2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்கள் ஏன்?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 ஜூலை 11 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள், பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்றின் போது, தெரிவித்திருந்தார்.   

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள், 500 நாட்களைத் தாண்டி விட்டன. தொடர் போராட்டங்களின் ஆரம்பக் கட்டங்கள் பெற்ற அரசியல், இராஜதந்திர மற்றும் ஊடகக் கவனத்தை, 500ஆவது நாள் போராட்டங்கள் பெறவில்லை.   

தமிழ்த் தேசியப் போராட்டங்களின் எழுச்சி என்பது, மக்களின் பெரும் அர்ப்பணிப்புடனான பங்கேற்பு, அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் வழிப்படுத்தல், இராஜதந்திர தரப்புகளுடனான ஊடாட்டம் மற்றும் ஊடக வெளிச்சம் ஆகியவற்றின் கூட்டிணைவோடு உருவானது.   

இந்த நான்கில், ‘தமிழ் மக்களின் அர்ப்பணிப்புடனான பங்கேற்பு’ என்கிற விடயம்தான், தமிழ்த் தேசியப் போராட்டங்களில் உயிர்நாடியாக இருந்து வந்திருக்கின்றது. போராட்ட வடிவங்கள் காலத்துக்குக் காலம் மாறியிருக்கின்றன. ஆனால், மக்களின் அர்ப்பணிப்பு மாறியதில்லை. காலத்துக்கு ஏற்ற வகையில், தம்மைத் தயார்படுத்தி வந்திருக்கின்றார்கள்.   

எனினும், கடந்த சில ஆண்டுகளாக மக்களின் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பை முறையாக நெறிப்படுத்தும் கட்டத்தை, தமிழ்த் தேசிய போராட்டங்களை வழிப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் தரப்புகள் செய்யத் தவறிவிட்டன.   

இறுதி மோதல்களுக்குப் பின்னர், மக்களுக்கும் அரசியல் தரப்புகளுக்கும் இடையில் காணப்பட்ட உறவுகூட, 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான சூழலில் இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கின்றது. அது, கட்சி சார் அரசியல் தரப்புகளுக்கு மாத்திரம் ஏற்பட்ட பின்னடைவு அல்ல; மாறாக, சமூக இயக்கங்கள், புலமைத்தரப்புகளுக்கும் ஏற்பட்ட தோல்வியே.   

ராஜபக்‌ஷகளின் ஏதேச்சதிகார ஆட்சியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த நெருக்கடி நிலையிலிருந்து மூச்சு விடுவதற்காகவேனும் சிறிய ஜனநாயக இடைவெளியொன்றின் தேவையை இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர்.   

அதன்போக்கில், ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகளைச் சிறு நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் செய்தனர். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான சூழலை, தமிழ்த் தலைமைகளும் அரசியல் கட்சிகளும் புலமைத்தரப்பும் உண்மையிலேயே சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதுவும், மக்களிடம் நம்பிக்கை பெறுவதற்கான கட்டங்களை ஆற்றவில்லை என்பதுவும்தான் தோல்விகரமான கட்டங்களுக்குக் காரணமாகி இருக்கின்றன.   

தமிழ்த் தேசிய அரசியலை வழிப்படுத்தும் அல்லது வழிநடத்தும் தரப்புகளாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் தரப்புகள், சமூக ஊடக மனநிலையின் போக்கிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.   

தூரநோக்கு என்கிற விடயத்தையே கவனத்தில் எடுப்பதில்லை. நாளாந்தம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பதோடு, விடயங்களைக் கடந்து விடுகின்றார்கள். இன்றைய பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகச் சூழல் என்பது, உலகம் பூராகவும் ‘டிரெண்டிங்கினை’ (Trends) அடிப்படையாக வைத்தே இயங்கி வருகின்றன.   

ஆனால், ‘டிரெண்டிங்கில்’ கவனம் பெறும் விடயமொன்று, சில நாட்களிலேயே காணாமற்போய்விடும்; இன்னொரு விடயம், அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும்; பிறகு இன்னொரு விடயம் வரும். அங்கு நிலையான தன்மைக்கோ, தூர நோக்குக்கோ இடமில்லை. அவ்வாறான கட்டங்களை நோக்கியே தமிழ் மக்களின் போராட்டங்களும், போராட்டத்துக்கான அர்ப்பணிப்பும் கடத்தப்படுகின்றதோ என்கிற கேள்வி எழுகின்றது.   

இன்றைக்கும் தமிழர் தேசமெங்கும் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் என்று பல போராட்டங்கள் தொடர்கின்றன. ஆனால், அந்தப் போராட்டங்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சூழலிலும் செலுத்தும் தாக்கம் எவ்வளவு? அந்தப் போராட்டங்களை நோக்கிப் பெருமளவாக மக்களைத் திரட்ட முடியாமைக்கான காரணங்கள் என்ன, என்ற விடயங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.   

அதன்பின்னர்தான், இந்தப் போராட்டங்கள் யாருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றதோ, அவர்களிடம் ஏன் இந்தப் போராட்டங்களால் நாம் எதிர்பார்க்கும் அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை என்கிற விடயத்தை ஆராய வேண்டும்.   

போராட்டங்கள் மீதான மக்களின் அர்ப்பணிப்பு என்பது, நம்பிக்கை, ஒருங்கிணைவின் மூலம் தக்க வைக்கப்படுவது. ஆனால், கடந்த சில வருடங்களில், தமிழ்த் தேசியச் சூழலில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் குறிப்பிட்டளவானவை, மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.  
 போராட்டங்களுக்காக விடுக்கப்படும் அழைப்புகளை, மக்கள் சந்தேகத்தோடு நோக்க ஆரம்பித்துவிட்டார்கள். போராட்டத்துக்கான எல்லாத் தேவைகளும் இருக்கின்ற தமிழ்த் தேசியச் சூழலில், இவ்வாறான சந்தேக மனநிலை தோன்றுவது என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை உணர வேண்டும்.   

இன்றைக்குப் போராட்டங்களுக்கு இடையிலோ, போராட்டங்களை நடத்தும் தரப்புகளுக்கிடையிலோ எந்தவிதமான ஒருங்கிணைவும் இல்லை; தொடர்ச்சியும் இல்லை. மழைக்கால நாற்றுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்ன துளிர்த்து, ஒழுங்கான பாராமரிப்பு இன்றி கோடை வெயிலில் கருகி விடுகின்றன.  

 போராட்டங்களும், அதன் வடிவங்களும் இன்றைக்கு நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்திருப்பதற்கான காரணங்களில் இன்னொன்று, ஊடகக் கவனத்தைப் பெறுவதற்காகவும் தம்மை அடையாளப்படுத்துவதற்காகவும் நடத்தப்படும் சிறுசிறு போராட்டங்களாலும் எழுந்ததோ என்று சந்தேகம் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.   

ஒரு விடயத்தை முன்னிறுத்தி, போராட்டத்துக்கான அழைப்பை யார் முதலில் விடுக்கின்றார்கள், என்பதுதான் இன்றைய பிரதான போட்டிக்களமாக தமிழ்த் தேசியத் தரப்புகளிடையே உருவாகியிருக்கின்றது. திட்டமிடல், ஒருங்கிணைவு, தூர நோக்கு என்கிற எந்த விடயங்களும் அங்கு கருத்தில் எடுக்கப்படுவதில்லை.   

போராட்டத்துக்காக அவசர அவசரமாக கூடினோமா, ஊடகங்களிடம் பொங்கி வெடித்தோமா, கலைந்து சென்றோமா என்கிற நிலை உருவாகிவிட்டது.  

 இந்நிலைதான், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றன. வாக்கு அரசியல் முதன்மைபெறும் சூழலில், இவ்வாறான தன்மைகளே மிஞ்சும்.   

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தின் அர்ப்பணிப்பு வழி கட்டமைக்கப்பட்ட ஒன்று. ஆனால், அது தவறவிடப்பட்டு, வாக்கு அரசியலுக்கான கட்டம் ஒட்டுமொத்தமாக மேலேழும் போது, தோல்வியின் கட்டங்கள் அதிகமாகின்றன.   

தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான இலக்கை அடைவதற்கான வழிகளில், வாக்கு அரசியலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, வாக்கு அரசியலில் வெற்றி பெறுவதற்காகத் தமிழ்த் தேசிய அரசியலைப் பகடையாகப் பயன்படுத்தக் கூடாது.   

இவ்வாறான சூழல்கள் மேலெழும் போது, போராட்டங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். போராட்டங்களிலிருந்து மக்கள் விலகியிருப்பார்கள். அவ்வாறான நிலையொன்றே தற்போது உருவாகியிருக்கின்றது.   

 இலங்கைக்கான அந்த வெளிநாட்டுத் தூதுவர் பகிர்ந்த இன்னொரு விடயத்தைச் சொல்லி, இந்தப் பத்தியை நிறைவு செய்யவது பொருத்தமாக இருக்கும். 

“...காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல அத்தியாவசியப் போராட்டங்களைத் தமது சுயநல தேவைகளுக்காக, சில தரப்புகள் கையாளும் போது, அந்தப் போராட்டங்களில் இருந்து நாம் ஒதுங்கியிருக்க வேண்டி வருகின்றது. ஏனெனில், இராஜதந்திர உரையாடல் மற்றும் செயற்பாடு என்பது, எம்மைப் பாதுகாத்துக் கொண்டே முன்னெடுக்கப்பட வேண்டியவை. எங்கள் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் ஒரு விடயத்தை, நாம் தூரத்தில் வைத்தே கையாள விரும்புவோம். தமிழ் மக்களின் பல போராட்டங்கள் தொடர்பிலும் இவ்வாறான சூழ்நிலையே எமக்கு ஏற்பட்டிருக்கின்றது....” என்றார்.    

அடக்கு முறைகளுக்கும், ஏதேச்சதிகாரத்துக்கும் எதிரான உரிமைப் போராட்டத்தின் வழி, உலக கவனத்தைப் பெற்ற தமிழ் மக்களின், இன்றைய போராட்ட வடிவங்களும், வழிமுறைகளும் சர்வதேச இராஜதந்திர மட்டத்தில் அடைந்திருக்கின்ற வீழ்ச்சி இது. இதை, உணராது எவ்வளவு அர்ப்பணிப்புள்ள போராட்டங்களை முன்னெடுத்தாலும், அது வீணாகிப் போகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .