2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

போலிச் செய்தி

Editorial   / 2018 நவம்பர் 27 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தமிழ் மிரரின் விவரணப் பிரிவு

உலகில் இருக்கின்ற பல ஆங்கிலமொழி அகராதிகளால், 2017ஆம் ஆண்டின் “சொல்” என்று, “fake news” என்பது தெரிவுசெய்யப்பட்டிருந்தது. Fake news என்பது இரண்டு சொற்களாக இருந்தாலும், “ஆண்டின் சொல்” என்று தான் அதை அழைத்தார்கள். Fake news என்பதன் தமிழ் வடிவமாக, போலியான செய்தி அல்லது போலிச் செய்தி என்பது காணப்படுகிறது. 

போலியான செய்திகள், மனிதர்களின் இருப்பிலிருந்தே காணப்படுகின்றன என்று தான் கருதப்படுகிறது. ஆனால், போலிச் செய்தி என்பது, ஐக்கிய அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், அத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றமை ஆகியவற்றைத் தொடர்ந்து தான் பிரபலமடைந்திருந்தது. அதற்கு முன்னர், போலிச் செய்தி என்பதே, மேற்கத்தேய நாடுகளில் இல்லாமலிருந்ததா? இல்லை, நிச்சயமாக அவ்வாறான செய்திகள் இருந்தன. ஆனால், போலிச் செய்தி என்பதை, நாளாந்தக் கலந்துரையாடலில் ஒன்றாக மாற்றிய “பெருமை”, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைத் தான் சாரும். 

ஜனாதிபதி ட்ரம்ப்பின் பார்வையில், தன்னைப் பற்றிய மறைக் கருத்துகளை வெளியிடும் செய்திகள் அனைத்துமே, போலிச் செய்திகள் தான். ஆனால், உண்மையான போலிச் செய்தியென்பது வேறானது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு மத்தியில், பொய்யான செய்திகள் தொடர்பான கவனம் ஏற்பட்டுள்ள நிலையில், போலிச் செய்தி தொடர்பான அறிமுகமும் விழிப்புணர்வும் பொதுமக்களுக்குத் தேவைப்படுகிறது. 

பொய்யான செய்திகள் என்று வரும் போது, பிரதானமாக மூன்று வகையாக அவற்றை வகுக்க முடியும். 

1)            தவறான செய்திகள் 

2)            தவறாக வழிநடத்தும் செய்திகள் 

3)            போலிச் செய்திகள் 

தவறான செய்திகள் என்றால், தகவலொன்று, ஊடகவியலாளரால் தவறாகத் தரப்படுதல். இத்தவறு, எதுவித உள்நோக்கங்களுமற்ற தவறாக இருக்கும். ஊடகவியலாளர்களால் அல்லாமல், பத்திரிகை அல்லது ஊடகத் துறையோடு சம்பந்தப்பட்ட தரப்பினராலும் இத்தவறு விடப்படலாம். 

உதாரணமாக, நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர், “இலங்கையின் வடக்கு மாகாணத்தில், புதிதாக 15,000 வீடுகளை அமைக்கப் போகிறேன்” என்று சொல்கிறார். அது தொடர்பான செய்தியில், 15,000 என்பது. தவறுதலாக 1,500 என்று வெளியிடப்படுகிறது. இத்தவறை, ஊடகவியலாளர் விட்டிருக்கலாம், இல்லாவிடின் செம்மைப்படுத்தலில் இத்தவறு விடப்பட்டிருக்கலாம், இவ்விருவரும் இல்லாமல், பத்திரிகை வடிவமைப்போராலும் இத்தவறு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஊடகவியலாளர்களும் ஊடகத் தொழிலில் ஈடுபடும் ஏனையோரும், சாதாரண மனிதர்களே என்பதால், இவ்வாறான தவறுகளை மன்னிப்பது அவசியம். ஒரே ஊடகவியலாளர், தொடர்ச்சியாக அவ்வாறான தவறுகளை மேற்கொள்வாராயின், அவரது தொழிற்றிறமை தொடர்பான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. அது வேறான விடயம். 

இரண்டாவதாக, “தவறாக வழிநடத்தும்” வகையிலான செய்திகள் காணப்படுகின்றன. ஒரு விடயம் தொடர்பான ஒருவர் தெரிவித்த கருத்து, அதன் முழுமையான சூழமைவுகளைக் கருத்திற்கொள்ளாது அல்லது முழுமையான வடிவத்தைக் கருத்திற்கொள்ளாது அறிக்கையிடப்படுதல் தான், இவ்வகையிலான செய்திகளாக உள்ளன. இவ்வகையிலான செய்திகள், சில தருணத்தில் போலியான செய்திகளாகக் கருத்திலெடுக்கப்பட வேண்டியன; வேறு சில தருணங்களில், ஊடகவியலாளர்களின் தவறுகளால் ஏற்படுபவனவாக அமைகின்றன.  

இவ்வாறான செய்திகள், ஊடகவியலைப் பாதிக்கும் வகையிலான புதிய வகைப் பிரச்சினையாக உருவாகியிருக்கின்றன. நவீனகால ஊடகவியல், உணர்வுகளைத் தூண்டுவதைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. இணையவழி ஊடகவியல் தற்போது பிரபலமடைந்துவரும் நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டுமாக இருந்தால், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டுமென, எழுதப்படாத விதியொன்று உருவாகியிருக்கிறது. 

இதற்கான மிகச்சிறந்த உதாரணம், ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு ஒக்டோபரில் நடந்திருந்தது. இதற்கு முன்னைய ஜனாதிபதித் தேர்தலில், அப்போதைய முதற்பெண்மணி மிஷெல் ஒபாமா, ஜனநாயகக் கட்சியினர் எப்படிச் செயற்பட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். “அவர்கள் கீழ்நோக்கிச் செல்லும் போது, நாங்கள் மேல்நோக்கிச் செல்வோம்” என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அண்மையில் உரையாற்றியிருந்த, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் சட்டமா அதிபராகப் பணியாற்றிய எரிக் ஹோல்டர், “இல்லையில்லை. அவர்கள் கீழ்நோக்கிச் செல்லும் போது, நாம் அவரை உதைப்போம். இந்தப் புதிய ஜனநாயகக் கட்சி அப்படித் தான்” என்று கூறினாரெனப் பலத்த சர்ச்சை உருவாகியிருந்தது. குடியரசுக் கட்சியோடு ஒப்பிடும் போது, ஜனநாயகக் கட்சியினரின் பக்கம் வன்முறை குறைவானது எனக் கருதப்படும் நிலையில், ஜனநாயகக் கட்சியினரும் வன்முறையை ஊக்குவிக்கின்றனரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. குடியரசுக் கட்சியினர், இவ்வுரையைக் கடுமையாகப் பயன்படுத்தினர். 

ஆனால், இதிலிருக்கின்ற முக்கியமான விடயம் என்னவென்றால், அதே உரையில், அக்கருத்தைத் தெரிவித்த பின்னர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்திருந்த ஹோல்டர், “’நாம் உதைப்போம்’ என்று நான் சொல்லும் போது, பொருத்தமில்லாத எதையும் நாம் செய்வதில்லை. சட்டவிரோதமான எதையும் நாம் செய்வதில்லை. ஆனால், நாம் கடுமையாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஹோல்டரின் முழுமையான உரையைச் செவிமடுத்துவிட்டு, முதற்பகுதியை மாத்திரம் அறிக்கையிட்டிருந்தால், ஒரு வகையில் அது போலிச் செய்தி தான். ஆனால் மறுபக்கமாக, உரையின் முதற்பகுதியை மாத்திரம் செவிமடுத்து அறிக்கையிட்டிருந்தால், பொறுப்பற்ற ஊடகவியலாக அது அமையும். 

இந்த இரண்டு வகைகளுக்கும் அடுத்ததாகத் தான், நேரடியான போலிச் செய்திகள் காணப்படுகின்றன. ஒருவர் கூறாத, செய்யாத விடயங்களை அல்லது நடக்காத ஒரு விடயத்தை அறிக்கையிடுவது தான், போலிச் செய்திகள். இப்படியான போலிச் செய்திகள், குறிப்பிட்டதொரு நோக்கத்தை அடைவதற்காகப் பரப்பப்படுகின்றன. பொதுவாக, குறிப்பிட்டதோர் அரசியல்வாதிக்குச் சார்பான தரப்புகள், தங்களுக்கு விருப்பமான அரசியல்வாதி மீது நல்ல செய்திகளைப் பரப்புவதற்காக, புதிதாகச் செய்திகளை உருவாக்குவார்கள். அதேபோன்று, தமக்கு விருப்பமான அரசியல்வாதிக்கு எதிரான அரசியல்வாதி அல்லது கட்சி தொடர்பில், மறையான செய்திகளையும் உருவாக்குவார்கள். 

போலியான செய்திகள், வெறுமனே தவறான தகவல்கள் கிடையாது. ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்தவே அவை பரப்பப்படுகின்றன. எனவே, தவறான அரசியல்வாதியொருவர், தேர்தலில் வெற்றிபெறக் கூடும். இல்லாவிட்டால், வன்முறைகள் ஏற்படக்கூடும். 

போலிச் செய்திகளின் விளைவுகளைக் கண்டறிவதற்கு, ஐக்கிய அமெரிக்காவுக்கெல்லாம் செல்லத் தேவையில்லை. எமது நாட்டில், போலிச் செய்திகளால் கலவரங்களே ஏற்பட்டிருக்கின்றன. 

முஸ்லிம்கள் மீது, அம்பாறையிலும் கண்டியின் திகனவிலும் ஏற்பட்ட வன்முறைகளுக்கு, போலிச் செய்திகள் தான் காரணமாக அமைந்திருந்தன. முஸ்லிம் வெறுப்பு என்ற தமது இலக்கை அடைவதற்காக, பௌத்தர்களின் பாலியல் வீரியத்தைக் குறைக்கும் மாத்திரைகளை, முஸ்லிம்களால் உரிமைப்படுத்தப்பட்டுள்ள கடைகளில் கலக்கிறார்கள் என்ற, முற்றிலும் பொய்யான, ஆதாரங்கள் எவையுமற்ற தகவலொன்று, சமூக ஊடக வலையமைப்புகளில் பரப்பப்பட்டது. இவ்வாறான தகவல்கள், இணைய ஊடகங்களுக்கும் சென்று, தொடர்ச்சியாகப் பரப்பப்பட்டு வந்தது. பத்திரிகைகள் சில கூட, இது தொடர்பான தகவல்களைப் பரப்பும் போது, குறிப்பிட்ட தகவல், முற்றிலும் போலியான தகவல் என்பதை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. 

இவ்வாறான பின்னணியில் தான், தனிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட, அதை அடிப்படையாக வைத்து, முஸ்லிம் ஒருவரால் உரிமைப்படுத்தப்பட்ட உணவகமொன்று தொடர்பில், மேற்படி போலிச் செய்தி, அம்பாறையில் பரப்பப்பட்டது. அதன் பின்னர் தான், வன்முறைகள் ஏற்பட்டிருந்தன. அம்பாறையிலும் கண்டியிலும் ஏற்பட்ட வன்முறைகளின் விளைவாக, 2 பேர் கொல்லப்பட்டதோடு, 10 பேர் காயமடைந்தனர். அத்தோடு, வீடுகளும் வர்த்தக நிலையங்களும் என, 45 சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அதேபோல், 4 வழிபாட்டு இடங்களும் சேதப்படுத்தப்பட்டன. இவை அனைத்தினது ஆரம்பமும், போலிச் செய்தி என்பது தான், அதிக கவனத்தை ஈர்க்கிறது, அல்லவா? 

அதேபோல், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டு, தி ஹிந்து பத்திரிகையில் செய்தி வெளியானது என, புகைப்படமொன்று பகிரப்பட்டது. “தமிழீழத்துக்காக, ஐ.தே.கவுக்கு வாக்களியுங்கள். சுயாட்சிக்கு ரணில் சம்மதித்துவிட்டார். பிரதமர் விஜயகலா” என்று, ஒரு செய்தி வெளியானதெனப் பகிரப்பட்டது. இது, மிகவும் மோசமான போலிச் செய்தி. ஏனெனில், அந்த வடிவமைப்பு மிக மோசமானதாக அமைந்தது; அதன் ஆங்கில இலக்கணமும் எழுத்துகளும் மிகவும் பிழையாக இருந்தன; பிரதமர் விஜயகலா என்று குறிப்பிடப்பட்டிருந்தது; விஜயகலாவின் பெயர் தவறாக எழுதப்பட்டிருந்தது என, ஏராளமான பிழைகள் காணப்பட்டன. இருந்த போதிலும், அச்செய்தியையும் பலர் பகிர்ந்தார்கள்.  

இலங்கையைப் பொறுத்தவரை, போலியான தகவல்களில் பெரும்பாலானவை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான தரப்பினர் தான் பகிர்கின்றனர் என்பது வெளிப்படை. ஆனால் அதற்காக, எதிர்த்தரப்பினர் அதைச் செய்வதே இல்லையென்று கூறிவிட முடியாது. மிக அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன்களில் ஒருவரான றோஹித ராஜபக்‌ஷ, புத்தர் சிலையொன்றின் மீது காலை வைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்து, புகைப்படமொன்று பகிரப்பட்டது. ஆனால் அப்புகைப்படம், கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவினுடையது. அவரது உடலுக்கு, றோஹிதவின் தலையை ஒட்டி, அப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்கள். இவ்வாறு, போலிச் செய்திகளுக்கென, எல்லையென்று எதுவும் இல்லாத நிலைமை தான் இருக்கிறது. 

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பைப் பயன்படுத்திய சிலர், ஜனாதிபதி சிறிசேனவின் மகள் எழுதிய புத்தகத்தில், ஜனாதிபதி சிறிசேன, ஒருநாள் கோபம் கொண்டு, வயல் முழுவதையும் கொளுத்தி எரித்தார் என்ற தகவலைப் பகிர்ந்தனர். இத்தகவல், சமூக ஊடக வலையமைப்புகள் அனைத்திலும் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, இணையவழி ஊடகங்கள் இத்தகவலைப் பகிர, ஒரு கட்டத்தில், பத்திரிகைகள் கூட, அத்தகவலை உண்மையென நம்பிப் பகிர்ந்தன. ஆனால், அப்படியான எந்தத் தகவலும், ஜனாதிபதியின் மகளின் புத்தகத்தில் இருக்கவில்லை. எனவே, இதுவும் போலிச் செய்தியே.  

ஐக்கிய அமெரிக்காவில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இவ்வாறான போலிச் செய்திகள் பரப்பப்பட்டன. பரப்பப்பட்டவற்றில் அநேகமானவை, அப்போது வேட்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்புக்குச் சார்பாகவே பரப்பப்பட்டன. அத்தேர்தலில் அவர் வெற்றிபெற்றமைக்கு, அவ்வாறான போலிச் செய்திகளின் பங்களிப்பும் முக்கியமானது என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றன. 

ட்ரம்ப்புக்குச் சார்பாகப் பரப்பப்பட்ட போலிச் செய்திகளில் முக்கியமானது, ஹிலாரி கிளின்டனின் முக்கியமான அரசியல் உதவியாளர்கள், வொஷிங்டனிலுள்ள பிட்ஸா உணவகமொன்றில் வைத்து, மனிதக் கடத்தலிலும் பாலியல் தேவைகளுக்காகச் சிறுவர்களைக் கடத்துவதிலும் ஈடுபடுகின்றனர் என்ற போலிச் செய்தி பரப்பப்பட்டது. பிரதான ஊடகங்களால் இத்தகவல் நிராகரிக்கப்பட்டாலும், இணையத்தளங்கள் வழி, இத்தகவல் தொடர்ந்தும் பரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவ்வுணகத்தின் உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும், மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதேபோல், தேர்தல் முடிந்த பின்னர், நபரொருவர் அவ்வுணவகத்துக்குச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தினார். அங்கு நடக்கும் உண்மையைக் கண்டறிவதற்காகவே அவ்வாறு செய்ததாக அவர் கூறினார். 

எனவே தான், இவற்றின் பின்னணிகளின் மத்தியில், போலிச் செய்திகள் தொடர்பான தெளிவான விளக்கம், பொதுமக்களுக்கு ஏற்படுவது அவசியமாகிறது. 

(போலிச் செய்திகள் தொடர்பான, தமிழ் மிரர் விவரணக் குழுவின் இப்பார்வை தொடரும். அடுத்த வாரத்தில் வெளியாகும் பகுதியில், இது தொடர்பான மேலதிக விளக்கங்கள் வெளிவரும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .