2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

புதிய அரசமைப்பு: கருவில் கலையும் சிசு

கே. சஞ்சயன்   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்குச் சாதகமாக வெளிவரத் தொடங்கியவுடனேயே, எழுந்த முதலாவது கேள்வி, கூட்டு அரசாங்கம் தொடருமா என்பதல்ல. கூட்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடருமா என்பதாகவே இருந்தது.  

கூட்டு அரசாங்கம் தொடராது என்பது, தேர்தலுக்கு முன்னரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கூறி வந்த ஆரூடமாகத்தான் இருந்தது. ​ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களும் கூட, தனித்து ஆட்சியமைக்குமாறு தமது தலைமைக்கு நச்சரித்துக் கொண்டிருந்தனர்.  

எனவே, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்தாலும், சாதகமாக அமைந்தாலும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலம், தேர்தலுக்கு முன்னரே, நிச்சயமற்ற சூழலில்தான் இருந்தது. எனவே, அதுபற்றிய விவாதம் முதலில் முன்னிலை பெறவில்லை.  

ஆனால், 44.69 சதவீத வாக்குகளைப் பெற்று, மஹிந்த ராஜபக்ஷ அணி முன்னிலை பெற்றபோது, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கைகூடுமா என்ற நியாயமான சந்தேகமே பலரிடமும் தோன்றியது.  
உள்ளூராட்சித் தேர்தல், இந்தப் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் பெரும் பின்னடைவையும் தடைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

புதிய அரசமைப்பு ஒன்றின் மூலம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை கூட்டமைப்புத் தலைமையிடம் இருக்கிறது. அதையே, தற்போதைய அரசாங்கமும், தமது வாக்குறுதியாக வழங்கியிருந்தது.  

ஆனாலும், இந்தப் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள், இடைக்கால அறிக்கையை வெளியிட்டு, பாதி வழியைக் கடந்துள்ள நிலையில்தான், அதற்குச் சோதனை வந்திருக்கிறது.  

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால், மஹிந்த ராஜபக்ஷ எழுச்சி பெற்று விடுவார் என்பது ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால், அவர் இந்தளவுக்கு பலம் கொண்டவராக மாறுவார் என்பதுதான் யாரும் எதிர்பார்க்காத விடயம்.  

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் இழுத்தடித்ததன் பின்னணியே, அது மஹிந்தவுக்கு வாய்ப்பாகி விடும் என்ற அச்சத்தினால் தான்.   

இவ்வாறான நிலையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு இந்த உள்ளூராட்சித் தேர்தல் தடங்கலை ஏற்படுத்தும் என்பதை முன்னரே அரசியல் தலைவர்கள் பலரும் கணித்திருந்தனர்.  

அதனால்தான், உள்ளூராட்சித் தேர்தலையோ, அல்லது வேறு எந்தத் தேர்தலையோ நடத்துவதற்கு முன்னர், புதிய அரசமைப்புக்கான கருத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.  

ஆனாலும், ஒரு கட்டத்துக்கு மேல், அவரும்கூட, அதற்கான அழுத்தங்களைக் கொடுக்கவில்லை. உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்தும் பிற்போட முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டபோது, அதன்பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் எதுவும் யோசிக்காமல், தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

அரசமைப்புக்கான கருத்து வாக்கெடுப்பில், மக்களால் நிராகரிக்கப்படுவதென்பது வேறு, அத்தகைய அரசமைப்பு வரையப்பட முன்னரே முடங்கிப் போவதென்பது வேறு.  

கிட்டத்தட்ட புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது, கருவிலேயே கலைக்கப்படும் சிசுவின் நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.  

அரசியல் குழப்பங்கள், மக்களின் ஆணைகள் குறித்தெல்லாம் தேர்தலுக்குப் பின்னர் பேசப்பட்டாலும், தமிழர் தரப்பைத் தவிர, யாருமே அரசமைப்பு மாற்றத்தைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் காணவில்லை.   

ஏனென்றால், அவர்களுக்கு இது அவசியமான தேவையாகத் தெரியவில்லை. தற்போதைய அரசமைப்பின் ஊடாகவும் அவர்களால் அரசியல் நடத்த முடியும் என்பதால், அவர்கள் அதில் கரிசனை காட்டவில்லை.  

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கிலும் தெற்கிலும், இந்த அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையே, பிரதான பேசுபொருளாக மாற்றப்பட்டிருந்தது.  

இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சியின் அடிப்படையிலானது என்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாதது; அதற்கு விரோதமானது என்றும் வடக்கில் பிரசாரம் செய்யப்பட்டது.  

அதேவேளை, தெற்கில், இந்த இடைக்கால அறிக்கை, தமிழீழத்தை உருவாக்கவுள்ளது; சமஷ்டியைக் கொடுக்கப் போகிறது என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது.  

