2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெரியார், லெனின் சிலை உடைப்பு: திசை மாறிவிட்ட தேசிய அரசியல்

எம். காசிநாதன்   / 2018 மார்ச் 12 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரிபுராவில் தொடங்கிய லெனின் சிலை உடைப்பு, தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு வரை வந்து விட்டது.   

கருத்துக்கு மாற்றுக் கருத்து, சித்தாந்தத்துக்கு மாற்றுச் சித்தாந்தம் என்ற நிலை மாறி, திடீரென்று தேர்தல் வெற்றிக்காக, லெனின் சிலை உடைத்திருப்பது, பழுத்த இந்திய ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாக அமைந்திருக்கிறது.   

அதனால்தானோ என்னவோ, பிரதமர் நரேந்திரமோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் “சிலை உடைப்பு சம்பவங்களில் உடன்பாடு இல்லை. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ‘தேசிய எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. திரிபுராவின் திடீர்க் கலாசாரம், அமைதிக்குப் பெயர்போன தமிழகத்தைத் தாக்கி விட்டது.   

பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா, “பெரியார் சிலை உடைக்கப்படும்” என்ற டுவிட்டர் பதிவு, தமிழகத்தில் தன்னெழுச்சியான போராட்டத்துக்கு வித்திட்டது. 

எச். ராஜாவை, பா.ஜ.கவின் அகில இந்திய தலைவராக இருக்கும் அமித் ஷாவே கண்டித்தார்.  

 தமிழக பா.ஜ.கவின் மாநில தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன், “எச். ராஜாவின் கருத்து, பா.ஜ.கவின் கருத்து அல்ல” என்றார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் ஒருவர், அதே கட்சியின் தேசிய செயலாளர் தெரிவித்த கருத்தை, இப்படி நிராகரித்த விநோதம் அரங்கேறியது.  

“எச். ராஜாவை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று முதலில் திரியை கொளுத்திப் போட்டது மு.க.ஸ்டாலின் என்பதால், அடுத்தடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் எச். ராஜாவுக்குக் கண்டனங்களைத் தெரிவித்தார்கள்.   

தமிழக அரசாங்கமும் ரஜினியும் மட்டுமே பிந்திக் கண்டித்தார்கள். டெல்லியில், காவிரிப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்புக் குறித்த சர்ச்சை எங்கும் பரவியது.   

தேர்தலில் கட்சிகளுக்கு அமோக வெற்றியும் கிடைத்திருக்கிறது; படு தோல்வியும் கிடைத்துள்ளது. ஆனால், தேர்தல் வெற்றியை மனதில் வைத்து, ஒரு சிலையை உடைத்துத் தள்ளுவது என்பது, புதுவித அரசியல் என திரிபுராவில் மட்டுமல்ல - நாடு முழுவதுமே எண்ணப்பட்டது.   

திரிபுராவில் இப்படியொரு சம்பவம் நிகழ்வதற்கு, அங்கு 25 வருடங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இருந்ததும் ஒரு காரணம். அதைவிட 36 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கி வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, அங்கு ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாமல், ஒரே சட்டமன்றத் தேர்தலில் 34 சதவீத வாக்குகளை இழந்திருந்தது.   

இந்தியத் தேர்தல் வரலாற்றில், ஓர் அரசியல் கட்சி, ஒரே தேர்தலில் தனக்கு இருந்த 36 சதவீதத்தில் 34 சதவீத வாக்குகளை இழந்த வரலாறு இல்லை. ஒன்றரை சதவீத வாக்குகள் மட்டுமே வைத்துக் கொண்டு, திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று நினைத்திருந்த பாரதிய ஜனதா கட்சி, 43 சதவீத வாக்குகளைப் பெற்று திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றியதும், லெனின் சிலை உடைப்புக்குப் பின்னனியாக அமைந்து விட்டது. ஏனென்றால், காங்கிரஸுக்கு வரலாறு காணாத படுதோல்வி. 

பா.ஜ.கவுக்கு வரலாறு காணாத வெற்றி. இப்படியொரு தோல்வியோ, வெற்றியோ கிடைக்கும் போது, தோற்ற கட்சியின் சின்னமாகக் காட்சியளித்த லெனின் சிலை மீது கவனம் திரும்பியிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் இந்திய ஜனநாயகத்துக்கு எதிர்பாராத திருப்பம்.   

‘லெனின் சிலை’, ‘பெரியார் சிலை’ உடைப்பைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஜனசங்க நிறுவுனர், ஷ்யாம பிரசாத் முகர்ஜி சிலை அவமதிப்பு, உத்தரபிரதேச மாநிலம் மீருட்டில், அம்பேத்கர் சிலை அவமதிப்பு என்று சிலை அரசியல் பரவி விட்டது.   

லெனின் கம்யூனிச தத்துவத்துக்கும் பெரியார் திராவிடத்துக்கும் என்று இருக்கும் நிலை, இந்துத்துவா தத்துவத்துக்கான ஷ்யாம பிரசாத் முகர்ஜி சிலை மீது கவனத்தை திருப்பி விட்டது. ஆகவே, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, திரிபுரா என்று தத்துவார்த்த ரீதியாகச் சிலை உடைப்பு கலாசாரம் பெருகியது பேராபத்துக் கொண்டதாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டது.   

அதனால்தான், உடனடியாக பிரதமர் நரேந்திரமோடி,“சிலை உடைப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுங்கள்” என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். மற்ற மாநிலங்களில் இந்தச் சர்ச்சை ஓரளவு முடிவுக்கு வந்து விட்டாலும், தமிழகத்தில் தொடங்கிய, பெரியார் சிலை உடைப்புச் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.   

தமிழகத்தில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது’ தொடர்பாக, சூழ்நிலை பரபரப்பாக இருக்கிறது. அதேபோல் அகில இந்திய அளவில், பஞ்சாப் வங்கி மோசடி மிக முக்கிய பரபரப்பாக இருக்கிறது. இதனால், திரிபுராவில் பா.ஜ.க பெற்ற வெற்றியும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.   

இந்திய அளவில் பேசப்பட்ட, பஞ்சாப் வங்கி மோசடியும் பின்னுக்குப் போயிருக்கிறது. இந்த அளவில் மிக முக்கியமான பிரச்சினைகளில் இருந்து, இந்தச் சிலை உடைப்பு விவகாரம் அரசியலைத் திசை திருப்பியிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.  

இந்த அரசியல் பா.ஜ.கவுக்கு தலைவலியைக் கொடுக்கும். ஏற்கெனவே சிவசேனா, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது. பீஹாரில் இருந்த முன்னாள் முதல்வர் மாஞ்சியின் கட்சியும் வெளியேறி விட்டது. இப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் இராஜினாமாச் செய்து விட்டார்கள்.   

தெலுங்கு தேசம் கட்சி, எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்பதே இன்றைய நிலை. 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்ற நேரத்தில், ‘சிலை உடைப்பு’, ‘வெறுப்பு பேச்சு’ எல்லாம் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ள மாநில கட்சிகளைத் துரத்தும் சக்தி மிக்கது. அது பா.ஜ.கவுக்கே, கூட்டணிக் கட்சிகள் பஞ்சத்தை ஏற்படுத்தி விடும்.   

ஏனென்றால், ‘வெறுப்பு அரசியல்’ செய்யும் கட்சியுடன் கூட்டணி வைப்பது தங்கள் மாநிலங்களில் தோல்வியை பெற வேண்டியிருக்கும் என்று கூட்டணிக் கட்சிகள் கருதலாம். ஆகவே, இது போன்ற சிலை உடைப்பு, வெறுப்பு அரசியல் மற்றும் வெறுப்புப் பேச்சு போன்றவற்றிலிருந்து விலகி நின்று, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளது பா.ஜ.க.  

இதனால்தான், மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது என்று பா.ஜ.க மீது, சிங்கப்பூர் மண்ணில் நின்று கொண்டு, குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.   

அதில் எதிரொலிப்பது, ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி. மேகாலாயாவில் 21 இடங்களில் ஜெயித்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. நாகாலாந்தில் இரண்டு சதவீத வாக்குகளையே பெற முடிந்திருக்கிறது.   

திரிபுராவில் வழக்கம் போல், ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாநிலங்களான இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள 180 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற முடிந்திருக்கிறது. இந்த 180 தொகுதிகளில் 134 தொகுதிகள் மலை வாழ் மக்கள் தொகுதி என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  

 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு தொடக்க காலத்திலிருந்து கிடைத்து வந்திருக்கிறது. அந்த வாக்கு வங்கி இப்போது கரைந்திருக்கிறது என்பதால் கதி கலங்கிப் போயிருக்கிறது காங்கிரஸ் கட்சி. 

அதனால், இனி பிரதமர் மோடியை எதிர்த்து, தேர்தலில் களம் காண ராகுல் காந்தியும் காங்கிரஸும் சரிப்பட்டு வராது என்ற சிந்தனை மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் போன்றோருடன் தொலைபேசியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வாருங்கள். பா.ஜ.கவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பிராந்தியக் கூட்டணி அமைப்போம்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்த அழைப்பை முறியடிக்கவே, மும்பையில் ‘இந்தியா டுடே’ கருத்தரங்கில் பேசிய சோனியா காந்தி, “பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தை மூடி விடுவோம் என்று பா.ஜ.க கூறிவிடலாம்” என்று மிக கடுமையாக தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி, “2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று திடீரென்று அறிவித்துள்ளார்.   

பிரதமர் மோடியைத் தேர்தல் களத்தில் சந்திக்க, சோனியா காந்தி தயாராகி விட்டார் என்பதைத்தான் இது காட்டுகிறது. திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு, தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு போன்ற பா.ஜ.கவின் நடவடிக்கை, மாநில கட்சிகளை பா.ஜ.கவிடமிருந்து விலகிச் செல்ல வைத்துள்ளது.   

அதேநேரத்தில், திரிபுரா உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்குப் போட்டியாக மீண்டும் சோனியா காந்தியை களத்துக்குக் கொண்டு வந்து விட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .