2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தமிழ் மிரரின் விவரணக் குழு

(கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சி)

போலிச் செய்திகள் என்று வரும் போது, அச்செய்தியை நம்பாதவர்கள் எழுப்புகின்ற கேள்வி, ஒன்று தான்: “வெளிப்படையாகவே போலியாகத் தெரிகின்ற இத்தகவலை யார் நம்புவார்கள்?” என்பது தான். 

எனவே தான், போலிச் செய்திகளின் கட்டமைப்புகள், அவற்றின் தாக்கம் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால், மனிதர்களின் செய்தி நுகர்வுகள் பற்றியும் அறிய வேண்டும். 

இலங்கையிலும் சரி, உலகின் அனைத்து நாடுகளிலும் சரி, ஊடகங்கள் என்றால், “நடுநிலை”யான ஊடகங்களாக இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. கடந்த வாரக் கட்டுரையில் பார்த்ததைப் போன்று, மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்ற செய்திகளை வெளியிடுவது ஒரு பக்கமாகவிருக்க, உலகிலிருக்கின்ற கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுமே, பக்கச்சார்பைக் கடைப்பிடிக்கின்றன. இது தான், மக்களை ஒருவிதக் குமிழியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறது. எனவே தான், போலிச் செய்திகள் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக, ஊடகங்களின் பக்கச்சார்பு பற்றி அறிவது அவசியமானது. 

(நடுநிலை என்பது ஊடகங்களுக்குத் தேவையா என்பது தனியான விவாதம். நவீனகால ஊடகவியலில், நடுநிலை என்பது தவறானது என்று தான் வாதிடுகிறார்கள். நியாயமின்மைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் போது, செயற்பாட்டாளர்கள் போன்று ஊடகவியலாளர்கள் செயற்படுவதில் தவறில்லை என, இப்போது விவாதிக்கிறார்கள். இதுபற்றிய அலசல் தனியாகத் தேவைப்படுகிறது. எனவே, இவ்விடயத்தில் நடுநிலை என்று கூறப்படுவது, எந்தப் பக்கத்துக்கும் மிக அதிகமான பக்கச்சார்பைக் கொண்டிராத நிலை என்று எடுத்துக் கொள்வோம்) 

குமிழி என்பது, ஒரு தரப்பின் தகவல்களை மாத்திரம் மக்கள் தொடர்ச்சியாக அறிந்துவந்து, ஒரு கட்டத்தில், எதிர்த்தரப்பு என்ன சொல்கிறது, அவர்களின் நியாயப்பாடு என்ற போன்ற விடயங்களைப் பற்றி அறிவதே இல்லை. இதற்கான உதாரணமாக, இலங்கை ஊடகங்களைப் பார்ப்பதை விட, ஐக்கிய அமெரிக்க ஊடகங்கள் இரண்டைப் பற்றி ஆராய்வது, சரியானதாக இருக்கும். ஐ.அமெரிக்காவில், பல வகையான ஊடகங்கள் இருக்கின்றன. அவற்றில், “பழைமைவாதக் கொள்கைகளை ஆதரிக்கும் ஊடகங்கள்” என்றும் “தாராளவாதக் கொள்கைகளை ஆதரிக்கும் ஊடகங்கள்” என்றும் இருக்கின்றன. கொள்கைச் சார்பு என்பது, ஒவ்வொரு மட்டத்தில் தான் இருக்கும். சில ஊடகங்கள், தங்களின் சார்புக் கொள்கைகளை, மிக உறுதியாகப் பின்பற்றும்; இன்னும் சில, சிறிது சாய்ந்த வண்ணமிருக்கும். 

அந்நாட்டின் பழைமைவாதத்தை அதிகமாகப் பின்பற்றுகின்ற பிரதான ஊடகமாக, ஃபொக்ஸ் நியூஸ் காணப்படுகிறது. அங்குள்ள அநேகமான நிகழ்ச்சிகளும் செய்தி அறிக்கையாளர்களும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும், பழைமைவாதக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களாக இருப்பர். மறுபக்கமாக, தாராளவாதக் கொள்கைகளைக் கொண்ட ஊடகமாக, எம்.எஸ்.என்.பி.சி இருக்கிறது. இரண்டினதும் கொள்கைப் பற்று ஒரேயளவில் இருக்கிறதா என்பது கேள்வியாக இருந்தாலும், அந்தந்தக் கொள்கைச் சார்புகளுக்கு, இவையிரண்டும் தான் உதாரணங்களாக இருக்கின்றன.  

இதன்படி, ஃபொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியை மட்டும் பார்க்கும் ஒருவர், அந்நாட்டின் பழைமைவாதிகள் (குடியரசுக் கட்சியினர்) செய்வதை நியாயப்படுத்தும் தகவல்களைப் பார்த்து வருவார். மற்றைய தரப்பான தாராளவாதிகள் (ஜனநாயகக் கட்சியினர்) செய்யும் விடயங்களின் நியாயப்பாடுகள், அவர்களின் நல்ல விடயங்கள் பற்றி அறியமாட்டார்கள். எம்.எஸ்.என்.பி.சி-க்கு, இது மறுபக்கமாக இருக்கும். இவ்வாறு, ஒரு தரப்பின் தகவல்களை மாத்திரம் பார்த்துவருவது, ஒரு கட்டத்தில் ஒரு வகையான குமிழியை உருவாக்கிவிடுகிறது. மற்றைய தரப்பை எதிரிகளாக அல்லது மோசமானவர்களாகக் கருதும் நிலை ஏற்படும். இது தான், போலிச் செய்திகளை ஏற்றுக்கொள்கின்ற ஒருவிதமான மனநிலையை உருவாக்குகிறது. 

உதாரணமாக, ஃபொக்ஸ் நியூஸைப் பார்த்துவரும் ஒருவர், குடியேற்றவாசிகள் என்பவர்கள், நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்ற கருத்தையே கொண்டிருப்பர். எனவே அவர்களிடம், குடியேற்றவாசிகள் தவறானவர்கள் என்ற விளைவைத் தரும் வகையிலான போலியான செய்திகளைப் பரப்புவது இலகுவானது.  

இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய முடியும்? ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, 2010ஆம் ஆண்டில், பல்கலைக்கழகமொன்றில் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி, மிக முக்கியமானது: 

“த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் கருத்துப் பக்கத்தை வாசிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், எப்போதிருந்து விட்டு ஒரு முறை, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் பக்கத்தைப் புரட்டிப் பார்க்க முயலுங்கள். கிளென் பக் அல்லது றஷ் லிப்போக்-இன் இரசிகராக நீங்கள் இருந்தால், த ஹஃபிங்டன் போஸ்ட் இணையத்தளத்தின் சில பத்திகளை வாசித்துப் பாருங்கள். உங்கள் இரத்தத்தை அது கொதிக்கச் செய்யக்கூடும், உங்கள் மனம் மாறாமல் இருக்கக்கூடும். ஆனால், எதிர்த்தரப்புப் பார்வைகளைச் செவிமடுப்பதென்பது, பயனுள்ள பிரஜைகளின் முக்கியமான ஒரு பங்காகும். அது, எமது ஜனநாயகத்துக்கு அத்தியாவசியமானது” என்பது தான், அவர் தெரிவித்த கருத்து. (த நியூயோர்க் டைம்ஸ், த ஹஃபிங்டன் போஸ்ட் ஆகியன, வெவ்வேறு மட்டங்களில், தாராளவாதச் சார்பைக் கொண்ட ஊடகங்கள். த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையும் கிளென் பக், றஷ் லிப்போக் ஆகியோரும், வெவ்வேறு மட்டங்களில், பழைமைவாதச் சார்பைக் கொண்டவர்கள்) 

இலங்கையிலும் கூட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்குச் சார்பான ஊடகங்கள் இருக்கின்றன. சில ஊடகங்கள், குறிப்பிட்டளவு சார்பாக இருக்க, இன்னும் சில, மேலே குறிப்பிட்ட கட்சிகளின் பிரசார ஒலிவாங்கிகள் போன்று செயற்படுவனவாகவும் உள்ளன. தமிழர் தரப்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சார்பான ஊடகங்கள் இருக்கின்றன. இன்னும் சில ஊடகங்களோ, சி.வி. விக்னேஸ்வரன் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன. இதில், பொதுஜன பெரமுனவுக்குச் சார்பான ஊடகங்களை வாசித்து/ செவிமடுத்து/ பார்த்து வரும் மக்கள், கடந்த சில வாரங்களாக, மஹிந்த ராஜபக்‌ஷவுக்குச் சார்பான கருத்துகளை மாத்திரமே அறிந்திருப்பர். அதேபோன்று, ஐ.தே.கவுக்கு எதிரான கருத்துகளையே அவர்கள் அறிந்திருப்பர். அவ்வாறான ஒருவரிடத்தில் சென்று, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற போலிச் செய்தியைச் சொன்னால், அதை அவர் நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளன. 

எனவே, போலிச் செய்திகளை முறியடிக்க வேண்டுமானால், ஊடகங்கள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும், மக்களுக்குத் தெளிவு ஏற்படுவது அவசியமானது. ஊடகங்கள் சொல்வதை எல்லாம் நம்புகின்ற ஒரு நிலை ஏற்படும் போது, போலிச் செய்திகள் இலகுவாகப் பரவக்கூடிய சூழல் ஏற்படும். எனவே, ஊடகங்கள் பற்றிய தெளிவு ஏற்பட வேண்டுமாக இருந்தால், ஊடகங்களைக் கேள்வி கேட்கின்ற ஒரு மனநிலை ஏற்பட வேண்டும். 

இதில், இன்னொரு விடயமும் இருக்கிறது. இந்தச் சார்பு நிலைமை என்பது, வேண்டுமென்றே காணப்படுகின்ற ஒன்றாக இருக்கக்கூடும்; இல்லாவிட்டால், ஊடகவியலாளர்களை அறியாமலேயே ஏற்படுகின்ற ஒன்றாகவும் இருக்கக்கூடும். உதாரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இந்தக் குழப்பங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு எதிரான எதிர்ப்பு மனநிலை, சில ஊடகவியலாளர்களுக்கு ஏற்படக்கூடும். எனவே, அந்த எதிர்ப்பு மனநிலை, அவர்களை அறியாமலேயே, அவர்களின் செய்தி அளிக்கைகளில் தாக்கம் செலுத்தக்கூடும். 

இந்த மனநிலைக்கான உதாரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில், ஜனாதிபதி சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் கலந்துகொண்டமை அமைந்தது. அந்நிகழ்வில் இருவரும் அருகருகே இருந்திருந்தனர். நிகழ்வொன்றில், இருவர் அருகருகே இருக்கும் போது, நீண்ட நிகழ்வொன்றில், பல்வேறான முகபாவங்களை அவர்களை வெளிப்படுத்தக்கூடும். அதன்போது எடுக்கப்படுகின்ற ஒரு புகைப்படத்தை வைத்து, அவர்களுக்கிடையிலான உறவைக் கணிக்க முடியுமா? கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வெளியான சில பத்திரிகைகளின்படி, இருவருக்குமிடையிலான உறவு, ஒன்றில் மிகச்சிறந்த அளவில் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மிக மோசமாக இருக்க வேண்டும். ஏனென்றால், தங்களது பார்வைக்கு எது படுகிறதோ, அப்புகைப்படத்தைத் தெரிவுசெய்து, அதைப் பிரசுரித்திருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

ஆகவே, பக்கச்சார்பால் பாதிக்கப்படுவது, வாசகர்கள் மாத்திரமன்றி, ஊடகவியலாளர்களும் தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஊடகவியலாளர்களும் மனிதர்கள் தானே? 

அப்படியானால், இந்த நிலைமையை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறதல்லவா? நிச்சயமாக. உலகெங்கிலும் இருக்கின்ற ஊடகங்கள், நம்பிக்கை தொடர்பான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. பிரதான ஊடகங்களை நம்புவது கடினமானது என, மக்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும், 2016ஆம் ஆண்டு, ஐ.அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், ஊடகங்கள் மீதான நம்பிக்கையை, மக்களிடத்தில் மோசமானளவுக்குப் பாதித்திருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பும் பணியில், ஊடகங்கள் ஈடுபடுகின்றன. தரவுகளும் அதையே சொல்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில், பிரதான வகை ஊடகங்களை, 2016ஆம் ஆண்டில், வெறுமனே 32 சதவீதமான மக்கள் தான் நம்பியிருந்தார்கள். ஆனால் இவ்வாண்டில், 45 சதவீதமான மக்கள் நம்புகிறார்கள். 

இதற்கான முக்கியமான காரணம்? இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டு, ஐ.அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து, அது தொடர்பான அறிக்கையிடலை, ஊடகங்கள் மீளாய்வு செய்தன. அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டன. தவறான செய்திகள், போலியான செய்திகள் வரும் போது, அவற்றைக் கையாண்ட விதம் தொடர்பில், முழுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன் காரணமாக, தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு செயற்படுவதற்கு, ஊடகங்கள் ஆரம்பித்திருக்கின்றன. 

ஊடகவியல் தொடர்பாக, நவீனகால தத்துவாசிரியர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் கிறிஸ்தோபர் ஹிற்சன்ஸின் கருத்தொன்றுடன், இவ்வாரத்துக்கான கட்டுரையை நிறைவுசெய்வது பொருத்தமாக இருக்கும். “தகவல்களுக்காகப் பத்திரிகைகளை நம்ப விரும்பாததால் தான், ஊடகவியலாளராக நான் மாறினேன்” என்பது தான் அவரது கருத்து. இவ்வாறு, தன்விமர்சனங்களைக் கொண்ட ஊடகவியலாளர்கள் உருவாகும் போது, ஊடகப் பணியென்பது, மேலும் மேலும் முன்னேற்றமடையும். ஊடகப் பணி முன்னேற்றமடையும் போது தான், போலிச் செய்திகளுக்கான கேள்வி குறைவடையும். போலிச் செய்திகளை எப்போது மக்கள் நாட மறுக்கிறார்களோ, எப்போது அவற்றை நம்ப மறுக்கிறார்களோ, அப்போதிருந்து அதற்கான தோல்வி ஆரம்பித்துவிடும். 

(போலிச் செய்திகள் தொடர்பான, தமிழ் மிரர் விவரணக் குழுவின் இப்பார்வை தொடரும். அடுத்த வாரத்தில் வெளியாகும் பகுதியில், போலிச் செய்திகளை எவ்வாறு உருவாக்குகிறார்கள், அதன் பின்னணிகள் என்ன போன்ற விவரங்கள் வெளிவரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .