2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 ஜூன் 29 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.   

அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. 

திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது எளிதல்ல. அவை நீண்ட காலத்துக்கு முடிவின்றி இழுபடுவதுண்டு.   

இது உலக அரசியலில், கூட்டிணைவிலிருந்து ஒரு நாடு பிரிந்து போகும்போதும் நிகழும். இது விவாகரத்துகளை விட வில்லங்கமானது. இன்னொரு வழியில் சொல்வதனால் இது இருளின் ஒளியில் வழிதேடிய கதைதான்.   

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் நடைபெற்று ஓராண்டு ஆகிவிட்டது. பிரித்தானியர்கள் வெளியேற வாக்களித்தபோதும் இன்னமும் பிரித்தானியாவால் வெளியேற இயலவில்லை.   

பிரெக்ஸிட்டை வெற்றிகரமாக நடாத்துவதற்கான ஆணை வேண்டித் தேர்தலுக்குச் சென்ற பிரித்தானியப் பிரதமர், ஏற்கெனவே தன்னிடமிருந்த நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்து, சிறுபான்மை அரசை நிறுவியுள்ளார். 

ஏற்கெனவே திசையற்றுச் சென்றிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நட்டாற்றில் நிற்கிறது. சில பயங்கரவாதத் தாக்குதல்கள், மோசமடையும் பொருளாதார நிலைவரம் என நிச்சயமின்மையை நோக்கி, பிரித்தானியா பயணித்துக் கொண்டிருக்கிறது.   

அடுத்த தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் செயன்முறையில் வலிமையாகச் செயற்பட, தமக்கு வலுவான நாடாளுமன்றப் பெரும்பான்மை வேண்டும் என்பது பிரதான காரணியாக முன்வைக்கப்பட்டது. 

ஆனால், அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியும் தொழிலாளர் போராட்டங்களும் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளின் பின்னர், பழைமைவாதக் கட்சியை ஆட்சியில் இருத்தாது எனப் பழைமைவாதக் கட்சியும் அதன் பிரதான ஆதரவாளர்களான நிதிமூலதனத்தின் பிரதிநிதிகள், பல்தேசியக் கம்பெனிகள், இராணுவ மற்றும் உளவுத்துறை மேல்அடுக்குகளில் உள்ளவர்கள் ஆகியோர் நன்கு அறிவர். 

அவசர அவசரமாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் இன்னொரு காரணம், தொழிற்கட்சி இன்னமும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்றாக இல்லை. அதன் உள்முரண்பாடுகளும் அதன் தலைவர் ஜெரமி கோர்பனுக்கு எதிரான அலை கட்சிக்குள் நிலவியுள்ள நிலையில், தேர்தல்களைச் சந்திப்பது இலகுவானது என்பது அதன் கணிப்பு. 

தெரெசா மே, ‘பிரித்தானியாவின் வெளியேற்றம் கடினமானது’ என மீண்டும் மீண்டும் சொல்வதன் ஊடு, பழைமைவாதக் கட்சிக்கு வாக்களிக்கக் கோரி நின்றார்.   

தேர்தல் முடிவுகள், மேயின் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளை மக்கள் எதிர்த்தமையையும் தேசியவாதத்தின் பின்னடைவையும் காட்டி நின்றன. 

இப்பின்ணணியில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பதான தெரேசா மேயின் அணுகுமுறை, அமெரிக்காவின் அண்மைய வெளியுறவுக் கொள்கை அறிவிப்புடன் முடிந்து விட்டது. 

ட்ரம்ப், “ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதிலிருந்து வெளியேறவுள்ள பிரித்தானியாவையும் கூட்டாளிகளாகக் கொள்ள முடியாது” என்றும் ‘அமெரிக்கா முதல்’ வெளியுறவுக் கொள்கையில் மாற்றமேதும் இல்லை என அறிவித்துள்ளார். இதன் விளைவால், மே பிரெக்ஸிட்டிற்கான புதிய திட்டங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையிலேயே இவ்வாரம் இப்பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன.   

இதன் பின்புலத்தில், முதலாளித்துவத்தின் நெருக்கடியின் சில அடிப்படைகளை நோக்குதல் பொருத்தம்.

 முதலாளித்துவத்தை கோட்பாட்டுருவாக்கம் செய்த அறிஞர்கள், ‘இயற்கையான ஒழுங்கமைப்பு’ என்றொரு கருத்தாக்கத்தை உருவாக்கி, தங்களது கோட்பாடுகள் யாவற்றையும் ‘இயற்கை விதிகள்’ என்ற வடிவத்திலேயே வார்த்துக் கொடுத்ததோடு, இயற்கை விதிகளின் கீழ் முதலாளித்துவம் இயங்கும் என்றார்கள். 

இயற்கை எப்படி தனக்கென விதிகளை வகுத்துக் கொண்டிருப்பதாக அன்று தெரிய வந்திருந்ததோ, அதேபோன்ற இயற்கை விதிகளின் அடிப்படையில் முதலாளித்துவம் இயங்கும் என்றார்கள். 

மூலதனத்தில் அரசு விதித்து வந்த கட்டுப்பாடுகளும் தலையீடுகளும்தான் ‘கட்டற்ற வர்த்தகத்தின்’ இயற்கையான நிலைமைகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்றார்கள்.  

முதலாளித்துவவாதிகளின் இந்த வாதம், கருத்துநிலை சர்வாதிகாரப் பிரகடனமாகவும் ஒரு தெய்வ நிலைக்கு முதலாளித்துவத்தை உயர்த்தி வைப்பதாகவும் இருந்தது.

இப்படியொரு கருத்துநிலைச் சர்வாதிகாரம் இன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. 

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளும் மிகப் பெரிய அளவில் அதிகரிப்பதற்கு நவீன தாரளவாதக் கொள்கைகள் வழி வகுத்துள்ளன. சிறு உற்பத்திகளைப் பெரும் நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளன. வேலையின்மை வீதத்தை அதிகப்படுத்தியதுடன் பட்டினியையும் அதிகரித்து உள்ளன.   

இந்நிலையில், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயகத் தேர்தல்கள் நடைமுறையில் இருக்கிறபோது, முதலாளித்துவத்தால் எப்படித் தாக்குப் பிடித்திருக்க முடியும்? 

வேறுவிதமாகக் கேட்பது என்றால், உலக நிதி மூலதன ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, இந்தப் பொருளாதார ஒழுங்கமைப்பு, ஜனநாயக அரசியலில் எப்படிப் பிழைத்திருக்க முடியும்? இந்தக் கேள்விக்குப் பதிலாக, பன்னாட்டு நிதி மூலதனக்காரர்களும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள உள்நாட்டு முதலாளிகளும் பலப்பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். அதன் இன்னொரு கட்டம்தான் அண்மைய பிரித்தானியத் தேர்தல்.   

இவ்வாரம், பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றன. 

அமெரிக்காவை உதவிக்கு அழைக்க இயலாத நிலையில், தனது பிரெஞ்சு, ஜேர்மன் சகபாடிகளுடன் பேசிச் சரிக்கட்டும் நிலைக்கு தெரேசா மே தள்ளப்பட்டார். மே, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுடனும் ஜேர்மனி சான்சலர் மேக்கலுடனும் தொடர்ந்து பேசுகிறார்.   

இதற்கிடையில், தெரேசா மே பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெறத் தவறியமைக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என அவரது பழைமைவாதக் கட்சியின் ஒரு பிரிவினர் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

இதேவேளை, பிரித்தானியத் தேர்தல் முடிவுகள், சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பு வாக்காகும் என்பதை ஐரோப்பிய நாடுகள் உணர்ந்துள்ளன. பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்கெடுப்பின்போது, முக்கிய பங்காற்றிய தேசியவாதக் கட்சியாக, பெரிய பிரித்தானிய சுதந்திரக் கட்சி (UKIP) ஒரு ஆசனத்தையேனும் பெறத் தவறியமை தேசியவாதத்தின் சரிவைக் காட்டி நிற்கிறது. 

இவை, இன்னொரு வகையில் தொழிலாளர்கள் போராடுவதற்கு ஒழுங்குபடுத்துகிறார்கள் என்பதையும் தேசியவாதத்தின் துணைகொண்டு இந்நெருக்கடியைத் திசைதிருப்பவியலாது என்பதையும் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மை நாடுகளின் அதிகாரங்களும் நன்கறிந்துள்ளன.   

இதன் விளைவால், பிரெஞ்சு ஜனாதிபதி, பிரித்தானியப் பிரதமருடனான சந்திப்பின் பின்னர், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவு பிரித்தானிய மக்களால் எடுக்கப்பட்டது. அம்முடிவை நான் மதிக்கிறேன். ஆனால், பிரித்தானியா வெளியேறுவது மீதான பேச்சுவார்த்தைகளும் பேரங்களும் முழுமையாக முடிவுறாத வரையிலும் கதவு திறந்தே இருக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும், பின்வாங்குவது அதிக சிரமமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, யதார்த்தபூர்வமாக இருக்க வேண்டும்” என்றார்.   

இதன் மூலம், இரண்டு விடயங்களைத் தெளிவாக அவர் எடுத்துரைத்தார். முதலாவது, பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள்  உண்டென்பதையும் அதையே, தாங்கள் விரும்புவதாகவும் சொன்னார். 

இரண்டாவது, அவ்வாறு செய்வதெனில் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமேயன்றி மாறாக, பிரிவதற்கான பேச்சுகளில் ஈடுபட்டால், அதிலிருந்து மீள்வது கடினம் என்பதையும் வலியுறுத்தினார்.   

இதேவேளை, ஜேர்மன் நிதியமைச்சர் ‘பிரெக்ஸிட்’ தொடர்பில் பின்வருமாறு சொன்னார். “பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவில், தாங்கள் நிலைத்திருப்போமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது, நாங்கள் அம்முடிவுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பினால், உண்மையில், கதவுகள் திறந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்”.  
இக்கூற்றுகள் அவர்கள், பிரெக்ஸிட்டை வேறு திசையில் நகர்த்த முனைவதைக் காட்டுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஐரோப்பாவுக்கு சவால்விடும் வெளியுறவுக் கொள்கையும் ஐரோப்பாவெங்கும் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அரசுகள் வர்த்தகப் போட்டியில் ஈடுபட்டுள்ள போதும் தவிர்க்கவியலாமல் ஒன்றையொன்று பற்றிப் பிடித்து, ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தைத் தக்க வைக்கவேண்டிய நிலையில் உள்ளன.   

அடையாள ரீதியாகவும் முதலாளித்துவத்தின் அடிப்படைகளிலும் பிரித்தானியாவின் வெளியேற்றம், முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் முன்மொழிந்த திறந்த எல்லைகள், திறந்த சந்தைகளைக் கேள்விக்குட்படுத்துகின்றன.

1989 இல் பெர்லின் சுவர் வீழ்ந்த போது, அது முதலாளித்துவ உலகமயமாக்கத்தின் வெற்றியாகவும் சோசலிசத்தின் இறுதித் தோல்வியாகவும் சித்திரிக்கப்பட்டது. 

தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியும் உற்பத்தி மற்றும் சந்தையின் உலகமயமாக்கமும் உலகத்தையே ஒரு கிராமமாக மாற்றி விட்டதால், இனித் தேசிய எல்லைகள் தகர்ந்து விழும் என்றும் கூறப்பட்டது. 

அது உண்மையென்று கருதும் வண்ணம், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள், முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பிணைக்கப்பட்டன.  

இந்தத் திருமணம், அந்நாடுகளின் பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்திவிடும் என்றும், கிழக்கு ஐரோப்பா அளிக்கும் மலிவான உழைப்பின் காரணமாகக் கிட்டும் கூடுதல் வருவாய், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கப் பயன்படும் என்றும் மாயைகள் உருவாக்கப்பட்டன. 

ஆனால், கிழக்கு ஐரோப்பா வளர்ச்சி பெறவில்லை. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்தி, சொந்த நாட்டுத் தொழிலாளர்களைப் புறக்கணித்தனர். 

இன்னொரு புறம் மூன்றாமுலக நாடுகளில் இருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள் மிகக்குறைவான ஊதியத்துக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டதால், பிரித்தானியாவின் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமும் வேலைவாய்ப்பை இழந்தது. 

மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும் எனும்படியான ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள், மேற்கு ஐரோப்பியத் தொழிலாளிகள் ஏற்கெனவே பெற்றிருந்த உரிமைகளை இரத்து செய்தது. 

இவை பிரித்தானியத் தொழிலாளி வர்க்கத்தின் மீதான இன்னொரு வகையான போராகியது. இதன் விதைகளே இன்று அறுவடையாகின்றன. பிரித்தானிய உழைக்கும் மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழிகள் ஏதுமில்லை என்பதை உணர்கிறார்கள்.   

இன்று பிரித்தானிய அரசியல் பல காரணிகளில் தங்கியுள்ளது. முதலாவது, ஆளும் தெரேசா மேயின் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை. எனவே, நாடாளுமன்ற அனுமதி தேவைப்படும் விடயங்களுக்கு அனுமதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியாது. 

இரண்டாவது, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பன் வலுவான தலைவராகவும் குறிப்பாக இளந்தலைமுறையினர் விரும்பும் பிரபல்யமான ஒருவராகவும் உருவெடுத்துள்ளார்.

மூன்றாவது, பிரித்தானியத் தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வேலையின்மைக்கு எதிராகவும் போராடத் தொடங்கியுள்ளார்கள். 

நான்காவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான அங்காடிகள் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கும்படி கோருகிறார்கள். 

ஐந்தாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர், பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான வர்த்தகம் 40 சதவீதமும் அன்னிய முதலீடு 20 சதவீதமும் வீழ்ச்சி அடையக்கூடும் என்ற மதிப்பீடுகள் நிதியியல் பேரழிவுக்கான எச்சரிக்கையாக உள்ளன.  

திரும்புகிற திசையெல்லாம் முட்டுக்கட்டைகள் நிறைந்திருக்கின்றன. முழுமையாக மீளவியலாதுள்ள உலகளாவியப் பொருளாதாரத்தின் நிலையும் அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பும் போகும் வழியற்ற நிலையை உருவாக்கியுள்ளன. 

இப்போது நடந்துவிடும் எனச் சொல்லப்பட்ட பிரெக்ஸிட் இன்னமும் நிகழவில்லை. எப்போது, எப்படி நிகழும் என்று யாராலும் சொல்லவியலும். 

ஆனால், பிரெக்ஸிட் நல்லபடியாக நிகழும் என அரசுகள், பல்தேசியக் கம்பெனிகள், ஊடகங்கள் எல்லாம் சொல்கின்றன. 

ஆனால், யாருக்கு நல்லபடியாக நிகழும் என்பதுதான் இங்கே வினா. இப்போது நிகழ்வது இருளில் ஒளியில் வழியைத் தேடுவதன்றி வேறல்ல.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X