2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மக்களைப் பாதுகாப்பதில் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு? மீண்டும் இராணுவ பிரசன்னம்

Editorial   / 2019 மே 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்  

தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடு ‘சாண் ஏற முழம் சறுக்கும் நிலையாகி உள்ளது’ என்றால், மறுப்பதற்கில்லை.

30 வருடங்களாகச் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்து, இலங்கை தேசத்தில் நல்லிணக்கம், சகவாழ்வு என்ற பொறிமுறைக்குள், தங்களது வாழ்வியல் முறைமைகளை நகர்த்திச் செல்லும் பல்லின மக்களுக்கு, இன்று அவை அனைத்தையும் இழந்தாற் போன்றதான மனநிலையை உருவாக்கியுள்ளன அண்மைக் காலச்சூழல்கள்.

சோதனைக் கெடுபிடிகளும் இடப்பெயர்வுகளும் அகதிவாழ்வும் நலன்புரி நிலைய வாழ்வியலும் தமிழ்ச் சமூகத்துக்குப் புதிதானதல்ல. அவர்களது உரிமைப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இவை அனைத்தும் இருந்து வந்ததை மறந்துவிட முடியாது. 

எனினும், தற்போதைய நிலைமைகளையும் தமிழர்களது போராட்ட கால நிலைமைகளையும் ஒப்பிட்டு பார்க்க முடியுமா என்கின்ற கேள்வி பலமாகவே இருக்கின்றது. 

இலங்கையில் எப்போதுமே கண்டிருக்காத கொடூரமானதாக அமைந்த, வணக்கஸ்தலங்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களும் அப்பாவிப் பொது மக்களை மாத்திரமே இலக்கு வைத்து நடத்தப்படும் குண்டு வெடிப்புகளும் இலங்கைக்கு புதிய அனுபவங்களே. 

கடந்த காலங்களில், இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் பாதுகாப்புத் தரப்பினரை இலக்காகக்  கொண்டதாகவே அமைந்திருந்தன. இத்தாக்குதல்களின்போது மக்கள் முழுமையான இலக்காகக் கொள்ளப்படவில்லை.

ஆனால், தற்போது இவ்வாறான நிலையொன்று ஏற்பட, புலனாய்வுச் செயற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகளும் பொதுமக்கள் மீதான தாக்குதல் இலக்குகள் வெற்றியடைய உடந்தையாக இருந்துள்ளன. 

எனினும், உள்ளக யுத்தமொன்றின் வளர்ச்சியைத் தடைபண்ணும் விதமான கட்டமைப்பையே இலங்கைப் புலனாய்வு கொண்டிருந்தமையானது, அவர்கள் சர்வதேச பயங்கரவாத்தின் தாக்கத்தை, எப்போதும் எதிர்பார்த்திருக்காமையே ஆகும். அதன் பாரியதும் ஈடுசெய்ய முடியாத விளைவை, இன்று இலங்கை உணர்ந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேசத் தடைகள் வலுப்பெறவும் அவர்களை அழிக்க வேண்டும் எனச் சர்வதேசம் கங்கணம் கட்டியதற்குச் ‘சர்வதேச பயங்கரவாதம்’ அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட, பல்வேறு தாக்குதல்களின் மூலம் பொதுமக்களை இலக்குவைத்துக் கொன்றமையாகும். 

எனவே, இந்தத் தருணத்தில் சர்வதேச பயங்கரவாதத்தின் செயற்பாடுகள் தொடர்பில், இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பு விஸ்தரிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், தற்போது வரையிலும் அது தொடர்பான தெளிவு இன்றி இருந்தமை, வியப்புக்குரியதே.

இந்நிலையில் தாக்குதலைக் கட்டப்படுத்துவதாகத் தெரிவித்து நடத்தப்படும் சோதனைகளும் அதனோடிணைந்த செயற்பாடுகளும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை, ஸ்தம்பிக்கச் செய்துள்ள நிலையில், வடக்கில் இராணுவ பிரசன்னமானது வெகுவாகவே அதிகரித்துள்ளமை, மீண்டும் யுத்த சூழலை மக்களுக்கு நினைவுபடுத்தி வருகின்றமையைக் காண முடிகின்றது.

பெரும் இடர்பாடுகளிலிருந்து மீண்ட சமூகமொன்றின் மீது, மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகள், ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்பதோடு, நாட்டின் பாதுகாப்புக் கருதியதாக, அதைப் பார்க்குமாறு தமிழ்த் தலைமைகள் கூறிவருகின்றன.

இவ்வாறான நிலைப்பாட்டில், தமிழ்த் தலைமைகள் இருக்குமானால், தாக்குதல் இடம்பெற்று 15 நாள்களையும் கடந்துள்ள நிலையில், பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்ற குழப்பகரமான நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில், மாணவர்களும் ஆசிரியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் துர்ப்பாக்கிய நிலையே காணப்பட்டு வருகின்றது. கல்விச் செயற்பாட்டைக் கூட, இயல்பாக முன்னெடுக்க முடியாத நிலைமையென்பது, கடந்த யுத்த காலத்தில் கூட, நடைபெறாத ஒரு சம்பவம் எனப் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கிலும் மேல் மாகாணத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, “ஐக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவே பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாதமும் அதனுடன் தொடர்புடையவர்களையும் சல்லடை போட்டுத் தேட வேண்டியதும் கைது செய்யப்பட வேண்டியதுமான சூழலில், யாழ். பல்கலைக்கழகத்துக்குள் சென்று பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளமை எந்த வகையில் நியாயப்படுத்தப்படப் போகின்றது.

வருடாந்தம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில், தமிழர்களது உணர்வு ரீதியான நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், அப்போதெல்லாம் வேடிக்கை பார்த்த பாதுகாப்புத் தரப்பு, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி, பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்துள்ளமை, திட்டமிட்ட செயற்பாடா என்ற கோணத்தில், தமிழ் அரசியல்வாதிகள் பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

வெறுமனே அறிக்கை மூலமான கருத்துக்கள் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வைத் தந்துவிடுமாக இருந்தால், 30 வருடப் போராட்டத்தை அப்போதே அறிக்கைகளை வெளியிட்டு, நிறுத்தி விட்டிருக்கலாம் என்ற எண்ணப்பாட்டையும் தோற்றுவிக்கத்தான் செய்கின்றது.

எனவே, தமிழ் மக்கள் தமது நியாயப்பாடுகளையும் தமது உரிமைகளையும் பெற்றுக்கொள்ள தமிழ்த் தலைமைகளின் செயல் வடிவத்துக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்கள் அறிக்கைகளை மாத்திரம் விடுத்து இருப்பதானது எந்தவகையிலான அழுத்தமாக இருக்கப்போகின்றது என்பது சந்தேகமே எழுகின்றது..

இந்நிலையிலேயே வடக்கில் மீண்டும் அமைக்கப்பட்டு வரும் சோதனைச் சாவடிக்கள் இஸ்லாமியத் தீவிரவாத்தைத் தடுப்பதற்காகத்தானா என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. 

வடக்கில் மூன்று தமிழர்களுக்கு, ஓர் இராணுவம் என்ற வகையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில், தற்போதைய இராணுவத்தினரின் அதிக பிரசன்னமானது, தமிழ் மக்கள் குறிவைக்கப்படுகின்றனரா என்ற பார்வையிலும் சிந்திக்க வைத்துள்ளது.

இச் சூழலிலேயே அவசரகாலச் சட்டத்தைக் காரணம் காட்டி, இராணுவத்தினரின் இருப்பை நிலைநிறுத்தவோ, அவர்களின் பிரசன்னத்தை அதிகரிக்கவோ கூடாது என, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு தற்போது அரசாங்கத்துக்கு அச்சாணியாக உள்ள தமிழர் தரப்பு அரசியல்வாதிகள், அரசாங்கத்துக்கு எவ்விதமான அழுத்தத்தையும் பிரயோகிக்காது, அவர்களின் விடுதலை தொடர்பில் கரிசனை கொள்ளாது, சட்ட ரீதியாகவே முகம் கொடுக்கவுள்ளதாகத் தெரிவிப்பதானது, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடும் செயலாகவே பார்க்க வைக்கின்றது.

எனவே இராணுவ ஆளுகைக்குள் வடக்கை வைத்துள்ளமையும் அதனூடாகப் பாரிய இடர்பாடுகளைத் தமிழர்களுக்கு கொடுக்க முனைவதும் மேலும் மேலும் சர்வதேச பயங்கரவாதத்தின் மீதான கவனத்தில் ஈர்ப்பு இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

வடக்கில் சாதாரண திருமண மண்டபத்தில், யாருக்குத் திருமணம் நடக்கின்றது என்பதைக் கூட, புலனாய்வுத் தகவலாகக் கருதி அறிக்கையிடும் புலனாய்வாளர்கள், காத்தான்குடி ஒல்லிக்குளத்தில் 15 ஏக்கரில் உயரிய காலவரனோடு காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் தொடர்பில் புலனாய்வு செய்யாது இருந்தது ஏன் என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதிக்கு முன்பாக இடம்பெறும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான கூட்டத்தில், இவை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படாதது ஏன்? 

புலனாய்வாளர்கள் தேசிய தவ்ஹித் ஜமாத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கையிடாது இருந்தமையானது, அவர்கள் மீது புலனாய்வாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கைத் தன்மையிலானதா என்ற கோணத்தில் ஆராயப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலைப்பாடுகளின் மத்தியிலேயே, இராணுவத்தின் நிலைநிறுத்தல்கள் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகளும் விருப்பம் கொண்டுள்ளனர். 

இராணுவத்தளபதி இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலோடு தொடர்புபட்ட சூத்திரதாரியான சர்கான், மன்னார் வழியாகத் தமிழ் நாட்டுக்குத் தப்பியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பிலேயே அதிக பாதுகாப்புக் கொண்ட கடற்பரப்பாகக் கருதப்படும் வடக்கு கடற்பரப்பினூடாக, இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக இராணுவத்தளபதி கூறியிருப்பதானது, அவர்களது பாதுகாப்புக் கட்டமைப்பின் மீதான சந்தேகத்தைதயே வலுக்கச் செய்துள்ளது.

வெறுமனே இந்தியப் படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்க வருகின்றதா என்பதனை மாத்திரமா வடக்கு கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபடும் கடற்படை அவதானித்து வருகின்றது. இச்சூழலில் வடக்கில் பாதுகாப்பை அதிகரிப்பதாகக் கூறி, இராணுவத்தினரை நிலைநிறுத்துவதால் மாத்திரம் சர்வதேச பயங்கரவாத்தை ஒழித்துவிடலாம் என்ற எண்ணப்பாட்டை மறு பரிசீலனை செய்யவேண்டிய நிலையில் பாதுகாப்புத் தரப்பு உள்ளது.

ஆக, இவ்வாறான ஒரு புதிய கதையினூடாக, வடக்கில் மேலும் பாதுகாப்புக் கட்டமைப்பை இறுக்கி கொள்ளவே இது காரணமாக அமையப்போகின்றது என்பதே யதார்த்தம். 

இது மாத்திரமின்றி, நிரந்தரச் சோதனைச்சாவடிகளை அமைத்து, அதனூடாகத் தீவிரவாதிகள் செல்வார்கள் என்றும் அப்போது பிடித்துவிடலாம் எனச் பூச்சாண்டி காட்டுவதானது, தமிழ் மக்களை மீண்டும் இக்கட்டுகளுக்குள் தள்ளிவிடுவதாகவே அமையும் என்பதே உண்மை.

தமிழ் அரசியல்வாதிகளின் ‘ஊக்குவிக்கும் நிலைப்பாடு’

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரான காலத்தில், தேர்தல் என்ற இலக்கை மய்யமாக வைத்துச் செயற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் பலவும், “இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும்” என்ற கோசத்தை முன்னிறுத்தி இருந்தன.

 இதன் காரணமாக, மத்திய அரசாங்கத்தின் பிரதான அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் கருத்து மோதல்கள் பல இடம்பெற்று வந்திருந்தன. எனினும் தற்போதைய நிலைப்பாட்டில் அதன் தன்மை மாறியிருக்கின்றது. 

மேதின நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, “இராணுவத்தினர் வடக்கில் பாதுகாப்பைப் பலப்படுத்தி, மக்களைக் காக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்ததுடன் பாதுகாப்புச் செயற்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதேபோன்றதான கருத்தே, பல தமிழ் அரசியல் தலைமைகளிடம் இருந்து வரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியை ஆரம்பித்து, அதன் ஊடகப் பேச்சாளராக உள்ள க. துளசி, “ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது அல்லது அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பாதுகாப்புத் தரப்போடு சம்பந்தப்பட்டது. இன்று இராணுவ பிரசன்னம் கூடுதலாக உள்ளது எனத் தெரிவித்தால் தமிழ் மக்களது பாதுகாப்பை யாரிடம் இருந்து கோருவது. இராணுவம் தேவையில்லை என அனுப்பிவிட்டால், இங்கு ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால், அதற்கு யார் பொறுப்பெடுப்பது. ஆகவே, நாட்டில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால் மிகப்பெருமளவு குருதிகள் கொட்டப்பட்டுள்ளன. ஆகவே, கடந்தகால யுத்த அனுபவங்கள் அல்லது ஓர் இறப்பின் வலியைத் தெரிந்துகொண்ட தமிழர்கள், தற்போதுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த விடயங்களுக்கு அனுசரணை வழங்கத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். இலங்கை அரசாங்கம், தங்கள் நாட்டின் மீது வெளிநாட்டு தீவிரவாத அச்சுறுத்தலை எந்த காலத்திலும் எதிர்நோக்கி இருக்கவில்லை. அவர்கள், இறுமாப்புடன் இருக்கக் காரணம், விடுதலைப்புலிகளை அழித்தாகிவிட்டது என்பதேயாகும்.  பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றன. ஆகவே வருகின்ற புலனாய்வுத் தவல்களைக் கூட, இவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. அதுவே இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெறக் காரணமாகி இருக்கின்றது. உள்நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் கடல்வழிப் பாதைகள் விமானப் பாதைகள் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது ஒட்டுமொத்தமாக மாற்றமடைந்திருந்தன. அப்போது தீவிரவாதிகளின் ஊடுருவல் மிகக் கடினமானதாகவே இருந்தது”என்பதான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவற்றை வைத்து தமிழ் அரசியல்வாதிகளின் கருத்தை நோக்குகின்றபோது, இராணுவப் பிரசன்னம் என்பது, வடக்கு, கிழக்கில் இருக்கவேண்டும் என்பதான நிலைப்பாட்டையே ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .