2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பேய்க் கூத்தும் கூஜாவும்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2018 மார்ச் 06 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன.   

இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது.   

பேய்களைப் பிடித்து கூஜாவுக்குள் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், பேய்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கி விட்டார்களோ என்கிற அச்சம், எல்லா மட்டங்களிலும் எழத் தொடங்கியுள்ளன.  

அம்பாறை நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை (26), பேய்களின் இனவாதக் கூத்துகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன்போது, அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், அங்குள்ள ஜும்ஆ பள்ளிவாசல் போன்றவை தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.   

முஸ்லிம்களின் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதோடு, சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளனர். அந்த இரவு, பேய்களின் கூத்து மேடையாக இருந்துள்ளது.  
வரலாற்றின் நீளம்  

இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்களப் பேரினவாதம், தனது சாட்டைகளைச் சுழற்றத் தொடங்கி நெடுங்காலமாகி விட்டது. 1915ஆம் ஆண்டு நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரமானது, வரலாற்றில் பதிந்து கிடக்கும் மிகப்பெரும் தழும்பாகும். முஸ்லிம்களுக்கு எதிரான அந்த வேட்டை, இன்னும் முடிந்த பாடில்லை.   

இலங்கையில் யுத்தம் நடந்த காலப்பகுதியில், சிங்களப் பேரினவாதத்தின் பார்வை தமிழர்களை நோக்கித் திரும்பியதால், அதன் கொடுமையிலிருந்து சில தசாப்தங்கள், முஸ்லிம்கள் தப்பிப் பிழைத்தனர். யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் மீதான வேட்டை மீண்டும் ஆரம்பித்தது.  

காரணங்களும் காரியங்களும்  

இலங்கையில் முஸ்லிம் சமூகம் வியாபாரத்தில் முன்னேறியுள்ளது. இலங்கையில் கணிசமான வியாபாரத்துறைகள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வர்த்தகச் சந்தையில் முஸ்லிம்களை முந்த முடியாதவர்கள் - கையிலெடுத்த ஆயுதம்தான் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான இனவாதத் தாக்குதல்களாகும் என்கிற சந்தேகம் பரவலாக உள்ளது.   

அப்படி ஆரம்பித்த தாக்குதல்கள்தான் தற்போது, அதன் எல்லைகளையும் இலக்குகளையும் மீறிச் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது, பேரினவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு, ஒரு முரண்பாடு தேவையாக இருக்கிறது. அந்த முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு ஏதோவொரு குற்றச்சாட்டைக் கூற வேண்டியிருக்கிறது. எனவே, சில ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுகளை அவர்கள் கைவசம் வைத்துள்ளார்கள். அவற்றில் இரண்டு குற்றச்சாட்டுகள் பிரபலமானவையாகும்.  

01) முஸ்லிம்களின் ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவு, பானங்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன.  

02) முஸ்லிம்களின் புடவை கடைகள் அல்லது ஆடை விற்பனை நிலையங்களிலுள்ள, ‘பெண்கள் ஆடைகள் அணிந்து பார்க்கும் அறைகளில்’ கமெராக்கள் பூட்டப்பட்டுள்ளன. அதன் மூலம் அங்கு ஆடை மாற்றும் சிங்களப் பெண்கள் படமெடுக்கப்படுகின்றனர் என்பவையே அந்தக் குற்றச்சாட்டுகளாகும்.  

அம்பாறை நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கூறப்படும் காரணம், மேலே சொன்னதில் முதலாவதாகும்.  

ஆரம்பப் புள்ளி  

அம்பாறை நகரிலுள்ள ஹோட்டலுக்கு, சம்பவம் நடந்த திங்கட்கிழமையன்று சிங்கள நபரொருவர் வருகிறார். அதன் போது நடந்தவற்றை, அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஏ.எல். பர்சித் விவரிக்கின்றார்.  

 “வழமையாக எங்கள் கடைக்கு வரும் சிங்களவர் ஒருவர், அன்றும் வந்தார். இறைச்சிக் கறியுடன் சாப்பாடு கேட்டார். இறைச்சிக் கறி முடிந்து விட்டது என்று கூறினேன். ஆனால், அவரோ, தான் ஒரு சீனி நோயாளியென்றும், ‘சீனி நோய்க்கான ஊசி போட்டுள்ளேன், எனக்கு இறைச்சிக் கறி தந்தே ஆக வேண்டும்’ எனக் கூறினார். அதனால், எனது சகோதரரை அழைத்து விவரத்தைக் கூறினேன். ‘நாம் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்துள்ள இறைச்சிக் கறியும் பராட்டாவும் உள்ளது. அதை எடுத்துக் கொடுங்கள்’ என்று எனது சகோதரர் கூறினார். அதன்படி, அவற்றை அந்த நபருக்கு நாம் கொடுத்தோம்.  

“நாம் வழங்கிய உணவை அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கையில் எதையோ எடுத்துக் கொண்டு என்னை அழைத்தார். நான் சென்ற போது, அவரின் கையிலிருந்ததைக் காட்டி,‘இது என்ன’ என்று கேட்டார். அவர் காட்டியது கோதுமை மா என்பதை நான் விளங்கிக் கொண்டேன். எனவே, ‘அது கோதுமை மா’ என்று அவரிடம் கூறினேன். ஆனால், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு ஏதோ ஒரு பெயரைக் கூறினார். எனக்கு விளங்கவில்லை. எனவே, கடையில் வேலை செய்யும் வேறொருவரை அழைத்து விவரத்தைக் கூறச் சொன்னேன். அவரும் அது கோதுமை மாதான் என்பதைக் கூறினார். ஆனால், அந்த நபர் அதை ஏற்றுக் கொள்ளாமல் வேறு என்னவோ ஒரு பெயரைக் கூறிக்கொண்டேயிருந்தார்.  

“பிறகு எனது சகோதரரை அழைத்து, விவரத்தைக் கூறினேன். அவரும் வந்து அது கோதுமை மாதான் என்பதைக் கூறினார். ஆனால், பிரச்சினைக்குரிய நபர் சிங்கள மொழியில் எதையோ கூறி ‘தெம்மாத’ (போட்டாயா) என்று சிங்களத்தில் கேட்டுக் கொண்டே, தனது கைத் தொலைபேசி மூலமாக வீடியோ எடுக்க ஆரம்பித்தார். மேலும், அந்த நபர் எனது சகோதரனின் கன்னத்தில் அறைந்தார். எனது சகோதரர் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.   

“பிறகு, அவர் என்னிடமும் சிங்களத்தில் முன்பு கூறியது போல் ஏதோவொன்றைக் கூறி ‘தெம்மாத’ (போட்டாயா) என்று கேட்டார். நான் திரும்பத் திரும்ப அது கோதுமை மாத்தான் தான் என்பதைக் கூறிக் கொண்டேயிருந்தேன். இந்த நிலையில் அவர் எனக்கும் அடித்தார். மீண்டும் ‘தெம்மாத’ என்று கேட்டார். ஆம் என்று சொல்லாமல் விட்டால், என்னை விடமாட்டார்கள் என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். அதனால், என்ன கேட்கிறார்கள் என்று தெரியாமலேயே ‘ஆம்’ என்றேன். அதனை அவர்கள் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார்கள். பிறகு அதை பேஸ்புக்கில் போட்டிருந்தார்கள்.  

“சம்பவம் நடந்த பிறகு, மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன், நாங்கள் கொடுத்த சாப்பாட்டுக்குள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தைப் போட்டாயா என்றுதான் அந்த நபர் என்னிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அந்தச் சிங்களச் சொல்லுக்கு அப்போது எனக்கு அர்த்தம் தெரியாது” என்றார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.  

திட்டமிடப்பட்ட தாக்குதல்  

ஹோட்டலில் இந்தக் குழப்பம் நடந்து கொண்டிருந்தபோதே, அங்கு ஏராளமானோர் கூடி விட்டனர். அதையடுத்து, ஹோட்டலில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர்; ஹோட்டலும் அடித்து நொறுக்கப்பட்டது.   
பின்னர், அங்கிருந்தவர்கள் தமது சகாக்களுக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தனர். அதையடுத்து, இரண்டு பஸ்கள், மேலும் சில வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நூற்றுக் கணக்கானோர் வந்திறங்கியதாக, சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.  

அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்டதொரு செயற்பாடு என, முஸ்லிம்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹாரீஸ் உள்ளிட்டோரும், இந்தக் குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருக்கின்றனர். தாக்குதலுக்கான ஆட்களைத் தயார்படுத்தி விட்டுத்தான், ஹோட்டலில் குழப்பத்தை தொடங்கியிருக்கின்றனர்.  

தாக்குதலை மேற்கொண்டோர் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் கூட, ஹோட்டலுடன் அந்தப் பிரச்சினை முடிந்திருக்க வேண்டும்.   

அம்பாறை நகரிலிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஏனைய ஹோட்டல்கள் ஏன் தாக்கப்பட்டன? பள்ளிவாசல் மீது ஏன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது? அங்கிருந்த புனித குர்ஆன் பிரதிகள் ஏன் தீயிடப்பட்டன? முஸ்லிம்களின் வாகனங்கள் ஏன் எரிக்கப்பட்டன? சம்பந்தமேயில்லாத ஏனைய முஸ்லிம்கள் ஏன் தாக்கப்பட்டனர்? என்கிற கேள்விகளுக்கு பதில்கள் கிடையாது.  

பொலிஸாரின் பாரபட்சம்  

உண்மையாகவே, அம்பாறையில் முஸ்லிம்களினுடைய சொத்துகளைத் தாக்கி, சேதங்களை விளைப்பதுதான் பேரினவாதப் பேய்களின் நோக்கமாக இருந்தது. அதை ஆரம்பிப்பதற்கு, அவர்களுக்கு ஒரு முரண்பாடு தேவையாக இருந்தது. அதுதான், ஹோட்டலில் அரங்கேற்றப்பட்ட நாடகமாகும்.  

அம்பாறை நகரத்தில் இனவாதத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு விளையாட்டுக்கும் பொலிஸார் எட்டிப் பார்க்கவில்லை. இத்தனைக்கும், அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து அம்பாறை பொலிஸ் நிலையம் ஒரு கிலோமீற்றர் தூரத்தில்தான் உள்ளது. 

இனவாதத் தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து வாகனத்தில் செல்ல மூன்று நிமிடங்களும், நடந்து செல்வதாயின் 12 நிமிடங்களும் ஆகும் என, ‘கூகிள் வரைபடம்’ கூறுகிறது. ஆனால், விடியும் வரை, அங்கு பொலிஸார் தலை காட்டவேயில்லை.  

அம்பாறைத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பாரபட்சமாவே நடந்து கொண்டார்கள் என்றும் முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகிறது. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹாரீஸ் மற்றும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகளும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

தாக்குதல் நடைபெற்று முடிந்த மறுநாள் செவ்வாய்கிழமை, சம்பவ இடங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சென்றிருந்தனர். பிரதியமைச்சர் ஹாரீஸும் அங்கு சென்றிருந்தார். 

இதன்போது, அம்பாறை பள்ளிவாசல் அருகாமையில் வைத்து, அங்கு கூடிநின்ற பேரினவாதிகளால் பிரதியமைச்சர் ஹாரீஸ் அச்சுறுத்தப்பட்டார். பிரதியமைச்சரை நோக்கிக் கூச்சலிட்ட பேரினவாதிகள், மிக மோசமான வார்த்தைகளைக் கூறி, பிரதியமைச்சரைத் தூசித்தமையை வீடியோகளில் காண முடிகிறது. இதன்போது, அங்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் நின்றிருந்தனர். ஆனாலும், நடந்தவற்றை அவர்கள் புதினம் பார்த்தார்களே தவிர, வேறு எதையும் மேற்கொள்ளவில்லை.  

புதன்கிழமையன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார். தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளிவாசலில் தொழுதார். பின்னர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் ஒரு கூட்டத்தை நடத்தினார். பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  

இதன்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென அமைச்சர் ரிஷாட் அங்கு வலியுறுத்தினார். முக்கிய தீர்மானங்களும் அங்கு நிறைவேற்றப்பட்டன.   

பொலிஸாரின் காட்டாய்ப்பு  

இதையடுத்து அம்பாறை இனவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், கடந்த வியாழக்கிழமை ஐந்து பேரை, அம்பாறைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.   

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி சந்தேக நபர்கள் ஐவரும் அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது பௌத்த மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 500க்கும் அதிகமானோர் நீதிமன்றில் திரண்டிருந்தனரென, அங்கு முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். பெரும் பதட்டத்துக்கு மத்தியில் அந்த வழக்கு அங்கு எடுக்கப்பட்டது.  

அம்பாறையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் எட்டு வழக்குகளை இதுவரை தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் ஒரு வழக்கு, ஹோட்டலில் நடந்த பிரச்சினை தொடர்பானதாகும். அந்த வழக்கு தொடர்பில்தான் மேற்படி ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.   

குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஹோட்டல் உரிமையாளருக்கும், கைது செய்யப்பட்ட ஐவருக்கும் நடந்த பிரச்சினையானது, தனிப்பட்ட தகராறு என்று, நீதிமன்றில் பொலிஸார் கூறினர். எனவே, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறும் பொலிஸார் கோரியிருந்தனர்.  

இதேவேளை, குறித்த சந்தேக நபர்கள் ஐவர் மீதும், பொலிஸார் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர்களுக்கு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியாது என, மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.   

இதையடுத்து, சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் சுமத்தியிருந்த சில குற்றச்சாட்டுகள் உடனடியாக வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, சந்தேக நபர்கள் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.   

இதேவேளை, தாக்குதல் நடந்து மறுநாள், ‘சனிக்கிழமையன்று (தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைத்துக் கொண்டு, அம்பாறை நகருக்கு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் வருவார்’ என, மு.கா தரப்பில் அறிவிக்கப்பட்டது.  

 ஆனால், சனிக்கிழமையன்று அம்பாறை மாவட்டத்துக்கு அப்படி யாரும் வரவில்லை. ஆயினும், ஞாயிற்றுக்கிழமை பிரதமரை அழைத்துக் கொண்டு மு.கா தலைவர் அம்பாறை நகருக்குச் செல்வார் என, மு.காங்கிரஸின் ஊடகப் பிரிவு சனிக்கிழமை மாலை அறிவித்தது. இருந்தபோதும், அம்பாறை நகரிலிருந்து 32 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒலுவிலுக்குத்தான் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மு.க தலைவர் ரவூப் ஹக்கீம் வந்திருந்தார்.  

இதையடுத்து, ஒலுவிலிலுள்ள துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியில் பிரதமர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அதில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் ஹாரீஸ், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   

அங்கு, அம்பாறை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அறியமுடிகிறது. குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்துக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அம்பாறை பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டமை தொடர்பில், பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டதாக அறிய முடிகிறது.   

இதையடுத்து, அம்பாறையில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கையாளும் பொறுப்பை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட குழுவிடம் வழங்குவதாக, பிரதமர் அங்கு தெரிவித்தார் என்று, முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

எவ்வாறாயினும், பிரதமரை மு.கா சம்பவம் நடைபெற்ற அம்பாறை நகருக்குக் கூட்டிச் செல்லாமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அம்பாறையில் நடைபெற்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, பிரதமர், ஒலுவிலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியமையானது, தலையில் ஏற்பட்ட காயத்துக்கு காலில் கட்டுப் போட்டமைக்கு ஒப்பானதாகும் என்று, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது.  

‘தைரியமற்ற பிரதமர்’ ஹாரீஸின் குற்றச்சாட்டு  

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்துக்கு வந்திருந்த பிரதமர், அம்பாறை நகருக்குச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்காமை தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹாரீஸ் கடுமையான விசனத்தைத் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

 

“இனவாதத் தாக்குதல் நடைபெற்ற அம்பாறை நகருக்கு பிரதமர் வருகை தராமையானது பெரும் ஏமாற்றத்தையளிக்கிறது. அம்பாறையிலுள்ள அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே பிரதமர் அம்பாறை செல்லவில்லை. இதன் மூலம், பிரதமர் தைரியமற்ற ஒருவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால், பிரதமர் மீது முஸ்லிம் சமூகத்துக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது” என, பிரதியமைச்சர் ஹாரீஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.  

அம்பாறை நகருக்கு வரக் கூடாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாகமகே பிரதமருக்கு அழுத்தம் கொடுத்ததாக , பிரதியமைச்சர் ஹாரீஸ் கூறியிருப்பது இங்கு மிகவும் கவனிப்புக்குரியது. 

பிரதியமைச்சர் ஹாரீஸ் கூறியமை உண்மையாயின், அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதல்களை பிரதமர் சென்று பார்க்கக் கூடாது என, அமைச்சர் தயாகமகே ஏன் அழுத்தம் கொடுத்தார்? இனவாதத் தாக்குதல்கள் நடந்த இடங்களைப் பார்ப்பதற்கு பிரதமர் வரக்கூடாது என, தடுப்பதன் மூலம் தயாகமகே அடைந்து கொள்ளும் நன்மைகள் என்ன? என்கிற பல கேள்விகளுக்கு விடைகள் காணப்படுதல் அவசியமாகும்.  

பேய்க் கூத்து பலவகை  

அம்பாறை மாவட்டத்தில் நடந்த இனவாதத் தாக்குதல் ஒரு வகைப் பேய்க் கூத்து என்றால், அதை வைத்து வேறு சில பேய்க் கூத்துகளை மக்களிடம் அரசியல்வாதிகள் காட்டிக் கொண்டிருக்கின்றமையையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.   

இன்னொருபுறம், பேய்களின் கூத்துகள் எப்போதும் பலிக்காது என்பதையும் சம்பந்தப்பட்டோர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 

நல்லதொரு ‘பேயோட்டி’யும் பேய்களைப் பிடித்து அடைத்து வைப்பதற்கான ஒரு ‘கூஜா’வும் கிடைக்கும் வரையில்தான் இந்தக் கூத்துக்ளெல்லாம் சாத்தியமாகும்.  

ஆனால், நல்ல பேயோட்டியும் கூஜாவும் எப்போது கிடைக்கும் என்றுதான் தெரியவில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X