2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொன்சேகாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவம் 2008 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி, மன்னார் மாட்டத்தில் விடத்தல்தீவில் அமைந்திருந்த, விடுதலைப் புலிகளின் போர் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, கடற்புலித் தளத்தைக் கைப்பற்றிக் கொண்டது.   

இது, இராணுவத்தினர் பெற்ற முக்கிய வெற்றி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 
அதுவரை இராணுவத்தினர், குறிப்பிட்டதோர் இடத்தில், எவ்வளவு பாரிய வெற்றியை அடைந்தாலும், அவர்கள் மீண்டும் கோட்டைவிட்டு விடுவார்கள், புலிகள் மீண்டும் இராணுவத்தினர் கைப்பற்றிய இடத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள் என்றதோர் சந்தேகக் கண்கொண்டே, சிங்கள மக்கள் முன்னைய, அந்த வெற்றிகளை நோக்கினார்கள். 

ஆனால், விடத்தல்தீவில் இராணுவத்தினர் அடைந்த வெற்றியை, சிங்கள மக்கள் அவ்வாறு நோக்கவில்லை. முன்னொரு போதும் இல்லாதவாறு, இது இறுதி வெற்றியின் முக்கியமானதோர் கட்டமாகவே அவர்கள் விடத்தல்தீவு இராணுவ வெற்றியைக் கண்டார்கள். 

அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான், இராணுவத்தினர் முழு கிழக்கு மாகாணத்தையே, புலிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியிருந்தார்கள்.   

மாவிலாற்றிலிருந்து ஆரம்பித்த, கிழக்கு மாகாணப் போரின் போது, எவ்வித தங்கு தடையுமின்றி படையினர் முன்னேறினர். அந்த மாபெரும் வெற்றியை அடைந்த கையோடு, விடத்தல்தீவை அவர்கள் கைப்பற்றியிருந்தமையினாலேயே சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் புதிய நம்பிக்கை ஏற்பட்டது.  

எனவே, நாட்டில் தென் பகுதிகளெல்லாம் இராணுவத்தினரைப் பாராட்டியும் வாழ்த்தியும் ‘பெனர்’களும் போஸ்டர்களும் போடப்பட்டு இருந்தன. ஆனால், அவை எந்தவொரு குறிப்பிட்ட குழுவினால் போடப்பட்டவையாகத் தென்படவில்லை.   

அவற்றின் அளவு, அவற்றில் இருந்த சுலோகங்கள், அவற்றுக்காக பாவிக்கப்பட்டு இருந்த புடவை, கடுதாசி மற்றும் பொலித்தீன் ஆகியவை பல்வேறுபட்டவையாக இருந்தன. உண்மையிலேயே அவை எவரினதும் தூண்டுதலின்றி, சாதாரண சிங்கள மக்களால் போடப்பட்டவையாகவே இருந்தன.  

கிழக்கு மாகாணப் போர் நடவடிக்கைகளைப் பற்றியும், அதையடுத்து விடத்தல்தீவு போராட்டத்தைப் பற்றியும் சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக வெற்றித் தோரணையில் வெளியிட்ட செய்திகள் மற்றும் கட்டுரைகளின் விளைவாகவே, அம் மக்கள் மத்தியில் இந்தப் புதிய நம்பிக்கை உருவாகியது.  

அப்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வாழ்க்கையிலும் விடத்தல்தீவு சண்டை, முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், கிழக்கு மாகாணப் போர் மற்றும் விடத்தல்தீவுச் சண்டையைப் பற்றிய ஊடக அறிக்கையிடலின் பயனாக, அவர் அதிலிருந்து சிங்கள மக்களால் ஏறத்தாழ வணங்கப்படலானார்.  

விடத்தல்தீவு கடற்புலித் தளத்தைக் கைப்பற்றிய இராணுவத்தின் 58 ஆவது படையணி, அதன் தளபதி பிரிகேடியர் ஷவேந்திர சில்வாவின் தலைமையில், வன்னிப் பெரு நிலப்பரப்பின் மேற்குக் கரையோரமாகப் புலிகளின் தளங்களையும் அரண்களையும் பெருந்தெருக்களையும் கைப்பற்றிக் கொண்டு, வன்னிக்குள் பிரவேசித்து, அங்கு பூநகரி, பரந்தன் என்று முக்கிய சந்திகளையும் பாரிய எதிர்ப்புகளின்றியே கைப்பற்றிக் கொள்ளும் போது, பொன்சேகாவின் புகழ் ‘ரொக்கெட்’ வேகத்தில் உயர்ந்தது.   

ஆனால், இராணுவத்தினருக்கு புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியை அவ்வளவு இலேசாகக் கைப்பற்றிக் கொள்ள புலிகள் இடமளிக்கவில்லை. எனவே, சிலநாட்கள் அந்நகரை முற்றுகையிட்டு இருந்து, கடுமையான சண்டையொன்றின் மூலம், 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி படையினர் கிளிநொச்சி நகரையும் கைப்பற்றிக் கொண்டனர்.  

பொன்சேகாவின் புகழ் வானளாவ உயர்ந்தது. சிங்கள மக்களுக்கு அவர் ஒரு கண்கண்ட தெய்வமாகிவிட்டார். அடுத்த, ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா போட்டியிட்டால், அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தோற்கடிப்பார் என சிங்கள மக்கள் பேசிக் கொண்டனர். மஹிந்தவுக்கும் அப்போது அரசியல் ரீதியாக சவால்விட நாட்டில் எவரும் இருக்கவில்லை.

அந்த நிலையில், அவரையும் பொன்சேகா தோற்கடிப்பார் என்று சாதாரண மக்கள் கூறுவதாக இருந்தால், போர் அவருக்கு எந்தளவு மகத்தான வரவேற்பையும் புகழையும் தேடிக் கொடுத்தது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.  

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21, 22 ஆம் திகதிகளில் நோர்வே நாட்டின் அனுசரணையுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்  வே. பிரபாகரனுக்கும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடானது, ஒரு வகையில் ரணிலின் சாணக்கியத்தின் உச்சக் கட்டம் எனலாம்.   

அவர், அந்த உடன்படிக்கை, தரையில் மட்டும் அமுலாகும் வகையில் பார்த்துக் கொண்டார். கடல் மார்க்கமாகத் தமக்கு ஆயுதம் கொண்டு வர முடியும் என்பதற்காக, புலிகளும் அவ் உடன்படிக்கை, கடலுக்கும் பொருந்த வேண்டும் என வற்புறுத்தவில்லை.  

ரணில் கூடிய வரை, சர்வதேச சமூகத்தை உடன்படிக்கைக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டார். புலிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதே அவரது நோக்கமாகியது.   

அதை அவர் சர்வதேச பாதுகாப்பு வலயமாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட போதே புலிகள் உணர்ந்தனர். சர்வதேச தலையீடு அதிகம் என புலிகள் முறையிட்ட போதும், அப்போது எதையும் செய்ய முடியாதிருந்தது.   

புலிகள் தந்திரத்துக்காகவே போர் நிறுத்தத்துக்கு முன்வந்தனர். எனவே, அவர்களது நடவடிக்கைகளின் காரணமாக, அவர்களது நம்பகத்தன்மை சர்வதேச சமூகத்தின் முன் கேள்விக் குறியாகிய நிலையில், சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு புலிகளின் ஆயுதக் கப்பல்களைப் பற்றிய தகவல்களை வழங்கத் தொடங்கியது.   

போர் நிறுத்தம் கடலில் இல்லாததினால், உடன்படிக்கையை மீறாமலேயே, அந்தத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் கடற்படையினர் அந்தக் கப்பல்களை அழிக்க முடிந்தது.   

2007 ஆம் ஆண்டு, ஆரம்பத்திலிருந்து ஒரு பனடோல் வில்லையாயினும் வெளிநாடுகளில் இருந்து, தருவித்துக் கொள்ள புலிகளால் முடியாமல் போய்விட்டதாக, புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் செல்வராசா பத்மநாதன் (கே.பி), ஊடகவியலாளர் 
டி.பி.எஸ் ஜெயராஜிடம் பின்னர் கூறியிருந்தார்.   

இந்தநிலையில் தான், வன்னிப் போர் நடைபெற்றது. எனவே, புலிகளின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது. இராணுவத்தினர் போரிட்ட போதிலும், இறுதிக் கட்டத்தில் அதன் பிரசார இலாபத்தை அரசியல்வாதிகளே அடைந்தனர்.   

இன்னமும் கூட, போர் வெற்றிக்காக மஹிந்த என்ன பங்களிப்பை செய்தார் என்பதைக் கோடிட்டுக் காட்ட முடியாதவர்களும் போர் வெற்றியின் உரிமையாளராக மஹிந்தவையே காண்கிறார்கள்.   

தமிழ் மக்களும், போரில் புலிகள் அடைந்த தோல்விக்கு, பொன்சேகாவை விட, மஹிந்தவே காரணம் என நினைத்தார்கள் போலும். புலிகள் அடைந்த தோல்வியினாலும் போரினால் தாம் அனுபவித்த துன்பங்கள் மற்றும் அவமானங்களாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, மஹிந்தவுக்கு எதிராகவும் போரின்போது, இராணுவத்தை வழிநடத்திய பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.   

போர் வெற்றியின் புகழை அரசியல் தலைமை கொள்ளையடித்திருந்தும், அந்த நிலைக்கு இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கே மறுப்புத் தெரிவிக் முடியாமல் போய்விட்டது. அவரும் அதை ஆமோதித்தே கருத்துத் தெரிவிக்க நேரிட்டது.   

“30 ஆண்டு காலமாக இருந்த போரை, இரண்டு வருடங்களும் பத்தே மாதங்களில் முடித்தீர்களே என்ன இரகசியம்” எனப் போர் முடிந்த உடன், அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த ‘பொட்டம் லைன்’ பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, பொன்சேகா அளித்த பதில் அதையே காட்டுகிறது.  

“போரில் வெற்றி பெறுவதற்காக, எனக்கு உறுதியான அரசியல் தலைமை பின்புலமாக அமைந்தது. போரை நிறுத்துமாறு, அரசாங்கத்தின் மீது, சர்வதேச நெருக்குவாரம் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வளைந்து கொடுக்காமல் உறுதியாக நின்றார். 

ஜனாதிபதிக்குப் புறம்பாகப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர்கள் எதிரியைப் புரிந்து கொண்டிருந்தனர். இருவரும் நல்ல புரிந்துணர்வோடிருந்தனர்” என பொன்சேகா பதிலளித்திருந்தார்.  

அவர் கூறிய ஒரு கருத்து முற்றிலும் உண்மையே. பொன்சேகாவின் மீதான மஹிந்தவினதும் கோட்டாபயவினதும் நம்பிக்கையின் காரணமாகவே, மஹிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 

அந்த நம்பிக்கையை கோட்டாபய, இந்திய ஊடகவியலாளர் வி.கே.சஷிகுமாருடன் நடத்திய பேட்டியொன்றின் போது வெளியிட்டு இருந்தார். அந்தப் பேட்டியை அடிப்படையாகக் கொண்டு சஷிகுமார், ‘இன்டியன் டிபென்ஸ் ரிவீவ்’ ஊடகத்துக்கு எழுதிய கட்டுரையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  

“கோட்டாபய இராணுவப் பின்னணியுள்ளவர். அவர் சொந்த விருப்பத்தில் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுடனான தமது நற்புறவை அவர் தொடர்ந்தும் பேணி வந்தார். அவர் பொன்சேகாவிடம், “உம்மால் போரில் வெற்றி பெற முடியுமா” எனக் கேட்டார். 

“ஆம், ஆனால் எனது குழுவைத் தெரிவு செய்ய நீங்கள் எனக்கு அனுமதி வழங்க வேண்டும்” என அனுபவசாலியான பொன்சேகா கூறினார். கோட்டாபயவும் மஹிந்தவும் இணங்கினர். “இராணுவம் தமது கடமையைச் செய்ய இடமளிப்போம். அத்தோடு நாம் அரசியல் ரீதியாக கோட்டையை பாதுகாத்துக் கொள்வோம்” என அவர்கள் பொன்சேகாவிடம் கூறினர். அந்தச் சீரான ஒழுங்கு பலனளித்தது. 