ஆக, அரசமைப்பு மாற்ற முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கான ஓர் ஆயுதமாகவே இந்த உள்ளூராட்சித் தேர்தல், பல்வேறு அரசியல் சக்திகளாலும், கட்சிகளாலும் பயன்படுத்தப்பட்டது.  

வடக்கில் இந்த இடைக்கால அறிக்கைக்குத் தமிழ் மக்கள் அங்கிகாரத்தை அளித்தனரோ இல்லையோ என்பதைவிட, தெற்கில் அதற்கு எதிராக விழுந்த வாக்குகள் அதிகம் என்பதை மறந்து விடக்கூடாது.  

அதற்காக, இந்த இடைக்கால அறிக்கையைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்; இதற்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வை அவர்கள் எதிர்பார்க்கவில்லை;  இதிலேயே திருப்தியாக உள்ளனர் என்ற நியாயத்தைக் கூற முடியாது.  

இப்படியான நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் பெற்றிருக்கின்ற பின்னடைவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள வெற்றியும் இந்த அரசமைப்பு மாற்றத்துக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.  

மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையே பலப்படுத்தியவர். தமிழ் மக்களுடன் நியாயமாக அதிகாரங்கள் பகிரப்படுவதையும் அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. தமிழர்களையும் முஸ்லிம்களையும் மொட்டைச் சுற்றும் வண்டுகளாகவும் தேனீக்களாகவும் தான் பார்க்கின்றார்கள்.  

அவர்கள் அதிகாரங்களைப் பகிரக்கூடிய, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யக்கூடிய அல்லது நிறைவேற்று அதிகாரத்தைப் பலவீனப்படுத்தக் கூடிய ஓர் அரசமைப்பைத் தோற்கடிக்கவே முனைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், பஷில் ராஜபக்ஷ அளித்துள்ள பேட்டி ஒன்றில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்று, ராஜபக்ஷக்கள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்வோம் என்று கூறியிருக்கிறார்.  

ஆக, மஹிந்த அணியினர் அதிகாரக் குவிப்பில் இன்னமும் உறுதியாகவும் குறியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரங்களைப் பகிரக் கூடிய ஓர் அரசமைப்புக்கு ஒத்துழைக்கப் போவதில்லை.  

தற்போதைய அரசாங்கம், பதவியில் இருந்த காலத்தில் அரசமைப்பு மாற்றம் உள்ளிட்ட வேகமாகச் செய்ய வேண்டிய பல விடயங்களை செய்யத் தவறிவிட்டது. கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே, அரசாங்கம் பெரும் சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறது.  

அரசமைப்பை உருவாக்குவதில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்திருந்த போது, பெரும் நெருக்கடி காணப்பட்டது. இப்போது கூட்டு அரசாங்கத்தில் இருந்தாலும் அது தற்காலிகமானது என்ற நிலையில், இரண்டு கட்சிகளும், புதிய அரசமைப்பை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.  

இப்படிப்பட்ட நிலையில், புதிய அரசமைப்புக்கான வரைவைத் தயாரிப்பதே இன்றுள்ள நிலையில் சந்தேகத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அதையும் தாண்டி, அதை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதில் பெரும் பிரச்சினை எழலாம்.  

ஏனென்றால், சந்தர்ப்பம் பார்த்து, ​ஐ.தே.கவின் காலை இழுத்து விழுத்துவதற்கு மஹிந்த அணி தயாராக இருக்கிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் ஆட்டுவிக்கின்ற அளவுக்கு அதன் ஆதிக்கம் அரசாங்கத்துக்குள்ளேயும் இருக்கிறது.  

உள்ளூராட்சித் தேர்தலிலேயே தமிழீழம் என்று பேசி, சிங்கள மக்களைத் தன்பக்கம் திருப்பிய மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசமைப்பை, அது தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்காத ஓட்டை ஒடிசலான ஒன்றாக இருந்தாலும் கூட, அதைத் தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகவே இருப்பார்.  

இப்படியான நிலையில், கூட்டு அரசாங்கத்தின் நிலையும் கேள்விக்குள்ளாகி, மஹிந்த அணியும் பலமடைந்துள்ள சூழலில், தற்போதைய அரசாங்கம் சிக்கலான விடயங்களைத் தவிர்த்துக் கொண்டு செல்லவே பார்க்கும். 

இந்தநிலையில், சம்பந்தன் போன்றவர்கள், அரசாங்கத்துக்கான மக்களின் ஆணையை அவ்வப்போது நினைவுபடுத்தினாலும், அதைக் கண்டும் காணாதது போன்று ஒதுக்கித் தள்ளிக்கொண்டு, காலத்தை ஓட்டுவதற்கு தற்போதைய அரசாங்கம் முடிவு செய்தால், அது ஆச்சரியப்படக் கூடிய அரசியல் நகர்வாக இருக்காது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .