த ஐரோப்பியப் பாதுகாப்பு, பொருளாதாரக் கட்டமைப்பையும் வெகுவாகவே பாதிக்கவல்லது என்பதையும் மறுக்கமுடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X