2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

பூமராங்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2018 மே 29 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும்.  

‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம் கிடையாது’ என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தமை பற்றி அறிவீர்கள். அது குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர், தனது ‘பேஷ்புக்’ பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பொன்று கவனத்துக்குரியது.  

‘சச்சிதானந்தன் சொன்ன கருத்து தொடர்பாக, சிங்கள நண்பர் ஒருவர், தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, “அப்படியானால் வடக்கில் விகாரைகள் அமைவதை ஏன் இந்துக்களாகிய நீங்கள் எதிர்க்கிறீர்கள்” என்று கேட்டாராம். “சொல்வதற்குத் தன்னிடம் பதில் இல்லை” என்கிறார் அந்த ஊடகவியலாளர்.   

மாடுகள் அறுப்பதற்கு எதிராகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாவகச்சேரியில் அடையாள உண்ணாவிரத நடவடிக்கையொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், முஸ்லிம்களைக் குறிவைத்துப் பேசியிருந்தார். “இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இந்தப் பூமி சொந்தமானது. அவர்களின் மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள், நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று அவர் ஊடகங்கள் முன்பாகக் கூறியிருந்தார்.  

மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர், வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்றுப் பேசும், ஓர் அறைகுறையாக அறியப்பட்டவரல்ல; அவர் படித்த மனிதர். ஐக்கிய நாடுகள் சபையிலும் பணிபுரிந்திருக்கின்றார். இப்படியான மனிதரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்க முடியாத, இனவாதக் கருத்துகள் வந்திருப்பது, அனைத்துத் திசைகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.  

சிங்களச் சமூகத்துக்குள்ளிருந்து செயற்படும் ‘பொதுபலசேனா’வைப் போன்று, தமிழர்களுக்குள்ளிருந்து செயற்படும், முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, சிவசேனை அமைப்பு முயற்சிப்பது போலுள்ளது. அதற்காக, பழசுபட்ட ஒரு கோஷத்தை, அந்த அமைப்பு கையிலெடுத்துள்ளது. அது - மாடுகளை அறுப்பதற்கு எதிரானதாகும்.  

மாட்டிறைச்சி என்பது முஸ்லிம்கள் உண்ண வேண்டிய கட்டாய உணவல்ல. அவர்கள் புசிக்கின்ற உணவுகளில் மாட்டிறைச்சி என்பது பத்தோடு பதினொன்றாகும்.  

எவ்வாறாயினும், சட்டத்தால் தடைசெய்யப்படாத, தமது மதம் அங்கிகரித்த எந்தவோர் உணவையும் உண்பதற்கு, இந்த நாட்டில் அனைவருக்கும் உரிமையுள்ளது.   

ஆனாலும், சட்டங்களை விடவும் சில இடங்களில் மதம் தலைதூக்கி அதிகாரம் செலுத்த முயற்சிப்பது, இலங்கையின் சாபக்கேடாகும். ‘காவி’ உடுத்தவர்களெல்லாம் உத்தியோகப்பற்றற்ற பொலிஸ்காரர்கள் என்கிற ஞானசார தேரரின் கோஷத்துடன், மறவன்புலவு சச்சிதானந்தன் கைகோர்த்திருப்பது தமிழர்களுக்கு ஆபத்தானதாகும்.   

வடக்கில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, எழாத கருணையும், கவலையும், சாவகச்சேரியில் மாடுகள் கொல்லப்படும் போது சிவசேனை அமைப்புக்கு திடீரென எழுந்திருப்பது ஆச்சரியமானதாகும். சிவசேனை அமைப்பின் மாடுகள் பற்றிய இந்தக் கவலைக்குப் பின்னால், முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் இருப்பதாகப் பேசப்படுகிறது. அந்தக் ‘குடுமி’ சும்மா ஆடவில்லை என்று, தமிழர் தரப்பிலிருந்தே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமை கவனத்துக்குரியதாகும்.  

இன்னொருபுறம் இலங்கையிலுள்ள சிவசேனை அமைப்புக்கும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா அமைப்புகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்தும் சந்தேகம் நிலவுகிறது.   

இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில், மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பி.பி.சி செய்திச் சேவை, பேட்டியொன்றை எடுத்திருந்தது. அந்தப் பேட்டியில், “இந்தியாவில் இருக்கும் சிவசேனா அமைப்பின் ஒப்புதலுடன்தான் இலங்கையிலும் இந்த அமைப்பு தொடங்கப்படுகிறதா” என்கிற கேள்வியை பி.பி.சி முன்வைத்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.  

முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடைக்கு எதிராகத் திருகோணமலை பாடசாலையொன்றிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு, தற்போது சிவசேனை அமைப்பு கையெலெடுத்திருக்கும் மாடறுப்புக்கு எதிரான கோஷம் போன்றவை, மிகத் திட்டமிடப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் செயற்பாடுகள் என்கிற குற்றச்சாட்டுகளும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும்.  

தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய் பூவும் போல் வாழ்வதாகக் கூறப்படுகின்றமை போலியான கதைகளாகும். இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் பகையுணர்வு புகைந்து கொண்டிருக்கும் உண்மையை மறைக்க முடியாது.   

இந்த நெருப்பை மூட்டிவிட்டதில் அரசியல்வாதிகளுக்கு நிறையவே பங்கிருக்கிறது. 
இரண்டு சமூகங்களுக்குமே இந்த நெருப்பு ஆபத்தானதாகும். இது அணைக்கப்பட வேண்டும் என்கிற கவலையுள்ளவர்களும் இரண்டு சமூகங்களுக்குள்ளும் இருக்கின்றார்கள். ஆனால், சிலர் எவ்வித கவலைகளுமின்றி, இந்த நெருப்புக்கு இப்படி எண்ணை வார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

மாடறுப்புக்கு எதிரான கோஷம் யதார்த்தத்துக்கு எதிரானதாகும். இலங்கையில் மாடு வளர்ப்பு - மிகப்பெரும் வர்த்தகமாக மாறியுள்ளது. மாட்டிறைச்சி நுகர்வு இலங்கையில் இல்லாமல் போகும் போது, சிங்கள மற்றும் தமிழர் சமூகங்களும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவதோடு, தேசத்தின் பொருளாதாரத்திலும் அந்த நிலைவரம் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது, சாதாரண அறிவுள்ளோருக்கும் தெரிந்த விடயமாகும்.  

இன்னொருபுறம், சாவகச்சேரியில் மாடறுப்பதற்கான அனுமதியை, அங்குள்ள உள்ளூராட்சி சபைதான் வழங்கியுள்ளது என்பதும் கவனத்துக்குரியதாகும். சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் தமிழர்கள். மாடறுப்பதால் அவர்களுடைய பூமியின் பரிசுத்தம் கெட்டுப்போவதாக இருந்தால், மாடறுப்புக்கான அனுமதியை அவர்கள் வழங்காமல் இருக்க முடியும்.   

“பௌத்தர்களும் இந்துக்களும் மாட்டிறைச்சி உண்பதில்லை; முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமே மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர்” என்றும், மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியிருக்கின்றார்.   

இதன் மூலம், யதார்த்தத்தை சோற்றுத் தட்டுக்குள் போட்டுப் புதைப்பதற்கு முயல்கின்றமை புலனாகிறது. மாட்டிறைச்சி சாப்பிடும் இந்துகள் பலரைக் கண்டிருக்கின்றோம் என்கிற உண்மை, மிகப்பொறுப்புணர்வுடன் இங்கு பதிவு செய்யப்படுகிறது.   

இதேவேளை, அண்மையில் தமிழர்களில் ஒரு தரப்பினர் ஹபாயாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தபோது, அதற்குப் போட்டியாகச் சேலையையும் அதை அணியும் தமிழர் சமூகப் பெண்களையும் ஆபாசமாகச் சித்தரித்து பிரசாரம் செய்யும் கோதாவில், முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் ஈடுபட்டிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது. இந்த மடத்தனமான செயற்பாடுகளால், இரண்டு தரப்பினரிடையேயும் கடுமையான மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தன.   

அதேபோன்ற ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள், மாடறுப்புக்கு எதிரான கருத்துகளைச் சிவசேனை அமைப்பு முன்வைத்ததைத் தொடர்ந்து, ஏட்டிக்குப் போட்டியான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமடைந்தன.   

குறிப்பாக, இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் படங்களையும் மாடுகளைப் பலியிடும் படங்களையும் முஸ்லிம்களில் சிலர் பகிர்ந்து,  விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றமையைக் காணக் கூடியதாகவுள்ளது.   

இந்தச் செயற்பாடுகள், இவ்விடயத்தோடு தொடர்பில்லாதவர்களையும் உடன்பாடற்றவர்களையும் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து கோபப்பட வைப்பவையாகும்.   

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் புகைந்து கொண்டிருக்கும் பகையுணர்வைக் காட்டுத் தீயாக மாற்றுவதற்காகத்தான், ஹபாயாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், மாட்டிறைச்சி உண்பதைக் கண்டிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்பதை, இந்த விவகாரங்களைப் புத்திசாதுரியத்துடன் நோக்குகின்றவர்கள் புரிந்து கொள்வர்.   

இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றின்போது, தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக அவாவி நிற்கும் விடயங்களை, இந்தப் பகைமையானது இல்லாமலாக்கி விடும் என்பதையும் இரண்டு தரப்பாரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.   

தமிழர்களும் முஸ்லிம்களும் அவாவி நிற்கும் அரசியல் தீர்வுகள் அவர்களைச் சென்றடைந்து விடக் கூடாது என்று நினைப்பவர்கள்தான், மேற்படி இரண்டு சமூகங்களுக்கிடையிலும் புகைந்து கொண்டிருக்கும் பகைமையைக் காட்டுத் தீயாக்க ஆசைப்படுவார்கள் என்பதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத, முட்டாள் சமூங்களாக நாம் இருக்கக் கூடாது.  

‘இந்த மண் புனிதமான மண்; பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள். ஓர் ஆணை, பெண்ணை, குழந்தையைக் கொல்வது எப்படிக் கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது’ என்று, சாவகச்சேரியில் ஊடகங்களிடம் மறவன் புலவு சச்சிதானந்தன் பேசியிருந்தார்.   

இந்த நிலையில் அவரை நோக்கி, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தனது ‘பேஷ்புக்’ பதிவில் முன்வைத்துள்ள சில கேள்விகள் முக்கியமானவையாகும்.  

அந்தக் கேள்விகள் வருமாறு:  

1. முள்ளிவாய்க்காலில் நடந்தது கொடுமையா இல்லையா? அதைச் செய்தவர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?  

2. இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டமை, பௌத்த மத கோட்பாடுகளுக்குப் புறம்பானது என்று, உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா?  

3. இறந்த புலிகளின் கல்லறைகள் புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டனவே, இந்து மற்றும் பௌத்த மதங்கள் இதை அங்கிகரிக்கின்றனவா?  

4. இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்ட போது, நீங்கள் என்ன செய்தீர்கள்? எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதே அந்தக் கேள்விகளாகும்.  

மேலும், மதம் என்பது கண்ணியம்; அது வெறியல்ல. இன்னோர் இனத்தை, மதத்தை நசுக்க வேண்டுமென நினைக்கும்போதே, இந்து மற்றும் பௌத்த மதங்களின் கோட்பாடுகளில் இருந்து, விலகிச் செல்கிறீர்கள் எனவும், பதிவிடப்பட்டுள்ளது.   

சமூகங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்தும் இனவாதிகளின் செயற்பாடுகளை, ஊடகவியலாளர்கள் இவ்வாறு நேரடியாக விமர்சித்துக் கருத்திடுகின்றமை ஆரோக்கியமான செயற்பாடாகும். இனங்களுக்கிடையிலான பகைமைகளைப் போக்குவதற்கும், உறவுகளை வளர்ப்பதற்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகத் தேவையானதாகும்.  

ஆனாலும், கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தபோதெல்லாம், இரண்டு சமூகங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களில் சிலர், தத்தமது சமூகம் சார்பாகப் பக்க வாத்தியம் பாடிக்கொண்டிருக்க, இன்னும் சிலர் மௌனித்திருந்தனர். வெகு சில ஊடகவியலாளர்கள் மட்டுமே, அவ்வாறான இக்கட்டுகள் நிறைந்த தருணங்களில் நேர்மையாகச் செயற்பட்டிருந்தனர்.   

மத உணர்வும் அரசியலும் மனிதனை மிக விரைவாகவும் கடுமையாகவும் உணர்ச்சிவசப்படுத்துகின்றவை ஆகும். அதனால்தான், அரசியல்வாதிகள் மதத்தையும் மதவாதிகள் அரசியலையும் தமது சுயநலத்துக்காக அடிக்கடி கையில் எடுத்துக் கொள்கின்றனர்.   

மத உணர்வும் அரசியலும் வெறியாக மாறிப்போகும் போது, புத்தி பேதலித்து விடும். அதனால்தான், ‘மாட்டைக் கொன்றான்’ என்று கூறி, மனிதனை கொல்கின்றனர். மதத்தாலும் அரசியலாலும் புத்தி பேதலித்துப் போகின்றவர்களுக்கு, மாட்டின் உயிரை விடவும் மனித உயிர் இளக்காரமாகத் தெரிகின்றமை எவ்வளவு கேவலமானது.  

நமது சுதந்திரமென்பது அடுத்தவரின் மூக்கை, நாம் தொடாத வரையில்தான் உள்ளது. அடுத்தவரின் விடயங்களில் தேவையில்லாமல் நாம் மூக்கை நுழைத்து, அவர்களுக்கு கட்டளைகளிடத் தொடங்கும்போது, அதே கட்டளைகள் ‘பூமராங்’ ஆக மாறி, நம்மை நோக்கித் திரும்பத் தொடங்கும்.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X