2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போராட்டங்களால் பறிபோகும் உரிமைகள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்சங்கப் போராட்டங்கள் எதிர் பொதுமக்களின் உரிமைகள்:

இம்மாதம் 11ஆம் திகதி மாலை, ரயில் சாரதிகள் திடீரென வேலைநிறுத்தம் செய்தனர். ரயில் நிலையங்களில் ஒரே குழப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ரயில் பிரயாணிகள், செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த நிலையில், பிரயாணிகளுக்கும் ரயில் சாரதிகளுக்கும் இடையில், கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்படவே, கொழும்பு ரயில் நிலையத்துக்கு, பொலிஸார் அழைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், ஒரு சாரதியை, வெறிகொண்ட பிரயாணிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக, பொலிஸ் அதிகாரி ஒருவர், தமது பாதுகாப்பைப் பற்றியும் சிந்திக்காது செயற்படும் புகைப்படமொன்று, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. பஸ்களும் குறைந்து வரும் மாலை நேரத்தில், இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதனாலேயே பிரயாணிகள் ஆத்திரமடைந்தனர்.

இந்தப் படத்துக்கு, ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதற்கு முக்கிய காரணமான ஒரு சம்பவம், அதே வாரம் இடம்பெற்று இருந்தது. மத்தல விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு, குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்து, மஹிந்த ராஜபக்ஷ அணியினர், ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

அப்போது, உயர் பொலிஸ் அதிகாரியொருவர், இரண்டு பொலிஸ்காரர்களால் பிடித்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரின் முகத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம், வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

சில பத்திரிகைகள், அந்த வீடியோவையும் கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் புகைப்படத்தையும் ஒப்பிட்டுக் குறிப்புகளையும் பிரசுரித்து இருந்தன. ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரை தாக்கும்போது; மற்றைய படத்தில், பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை, ஆத்திரமடைந்த பொது மக்களிடமிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

அதேவேளை, ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், மற்றொரு முக்கிய விடயமும் பொதிந்திருந்தது. அதாவது, அது ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் மன நிலையையும் எடுத்துக் காட்டுகிறது. அந்த மனநிலை, தற்போது பொதுமை அடைந்து வருகிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ஏனெனில், அண்மைக் காலமாக, இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, பொதுமக்களின் இந்த மனநிலையை காட்டிய ஒரே சம்பவமாக இதைக் கொள்ள முடியாது. 

இந்தச் சம்பவத்தின் காரணமாக, பிரயாணிகள், ரயில் சாரதிகளின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சாரதிகளின் கோரிக்கைகள் என்னவென்று கூடத் தெரியாது. திடீரென மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாகத் தாம், அந்தரத்தில் விடப்பட்டமையே, அவர்களது பிரச்சினையாக இருந்தது. அதற்கே, அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தப் பதற்ற நிலையை அடுத்து, வேலைநிறுத்தம் விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர், சைட்டம் என்றழைக்கப்படும் தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுனத்துக்கு எதிராக, அரச மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, வடமேல் மாகாண சபையில் அமைந்துள்ள மருத்துவமனையொன்றுக்கு வந்திருந்த நோயாளர்களும் அவர்களின் உறவினர்களும் மருத்துவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அவர்கள், மருத்துவர்களைக் கண்டால் தாக்குவார்களோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு நிலைமை கொந்தளிப்பாக இருந்தது. 

அதேபோல், அண்மையில் கொழும்பில், வீதிகளை மறித்துக் கொண்டு நடைபெற்ற ஆர்ப்பட்டம் ஒன்றின் போது, வீதி மறிப்பால் பாதிக்கப்பட்ட சில சாரதிகளும் பாதசாரிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்த்துக் குரலெழுப்பினர். அங்கும் குழப்பமான நிலைமை உருவாகியிருந்தது. 

கடந்த ஓகஸ்ட் மாதம், பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பித்தனர். ஆனால், வேலைநிறுத்தத்தின் இரண்டாவது நாள், இராணுவத்தினர், கொலன்னாவ எண்ணெய் விநியோக நிலையத்துக்குள் சென்று, அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்தோடு பொலிஸார், இராணுவத்தினரின் உதவியோடு, பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்தனர். 

இராணுவ மற்றும் பொலிஸ் பலத்தைக் கொண்டு, வேலைநிறுத்தங்களை அடக்குவது ஜனநாயக நடவடிக்கையாகக் கருத முடியாது. ஆனால், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளையும் எதிர்க்கும் எதிர்க் கட்சித் தலைவர்கள் தவிர்ந்த, நாட்டில் ஏனைய அனைவரும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்களேயல்லாமல் எவரும் அந்த அடக்குமுறையை எதிர்த்துப் பேசவில்லை. பொது மக்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்க்கவில்லை. அவர்கள் அந்த வேலைநிறுத்தத்தால், தாம் பாதிக்கப்பட்டதனால், ஜனநாயகத்துக்கு விரோதமான முறையிலாவது, வேலைநிறுத்தம் முடிவடைய வேண்டும் என்று மட்டுமே கருதினார்கள். 

அந்த வேலைநிறுத்தத்தின் போது, கொலன்னாவ பிரதேசவாசிகள் என்று கூறிக்கொண்டு, குண்டர்கள் சிலர், வேலைநிறுத்தக்காரர்களை தாக்கினர். கொலன்னாவத் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எஸ்.எம். மரிக்காரின் தூண்டுதலில், அவரது ஆதரவாளர்களே அவ்வாறு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் யாராக இருந்தாலும், பொது மக்கள் அந்தத் தாக்குதலைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. எந்தவொரு ஊடகத்திலும் அந்தத் தாக்குதலை எதிர்த்து, ஒரு கட்டுரையேனும் வெளிவரவில்லை. காரணம், மக்களோ ஊடகங்களோ வேலைநிறுத்தத்தை விரும்பவில்லை. எனவே, வேலைநிறுத்தக்காரர்கள் சார்பாகப் பேசவும் எவரும் முன்வரவில்லை.

சைட்டம் பிரச்சினையை முன்வைத்து, மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வதும் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் இப்போது சமயச் சடங்குகளைப் போல், நாளாந்த விடயமாகி விட்டது. அவற்றினால் பாதிக்கப்படும் பொது மக்கள், பகிரங்கமாகவே அவற்றை விமர்சித்து வருகிறார்கள். இவ்வாறு, தொழிற்சங்கப் போராட்டங்கள் விடயத்திலான மக்களின் எதிர்ப்பானது, இப்போது தனியானதொரு போக்காக மாறி வருகிறது என்றே தோன்றுகிறது. காரணம், மக்கள் பெரும் அசௌகரித்துக்குள்ளாகும் வகையிலான ஆர்ப்பாட்டங்கள், நாள்தோறும்  நடைபெறுவதேயாகும்.

ஆனால், பொது மக்கள், எந்தவொரு வேலைநிறுத்தத்துக்கோ, ஆர்ப்பாட்டத்துக்கோ அடிப்படையான கோரிக்கைகளை எதிர்ப்பதாகக் கூற முடியாது. பல சந்தர்ப்பங்களில், போராட்டங்களுக்கான கோரிக்கைகள், எவை என்பதாவது பொது மக்களுக்குத் தெரியாது.

அவர்கள், அவற்றை அறிந்து கொள்ள அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், அவர்கள் ஆர்ப்பாட்டங்களினால் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படாது, தமக்கு சுதந்திரமாக நடமாடும் சுதந்திரம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். தமது வரிப் பணத்தில் இயங்கும் மருத்துவமனைகளில் இருந்து, தாம் சிகிச்சை பெற உரிமையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அது அவர்களது உரிமையும் கூட. எனவே, அவர்கள் அவ்வாறு சிந்திப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. 

அதேவேளை, நாட்டில் பல தொழில் பிரச்சினைகள் அரசியல்மயமாக்கப்பட்டு இருப்பதனால், பொது மக்களினால் இந்தப் போராட்டங்களுக்கு காரணமாகும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளவும் முடியாமல் இருக்கிறது. உதாரணமாக, சைட்டம் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே அந்தத் தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. மஹிந்தவின் அரசாங்கம், அந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக சகல உதவிகளையும் வழங்கியது. அரசாங்கத்தின் ஆதரவு காரணமாக, அரச வங்கிகளிடமிருந்து 600 மில்லியன் ரூபாய் கடன் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மஹிந்தவின் அரசாங்கம் அந்நிறுவனத்தில் சேர்ந்த பல மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கியது. 

இப்போது, இந்த நிறுவனத்தை மூடிவிடுமாறு வற்புறுத்தி, நாள்தோறும் போராட்டம் நடத்தும் மருத்துவர்களோ, மருத்துவ மாணவர்களோ அப்போது அந்த நிறுவனத்தையோ அல்லது அதற்கு உதவும் மஹிந்தவின் அரசாங்கத்தையோ எதிர்க்கவில்லை. அப்போது வாய் மூடி இருந்தவர்கள், இப்போது ‘வாழ்வா சாவா’ என்ற நிலையில் போராட்டம் நடத்தும் போது, அதுவும் அதே மஹிந்தவின் ஆதரவாளர்களின் உதவியுடன் போராட்டம் நடத்தும் போது, இந்த நிறுவனம் நல்லதா கெட்டதா என்று, சாதாரண மக்கள் எவ்வாறு தான் விளங்கிக் கொள்ள முடியும்.?

போதாக்குறைக்கு, அரச ஊடகங்கள் மஹிந்தவின் ஆதரவாளர்களும் சைட்டத்தை இப்போது எதிர்க்கும் இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவும் அக்காலத்தில் சைட்டத்தை ஆதரித்து வெளியிட்ட கருத்துகளை, தொடர்ந்து தொலைக்காட்சியில் காட்டுகின்றன.

அதேவேளை, அரச எதிர்ப்புத் தொலைக்காட்சி நிறுவனங்கள், அக்காலத்தில் ஐ.தே.க தலைவர்கள், சைட்டத்துக்கு எதிராகக் கருத்து வெளியிடுவதைக் காட்டுகிறார்கள். சாதாரண மக்களுக்கு, இப்பிரச்சினை குறித்து எதுவுமே விளங்காத ஒன்றாக மாறுவதற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே, அவர்கள் இப்போது நடைபெறும் சைட்டம் எதிர்ப்புப் போராட்டங்களால், தாம் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை.

கொழும்பில் பிரதான வீதிகளை மறித்துக் கொண்டு, பல நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களினதும் மாணவர்களினதும் ஆரப்பாட்டங்கள் நடைபெறாத நாளே இல்லை என்றுதான் கூற வேண்டும். அவையும் மக்கள் நடமாட்டம் ஆகக் கூடுதலாக உள்ள மாலை நேரங்களிலேயே நடைபெறுகின்றன.

சைட்டம் எதிர்ப்பாளர்களின் போராட்டங்கள் தவிர்ந்த, இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரின் பிரச்சினைகளும் கோரிக்கைகளும் நியாயமாக இருக்கலாம். அநேகமாக நியாயமாகத்தான் இருக்கின்றன. 

அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும், பிரச்சினைகளைத் தீர்க்குமாறும் கோரி போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பதில் எவ்வித விவாதத்துக்கும் இடமில்லை. ஆனால், அதற்காக அவர்களது பிரச்சினைகளுக்கு எவ்வகையிலும் காரணமாகாத பொது மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? 

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘கோப்’ என்றழைக்கப்படும் நாடாளுமன்ற பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, அண்மையில், இந்தப் போராட்டங்களைப் பற்றிக் கருத்து வெளியிடுகையில், “போராட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுவது உண்மையாயினும், அவை ‘தற்காலிகமானவை’ என்பதால், மக்கள் அந்தப் பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

குறிப்பிட்ட ஒரு போராட்டத்தைப் பொறுத்தவரையில், அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இக்காலத்தில், நாளாந்தம் போராட்டங்கள் இடம்பெற்று வருவதைக் கருத்தில் கொள்ளும்போது, அதை நியாயமான கருத்தாக, ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தற்காலிகமான’ பாதிப்புகள் பல ஒன்று சேரும் போது, ‘நிரந்தரமான’ பிரச்சினையொன்று உருவாகிறது. 

கடந்த வருடம் மார்ச் மாதம் ஒரு நாள், மாலை நேரத்தில், கொழும்பு, தொட்டலங்க பிரதேசத்தில் வாழும் குடிசைவாசிகள், தமது வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்குமாறு, வற்புறுத்தும் வகையில், நூற்றுக்கணக்கில் வந்து, ஜப்பான் - இலங்கை நட்புறவுப் பாலத்தின் மீது அமர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், கொழும்பு-கண்டி வீதியிலும் கொழும்பு-நீர்கொழும்பு வீதியிலும் போக்குவரத்து, நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக, முற்றாகத் தடைப்பட்டது. 

பாடசாலை விட்டும், மேலதிக வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் அப்பாவி மாணவர்களும் பெண்கள், யுவதிகள் உள்ளிட்ட தொழில் செய்துவிட்டு வீடு திரும்புவோரும், நோயாளர்களும் விமான நிலையத்துக்குச் செல்வோரும் எனப் பல்லாயிரக் கணக்கானவர்கள் இதனால் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல், வாகனங்களுக்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடக்க நேரிட்டது.

இவர்களில் எவரும், குடிசைவாசிகளின் பிரச்சினைகளை மறுக்கவோ அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவோ இல்லை. அவர்களில், பெரும்பாலானவர்கள், ‘ஏன் இந்தப் போராட்டம்’ என்றாவது அறிந்திருக்கவில்லை. அவர்களில் எவரும், குடிசைவாசிகளின் பிரச்சினைகளுக்கு, எவ்வகையிலும் பொறுப்பானவர்களுமல்ல; எனவே, அவர்கள் இவ்வாறு, இம்சிக்கப்படத் தேவையில்லை. அவர்களை, இவ்வாறு சிறைப்பிடிக்க, குடிசைவாசிகளுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. தமது உரிமைகளை வென்றெடுக்க அவர்கள் வேறு வழிமுறைகளைக் கையாண்டு இருக்க வேண்டும்.  

இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலத்திலேயே, விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், நாட்டின் சகல பிரதேசங்களில் இருந்தும், ஆயிரக் கணக்கில் விவசாயிகளைக் கொழும்புக்கு அழைத்து வந்து, கொழும்பின் ஆறு நுழைவாயில்களையும் அடைத்து விடுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால் காந்த அரசாங்கத்தை (உண்மையிலேயே மக்களை) எச்சரித்து இருந்தார். 

இந்த எச்சரிக்கைப்படி, மக்கள் விடுதலை முன்னணி, விவசாயிகளைக் கொண்டு கொழும்புக்கு வரும் ஆறு பிரதான வீதிகளையும் அடைத்துவிட்டால், தொட்டலங்க குடிசைவாசிகள் நடத்திய போராட்டத்தின் போது, இடம்பெற்றதைவிட, படுமோசமான நிலைக்கு, பொதுமக்கள் தள்ளப்படுவார்கள் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் வாக்குறுதியளித்ததைப் போல், உரமானியத்தை வழங்க வேண்டும் என்றும், தமது நெல் அறுவடையைச் சந்தைப்படுத்தப் பொருத்தமான பொறிமுறையொன்றை வகுக்க வேண்டும் என்றும் கோரியே விவசாயிகள் அந்நாட்களில் போராடி வந்தனர். அவற்றை வலியுறுத்தியே கொழும்பை முற்றுகையிடுவதாக, லால் காந்த கூறியிருந்தார். 

இந்தக் கோரிக்கைகள் நியாயமற்றவை என்றோ, அல்லது அவற்றைத் தீர்க்குமாறு விவசாயிகள் போராட முன்வருவது நியாயமற்றது என்றோ, எவரும் கூறப் போவதில்லை. ஆனால், அவர்களுடைய பிரச்சினைகைளைத் தீர்ப்பதற்காக, பல்லாயிரக் கணக்கான மக்களை வதைக்க, அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? 

தொழிற்சங்கப் போராட்டங்களில் உள்ள மோசமான அம்சம் என்னவென்றால், எந்தளவு பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அதைக் கொண்டுதான், அவற்றின் வெற்றி நிர்ணயிக்கப்படுகின்றன.

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் ஒன்று வெற்றியளிக்க வேண்டும் என்றால், ஆகக் கூடுதலான மக்கள் சிகிச்சையின்றிப் பாதிக்கப்பட வேண்டும்; கூடியளவு நோயாளர்கள் சாக வேண்டும்; அப்போதுதான், அந்தப் போராட்டம் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மின்சார சபை ஊழியர்கள், தமது வேலைநிறுத்தத்தின்போது, நாட்டின் பொருளாதாரம் ஆகக் கூடுதலாகப் பாதிக்கப்படுவதையும், மருத்துவமனைகள் போன்ற மக்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய இடங்கள், ஆகக் கூடுதலாகப் பாதிக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். 

இறுதிப் போரின் போது புலிகளும், 1988-89 காலப்பகுதியில், தமது கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணியினரும் இவ்வாறே சிந்தித்தார்கள். இவ்வாறு, பொது மக்கள் பாதிக்கப்படுவதன் மூலம், தமது போராட்டங்களை வெற்றிபெறச் செய்ய முயற்சிக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், அப்போராட்டங்களின்போது, பொது மக்களின் ஆதரவை நாடி, அவர்களுக்குத் தமது கோரிக்கைகளை விளக்கித் துண்டு பிரசுரங்களையும் விநியோகிப்பது விந்தையான விடயமாகும். 

தொழிற்சங்கப் போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடைபெறுவது மட்டுமன்றி, அண்மைக் காலமாக, மக்களின் வெறுப்புக்கும் உள்ளாகி வருவதற்கு இந்த மனோபாவமே காரணமாகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .