2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொய்களை அறிக்கையிடுவது எப்படி?

Gopikrishna Kanagalingam   / 2017 டிசெம்பர் 28 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்பத்தியின் தலைப்பைப் பார்த்ததும், ஊடகவியலாளர்களுக்கான செயல்நூல் ஒன்றிலிருந்து, சில பந்திகளைத் தவறாகப் போட்டிருக்கிறார்கள் என்று, தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். “பொய்களை அறிக்கையிடுவது எப்படி? பொய்களைத் தவிர்த்து வாசிப்பது எப்படி?” என்பது தான், இத்தலைப்பின் நீண்ட வடிவம். அத்தோடு, சாதாரண வாசகர்களினதும் பொதுமக்களினதும் பங்களிப்பு இல்லாமல், மேற்படி வினாக்களுக்கான விடைகளைக் காண்பதென்பது சாத்தியப்படாது.  

பொய்களைப் பற்றி எதற்காகத் திடீரென ஆய்வு என்றால், 2017ஆம் ஆண்டை, பொய்களின் ஆண்டு என்றே வர்ணிக்கலாம். எங்கு பார்த்தாலும் பொய்களும் “போலிச் செய்தி” என்ற கூச்சல்களும் நிறைந்த ஆண்டாக, இவ்வாண்டு அமைந்திருந்தது. அதையும் தாண்டி, முன்னெப்போதுமில்லாத அளவுக்கு, உள்ளூராட்சி மக்களைக் கைப்பற்றி, மக்களுக்கு “சேவை செய்வதற்கு”, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்துடன் மோதிக் கொண்டிருக்கின்றன. இப்படியான “சேவை மனப்பாங்குடன்” இருக்கும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், பொய்களை அவிழ்த்துவிடப் போகிறார்கள். இவற்றை எதிர்கொள்வதற்கு, அனைவரும் தயாராக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.  

சைவ சமயத்தவர்களைப் பொறுத்தவரை, எக்காரியத்தைச் செய்ய முன்னரும் பிள்ளையார் சுழியென்பது தானாக இடம்பெறும் ஒன்றாக இருக்கிறதோ, பொய்கள், போலிச் செய்தி என்று வரும் போது, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சுட்டிக்காட்டாமல் போய்விட முடியாது. ஆனால், சர்வதேச அளவில் பார்க்கும் போது, பொய்களும் போலிச் செய்தி என்ற விடயமும், தனிநபர்களைத் தாண்டி, பாரிய பிரச்சினையாக இருக்கிறது என்பது தான் உண்மை.  

முன்னைய காலங்களில், ஆங்காங்கே பொய்கள் கூறப்படும் அல்லது தவறாக வழிநடத்தும் கருத்துகள் வெளிப்படுத்தப்படும். அவற்றைப் பிரித்துக் கூறுவது என்பது இலகுவானது; அறிக்கையிடலும் இலகுவானது. உதாரணமாக, கடந்தாண்டு கருத்துத் தெரிவித்திருந்த கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவில் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென்று கூறியிருந்தார். ஆனால், மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் அனைத்தும், இதற்கு மாற்றான கருத்தை வெளிப்படுத்துகின்றன. கியூபாவின் அரசியல் கைதிகள் தொடர்பான ஏராளமான ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதை அறிக்கையிடுவதும் அதை வாசிப்பதுவும் இலகுவானது.  

ஆனால், சர்வதேச அளவில், பொது மேடைகளில் பொய்களின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டு வருகின்றமையை எங்களால் பார்க்க முடிகிறது. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை மேற்கொண்ட ஆராய்ச்சி, சுவாரசியமானதாகவும் முக்கியமானதாகவும் அமைந்தது. மிகப்பெரிய பொய்கள் அல்லது வேண்டுமென்றே கூறப்பட்ட பொய்கள் என்பவற்றைக் கணக்கிலெடுத்த அப்பத்திரிகை, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது 8 ஆண்டுகள் காலத்தில், அவ்வாறான 18 பொய்களைக் கூறினார் என்று வெளிப்படுத்தியுள்ளது. மாறாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது முதல் 10 மாதங்களில் அவ்வாறான 103 பொய்களை வெளிப்படுத்தியுள்ளார். 10 மாதங்களில் 103 பொய்களெனில், ஒரு மாதத்தில் சராசரியாக 10 பொய்கள், அதாவது 3 நாளைக்கு ஒரு முறை, பாரிய பொய்யொன்று.  

