2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாத பதவிச் சண்டை

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 நவம்பர் 14 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வாரங்களுக்குள், இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்நாட்டு ஊடகவியலாளர்களைப் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டார்.   

அவர், ஒக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தார்; நவம்பர் ஒன்பதாம் திகதி, திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.   

இந்த இரண்டு சந்தர்ப்பங்களின் போதும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்கான பத்திரிகைகள் ஏறத்தாளத் தயாரித்து முடிக்கப்பட்டு இருந்தன. பிரதமர் மாற்றம், நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான தகவல்கள், பத்திரிகை நிறுவனங்களை வந்தடையும் போது, பத்திரிகைகள் அச்சுக்கு அனுப்பப்படும் நிலையில் இருந்தன.   

எனவே, ஊடகவியலாளர்கள், அவசரஅவசரமாகச் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்து, பத்திரிகைகளை வெளியிட்டனர். ஆனால், சில பத்திரிகைகளுக்கு, முன்பக்கத்தை மாற்றுவதற்கு மட்டுமே நேரம் இருந்தது.   

எனவே, பல பத்திரிகைகளில் ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் வெளியாகின. ஏனெனில், சில செய்திகள், ஜனாதிபதியின் அவசர நடவடிக்கைக்கு முன்னரான நிலைமைக்கு ஏற்ப எழுதப்பட்டவை; மற்றையவை, பிந்திய நிலைமைக்கேற்ப எழுதப்பட்டவை.  

இந்த இரண்டு நடவடிக்கைகள் மூலமும், ஜனாதிபதி நாட்டைப் பெரும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளார். இதன் காரணமாக, நாட்டில் குழப்பங்கள் ஏற்படுமோ என்ற சந்தேகமும் பரவியிருக்கிறது.   

ஜனாதிபதி மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதைப் போலவே, நாடாளுமன்றத்தைக் கலைத்தமையும் சட்டபூர்வமானதா என்பதைப் பற்றிய தெளிவு, சாதாரண மக்களுக்கு இல்லை.  

போதாக்குறைக்கு, அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் கட்சி ரீதியாகப் பிரிந்து, அவரவரது சொந்த நலன்களை மய்யமாக வைத்து, சட்ட விளக்கமளித்து, மக்களை மென்மேலும் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.   

நடுநிலையாக இந்த விடயத்தைப் பார்க்கும் ஓர் அரசியல்வாதியையோ, சட்டத்தரணியையோ காண முடியாமல் இருக்கிறது.  

நாடாளுமன்றத்தைக் கலைப்பதைப் பற்றி, அரசமைப்பில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.   

அதேவேளை, 70ஆவது வாசகத்தில், ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ‘ஆனால்’ நாடாளுமன்றத்தின் முதற் கூட்டத்திலிருந்து, நாலரை வருடங்கள் பூர்த்தியாகும் வரை, அதைக் கலைக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மைத்திரி, நாடாளுமன்றத்தைக் கலைத்ததை ஆதரிக்கும் மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் ஆதரவானவர்கள், 70ஆவது வாசகத்தில் மேற்படி பகுதியைப் பற்றிக் குறிப்பிடாமல், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் இருக்கிறது என்ற வாசகங்களை மட்டும் சுட்டிக் காட்டுகின்றனர். அவர்களுக்கு எதிரானவர்கள், அந்த வாசகங்களோடு, 70ஆவது வாசகத்தின் மேற்படி பகுதியையும் குறிப்பிடுகிறார்கள்.   

குறிப்பிட்டதொரு விடயத்தைப் பற்றி, அரசமைப்பில் பல வாசகங்கள் இருக்கும் போது, அவற்றில் ஒன்றையோ, இரண்டையோ பிரித்து எடுத்து, அதற்கு விளக்கமளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட விடயத்தோடு தொடர்புள்ள, சகல வாசகங்களையும் கருத்தில் கொண்டே, அந்த விடயத்தைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.  

எனவே, இரண்டு விதமான வாசகங்களையும் மொத்தமாக எடுத்துப் பார்க்கும் போது, ‘கலைக்க முடியும்; ஆனால், நாலரை வருடங்களுக்குப் பின்னரே, அவ்வாறு செய்ய முடியும்’ என்றே விளங்குகிறது.   

எவ்வாறாயினும், இது அரசமைப்புக்கான வரைவிலக்கணம் தொடர்பான பிரச்சினை என்பதால், இதை இறுதியாக, உயர் நீதிமன்றமே தீர்த்து வைக்க வேண்டும்.   

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான நாலரை ஆண்டுத் தடையைப் புறக்கணிக்க முடியும் என்றால், இனி ஜனாதிபதிகளுக்கு எந்த நேரத்திலும் எந்தவோர் அரசாங்கத்தையும் கலைக்க முடியும். தேர்தலில்த் தெரிவான புதிய நாடாளுமன்றம், கூடிய உடனேயும் அதைக் கலைக்கவும் முடியும் என்று, ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.   

அந்த நாலரை ஆண்டு காலத் தடையை ஏற்பதாக இருந்தால், இம்முறை ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என்றாகிறது. அவ்வாறாயின், மீண்டும் மஹிந்த, நாடாளுமன்றத்தில் அவரது பெரும்பான்மை பலத்தை, நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு இரு தரப்பினரும் வாதிடுகின்றனர்.  

இந்த விடயம் தொடர்பாக, திங்கட்கிழமை (12) உயர்நீதிமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட சில அமைப்புகளே இவற்றைத் தாக்கல் செய்துள்ளன.  

19ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி செய்த ஒரு காரியத்தை எதிர்த்து, வழக்குத் தாக்கல் செய்யச் சட்டத்தில் இடமிருக்கவில்லை. ஜனாதிபதி செய்த ஒரு காரியம், சட்ட விரோதமாக இருந்தாலும், அப்போது எவரும் எதையும் செய்ய முடியாமல் இருந்தது.   

ஆனால், ஜனாதிபதி செய்த ஒரு காரியம், சட்ட விரோதமாக இருப்பின், அது தொடர்பாக, ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் உத்தியோகபூர்வ சட்டத்தரணியான சட்ட மா அதிபருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய முடியும் என, 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் கூறுகிறது. அந்த அடிப்படையிலேயே இந்த 13 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   

நீண்ட காலமாகவே, நாட்டில் ஒரு நிலையான அரசாங்கம் இல்லாததைப் போன்ற நிலைமையொன்றே காணப்பட்டது. ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் பல முடிவுகளை, ஜனாதிபதி, தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பாவித்து இரத்துச் செய்துள்ளார்.   

அரசாங்கம், ஜனாதிபதியைப் புறக்கணித்து, பல முடிவுகளை எடுத்துள்ளது. இறுதியில், ஜனாதிபதியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, அரசாங்கத்திலிருந்து விலகியதை அடுத்து, பிரதமர் ரணிலின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.   

அதற்கு ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியிலிருந்த ரணிலை நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, அப்பதவியில் அமர்த்தினார்.   

ஆனால், மஹிந்தவுக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கவில்லை. எனவே அவருக்கு, ஆளும் கட்சியிலிருந்து எம்.பிக்களை விலைக்கு வாங்கவோ, வேறு வழியில் மடக்கிப் பிடிக்கவோ வசதியாக, ஜனாதிபதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நவம்பர் 14ஆம் திகதி, நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என, ஜனாதிபதி அறிவித்தார்.   

இந்த நிலையில், மஹிந்த அணியினர் சில எம்.பிக்களை விலைக்கு வாங்கியோ, வேறு வழியிலோ தம் பக்கம் வளைத்துக் கொண்ட போதிலும், 14ஆம் திகதியாவது, அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய நிலை இருக்கவில்லை.  

 ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் நான்கு உறுப்பினர்கள், மஹிந்த அணியின் பக்கம் தாவப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.   

இந்த நிலையில், அவ்விரு கட்சிகளினது தலைவர்களும், தமது உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, ‘உம்ரா’ தல யாத்திரைக்காக மக்காவுக்குச் சென்றனர். மஹிந்த அணியினரின் நெருக்குவாரங்களில் இருந்து, தமது உறுப்பினர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்கள், தமது எம்.பிக்களுடன் தல யாத்திரைக்குச் சென்றுள்ளனர் என்பது, தெளிவான விடயம்.   

அது, வெறும் சமயக் கிரியையாக இருந்தால், நெருக்குவாரத்துக்கு உள்ளாகியிருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமே, இந்தப் பயணத்தில் ஏன் ஈடுபட வேண்டும்? இந்த நெருக்கடியான நேரத்திலேயே, அவர்கள் அப்பயணத்தில் ஏன் ஈடுபட வேண்டும்?   

இதுவும், இப்போது முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக, ‘உம்ரா’ செய்தால், அந்த ‘உம்ரா’வை இறைவன் ஏற்பானா? குறிப்பாகப் பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் கட்சி தாவ இருந்து, பலாத்காரமாக இழுத்துச் செல்லப்பட்டவர்களின் ‘உம்ரா’வை, இறைவன் ஏற்பானா என்று சிலர் கேட்கின்றனர்.   

அதேவேளை, எப்படியோ நாட்டைவிட்டு வெளியேறி, சில நாள்கள் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து, உல்லாசப் பிரயாணம் செய்யாமல், நன்மையான காரியத்தைச் செய்ததில் தவறென்ன என்று, வேறு சிலர் கேட்கின்றனர்.   

மஹிந்த அணியை ஆதரிக்கும் அளவுக்குப் பொதுவாக, முஸ்லிம் சமூகம் இன்னமும் மாறவில்லை. அந்த நிலையிலும் சொந்த நலனுக்காக, முஸ்லிம்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக் கொடுக்க, ஒரு சிலர் தயாராகவே இருக்கிறார்கள் என்பதையே இந்த விவகாரம் காட்டுகிறது.   

மஹிந்த அணிக்குப் பெரும்பான்மையைக் காட்ட முடியாத நிலை ஏற்படவே, அவ்வாறு பெரும்பான்மையைக் காட்டத் தேவையில்லை என அவர்கள் வாதிட ஆரம்பித்தனர்.  
 ஆனால், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அதற்கு எதிரான கருத்து வலுப்பெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கடந்த ஒன்பதாம் திகதி, ஐரோப்பிய ஒன்றியமும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது. இந்த நிலையிலேயே அன்றே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.   

கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, 14ஆம் திகதி, இரத்தக்களரி ஏற்பட இருந்ததாகவும் மக்கள் பிரதிநிதிகள் 500 மில்லியன் ரூபாய்க்கு விலைபோகும் நிலை உருவாகியதாகவும் அதன் காரணமாகவே, தாம் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிலை உருவாகியது என்றும் கூறினார்.   

அது உண்மையாக இருந்தால், அந்த நிலையை உருவாக்கியவரும் அவரே. அவர்தான், பெரும்பான்மை ஆதரவு இல்லாத ஒருவரைப் பிரதமராக நியமித்தார். அதன் மூலம், நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்படும் நிலையை உருவாக்கினார். அவர்தான், அந்தப் பிரதமர் ஏனைய கட்சிகளிலிருந்து எம்.பிக்களை விலைக்கு வாங்கும் வகையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைத்தார்.  

உண்மையிலேயே, கடந்த ஒக்டோபர் மாதத்துக்கு முன்னரே, நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாக நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நிலைமையொன்று உருவாகியிருந்தது.   
ஆளும் கட்சி பிளவுபட்டு, நாடு முன்னோக்கிச் செல்ல முடியாத நிலை உருவாகியிருந்தது. அத்தோடு ஒக்டோபர் 26ஆம் திகதி, ஐ.ம.சு.மு அரசாங்கத்திலிருந்து விலகியதை அடுத்து, ஐ.தே.கவுக்கோ ஐ.ம.சுமுவுக்கோ வேறு எந்தவொரு கட்சிக்கோ, தனியாகவோ, கூட்டாகவோ அரசாங்கத்தை நிறுவ முடியாத நிலை உருவாகியிருந்தது.  

அந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாகப் பொதுத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதே, பொருத்தமான செயலாக இருந்தது.   

ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பது, சட்டபூர்வமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்துக்கு நாலரை ஆண்டுகள் பூர்த்தியாகும் வரை, அதைக் கலைக்க முடியாது என அரசமைப்புக் கூறுகிறது.  

 இந்தநிலையில், அதைக் கலைத்தமை சட்டபூர்வமானதா என்பதே, தற்போதுள்ள பிரச்சினையாக உள்ளது. இவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு, ஜனாதிபதிக்குச் சட்டத்தில் அதற்கு இடமும் இல்லாவிட்டால், சட்டப்படி ஒரு மாற்று வழி இருந்தது.   

அதாவது, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடிக் கலந்துரையாடி, நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று, நாடாளுமன்றத்திலேயே பிரேரணையொன்றை, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றி, அதை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறானதொரு பிரேரணையின் மூலம், நாடாளுமன்றமே ஜனாதிபதியிடம், நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரும் பட்சத்தில், அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.  

நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிலை உருவாகியிருந்த போதிலும், இவ்வாறு பிரேரணையொன்றை நிறைவேற்ற, இந்நாட்டு அரசியல்வாதிகள் முன்வருவார்களா என்பது சந்தேகமே.   

குறிப்பாக, அடுத்த பொதுத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில் உள்ள கட்சிகள், அதை விரும்புமா என்பது சந்தேகமே. அதற்காக, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை, நாம் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் முடியாது.   

ஏனெனில், எந்த நடவடிக்கையும் சட்டப் படியே நடைபெற வேண்டும். நிர்ப்பந்தம் இருக்கிறதே என்பதற்காக, சட்டத்தை மீறுவதை நியாயப்படுத்தினால் நாளை, போலிக் காரணங்களைக் காட்டியும் ஒருவர் சட்டத்தை மீறலாம்.   

நாட்டில் நடப்பது அரசியல்வாதிகளின் பதவிச் சண்டையேயாகும். அதில் மக்கள் நலன் சற்றேனும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதை, மக்கள் அறியவில்லை என்பதே, கவலைக்குரிய விடயமாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .