2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

போதை அரசியல்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள்களின் கூடாரமாக நாடு மாறிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.   
திரும்பும் திசையெல்லாம் படையினர் வசம், போதைப் பொருள்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கைப்பற்றப்படும் போதைப் பொருள்களின் எடை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.   

சனிக்கிழமை இரவு 294 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதுதான், இலங்கையில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளாகும். இதன் பெறுமதி 3,000 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

இதன்போது, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். பாணந்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.  

சந்தேக நபர்களையும் குற்றவாளிகளையும் இனரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது என்பது, ஊடக தர்மமாகும். எல்லாச் சமூகங்களிலும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனாலும், ‘இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்களில் கணிசமானோர் முஸ்லிம்களாக உள்ளனர்’ என்கிற விமர்சனமொன்று இருப்பதைப் புறந்தள்ளி விட முடியாமலுள்ளது. அதை மூடி மறைக்க முயற்சிப்பதை விடவும், ஒரு நன்னோக்கத்துடன் அவ்விடயம் தொடர்பில், சற்றுத் திறந்த மனத்துடன் பேசுவதற்கு, இந்தப் பத்தி முயற்சிக்கின்றது.  

போதையை ‘ஹராம்’ என்கிறது இஸ்லாம். ‘ஹராம்’ என்றால், தடுக்கப்பட்டது என்று பொருளாகும். பல இஸ்லாமிய அறிஞர்கள், சிகரெட் புகைப்பதைக் கூட, ‘ஹராம்’ என்று கூறுகின்றனர்.  

 ‘போதைப் பொருள்களை உட்கொள்வது மட்டுமன்றி, அதை விற்பதும் ஹராமாகும்’ என்று, நபிமொழியை ஆதாரம் காட்டி, இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷேய்க் ஏ.சி. அகார் முஹம்மத் எழுதியுள்ளார். மட்டுமன்றி, மதுபானத்தை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட, மதுபானம் பரிமாறுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் 10 வகையானோரை, முஹம்மது நபியவர்கள் சபித்தார்கள் என்றும், அஷ்ஷேய்க் அகார் முகம்மத் குறிப்பிடுகின்றார். இங்கு மதுபானம் தொடர்பில் கூறப்பட்டுள்ளதை, ஒட்டுமொத்தப் போதைப் பொருளுக்கும் பிரதியீடு செய்து கொள்ள முடியும்.  

எனவே, இஸ்லாம் பற்றிய தெளிவும் பாவத்தைச் செய்வதற்கு அச்சமும் கொண்ட முஸ்லிம்கள் எவரும், போதைப்பொருளைத் தொட மாட்டார்கள் என நம்பலாம்.  

இது ஒருபுறமிருக்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொக்கெயின் எனும் போதைப்பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை, அரசியலரங்கில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.   

ரஞ்சன் இவ்வாறு கூறியமைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியிடப்பட்டு வருவதையும் அறிவோம். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், கடந்த புதன்கிழமை நடைபெற்றபோது, ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துத் தொடர்பில், சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.   

இதையடுத்து, ரஞ்சன் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் ஒரு குழுவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்ததும், அந்தக் குழு முன்னிலையில், ரஞ்சன் வாக்கு மூலம் வழங்கியமையும் அறிந்ததே.  

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானதாகும். எனவே, அவ்வாறானதொரு குற்றச்சாட்டை, வாய்க்கு வந்தபடி அவர் கூறியிருப்பார் என்று நம்ப முடியவில்லை. தான் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ரஞ்சன் வசம் இருக்க வேண்டும்.  

இவ்வாறானதொரு நிலையில், சில நாள்களுக்கு முன்னர், வைத்தியசாலை சென்று பரிசோதனையொன்றை மேற்கொண்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தான் போதைப் பொருள் பாவிப்பதில்லை என்பதை விஞ்ஞானபூர்மாக நிரூபித்திருக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். இதையடுத்து, பிரதியமைச்சர் புத்திக பத்திரணவும் தான் போதைப்பொருள் பாவிப்பதில்லை என்பதை, மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 

மறுபுறம், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தாங்கள் போதைப் பொருள் பாவிப்பதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.  

இந்த நிலையில், “நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம், முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், இவ்வாறான மருத்துவ பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டுமா” என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வினவியபோது, “ஆம், எல்லோரும் செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.   