மூன்று நாளைக்கு ஒரு முறை, மிகப்பெரிய பொய்யொன்றைக் கூறும் ஜனாதிபதி ஒருவரை, எவ்வாறு ஊடகங்களில் அறிக்கையிடுவது என, ஐ.அமெரிக்க ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் தடுமாறி வருகின்றன.  

இலங்கை போன்ற நாடுகளோடு ஒப்பிடும் போது, ஐ.அமெரிக்காவின் ஊடகங்களின் பலமும் தொழில்வாண்மையும் உச்சநிலையில் உள்ளவை. அவையே தடுமாறும் போது, நாமென்ன செய்வது?  

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், இப்போதே சந்தேகத்துக்கிடமான தகவல்கள் பரப்பப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு, அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும், கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. அதேபோல், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பைக் குழப்புவதற்கு, சுமந்திரன் முயன்றார் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டிருக்கின்றன.  

இதில் முக்கியமானது என்னவென்றால், உறுதிப்படுத்தப்படாத, வெறுமனே சதிக்கோட்பாடுகளாகக் காணப்படும் இந்த விடயங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்க்கட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. “அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறாரோ, இல்லையோ தெரியாது, ஆனால் அவர் அரசாங்கத்தின் ஓர் அங்கம் தான்” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கிறார்.  

இதன்மூலமாக, குறித்த சதிக்கோட்பாடு மீதான பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்ளும் கஜேந்திரகுமார், அதை வெற்றிகரமாகப் பரப்புகிறார்.  

இதுவொன்றும் புதிதல்ல. ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமா, கென்யாவில் பிறந்தார் என்ற பொய்யான விடயத்தைப் பரப்பியதில் முன்னின்றவர், அப்போது சாதாரண பிரஜையாக இருந்த டொனால்ட் ட்ரம்ப். அவர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்கள், “ஒபாமா, உண்மையில் கென்யாவில் தான் பிறந்தார் என, நம்பத்தகுந்த தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன” என்பதாகத் தான் இருந்தது. இது, மிகவும் பயன்தரக்கூடிய ஒரு முறை.  

இவற்றை எப்படி அறிக்கையிடுவது என்பது தான், இப்போதிருக்கின்ற பிரச்சினையாக இருக்கிறது. உதாரணமாக, கஜேந்திரகுமாரின் இக்கருத்தை வைத்துக் கொண்டால், ஊடகச் சந்திப்பொன்றில், பகிரங்கமாக வைத்துத் தெரிவித்த கருத்து அது. வடக்கின் அரசியல் சூழலைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இருக்கின்ற அரசியல் தலைவர்களுள், கஜேந்திரகுமாரும் ஒருவர். அவரது கருத்துகளைத் தவிர்க்க முயன்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார ஏடுகளாக, பத்திரிகைகள் மாறிவிடும். ஜனநாயகத்துக்கு ஆபத்தானது அது.  

மறுபக்கமாக, கஜேந்திரகுமாரும் சுரேஷ் பிரேமச்சந்திரனும், உறுதிப்படுத்தாமல் தெரிவிக்கின்ற கருத்துகளை அப்படியே பிரசுரிப்பது, ஊடகங்களைப் பயன்படுத்தும் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும். அரசியல்வாதி ஒருவர் சொல்வதை, உறுதிப்படுத்தாமல் அப்படியே பகிர்வது என்பது, மக்கள் தொடர்புப் பணி தான்.  

“ஊடகவியல் என்பது, புலனாய்வு ஊடகவியல் தான். அதைத் தவிர்ந்த ஏனைய எல்லாம், மக்கள் தொடர்புப் பணி தான்” என்ற, ஊடகவியலின் முக்கியமான கருத்தைத் தான், இவ்விடத்தில் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.  

ஆனால், எப்போதாவது பொய் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்பவர்களிடம், புலனாய்வை வெளிப்படுத்தலாம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை, பாரிய பொய்யைச் சொல்லும் ஒருவராக இருந்தால், அவரின் கருத்துகளை எவ்வாறு அறிக்கையிடுவது? நாட்டின் ஜனாதிபதியாக அவர் இருந்தால்?  

தற்போதைய சூழலில் இருக்கின்ற மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றமாக, சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஊடகச் சூழலையே அவை மாற்றியிருக்கின்றன. அரசியல்வாதிகள், அவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றனர். “மீம்கள்” என்ற பெயரில், சிறிய சிறிய விடயங்களை, படங்களாகப் பதிவிட்டுப் பரப்புகின்றனர்.  

தொழில்நுட்பம், தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்துவரும் நிலையில், ஊடகங்களைத் தாண்டி, மக்களிடம் சென்றடைவதற்கான வழிகளை, அரசியல்வாதிகள் கண்டுபிடித்துவிட்டனர். இந்நிலையில், ஊடகங்களை அரசியல்வாதிகள் தவிர்கக்கூடாது என்பதற்காக, சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் விடயங்களையும் தமது ஊடகங்களில் கொண்டுசேர்க்க வேண்டிய தேவை, ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. மோசமான வட்டமாக, இது மாறிவிட்டது.  

இப்படியான நிலைமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, ஊடகங்களும் செய்தி நுகர்பவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது. நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, அரசியல் நோக்கங்களைக் களைந்தெடுந்துவிட்டு, ஊடகங்கள் செயலாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. மறுபக்கமாக, உணர்ச்சிவசப்படுத்தும் அல்லது கொசுறுத்தனமான செய்தி அறிக்கைகளை நிராகரித்து, உண்மையான ஊடகவியலை மதிப்பதற்கு, பொதுமக்கள் முன்வர வேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஊடகங்கள் செயற்படவில்லையெனில், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது. 

மறுபக்கமாக, உணர்ச்சிவசப்படுத்தும் ஊடகவியலை நிராகரித்து, சிறிது அயர்ச்சி தருவதாக இருந்தாலும், உண்மையைக் கொண்டுவரும் ஊடகங்களுக்கு மக்களின் ஆதரவு இல்லையெனில், ஊடகங்களால் அதைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது.  

அதேபோல், அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்த வேண்டிய தேவையும், ஊடகங்களுக்குக் கிடையாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கும் இடையில் முரண்பாடெதுவும் ஏற்படுமாயின், இருவரின் கருத்துகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவை கிடையாது. இருவரில் எவர், அதிகமான பொய்களை அல்லது இனவாதக் கருத்துகளை அல்லது மதவாதக் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது வெளிப்படையானது. எனவே, அவர் தெரிவிக்கும் கருத்துகளை, கவனத்துடன் கையாள வேண்டிய தேவை இருக்கிறது.  

“உடையும், கவனமாகக் கையாளவும்” என்பது போல, சந்தேகத்துக்குரிய கருத்துகளைக் கவனமாகக் கையாளவில்லையெனில், எமது அடுத்த சந்ததித்துக்கு, உண்மைகளற்ற உலகத்தையே நாம் விட்டுச் செல்வோம் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே தான், இவ்விடயத்தில் ஊடகங்களும் செய்தி நுகர்வோரும் இணைந்து செயற்பட்டு, இச்சூழலை மாற்றியமைப்பது அவசியமானது என்பதை மறந்துவிடக்கூடாது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .