2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய ஆண்டின் அரசியல்

Ahilan Kadirgamar   / 2018 ஜனவரி 01 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்புக் குறிப்புகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி 2015இல், கடும்போக்கு ஆட்சிபுரிந்து வந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், ஜனநாயக மாற்றத்தால் தூக்கியெறியப்பட்டமை, நம்பிக்கைக்கான மிகப்பெரும் தருணமாக அமைந்தது. ஜனநாயகத்தின் காவலர்களாக இருக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும், அச்சமின்றித் தம்மை ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்பை, அச்சந்தர்ப்பம் மீண்டும் வழங்கியது.

போருக்குப் பின்னரான வடக்கும் கிழக்கும் போன்ற சில பிராந்தியங்களில், இந்த ஜனநாயக இடைவெளியானது, இரவும் பகலும் போன்ற வித்தியாசமாக இருந்தது. போர், போருக்குப் பின்னைய காலங்கள் என, தசாப்தங்களாகவே தம்மை வெளிப்படுத்த அஞ்சிய மக்கள், தமது காணிகளை மீளப் பெறவும், காணாமல் போனோரை நினைவூட்டவும் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.

மறுபக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம், அதனுடைய ஆரம்ப 100நாள் வேலைத்திட்டத்தைத் தாண்டி, தமது அடைவுகள் எனக் காட்டுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான அரசமைப்புத் திருத்தம் தான், அதன் பிரதான அடைவு. அதன் பின்னர், குறைபாடுள்ள கொள்கைகள், மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி ஆகியன, இவ்வரசாங்கக் காலத்தின் முதற்பாதியைக் களங்கப்படுத்திவிட்டன.

அரசாங்கமும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசமைப்பு அரசியல் தீர்வுச் செயற்பாட்டில், பயன்தரு விதமாக, மக்களை ஈடுபடுத்தவில்லை. நல்லிணக்கச் செயற்பாடுகள் என்று சொல்லப்படும் முன்னெடுப்புகள், கொழும்பின் மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் சர்வதேச சமூகத்துக்குமான நன்மைகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டன.

நீண்டகாலத்துக்கு நீடிக்கும் வரட்சியால் ஏற்பட்ட கிராமிய ஏமாற்றம், இளைஞர்களின் வேலையின்மை, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு ஆகியவை, மக்களின் அங்கலாய்ப்பை அதிகரிக்கின்றன.புதிய ஆண்டு பிறக்கும் வேளையில், வங்குரோத்தான அரசியல் கட்சிகளால், தேர்தல் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பதும், அல்லது அரசியல்வாதிகளினதும் நண்பர்களினதும் நலன்களுக்காகச் செயற்படுவதற்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், முன்னுரிமையானதாக அமைந்துள்ளது. நீருக்கான அணுக்கம், குப்பை சேகரிப்பு, மலசலகூட வசதிகள், கிராமிய வீதிகள், சமுதாய வசதிகள் ஆகியன உள்ளடங்கலாக, ஊர்ப்பகுதி உட்கட்டமைப்புப் பற்றியதே, உள்ளூராட்சி மன்றங்களாகும்.

ஆனால், இந்தத் தேர்தல் பிரசாரங்களில், இவைபற்றிக் கேட்கக் கிடைக்க வாய்ப்பில்லை. ஐ.தே.கவாக இருக்கலாம், ஸ்ரீ ல.சு.கவாக இருக்கலாம், ஒன்றிணைந்த எதிரணியாக இருக்கலாம், த.தே.கூட்டமைப்பாக இருக்கலாம், இவ்வாறான பெரிய அரசியல் கட்சிகளுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பவை, வெறுமனே அதிகாரத்தைக் காட்டும் நிகழ்வுதான்.

தற்போதைய தேர்தல் பித்துத் தனம், எதிர்காலத்தைப் பிரதிபலிக்குமாயின், மாகாண, தேசிய மட்டத்திலான தேர்தல்கள் வரவுள்ள நிலையில், இலங்கையின் அரசியல் நிலைமை மாறுபடும் என நம்புவதற்கு, பெரிதளவுக்குக் காரணங்கள் இல்லை. இந்தப் பின்னணியில், பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்துவரும் நிலையில், பயன்தரக்கூடிய சமூகத் தூரநோக்கமொன்று இல்லாத நிலையில், அரசியல் பற்றிய பரந்தளவிலான நம்பிக்கையீனம் காணப்படும் நிலையில், முன்னேற்றகரமான அரசியலுக்கான நிகழ்ச்சிநிரல் எங்கே?

ஜனநாயக மாற்றீடு

வரலாற்றுரீதியாகப் பார்க்கும் போது, பிரதிநிதிகளைச் சுதந்திரமாகத் தெரிவுசெய்வதற்குக் காணப்பட்ட தேர்தல்கள், அநேகமாக வன்முறைக்கு வித்திட்டதோடு, வன்முறை பற்றிய அச்சத்தை, நிச்சயமாக ஏற்படுத்தியிருந்தது. மாற்றத்துக்கான ஆரம்பம் என்றில்லாமல், ஒரு சாபம் போல, தற்போது தேர்தல்கள் மாறியிருக்கின்றன.

இருப்பினும், சட்டபூர்வமமாக்குதலுக்கு, தேர்தல்கள் அவசியமானவை. அதிகாரத்தில் அழுந்திக் காணப்படும் அரசாங்கங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன; வாக்காளர்களால் மேற்கொள்ளப்படும் எதிர்வுகூறப்பட முடியாத நகர்வுகள், அரச அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவோரில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்க, இம்மாதத்தில், மக்களின் பிரச்சினைகளைப் பிரசாரங்கள் கண்டுகொண்டாலென்ன, விட்டாலென்ன, அவர்களின் பிரச்சினைகளைப் பேசும் சத்தங்கள் வந்துகொண்டிருக்கும்.

வாக்களித்தல் என்பது, எமது சமூகத்தில் பெறுமதியான பலமாக, வரலாற்றுரீதியாகக் காணப்படுகிறது. ஆசியாவிலேயே, அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய நாடு என்ற அடிப்படையிலும் மேலதிகமாக, எமது சமூக நிறுவனங்களில், ஜனநாயகப் பண்பொன்று உள்ளடங்கப்பட்டிருக்கிறது. 

இருந்தாலும், தேசியவாதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர், அரசியல் புரத்தல் நிலையிலுள்ளோர் ஆகியோரால், எமது நாட்டின் ஜனநாயகக் கலாசாரத்தின் கொள்கைகள் தாக்கம் செலுத்தப்படுகின்றன. சிங்களப் பெளத்த மற்றும் தமிழ் தேசியவாதக் குழுக்கள், தமது பிரிவின் பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்த முயலும் அதேநேரத்தில், உண்மையிலேயே ஒருவரையொருவர் தாங்கி நிற்கின்ற இரட்டையர்களாகவே இருக்கின்றனர்.

அடுத்ததாக, மேல்தட்டு வர்க்க நலன்களுக்கான தொழில்நுட்பவாத பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்கள், சமூக நிறுவனங்களைப் பொதுவாகத் தாக்குவதுடன், மக்களை வெளியேற்றுகின்றன. இதன்மூலமாக, பரந்தளவிலான ஜனநாயகப் பங்குபற்றல் பாதிக்கப்படுகிறது. அரசியல் விருப்புகள், கொடுக்கல் - வாங்கல்கள் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் அரசியல் புரத்தல் நிலைமை, பிரதிநிதித்துவக் கட்டமைபென்பது, மக்களுக்குச் சேவையாற்றாமல் இருப்பதை உறுதிசெய்துள்ளது. 

இருக்கின்ற சவாலென்பது, நம்பிக்கைக்குரிய மாற்றொன்றை உருவாக்குவது தான். அனைத்துத் தரப்புகளிலுமுள்ள தேசியவாதங்களை விமர்சிக்கும் கொள்கை ரீதியான மோதலோடு அது ஆரம்பிக்க வேண்டும். அத்தோடு, மக்களுக்குப் பயன்தரக்கூடிய சமூக, பொருளாதாரச் சிந்தனையொன்றை முன்வைக்க வேண்டும். அடுத்ததாக, அதிகாரத்தில் இருப்போருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, மக்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தக்கூடிய ஜனநாயகக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அவ்வாறான மாற்று நிலைமையென்பது, புதியதாகவும் புத்துணர்வு பெற்றதுமான அரசியல் உருவாக்கத்தை வேண்டிநிற்கின்றன. உலகம் முழுவதும் நீடித்திருக்கும் குழப்பங்களுக்கு மத்தியில், முன்னேற்றகரமான அரசியல் கட்சிகள் தேவைப்படுகின்றன.தெற்கு ஐரோப்பாவில், புதிய அரசியல் கட்சிகளின் புத்துணர்வுதரும் அலையும், ஐக்கிய இராச்சியத்தில் ஜெரெமி கோர்பினின் கீழ், தொழிலாளர் கட்சியின் புத்தெழுச்சியும், குறிப்பிடத்தக்க உதாரணங்களாகும். மேலும் முக்கியமாக, ஜனநாயகத்தின் அடிப்படைகளான சமூக நிறுவனங்களின் மீளெழுச்சி என்பது முக்கியமானது; தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள், சமுதாயச் சங்கங்கள் ஆகியன, வரலாற்றுரீதியாக முக்கியமானவை என நிரூபிக்கப்பட்டவையாகும்.

இடதுசாரி அரசியல்

உலகம் முழுவதிலுமே, ஜனநாயகம் என்பது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தேசியவாத, பரப்பியல்வாத முழக்கங்கள் மூலம், தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வெற்றிபெறுகின்றன. அதிகாரத்துக்கு வந்த பின்னர், கடும்போக்குவாத ஆட்சி நகர்வுகள் மூலமாகவும் இனவாதப் பேச்சுகள் மூலமாகவும், அதே மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கின்றன.

மேற்கத்தேய நாடுகளிலும் எங்கள் நாட்டிலும், ஜனநாயகத்தின் வரலாறு, சில பாடங்களைத் தருகிறது. ஜெப் எலேயின் முக்கியமான பணியாக அமைந்த, “ஜனநாயகத்தை உருவாக்குதல்: ஐரோப்பாவில் இடதுசாரித்துவத்தின் வரலாறு, 1850 - 2000” (ஒக்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பு 2002), தொழிற்சங்கங்கள் உள்ளடங்கலாக இடதுசாரிச் செயற்பாடுகள், ஜனநாயக உரிமைகளின் உருவாக்கத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை வெளிப்படுத்துகிறது. ஊழியர்களின் உரிமைகளுக்கான போராட்டமென்பது, ஜனநாயக உரிமைகளை உருவாக்குவதில் எவ்வாறு பங்களித்தது என, எலே குறிப்பிடுகிறார். இலங்கையில் கொலனித்துவத்தின் இறுதிக் காலத்திலும், கொலனித்துவத்தின் பின்னரான காலத்தின் ஆரம்பப் பகுதியிலும், இது பொருந்துகிறது. 

தொழிற்சங்கங்களும், அப்போதைய இடதுசாரிக் கட்சிகளும், ஜனநாயக உரிமைகளுக்கான காவலர்களாக இருந்தன. அதேநேரத்தில், பாலின ரீதியான ஒடுக்குமுறைகளையும் இனவாதத்தையும்  தமது இயக்கங்களுக்குள் உட்பட எதிர்கொள்வதற்கு, இடதுசாரி இயக்கங்கள், வரலாற்று ரீதியாகத் தவறிவிட்டன என்பதைக் கூறுவதிலும், எலே வெளிப்படையாகக் காணப்படுகிறார். இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள், பெரும்பான்மைவாதத்தையும் தேசியவாதத்தையும் கொண்டதோடு, தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன.

சமத்துவமின்மையை எதிர்கொள்வதற்காக மேலதிகமாகப் பகிரப்படுதல், பயன்தரக்கூடிய சமூகப் பாதுகாப்பு, நிலையான - ஏற்கத்தக்க வேலை உள்ளிட்டவை உள்ளடங்கலாக, சமூக, பொருளாதார விடயங்களை, ஜனநாயகத்துக்கான எந்தவோர் இயக்கமும் எமது காலத்தில் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறான ஜனநாயகப்படுத்தலென்பது, பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகங்கள் உள்ளடங்கலான சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றியும், அதேநேரத்தில் கவனஞ்செலுத்த வேண்டும்.

தேர்தல் அரசியலை, தோற்ற ஒரு விடயமாகக் கருதுவது, தோல்வி மனப்பான்மையினதாக இருக்கும். மாறாக, தேர்தல் அரசியலை, முன்னேற்றகரமானதாக மாற்றுவதற்காக, மாற்று விடயங்களைத் தேடுவதற்கு நாம் கஷ்டப்பட்டு முயல வேண்டும். தொழிற்சங்கங்களும் கூட்டுறவு அமைப்புகளும், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் காணப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அது உண்மையாக இருக்கின்ற போதிலும், தொழிற்சங்கங்களையும் கூட்டுறவு அமைப்புகளையும் நிராகரிப்பது முடிவல்ல. மாறாக, அவற்றைப் பலப்படுத்தி, பொதுமக்களினதும் நன்மைக்காக, தேர்தல் அரசியலைத் தீர்மானிப்பவையாக மாற்றுவதே தேவையானது.  

ஊடகக் கருத்துகளிலும் மேல்தட்டு வர்க்க கொசுறுச் செய்திகளிலும் காணப்படும் அரசியல் தலைவர்கள், எதிரேயுள்ள கடினமான அரசியல் பாதையைக் கடக்கப் போவதில்லை. மாறாக, மாற்று நோக்கொன்றைக் கண்டுபிடித்து, சமூக நிறுவனங்களை மீளெழுச்சி பெறச் செய்த, மக்களின் ஜனநாயகப் பங்குபற்றலை ஊக்குவிப்பதே, அதற்கான வழியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X