இந்தப் பதிலின் ஊடாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் போதைப்பொருள் பாவிப்போர் இருக்கிறார்கள்; இருக்கக் கூடும் என்று ரஞ்சன் ராமநாயக்க உள்ளர்த்தத்துடன் கூறுகின்றமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.   

நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 20 பேர் உள்ளனர். இவர்களில் எவரும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தவர்களில்லை.   

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்மைத் தூய்மையான முஸ்லிம்களாகக் காட்டிக் கொள்கின்றவர்கள். எனவே, ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டிய தேவையும், அதனூடாக, தமது சமூகத்தின் மீது ஏற்பட்டுள்ள கறையைக் களைய வேண்டிய பொறுப்பும் இவர்களுக்கு உள்ளமையைப் புறந்தள்ளி விட முடியாது.  

தாங்கள் உண்ணும் உணவுகள் ஹராமானதாக இருந்து விடக்கூடாது என்பதற்காக, இலங்கை முஸ்லிம்கள் ‘ஹலால் முத்திரை’க்காகப் போராட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் போதைப்பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர் என்பது அவமானகரமானதாகும்.  

எவ்வாறாயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் போதைப்பொருள் பாவிப்பவர்களாகவும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்களாகவும் உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு, புதியதல்ல என்பதையும் இங்கு குறித்துச் சொல்ல வேண்டும். முஸ்லிம் சமூகத்திலுள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் தொடக்கம் தேசிய மட்டத்தில் அரசியல் செய்கின்றவர்கள் வரை, இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.  

நிந்தவூர் பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு அருகாமையில் போதைப்பொருள் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை, சில காலங்களுக்கு முன்னர் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கைது செய்திருந்தனர். அப்போது, சந்தேக நபர், அந்தப் பிரதேசத்து அரசியல்வாதியொருவரின் பெயரைச் சொல்லி, “நான் அவரின் ஆள்” என்று கூறியதாகவும், ஆனாலும், அந்த நபரைக் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்ததாகவும் செய்திகள் வௌியாகி இருந்தன.   

ஒரு காலத்தில், மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த பல முஸ்லிம் ஊர்களில், இப்போதெல்லாம் ஹெரோயின் போன்ற போதைப்பொருள்கள், மிகச் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இவற்றின் பின்னணியில் அங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளதாக, மக்கள் மிக வெளிப்படையாகவே பேசிக் கொள்கின்றார்கள்.   

எனவே, தமது சமூகத்துக்குள் இருக்கின்ற இவ்வாறான அரசியல்வாதிகளைப் புறமொதுக்குவதற்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும். அதற்கு முன்னர், தாம் ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் இழி செயல்களுக்காக வக்காலத்து வாங்கும் மனநிலையிலிருந்து, முஸ்லிம் வாக்காளர்கள் விடுபடுதல் அவசியமாகும்.  

 மது அருந்துகிறார், போதைப்பொருள் பாவிக்கின்றார் என, நன்கு அறியப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை, பிரதம அதிதியாக, பள்ளிவாசல்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கே அங்குள்ள நிர்வாகிகள் அழைத்த தருணங்களை, பல தடவை கண்டிருக்கின்றோம். விசத்தை அருந்திக் கொண்டே, அதற்கான மருத்துவத்தைச் செய்ய முடியாது. அவ்வாறான மருத்துவம் ஒரு போதும் பலிக்காது.  

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசமொன்றில் சில மாதங்களுக்கு முன்னர், ஹெரோயின் வைத்திருந்த நால்வரை, மதுவரித் திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர். அவர்களில் மூவர் முஸ்லிம்களாவர்.   

ஹொரோயின் போதைப்பொருளை அம்பாறை மாவட்டத்தில் ‘முள்’ என்கிற குறியீட்டுச் சொல்லால் அழைக்கின்றனர். சுமார் 50 மில்லிகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள், 1,000 ரூபாய்க்கு அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் விற்கப்படுகிறது. 50 மில்லிகிராம் எடையுடைய மேற்படி போதைப்பொருளை, நகத்துக்குள் அல்லது பல் இடுக்குக்குள் மறைத்து வைத்து விட முடியும் என்று, மதுவரித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான அத்தியட்சகர் சுசாதரன் விவரித்தார்.   

எனவே, முஸ்லிம் சமூகத்துக்குள் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இஸ்லாமிய அறிஞர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் இதற்குத் தலைமை வகிக்க வேண்டும்.   

கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்முனைப் பிரதேசத்தில் புகைத்தல், போதைப்பொருள் பாவனை, விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதற்காக ‘புகைத்தல், போதைப்பொருள் ஒழிப்புச் செயலணி’ ஒன்று உருவாக்கப்பட்டு, டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் என்பவர், அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்தச் செயலணியில் இஸ்லாமியத் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் போன்றோர் இருக்கின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கல்முனையிலுள்ள வியாபார நிறுவனங்களுக்குச் சென்று, புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தனர்.   

இவ்வாறான நடவடிக்கைகளை இன்னும் மேம்படுத்தி, ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் ‘போதை ஒழிப்புச் செயலணி’கள் உருவாக்கப்படுதல் வேண்டும். அவற்றின் மூலம், முஸ்லிம் சமூகத்துக்குள் பரவியுள்ள போதைப் பொருளை இல்லாமல் செய்வதற்கு உழைக்க வேண்டும்.   

ஆனால், குடிகாரர்களையும் போதைப்பொருள் பாவிக்கின்றவர்களையும் தமது அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும் ஒரு சமூகத்தால், மேற்படி இலக்கை அடைய முடியாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.  

என்னவெல்லாம் செய்யும், இந்தப் போதை?

“ஹெரோயின், கொக்கெயின் போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றவர்கள் மொத்தத்தில் பயந்தவர்களாக இருப்பார்கள்” என்கிறார், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வழிக்கும் மட்டக்களப்பு ‘விமோச்சனா’ இல்லத்தின் பணிப்பாளர் எஸ். செல்விகா.  

இவ்வாறான போதைப் பொருள்களைப் பாவிக்கின்றவர்களுக்கு, அளவுக்கு மீறிய துணிவு ஏற்படுவதாகவும் போதையில் அவர்கள் நினைப்பவற்றைச் செய்து விடுவார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.  

“அதனால் எந்தக் குற்றச்செயலையும் இவ்வாறான போதைப்பொருள்களைப் பாவிக்கின்றவர்கள் செய்து விடுகின்றனர்” எனவும் செல்விகா விவரித்தார்.   

மேற்கண்டவாறான போதைப் பொருளைப் பாவிக்கும் நபர்கள், கடின வேலைகளைச் செய்வதற்கும், அதிக எடையைத் தூக்குவதற்குமான ஆற்றலைப் பெறுவார்கள் என்றும், அதனால் காலப்போக்கில் இவர்களின் இடுப்புப் பகுதி கடுமையாகப் பாதிப்படையும் எனவும் அவர் எச்சரித்தார்.  

“இவர்களின் கண்களின் கீழ் கறுப்பாக இருக்கும். இவர்களின் முன்னால், மின்விசிறியைச் சுழல விட்டால், உடனே தூங்கி விடுவார்கள்” என, போதைப்பொருள் பாவிக்கின்றவர்களின் குணங்குறிகள் பற்றியும் செவ்விகா விளக்கமளித்தார்.  

உடலுறவில் நீண்ட நேர இன்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இவ்வாறான போதைப்பொருள் பாவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.  

“இந்தப் போதைப்பொருள்களை ஒருவர் ஆரம்பத்தில் குறைவாகவும், இடைக்கிடையேயும் எடுத்துக் கொண்டாலும், நாளடைவில் அதற்கு அவர் அடிமையாகி விடுவார். அந்தப் பழக்கத்தை விடும்போது, ஆரம்பக் கட்டத்தில், கடுமையான வலி உடலில் ஏற்படும். குறிப்பாக, மூட்டுகளில் வலிக்கும். உடம்பில் கடுமையான எரிவு ஏற்படும். அதனால், ஒரு நாளைக்கு பல தடவைகள் இவர்கள் குளிப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.  

“எவ்வாறாயினும், இந்தப் பழகத்தைக் கைவிட்ட பிறகு, மேற்சொன்ன பிரச்சினைகள் இருக்காது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இதேவேளை, சிலர் தங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை (Stress) குறைக்கும் பொருட்டு, சுய மருத்துவமாக (Self Medication) இவ்வாறான போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என, மனநல வைத்தியர் டொக்டர் யூ.எல். சறாப்டீன் தெரிவித்தார்.  

“கவலையிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்திலும் சிலர் இந்தப் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்” என்று கூறிய அவர், “உளநோய் உள்ளவர்களும் இவ்வாறான போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X