நாம் முன்னர் கூறியது போல், போர் முடிவடைந்தபோது, போர் வெற்றியின் புகழ், அரசியல் தலைமைத்துவத்திடம் சென்றடைந்திருந்த போதிலும் போரின் ‘ஸ்டாராக’த் தொடர்ந்தும் பொன்சேகாவே மக்கள் மனதில் இருந்தார். அதைப் போரின் புகழைத் தமதாக்கிக் கொண்ட அரசியல் தலைமையாலும் புறக்கணிக்க முடியவில்லை.  

அவ்வாறு புறக்கணிக்கும் அவசியமும் இருக்கவில்லை. எனவே, போர் முடிவடைந்தவுடன் சுயாதீன தொலைக்காட்சி சேவையுடன் நடத்திய செவ்வியொன்றின்போது, கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.   

“இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் தொழில்சார்தன்மை உலகம் முழுவதிலும் பரவலாகப் பாராட்டைப் பெற்றள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புலிகள் கைப்பற்றிக் கொண்டிருந்த பிரதேசங்களை மீட்பதில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆற்றிய பங்களிப்பின் காரணமாக, இந்திய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே. நாராயணன், அவர் உலகிலேயே மிகச் சிறந்த இராணுவத் தளபதி எனக் கூறியிருக்கிறார்”.   அவர் மேலும் கூறுகிறார், “லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அனுபவம், அறிவு, துணிவு மற்றும் வீரம் இல்லையாயின் இந்த வெற்றிகளை ஒருபோதும் அடைய முடியாது”. 

அந்தப் பேட்டியின் மற்றொரு இடத்தில், போர் வெற்றிக்கான மற்றொரு காரணத்தை விளக்கி, கோட்டாபய ராஜபக்ஷ மேலும் இவ்வாறு கூறுகிறார். “எவ்வாறு முகம் கொடுப்பது எனப் பிரபாகரன் திகைத்துப் போகும் வகையிலான போர்த் தந்திரங்களை இராணுவத் தளபதி உபயோகித்தார்.  எதிரியைத் தாக்குவதற்காக இராணுவத் தளபதி, இராணுவத்தினரைச் சிறு குழுக்களாகப் பாவித்தார். ஒரே நேரத்தில் பல முனைகளில் தாக்குதல்களை நடத்துவதற்காக அவரிடம் பரந்துபட்ட போர் முனையொன்று இருந்தது”.   

இவ்வாறு அரசியல் தலைமையும் இராணுவத் தலைமையும் ஒன்றை ஒன்று பாராட்டிக் கொண்டாலும், அதே கால கட்டத்தில் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர், இரு சாராருக்குமிடையே பனிப் போரொன்றும் இருந்துள்ளது என இப்போது தெரிய வந்துள்ளது.   

அதன் காரணமாகத் திடீரென பொன்சேகா இரண்டு நாட்களுக்குள் இராணுவத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என மஹிந்தவால் கேட்டுக் கொள்ளப் பட்டார். 

அதற்குப் பதிலாக இராணுவ விடயங்களில் அதை விடக் குறைந்த அதிகாரமும் அந்தஸ்தும் உள்ள பாதுகாப்பு ஆளணித் தலைவர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டார். அவருக்குப் பதிலாக போர்க் காலத்தில் வன்னித் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார். அவர் மஹிந்தவின் தூரத்து உறவுக்காரர்.  

ஆனால், அப்போதும் பொன்சேகாவே போரின் ‘ஸ்டாராக’ இருந்தார். எனவே புதிய இராணுவத் தளபதி பதவியேற்ற உடன், ஜயசூரியவும் பொன்சேகாவின் புகழ் பாடினார். அரச பத்திரிகையொன்றுடனான பேட்டியொன்றின்போது, அவர் இவ்வாறு கூறினார். 

“பிரதானமாக அவரது (பொன்சேகாவினது) உன்னத தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாகவே, ஒரு போதும் தோற்கடிக்க முடியாததாகக் கருதப்பட்ட புலிகளைத் தோற்கடிக்க எம்மால் முடிந்தது.   

அவரது தலைமையின் கீழான குழுவில் ஓரங்கமாக இருந்தமையிட்டு நான் பெருமையடைகிறேன். அவரது காலத்தில் போரில் வெற்றியடைவதற்காக நான் அவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினேன்”.  

இராணுவத் தளபதி பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டமையே பொன்சேகாவின் வீழ்ச்சியைக் குறித்த முதலாவது சம்பவமாகும். அதேவேளை, அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான பிணக்கின் முதலாவது வெளிப்பாடாகவும் அது இருந்தது. 

 அந்தப் பகையின் காரணமாக பொன்சேகா இராணுவச் சேவையிலிருந்து விலகி, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியிட்டார். 

ஆனால், படையினரால் கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட போது, சிங்கள மக்கள் என்னதான் கூறினாலும், மஹிந்தவுக்கு எதிரான அந்தத் தேர்தலின் போது, அதேமக்கள் பொன்சேகாவுக்கு வாக்களிக்கவில்லை. அவர் அவமானகரமாகத் தோல்வியைத் தழுவினார்.   

பொன்சேகாவே புலிகளைத் தோற்கடித்தார் என்பதை மறந்து, தாமே உலகில் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக வர்ணிக்கப்பட்ட பொன்சேகாவுக்கு, மஹிந்தவின் ஆட்கள் வழமை போல், புலி முத்திரையைக் குத்தினர். 

முதன் முதலாக பொன்சேகாவை உலகில் சிறந்த தளபதி எனக் கூறிய இலங்கையரான கோட்டாபயவும் எந்தவொரு தளபதியும் செய்யக் கூடியதையே பொன்சேகாவும் செய்தார் என்று கூறினார்.   

இப்போது பொன்சேகா, போர்க் குற்றமிழைத்தார் எனக் குற்றஞ்சாட்டுகிறார். ஜயசூரிவுக்கு ஆதரவாகவும் பொன்சேகாவுக்கு எதிராகவும் மஹிந்தவின் ஆட்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.   

அதற்கு முன்னர் மஹிந்த, பொன்சேகாவுக்கு எதிராக இரண்டு இராணுவ நீதிமன்றங்களை நிறுவி அவருக்குச் சிறைத் தண்டனையும் வழங்கி, அவரது பதக்கங்களையும் பறித்து, அவரது ஓய்வூதியத்தையும் பறித்தார். 

பொன்சேகா போரின் போது, புலிகளுக்கு எதிரான கடற்படையின் நடவடிக்கைகளை குழப்ப முனைந்தார் என இறுதிப் போர்க் காலத்தில், கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னாகொட, தாம் எழுதிய ‘அதிஷ்டானய’ (திடசங்கற்பம்) என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.   

தளபாடங்கள் இல்லை என மஹிந்த, போருக்கு பின்வாங்கியதாக பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஒன்று சேர்ந்து புலிகள் போன்றதோர் பலம் வாய்ந்த கிளர்ச்சிக் குழுவொன்றைத் தோற்கடித்ததே ஆச்சரியமாக இருக்கிறது.  

பொன்சேகாவின் குற்றச்சாட்டினால் மனித உரிமை மீறல் என்ற விடயம் மீண்டும் களமிறங்கியிருக்கிறது. இக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு அரசாங்கமும் தெற்கே உள்ளவர்களும் காட்டும் அச்சமும் குற்றச்சாட்டை மென்மேலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.   

அவர்களது இந்த அச்சத்தின் காரணமாக ஆரம்பத்தில் போர் குற்றம் புரிந்த ‘இரு சாராரும்’ என்று கூறி வந்த ஐ.நா அதிகாரிகளும் புலிகளை மறந்து விட்டார்கள். 

கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில், புலிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருக்கவில்லை என்பது அதற்கு உதாரணமாகும்.  

விசாரணையொன்றை எதிர்நோக்காமல் அரசாங்கத்துக்கு ஒரு போதும் இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X