2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புள்ளிகள் இல்லாத புள்ளிகள்

காரை துர்க்கா   / 2018 ஜூலை 17 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் முல்லைத்தீவில் நடைபெற்ற மரணக்கிரியையில் பங்குபற்றுவதற்காகச் செல்ல வேண்டியிருந்தது.   

அங்கு, அவலக் குரல் அழுகைக் குரல் கேட்டு வானமே ஒரு கணம் அழுதது. ஆனால், ஐம்பது வயதை அண்மித்த அம்மா ஒருவர், இம்மியளவும் அசராமல் இருந்தார். மெல்ல அவரை அணுகி, காரணத்தை வினாவியபோது, பதில் தூக்கிவாரிப் போட்டது. “2009ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம், அழுதழுது எனது கண்ணீரீன் இருப்புத் தீர்ந்து விட்டது” என்றார்.   

அன்றைய தினம், பொதுச்சந்தை செல்வதற்கான தேவை ஏற்பட்டது. நேரம் காலை பத்து மணி; சந்தை களை கட்டியிருந்தது.   

“ஒரு பக்கத்தால அடி விழுந்தா தாங்கலாம்; ஆனா எல்லாப் பக்கங்களாலும் அடி விழுந்தா என்ன செய்யிறது; தெய்வமே” என அங்கு மரக்கறி விற்கும், உடல் தளர்ந்ததொரு தாயின் தளர்ந்த குரல் கேட்டு, எங்களுக்கும் மறு குரல் வர மறுத்தது.   

இதே அவல நிலையிலேயே, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் பிரதேசங்களில், நாளாந்தம் போராடுகின்றார்கள். தனி மனித துன்புறுத்தல்கள், சமூகச் சீரழிவுகள், வற்றாத வறுமை, நில ஆக்கிரமிப்பு, கடல் ஆக்கிரமிப்பு, பொருளாதார ஆக்கிரமிப்பு, மொழி ஆக்கிரமிப்பு எனத் தொடரும் அரசியல் கலந்த ஆக்கிரமிப்புகள் மூலம், தமிழ் மக்களின் மேன்மையான மென்மையான மனங்கள், உருக்குலைந்து விட்டன.   

இவ்வாறாகத் தொடர் துன்பம் தரக்கூடியதும், கௌரவத்தையும் பாதுகாப்பையும் இருப்பையும் அச்சுறுத்துவதுமான ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அனுபவங்கள், ஒருவரின் உடல், உளம் மற்றும் ஆன்மாவில் ஏற்படுத்தும் தாக்கங்களே, ‘உளப் பேரதிர்வு’ என அழைக்கப்படுகின்றது.   

தமிழ் மக்களிடத்தில் உளப்பேரதிர்வுக்குரிய காரணங்கள் நிறைந்து உள்ளன. அவற்றில் குறிப்பாக, மக்கள் தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் (ஆற்றுப்படுத்தல்) உரியவ(ரை)ர்களை இழந்தமை முதன்மையானது ஆகும்.  

ஆனால், கடந்த காலப் போர் அனர்த்தத்தில் பல்வேறு வகைகளிலும் கொல்லப்பட்ட சாதாரணத் தமிழ்ப் பொது மக்கள் தொடர்பிலான, எவ்வித புள்ளி விவரங்களும் கணக்கெடுப்புகளும் அற்ற ஒரு சமூகமாகத் தமிழ்ச் சமூகம் உள்ளது.   

ஆகவே, இவ்வாறான ஒரு கணக்கெடுப்பு வேலைத்திட்டம் மிகவும் பெறுமதியானது. நீண்ட வரலாற்றைக் கொண்ட தேசிய இனம், தனது விடுதலை என்ற உயரிய இலக்கை அடையும் நோக்கோடு, கொடுத்த உச்ச பட்சமான விலை, உயிர் ஆகும். அதாவது, மீளப் பெற முடியாத, பெறுமதியான உன்னத உயிர் பற்றிய அளவீடுகள் ஆகும்.   

கடந்த காலங்களில், தமிழர் பிரதேசங்களில் பல பக்கத்தாலும் படை நடவடிக்கைகள் தொடங்கும் போது, எது போனாலும் பரவாயில்லை உயிர் தப்பினால் போதும் என்றே அனைவரும் ஓடினார்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினோம். எதை இழந்தாலும் தேடலாம், உயிரை மீளத் தேட முடியாது என்றே கடல் கடந்தும் ஓடினார்கள்.   

ஆகவே, இவ்வாறு தப்பி ஓட முடியாது, அதில் சிக்கித் தங்களது உன்னத உயிர்களை ஈகம் செய்தவர்கள் பற்றிய ஆவணப் பெட்டகம், காலத்தின் தேவை ஆகும். ஒவ்வொரு குடும்பமும் ஆகக் குறைந்தாக ஒரு குடும்ப உறவினரையாவது, யுத்தத்தில் பலி கொடுத்துள்ளது.  

இவ்வாறான வேலைத் திட்டத்தை, இலங்கை அரசாங்கம் எக்காலத்திலும் செய்யாது என்பது வெளிப்படை உண்மை. ஏனெனில், பன்னாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து படை எடுத்த மஹிந்த அரசாங்கம், இறுதி யுத்தத்தில் எந்தப் பொதுமகனுக்கும் சிறுசேதம் கூட இல்லாமல், யுத்தத்தை முன்னெடுத்ததாகவே கூறி வந்தது; வருகின்றது.   

இலங்கைத்தீவில் 1958ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழ் மக்களது உயிர்கள் கட்டம் கட்டமாக அ(ஒ)ழிக்கப்பட்டுள்ளன. ஆகவே, 50 ஆண்டு கால உயிர் இழப்புத் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.   

எமது அரசியல்வாதிகள் மேடைகளில் வீர முழக்கம் இடுவார்கள்; மார்தட்டிப் பேசுவார்கள்; தங்களைத் தாங்களே பெரும் புள்ளிகள் என்பார்கள். ஆனால், மண்ணுக்காக மண்ணோடு ம(மு)டிந்த தம் உறவுகளின் தரவுகள், தெரியாதவர்களாகவே உள்ளனர். இது சம்பந்தமான புள்ளி(விவரங்கள்)கள் அற்ற புள்ளிகளாகவே அவர்கள் உள்ளனர்.   

இதேபோலவே, 1949ஆம் ஆண்டு தொடக்கம், இற்றைவரை விவசாய விரிவாக்கத் திட்டம், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் அரசாங்கங்களால் கபளீகரம் செய்யப்பட்ட தமிழ் மக்களின் நிலம் தொடர்பிலான எந்த ஆதாரங்களும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரிய வரவில்லை.   

‘நிலம் இல்லாத இனம், ஆண்டவன் இல்லாத ஆலயத்துக்குச் சமம்’ ஆகும். தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கான எவ்வித அடையாளங்களும் இல்லாது, பல தமிழ்க் கிராமங்கள் முழுமையாக மாற்றப்பட்டு விட்டன. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம், காணி விடுவிப்புகளைப் பல தரம் செய்துள்ளது.   

பாரிய மேடை அமைத்து, அந்தச் சிறு பகுதி விடுவிக்கப்படவுள்ள மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர், அதிகாரிகள், இராணுவத் தளபதிகள், அமைச்சர்கள், சர்வமத குருமார்கள் என அனைவரையும் மேடையில் ஏற்றி, பெரிய விழா எடுத்து, காணி விடுவிக்கப்படும். அடுத்த நாள் செய்தித்தாள்களில் இவை தலைப்புச் செய்திகளாக வரும்.   

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் தமிழ் மக்களது பூர்வீகக் காணி விடுவிப்பைக் கடந்த 2015 ஜனவரி எட்டாம் திகதியிலிருந்து செய்து வருகின்றது. ஆனால், மறுமுனையில் வனபரிபாலன மற்றும் தொல்பொருள் திணைக்களங்கள் பெருமெடுப்பில் நிலங்களைக் கையகப்படுத்தி (விழுங்கி) வருகின்றன.   

கூட்டிக் கழித்துப் பார்த்தால், சில வேளைகளில் நல்லாட்சியில் தமிழ் மக்கள் மீளப் பெற்ற காணியைப் பார்க்கிலும் இழந்த, இழக்கின்ற காணிகள் அதிகமானவையாக இருக்கலாம். ஆனால், அவை தொடர்பிலான தரவுகளும் இல்லை.   

நல்லாட்சி ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய 1,280 நாட்கள் (மூன்றரை வருடங்கள்) ஓடி விட்டன. அவற்றில் முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, 500 நாட்கள் வீதியோரத்தில் கழித்து விட்டனர். நிறைவு பெற்ற நல்லாட்சிக் காலத்தில் அண்ணளவாக பாதி நாட்களைத் தெருவில் கழித்து விட்டார்கள். ஆனால், இன்னமும் நல்லாட்சி இ(ற)ரங்கவில்லை.   

சர்வதேச இராஜதந்திரிகளைத் தமிழ் அரசியல் தலைவர்(கள்) சந்திக்கின்றார்(கள்) என எடுத்துக் கொள்வோம். உரையாடலின் நடுவே அவர், யுத்த அனர்த்தங்களால் தமிழ் மக்களுக்கு உண்டான உயிர் இழப்புகள் பற்றிய தரவுகளைக் கோருகின்றார்; அத்துடன் தமிழ் மக்கள் இழந்த காணிகளின் விவரங்களைக் கேட்கின்றார் எனவும் எடுத்துக் கொள்வோம்.  

 பதில் என்ன? கையில் பெறுமதியான ஏதாவது ஆவணம் இருக்கின்றதா? ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் என கணக்கு விடுவதா? அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து, குத்துமதிப்பில் கதை விடுவதா?   

மாகாண சபையைக் கலைக்கும் முன்பே, களமிறக்க வேண்டிய முதலமைச்சர் வேட்பாளரை ஒன்று கூடித் தீர்மானிக்கின்றனர். யாருக்கு புள்ளடி போட வேண்டும் எனத் தீர்மானிப்போர், வீழ்ந்த எம் உறவுகள் தொடர்பாகவும் பறித்தெடுத்த எம் மண் தொடர்பாகவும் ஏன் கவனமெடுக்கவில்லை? ஏன், அவை தொடர்பான புள்ளிகள் (தரவுகள்) முக்கியமானவை என உணரவில்லை?  

நான்காம் கட்ட ஈழப்போரில், திருகோணமலையில் தொடங்கி மட்டக்களப்பு, மன்னார் ஊடாக எவ்வாறு படையெடுப்பு நடாத்தப்பட்டதோ, அதேபோல, அன்று திருகோணமலையில் தொடங்கிய காணி அபகரிப்பும் சிங்களக் குடியேற்றமும் மெல்ல மெல்ல முன்னேறி வடக்கு நோக்கி வருகின்றது.   

விரைவில் முல்லைத்தீவை முழுமையாக விழுங்கப் போகின்றது. தடுத்து நிறுத்தவோ நிறுத்தித் தடுக்கவோ எவ்வித திட்டங்களும் இன்றி ஊமைகளாக உள்ளனர் எம்மவர்கள்.   

2009ஆம் ஆண்டு, புலிகளின் மௌனத்தின் பின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் கலைந்து, புது வேடம் பூண்டிருக்க வேண்டும். செயற்திறனும் வினைதிறனும் கொண்டு, புதுப்பவனி வந்திருக்க வேண்டும். ஆனால், நடப்பதோ தூர நோக்கற்ற செயற்பாடு என்றே மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.  

தமிழ் மக்கள், தங்கள் தமிழ்த் தலைவர்களது உடமைகளையோ உயிர்களையோ தானம் செய்யுமாறு கோரி நிற்கவில்லை. மாறாக நிதானமாகவும் அவதானமாகவும் நடக்குமாறே கேட்டுக் கொள்கின்றனர்.   

ஏனெனில், கூட்டமைப்பின் நகர்வுகள் நம்பிக்கை தரக்கூடியதாக அமையும் என மக்கள் நம்பவில்லை. ஏமாற்றப்படுவது தெரிந்தும், மாற்று உபாயமின்றி இருக்கின்றார்கள் எனத் தமிழ் மக்கள் உணர்கின்றனர்.  
ஒற்றுமை கருதி, கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் ஏனைய கட்சிகள் கொண்டிருக்கும் ஆவலை, விருப்பத்தைக் கூட, தமிழரசுக் கட்சி காட்டாமை கவலைக்கு உரியதே.   

ஒவ்வொரு பண்டிகைக்கு முன்பும் தீர்வு வருகின்றது எனக் கூறுவது, அரசமைப்பில் சமஷ்டி ஒழிந்திருக்கின்றது எனக் கூறுவது, முதலமைச்சர் விடயத்தில் கடந்த முறை விட்ட தவறை இம்முறை விடக் கூடாது எனக் கூறுவது, இவ்வாறாகக் கூறிக்கூறியே, இவர்கள், தமிழ் மக்களிடத்தில் புள்ளிகள் (மதிப்பெண்கள்) இல்லாத புள்ளிகளாகி விட்டனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .