2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மணலாற்று வன்முறைகள்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜூலை 23 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 153) 

யார் பொறுப்பு? 

அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது, எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அந்தப் படுகொலை, எந்தத் தரப்பால் நிகழ்த்தப்பட்டாலும், அது கொடூரமானது; கண்டிக்கப்பட வேண்டியது.  

1984 நவம்பர் மாத இறுதியில், மணலாற்றில் ‘கென்ட்’, ‘டொலர்’ பண்ணைகளில், விடுதலைப் புலிகள் அமைப்பால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது அரசாங்கம், அரச படைகளைத் தாண்டி, விடுதலைப் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது, நடாத்தப்பட்ட முதல் தாக்குதலாகக் கருதப்படுகிறது.   

இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘பயங்கரவாதிகள்’ என்ற அரசாங்கத்தின் பிரசாரத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.   

இது பற்றி, அப்போது இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வினவப்பட்டபோது, அவர் இதற்குச் சற்றே வேறுபட்ட வியாக்கியானம் ஒன்றைக் கொடுத்திருந்தார். போர் புரியாதவர்களைக் கொல்வதை தான் எதிர்ப்பதாகச் சொன்ன பிரபாகரன், ஆனால், அங்கு கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் அல்ல; மாறாகத் தமிழர் தாயகத்தைச் சிங்கள மயப்படுத்தும் இராணுவத்தின் திட்டத்துக்கேற்ப, திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட குற்றவாளிகள். 

அத்தோடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்று போராளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு பெண் மட்டும் மரணித்ததாக ஒத்துக் கொண்ட பிரபாகரன், தன்னுடைய கணவரை விட்டுப்பிரியாது நின்றதால், குறித்த கட்டடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் அவர் மரணித்ததாகத் தெரிவித்தார்.   

அரசாங்கத்தின் குறித்த திட்டமிட்ட குடியேற்றம் என்பது, திறந்த சிறைச்சாலைத் திட்டமாக உருவாக்கப்பட்டு, குற்றவாளிகள்தான் அங்கு, அவர்களது குடும்பத்தினருடன் குடியேற்றப்பட்டிருந்தார்கள்.   

ஆயினும், போரியல் பொருள்கோடலில், இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் சிவிலியன்கள்தான்; அவர்கள் அரச படைகளோ, போராளிகளோ அல்ல; ஆகவே, குறித்த வியாக்கியானத்தின் வலுத்தன்மை, இங்கு அர்த்தமற்றதாகிறது.   

மறுபுறத்தில், அரசாங்கம் தன்னை முழுமையாக, இந்தத் துயரச் சம்பவத்தின் பொறுப்பிலிருந்து, விடுவித்துக்கொள்ளவும் முடியாது. தேசிய கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த வண.பிதா செலஸ்டைன் பெனான்டோ, குறித்த மணலாற்றுச் சம்பவமானது, அரசாங்கத்தின் தேவையற்ற ஆத்திரமூட்டலின் விளைவாக ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததாக மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு பதிவு செய்கிறது.   

ஏலவே, தமிழ் வணிகர்கள் 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்த பண்ணை நிலத்தை, அந்தக் குத்தகையை இரத்துச் செய்து, அரசாங்கம் மீளக் கைப்பற்றி, அங்கு ஏலவே, 1977 கலவரத்தின் விளைவாக, மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து குடியேறியிருந்த தமிழர்களை அங்கிருந்து விரட்டியடித்து, அந்த இடத்தில், தெற்கிலிருந்து சிங்களக் குற்றவாளிகளைக் கொண்டு வந்து, திறந்தவௌிச் சிறைச்சாலையொன்றை நிறுவ வேண்டிய அவசியம் ஏன் வந்தது?   

அதுவும் 1950களிலிருந்து தமிழர் தாயகத்தின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் வகையில், அரசாங்கம் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தக்கூடாது என்று தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் போது, அதை மீறி இதைச் செய்ததானது, அரசாங்கத்தின் அலட்சியத்தை மட்டுமல்ல, தமிழ்மக்களை ஆத்திரமூட்டும் செயலையும் சுட்டி நிற்கிறது.  

 குறித்த சம்பவத்தின் உயிர்ப்பலிகள், சௌமியமூர்த்தி தொண்டமானைக் கவலை கொள்ளச் செய்திருந்தாலும், “தமிழ் மக்களுக்கும் தன்மானம், சுயகௌரவம், தமது மொழி, மதம், அடையாளம் மீதான பற்று உண்டென்பதை உணராத சிங்களத் தலைவர்களுக்கு, இது மிகச் சிறந்த பாடம். அரசாங்கம் தமது கையில் இருப்பதால், தாம் பலம் மிக்கவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், அவர்களை விடப் பலமான சக்திகள் உண்டு” என அவர் குறிப்பிட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.  

அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்கள், இந்த இரண்டு பண்ணை நிலங்களில் மட்டுமல்ல; முல்லைத்தீவின் ஒதியமலை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், அலம்பில், நாயாறு, குமுழமுனை, திருகோணமலையில் அமரவயல், தென்னமரவடி உள்ளிட்ட கிராமங்களிலும் இடம்பெற்றன.   

இங்கு காலம்காலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை, உடனடியாக வௌியேறுமாறு இராணுவம் அறிவித்தது. 

அரசாங்கங்கள் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, குறிப்பாக, காடு வெட்டிப் புதிய கழனி பெருக்கும் திட்டங்களாக அவை அமையும் போது, அதற்கு முன் காடாக இருந்த நிலத்தை, அபிவிருத்தி செய்வதற்காக அங்கு நிலம், வீடு, விவசாய வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அங்கு மக்களைக் குடியேற்றுவதில் நியாயமுண்டு.   

இன்று வடக்கில் குறிப்பிடத்தக்க நகராக வளர்ந்திருக்கும் கிளிநொச்சி கூட, 1930களில் இவ்வாறு அரச குடியேற்றமாகக் காடு வெட்டி, கழனி செய்த திட்டத்தின் ஒரு பகுதிதான். 

ஆனால், இத்தகைய திட்டங்கள், தமது நோக்கமாக அபிவிருத்தி, அண்மித்த பெருநகரங்களின் சனநெருக்கடியைக் குறைத்தலைக் கொண்டிருக்கும். 

இதுபோன்ற அபிவிருத்தி திட்டங்களின் போதுகூட, குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைக் கருத்திற்கொள்வது அவசியம். ஆனால், மணலாறு உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்றது அபிவிருத்திசார் குடியேற்றமோ, காடு வெட்டிக் கழனி பெருக்கும் குடியேற்றமோ அல்ல;  மாறாக, அங்கு காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களை, அரசாங்கம் இராணுவக் கரம் கொண்டு விரட்டியடித்துவிட்டு, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றி, குறித்த நிலப்பரப்பின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் திட்டமிட்ட செயல். 

இதைத்தான், அரசாங்கத்தின் தேவையற்ற கோபமூட்டும் செயல் என்று வண.பிதா செலஸ்டைன் பெனான்டோ குறிப்பிட்டிருந்தார். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரதேசங்களில், அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள், அங்கிருந்து வௌியேறத் தொடங்கியதாக ‘மணலாறு’ என்ற தன்னுடைய நூலில், விஜயரட்ணம் பதிவு செய்கிறார்.   

தொடர்ந்த வன்முறையும் பதிலடியும்  

கென்ட், டொலர் பாம் தாக்குதலைத் தொடர்ந்து, 1984 டிசெம்பர் முதலாம் திகதி இரவு நாயாறு, கொக்கிளாய் மீனவக் கிராமங்கள் மீது விடுதலைப் புலிகள் அமைப்பால் தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டது.   

நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்கள் இங்கு அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்தன என்றும், இந்தத் தாக்குதலில், இரண்டு மீனவக் குடியேற்றங்களைச் சேர்ந்த, 59 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.   

அடுத்தடுத்து இரண்டு நாள்களில் பொதுமக்கள் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் முன்னெடுத்திருந்தமை, அரசாங்கத்தையும் வடக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்ததுடன், வடக்கில் குடியேற்றப்பட்ட மக்கள் அங்கிருந்து உடனடியாக வௌியேறத் தொடங்கினார்கள். 

வன்முறை வழி நீதியின் அடிப்படை

 ஹுப்ரூ வேதாகமத்துக்கும் முந்தைய ஹமுராபிச் சட்டக் காலத்திலிருந்தே, ‘பல்லுக்குப் பல்’ என்பதுதான் நடைமுறையிலிருந்து வந்தது. இதை இலத்தீனில் ‘லெக்ஸ் ரலியொனிஸ்’ (lex talionis) பதிலடிச் சட்டம் என்பார்கள்.   

அதாவது, சட்ட ரீதியாக ஏற்புடைய பதிலடி. ஆனால், ‘பல்லுக்குப் பல்’, ‘கண்ணுக்குக் கண்’ என்று பேச்சுவழக்கில் வழங்கி வந்தாலும், அதன் விரிவாக்கம் ‘ஒரு பல்லுக்கு ஒரு பல்’, ‘ஒரு கண்ணுக்கு ஒரு கண்’ என்பதாகும். இது, பதிலடியானது சமவிகிதத்தில் அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஆனால், ஹமுராபிச் சட்டத்தைக் கொண்டிருந்த மெசப்பத்தேமிய நாகரிகத்திலிருந்து, மனிதன் பலதூரம் முன்னகர்ந்து, ‘கண்ணுக்குக் கண்’ என்பது குருடான உலகத்தை உருவாக்கிவிடும் என்ற நிலையை அடைந்தான்.   

அதன் விளைவுதான், மனித உரிமைகள் சாசனம் முதல், ஜெனீவா ஒப்பந்தங்கள் வரை மனிதத்தை முன்னிறுத்தும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆனாலும், அவ்வப்போது முற்காலத்தயப் போக்குகள் (primitive tendencies) மனிதனுக்குள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.  

மணலாற்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு, நடந்தியிருந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்து சிங்கள மக்கள் வௌியேறுவதைத் தடுக்க, மணலாறு பகுதியிலிருந்து, தமிழ் மக்களை வௌியேற்றும் கைங்கரியத்தை, அரசாங்க படைகள் முன்னெடுத்ததாகத் தன்னுடைய நூலில் விஜயரட்ணம் குறிப்பிடுகிறார்.   

மேலும், 1984 டிசெம்பர் இரண்டாம் திகதி, பதவியா இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவில் அமைந்திருந்த ஒதியமலை என்ற தமிழ்க் கிராமத்துக்குள்  அதிகாலையில் நுழைந்த ஏறத்தாழ 30 இராணுவத்தினர், வீடுகளுக்குள் சென்று, ஆண்களை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிட்டிருக்கிறது.   

இந்தத் தாக்குதலில் ஏறத்தாழ 27 இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். மேலும், மூன்றாம் திகதி மணலாற்றில் புகுந்த இராணுவம், திறந்த துப்பாக்கிச் சூடு, வீடுகளுக்கு எரியூட்டுதல் என்பவற்றை நடத்தி, அங்கு வாழ்ந்துவந்த தமிழ் மக்களை, அங்கிருந்து வௌியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். தொடர்ந்து, முல்லைத்தீவு, திருகோணமலையின் பல கிராமங்களிலுமிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவங்களும் வன்முறைகளும் டிசெம்பர் மாதம் முழுவதும் தொடர்ந்தன. தாக்குதல் நடத்தும் தரப்பு எதுவாக இருப்பினும், பெரும் பாதிப்பைச் சந்திக்கும் தரப்பு, அப்பாவிப் பொதுமக்களாகவே இருப்பதுதான் யுத்தத்தின் பெருங்கோரம். 

காலங்காலமாகத் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த கிராமங்களிலிருந்து, அரசாங்கத்தின் வன்முறைக்கரம் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.  

 1984 டிசெம்பரில் உச்சத்தையடைந்த விரட்டியடிப்பின் விளைவாக, சில காலத்திலேயே கொக்கிளாய், கருணாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, அண்டங்குளம், கணுக்கேணி, உதயனார்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து மக்கள் முற்றாக வௌியேற்றப்பட்டிருந்தார்கள்.   

ஒதியமலை, பெரியகுளம், தண்டுவான், குமுழாமுனை, தண்ணியூற்று, முள்ளிவயல், செம்மலை, தண்ணிமுறிப்பு, அலம்பில் ஆகிய பகுதிகளில் பெருமளவு மக்கள் வௌியேறியிருந்தார்கள்.  

குடியேற்றங்களைக் கைவிடாத அரசு  

மணலாற்றில் நடந்த தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்திருந்த இலங்கை அரசாங்கம், அப்பகுதியில் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தொடர்வதில் உறுதியாக இருந்தது. ஆகவே, குறித்த பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக, மணலாற்று குடியேற்றங்களில் இராணுவ காவலரண்களை அமைக்கவும், மேலும், அங்குள்ள குடியேற்றவாசிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கவும் அரசாங்கத்தின் பாதுகாப்புச் சபை தீர்மானித்திருந்தது.  

மணலாறு என்ற தமிழர் பிரதேசம் வெலிஓய (வெலி-மணல், ஓய-ஆறு) ஆன கதை இதுதான். கென்ட் பாமுக்கு அருகில், இலங்கை இராணுவத்தின் வெலிஓய முகாம் ஸ்தாபிக்கப்பட்டது. கென்ட் பாம், ‘கல்யாணிபுர’ ஆனது.   

இந்த வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் மத்தியில்தான் சர்வகட்சி மாநாட்டில், அரசாங்கக் கட்டமைப்பு தொடர்பிலான சட்டமூல வரைவு  சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 14ஆம் திகதி சமர்ப்பிப்பதாக இருந்த இந்த முன்மொழிவை, அவர் டிசெம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார்.   

அதன்படி, டிசெம்பர் 14ஆம் திகதி கூடிய சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆரால் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவை சமர்ப்பித்திருந்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X