2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்

மொஹமட் பாதுஷா   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளிலும் நீண்டகால அடிப்படையில், மனக் கசப்புகள் ஏற்படும் என்பதே, முன்னோரின் கணிப்பாகும்.   

எவ்வாறிருப்பினும், ஒன்றுசேர்தல் என்பது, நல்லதொரு முன்மாதிரி என்ற அடிப்படையில், கூட்டு முயற்சிகள் நவீன உலகில், வரவேற்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றன.   

அந்த வகையில், 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டபோது, பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. இரு பிரதான கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வருவது, முன்னோடியான ஓர் அரசியல் கலாசாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை, மக்கள் மத்தியில் இருந்தது.   

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மோதல்கள் சற்றுத் தணியும் என்பதால், நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியில், முழுக் கவனத்தையும் செலுத்தக் கூடியதாக இருக்கும் என்ற கனவும் இருந்தது.   
மறுபுறுத்தில், இந்த நல்லாட்சி எத்தனை நாளைக்குப் பயணிக்குமோ என்ற ஐயப்பாடும், அரசியல் நோக்கர்களுக்கு இல்லாமல் இருக்கவில்லை. 

ஒரு கட்சியும் ஒரு தலைவரும் தனித்து ஆட்சி செய்கின்ற சூழ்நிலையிலேயே, நீண்டகாலத்துக்குப் பயணிக்க முடியாது என்றிருக்கையில், இரண்டு கட்சிகள், சற்றுப் பலமான ஒன்றிணைந்த எதிரணி ஆகியவற்றுக்கு இடையிலான, அதிகார ஆசைகள் எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதை, இன்னும் கூடச் சரியாக, அறுதியிட்டுச் சொல்ல முடியாமல்தான் இருக்கின்றது.   

மழை நின்றுவிட்ட பிறகும், தொடர்ந்து சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் தூறல்கள் போல, ஆட்சி மாற்றம், தேர்தல், நம்பிக்கையில்லாப் பிரேரணை என எத்தனையோ விடயங்கள், நடந்தேறிவிட்ட பிற்பாடும் இன்னும், அரசாங்கமும் அரச இயந்திரமும் ஸ்திரமான ஒரு நிலைக்கு வரவில்லை.   

ஆட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஒரு தரப்பும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இன்னுமொரு தரப்பும் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றமையால், நாட்டில் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லை. என்றாலும், ஓர் அரசாங்கமாக ஏனைய விவகாரங்களில் முழுமையான கவனத்தைச் செலுத்துவதில், பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.   

அத்துடன், தொடர் மாற்றங்களின் நன்மைகளும் மக்களைச் சென்றடைந்த மாதிரித் தெரியவில்லை.   
மத்தியவங்கி பிணைமுறி விவகாரமும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளும் சூடுபிடித்திருந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன, அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியீட்டி இருந்தமை, அரச ஆளுகைக் கட்டமைப்பின் ஆணிவேரையே, ஆட்டிப் பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்.  

 ஏற்கெனவே, சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த சூழலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தபோது, அம்பாறை, திகன போன்ற இடங்களில் இடம்பெற்ற இன வன்முறைகள், நிலைமை மேலும் சிக்கலடைவதற்குக் காரணமாகின.   

இக்காரணங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, பிரதமர் மீது ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை, ஒன்றிணைந்த எதிரணி கொண்டு வந்தது. நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடைந்தால், பிரதம மந்திரியும்  ஏனைய அமைச்சர்களும் பதவியிழப்பர். இந்த அடிப்படையிலும் அதன் பிரகாரம், நிழல் ஆட்சியொன்றையாவது நிறுவலாம் என்ற நப்பாசையிலுமே, இந்தப் பிரேரணை முன்னகர்த்தப்பட்டிருந்தது எனலாம்.   

ஆனால், சிறுபான்மைக் கட்சிகள் வழக்கம் போல, பிரதமரையும் அதனூடாக ஆட்சியையும் காப்பாற்றியிருக்கின்றன. ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்க தப்பிப்பிழைத்திருக்கின்றார்.   

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையால், ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பலத்தை நிரூபிக்க முடிந்தது போல, மஹிந்தவுக்கும் பலம் அதிகரித்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.   

அதாவது, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியினதும் கட்சித் தலைவரினதும் (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன) வெளிப்படையான விருப்பத்துக்கு மாறாகவும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்திருக்கின்றனர். 15 அமைச்சர்களும் பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபாலவுமே இவ்வாறு வாக்களித்திருந்தனர்.   

அதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பிரதமரிடம் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டே பிரேரணையைத் தோற்கடிக்க வாக்களித்திருக்கின்றார்கள்.   
ஆனால், இந்த நகர்வால், நாட்டின் ஜனாதிபதிக்கு எவ்வித அனுகூலங்களும் கிடைக்கவில்லை என்பதுடன், தர்மசங்கட நிலைக்குள்ளும் தள்ளப்பட்டிருக்கின்றார்.   

அதேமாதிரி, வழக்கம்போல, பகிரங்கமாக எவ்வித எழுத்துமூல கோரிக்கைகளையும் முன்வைத்து, அதற்கான உத்தரவாதத்தின் அடிப்படையில் வாக்களிக்கத் தவறிய முஸ்லிம் கட்சிகளுக்கும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இப்பிரேரணை தோல்வியுற்றமையைத் தொடர்ந்து, அரசாங்கத்தில் இருப்பதற்கான அவகாசம் கிடைத்திருக்கின்றது. இது ஒன்றைத் தவிர, வேறெந்த நன்மைகளும் கிடைக்கவில்லை. தவறவிட்ட சந்தர்ப்பம் தவறவிட்டதுதான்.   

ஐக்கிய தேசியக் கட்சி, பல வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்தது. பல தடவை தோல்விகளைச் சந்தித்த பின்னரே, ரணில் விக்கிரமசிங்க இந்த ஆட்சியதிகாரத்தையும் பிரதமர் பதவியையும் பெற்றுக் கொண்டார் என்பது, நினைவு கொள்ளத் தக்கது.  

 எனவே, அவர் ஒரு கனவான் அரசியல்வாதி எனக் கூறப்பட்டாலும், தற்போது முன்வைக்கப்படுகின்ற காரணங்களுக்காகப் பிரதமர் பதவியைத் தானாக முன்வந்து, இராஜினாமாச் செய்வார் என்றோ, ஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து வெளியேறுவார் என்றோ, எந்த வகையிலும் அனுமானிக்க முடியாது.   

எனவே, வருகின்ற சவால்களை எதிர்கொண்டு, ஆட்சியை முன்கொண்டு செல்ல, அவர்கள் முயல்கின்றனர்.   
ஆனால் மறுபக்கத்தில், கடந்த உள்ளூராட்சித் தேர்தல் மூலமும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, அமைச்சர்கள் 15 பேரையே, ஆதரவாக வாக்களிக்கச் செய்ததன் மூலமும், தமக்குக் கிடைத்திருக்கின்ற அலையை முழுமையாகப் பயன்படுத்த, ஒன்றிணைந்த எதிரணி, தொடர்ந்து முயல்கின்றது.  

“ஆட்சியைத் தக்கவைப்போம்” என்ற சூளுரைகளும் “ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என்ற கோஷங்களும் இருதரப்பிலும் முன்வைக்கப்படுவதைக் காணமுடிகின்றது.  

சுருங்கக்கூறினால், 2015இல் நல்லாட்சி நிறுவப்பட்டு, சுமார் மூன்று வருடங்களாக இருந்துவந்த அதிகாரப் பனிப்போர், இப்போது வெளிப்படையான யுத்தமாக, மாறியிருக்கின்றது எனலாம்.  

 மஹிந்தவும் ரணிலும் தங்கள் தங்கள் கட்சியையும் அணியையும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமிருக்க, சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி, தமது கட்சியின் எதிர்கால நலன் குறித்து, சிந்தித்துக் கொண்டிருப்பதாகக் கருத முடியும்.   

இதற்கிடையில்,சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 15 அமைச்சர்கள் உள்ளடங்கலாக, 16 பேர், ஒன்றிணைந்த எதிரணியின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை, பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது.   

அந்த 16 பேரும், அமைச்சரவையில் இருந்தால், அவர்களுடன் தம்மால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியினர் அறிவித்தனர். அதேநேரம், தம்மைப் பதவிகளில் இருந்து நீக்கி விடுமாறு, சம்பந்தப்பட்ட சு.க உறுப்பினர்களும் கட்சித் தலைவரைக் கோரியிருந்தனர்.  

இந்தப் பின்னணியில், சுதந்திரக் கட்சியின் 16 பேரும், தமது பதவிகளை இராஜினாமாச் செய்வதற்கு, கட்சித்தலைவரான ஜனாதிபதி, நேற்றுமுன்தினம் இரவு அனுமதி வழங்கியதையடுத்து, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகுகின்றனர். அத்துடன், உடனடியாக ஆறு பேரின் அமைச்சுகள் வலிதாக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது.  

இந்நிலையில், தம்பக்கம் ஆறுபேர் வந்து சேரவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
போகப்போக நிலைமைகள் மோசமடைவதையே, நடப்பு நிலைவரங்களும், அன்றாட தேசிய அரசியல் நிகழ்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக, 76 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த சு.கவில் பதவிகளில் உள்ள 16 பேர், தமது பதவிகளில் இருந்து விலகும் பட்சத்தில், அவர்களின் ஆதரவு ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கப் போவதில்லை.   

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவதாக, அவர்கள் அறிவித்தாலும்,அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டே, ஒன்றிணைந்த  எதிரணியின் முயற்சிகளுக்கு ஆதரவளித்தவர்கள், இனிமேல் மைத்திரிபால சிறிசேனவுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதங்களும் இல்லை. 

ஆக, இவர்களைப் பதவி நீக்குவதற்கான ஐ.தே.கவின் அழுத்தம், ஜனாதிபதியின் முடிவு என்பன, மூலோபாய ரீதியாக அன்றி, மேலோட்டமாக எடுக்கப்பட்டிருக்குமாயின், நிச்சயமாக இந்நகர்வானது, ஒன்றிணைந்த எதிரணிக்குப் பலம் சேர்ப்பதாகவே அமையும் என்று, அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.   

சரி, மாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்பதையும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதையும் நாம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். 

ஆனால், நாட்டின் அரசியல் அரங்கில், ஒவ்வொரு நாளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த மாற்றங்கள், சாதாரண மக்களின் வாழ்க்கையில், எந்தளவுக்கு அனுகூலமளித்திருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.   

இந்நாட்டு மக்கள், ஒரு பெரும் புரட்சியாகவே, ஆட்சி மாற்றத்தை,  நல்லாட்சியாகக் கொண்டு வந்தார்கள். தேர்தல் பிரசாரக் காலத்தில், ஐக்கிய தேசிய முன்னணியைத் தலைமை தாங்கிய ரணில் விக்கிரமசிங்கவும் அப்போதைய பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவும் ஆட்சி மாற்றத்துக்காகப் பிரசாரம் செய்த சந்திரிகா அம்மையார் போன்றோரும், பெருமளவிலான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினர்.

 இந்த வாக்குறுதிகள் இன்னும், சிறுபான்மை மக்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை திருப்திகரமாக நிறைவேற்றப்படவில்லை.   

அரச இயந்திரம், வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தாலும், அரசாங்கமும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என ஆட்சிக் கட்டமைப்பின் முக்கிய கூறாகவுள்ள அனைவரும், தொடர்ச்சியாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நேரமின்றி, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதிலேயே, முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது கண்கூடு.   

நல்ல மாற்றங்கள் வரவேற்கத்தக்கதே. ஆனால், இந்த மாற்றங்களால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது என்ற யதார்த்தத்தை நோக்க வேண்டியிருக்கின்றது. 

தேர்தல் முறை மாற்றம், அரசமைப்பில் 20ஆவது திருத்தம், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் எல்லை நிர்ணயம், அரசமைப்பு மறுசீரமைப்பு, தேர்தல் என்பவற்றுக்குப் புறம்பாக, பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணை, அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள், ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகள், ஆட்சியைத் தக்க வைப்பதற்கான நகர்வுகள் என அரசியல் களரி நிரம்பிப் போயிருக்கின்றது. 

எனவே, மாற்றங்களால் கிடைக்கும் உரிய சலுகைகள், நிவாரணங்கள், நல்லாட்சியின் பலாபலன்களைச் சாதாரண மக்களுக்கு வழங்குவதற்கு, ஆட்சியாளர்களுக்கு நேரமிருப்பதில்லை என்பதே நிதர்சனமாகும்.   

மாற்றம் என்பது மக்களுக்கானது என்றால், அந்த மாற்றத்தின் பலாபலன்கள், எதோ ஒரு வகையில் மக்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், முக்கோண அதிகாரப் போட்டிக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசியலில், மேற்கொள்ளப்படுகின்ற மாற்றங்கள் பொதுவாக, அரசியல் நலன்களை முன்னிறுத்தியே எடுக்கப்படுகின்றன.

இந்த மாற்றங்கள், அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருப்பது, நாட்டில் ஆட்சி ஸ்திரத்தன்மை இல்லை என்ற தோற்றப்பாட்டை உண்டுபண்ணியிருக்கின்றது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.   

உதாரணத்துக்கு, இப்போது அமைச்சரவை மாற்றப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஓர் அமைச்சர் மாறினால், அதன் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மாறுகின்றார்கள்,அதன் ஒழுங்கு விதிகள், கொள்கைகள் மாற்றப்படுகின்றன. ஏற்கெனவே, பதவி இறக்கப்பட்ட அதிகாரிக்கு  புதிய அமைச்சர் வந்து, பதவியுயர்வு வழங்கி விடுவதைக் காண்கின்றோம்.

 இந்நிலையில், இப்போது வரும் புதிய அமைச்சரால், குறித்த நிறுவனங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை உள்வாங்கி, நடைமுறைப்படுத்துவதற்கு இடையில், அடுத்த மாற்றம் வந்துவிடுகின்றது. 

நாட்டில் அடிமுதல் நுனிவரை மேற்கொள்ளப்படுகின்ற எல்லா விதமான மாற்றங்களின் நிலையும், இதுதான் என்பதைக் கூர்ந்து நோக்குவோர் அறிந்து கொள்வார்கள்.   

மாற்றங்கள் அவசியமானவைதான். ஆனால், பிரதானமான பெரும்பான்மையினக் கட்சிகள், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போரின் உத்தியாகவோ, அன்றாட நிலைமைகளைச் சமாளித்துக் கொண்டு போவதற்கான வழிமுறையாகவோ, மாற்றங்கள் நிகழ்த்தப்படக் கூடாது. 

அந்த மாற்றங்கள், மக்கள் நலனை நோக்காகக் கொண்டதாக இருக்க வேண்டும். 
ஒவ்வொரு மாற்றத்தின் பயனும், நாட்டின் ஒவ்வொரு மூலையில் உள்ள, கடைநிலை வாக்காளனுக்கும் சென்று சேர வேண்டும். 

அதைத்தான் அர்த்தமுள்ள மாற்றங்கள் எனலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .