2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மனிதனுக்கும் யானைக்கும் உச்சமடையும் போர்

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன் 

‘யானைப் பசிக்கு சோளப்பொரி’ என்பது பழமொழியாக இருந்தாலும், இன்று மனிதனின் பசி தீர்க்கும் வாழ்வாதாரத் தொழில்களைக் காட்டு யானைகள் அழித்து வருவது ஏற்புடையதாக இல்லை.  

அன்றாடம் யானையின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் விவசாய நிலங்களும் வீடுகளும் குடிசைகளும் இலங்கைத் தீவுக்குள் எங்கோ ஒரு பிரதேசத்தில் நடந்துகொண்டேதான் இருக்கின்றது.   

யானை எதிர் மனிதன் மோதல் என்ற இவ்வாறான நிலை ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய முற்படுதல், வடக்கிலும் கிழக்கிலும் யானைகளின் தாக்குதல்களுக்கும் மிரட்டல்களுக்கும் உட்படும் கிராமங்களைப் பொறுத்தளவில் தேவையானதொரு விடயமாகவே உள்ளது.   

குறிப்பாக, வவுனியா உட்பட்ட வனம் சார்ந்த பிரசேங்களில் யானைகளின் தாக்குதல் தினம்தோறும் இடம்பெற்று வருகிறது. இதனால் வறுமையின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு மீளவும் எழுந்திருக்க முடியாத இழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.   

வவுனியா வடக்கு மற்றும் செட்டிகுளம் போன்ற பிரசேதங்களில் யானைகளின் தாக்குதல்கள் தொடர்பில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களும் அன்றாடம் உரியஅதிகாரிகள் உட்பட அரசியல்வாதிகளிடம் முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தே வருகின்றனர்.  

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் யானைகளின் அட்டகாசம் இருப்பதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருவதுடன், பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களிலும் விவசாய அமைப்புகளினால் தமது பயிர் மற்றும் உயிர்ப் பாதுகாப்பைக் கோரிய முன்வைப்புகளும் செய்யப்பட்டே வருகின்றன.  

 எனினும், இதற்கான சாத்தியப்பாடான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது.  

வடக்கு, கிழக்கில் யுத்தம் நிலவிய காலப்பகுதிகளில் மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்ததன் பின்னரான காலப்பகுதியில் மக்களின் வாழ்விடங்கள் அதிகளவில் பற்றைக்காடுகளாக வனத்துடன் சேர்ந்த பகுதிகளாகவே மாறின. இந்தச் சூழ்நிலையில் பற்றைக்காடுகளுக்குள் யானைகள் ஆக்கிரமித்துக்கொண்டன.  

யுத்தத்துக்குப் பின்னர் மக்கள் மீள்குடியேறத் தொடங்கியபோது, அங்கு யானைகளின் அச்சுறுத்தல்களை மக்கள் எதிர்கொள்ளும் நிலை உருவாகின. மீள்குடியேறிய மக்களின் வீடுகள், சேனைப்பயிர்கள் போன்றவற்றை அங்கு வழமையாக வந்துபோகும் யானைகள் சேதப்படுத்தின. இதன்போது, யானைகளுடன் மனிதன் முரண்படும் நிலைமைகள் தோன்றின.  

காடு என்பது, வேலியிடப்பட்ட மிருகக்காட்சி சாலை அல்ல; அங்கே காட்டுவாழ் உயிர்களைக் கட்டளையிட்டுத் தடுத்து நிறுத்த முடியாது.  

 நமது காடுகளின் பரப்பளவு, ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டேபோகிறது. உணவுக்காகவும் நீருக்காகவும் காட்டு விலங்குகள் அல்லல்படுகின்றன. குறிப்பாக, வில்பத்து போன்ற பல காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு காட்டு ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அழிப்பது, வெறும் காடுகளை மட்டும் அல்ல; யானைகளின் வாழ்விடங்களையும் வலசைப்பாதைகளையும் வழித்தடங்களையும் தான்.   

யானைகளின் வலசைப்பாதைகள் என்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக யானைகளின் ஞாபக அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மரபார்ந்த நினைவுப்பாதை ஆகும்.   

ஒரு காட்டு யானை, ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 கிலோ உணவையும், 150 லீற்றருக்கும் அதிகமான நீரையும் உள்ளெடுக்கும். இவற்றை ஒரே இடத்தில் இருந்து பெற முடியாது. எனவே, அது காட்டின் பல பகுதிகளுக்கும் நடந்து, கடந்து உணவைத் தேடிக்கொள்ளும்.   

அப்படி ஒரு வாழ்விடத்தில் இருந்து, இன்னொரு வாழ்விடத்துக்குச் செல்லும் இந்தப் பாதை, யானைகளின் வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இந்த மரபுவழிப் பாதைகளை யானைகள் தலைமுறை தலைமுறையாக மறப்பதே இல்லை.   

வவுனியாச் சம்பவம்  

காடுகள் அழிக்கப்படும் செயற்பாடுகளாலும், காலநிலை மாற்றங்களாலும் யானைகள் தமது உணவு, நீர் என்பவற்றைப் பெற அலையும் போது, மனிதர்களின் வசிப்பிடம் நோக்கி வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் மனிதனின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிணறு, குழிகளில் விழுந்து மாட்டிக்கொள்கின்றன. இவ்வாறு சிக்குகின்ற யானைகளை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் பொலிஸாரும் ஊர் மக்களின் உதவியுடன் மீட்டு, மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்கின்றார்கள்.   

பல்வேறு சந்தர்ப்பங்களில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் வருகைக்கு முன்னராகவே யானைகள் மக்களின் வாழ்விடங்கள் உட்படப் பயன்தரு பயிர்கள், மரங்களைத் துவம்சம் செய்து விடுகின்றன.  

இவ்வாறான சம்பவங்கள் அண்மையில் வவுனியா, செட்டிகுளத்திலும் பன்றிக்கெய்தகுளம் பகுதியிலும் இடம்பெற்றன. அத்துடன், செட்டிகுளத்தில் இருவர் பலியாகியும் உள்ளனர்.  

மனிதன் - யானை மோதல்கள்  

1997ஆம் ஆண்டில் 126 காட்டு யானைகள் கொல்லப்பட்டன. அதாவது, ஒரு வாரத்துக்குச் சராசரியாக இரண்டு முதல் மூன்று யானைகள் கொல்லப்பட்டுள்ளன. தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வருடந்தோறும் ஆறு சதவீதமான காட்டு வாழ் உயிரினங்கள் அழிவுக்குள்ளாகின்றன.   

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்குக் குறையாத யானைகள், மனிதர்களால் கொல்லப்படுவதாக பத்தாண்டுகளுக்கு முன்னரான கணக்கெடுப்பொன்று கூறுகின்றது. ஆனால், பின்னரான காலப்பகுதிகளில் அந்தக் கணக்கு இன்னும் அதிகமானது.   

2010ஆம் ஆண்டு 227 யானைகளும் 2011ஆம் ஆண்டு மட்டும் 255 யானைகளும் மனிதர்களால் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2011ஆம் ஆண்டு யானைகளால் 48 மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், 2012ஆம் ஆண்டு இந்தத் தொகை இன்னும் அதிகமானது. கிட்டத்தட்ட 300 யானைகள், மனிதர்களால் கொல்லப்பட்டன.   

இலங்கையில் கடந்த 50 வருடங்களில் யானைகளின் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் மட்டும் 1,500 தொடக்கம் 3,000 யானைகள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி 5,879 யானைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

இதன்படி பார்த்தால் 5,000 மனிதர்களுக்கு ஒரு யானை எனும் விகிதத்திலேயே இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் 12 ஆயிரம் தொடக்கம் 14 ஆயிரம் வரையிலான யானைகள் இருந்துள்ளன.  

அநுராதபுரம், புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவில் யானைகள் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. உலகில் கணிசமான நாடுகளில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுகின்றன. ஆனால், இலங்கையில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது என்பது மிகவும் அரிதாகும். எனினும் அண்மையில், கிராம சேவகர்கள் உட்பட்ட சிலர் கொம்பன் யானைகளைக் கொன்றனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் மறுப்பதற்கில்லை.   

துப்பாக்கியால் சுடுதல், விசம் வைத்தல் மற்றும் மின்சாரம் மூலம் யானைகளில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான வழிவகைகளாக கைக்கொள்ளப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் யானைக்குப் பதிலாக, அவற்றில் சிக்கி மனிதர்கள் இறந்ததும் உண்டு.   

1989ஆம் ஆண்டில் சர்வதேச ரீதியில் யானைத் தந்த வியாபாரம் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது. இருந்தும் கடந்த பத்து வருட காலப்பகுதியில் இச்சட்டவிரோத வியாபாரம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் யானைகள் சுமார் 65 சதவீதமானவை அழிவடைந்துள்ளன. 

தேசிய வன ஒதுக்கு பிரதேசங்கள் மற்றும் சிலவேளை தனிப்பட்ட காணிகளிலும் காணப்படுகின்ற வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக 1937 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், முக்கியமாக 2009 ஆம் ஆண்டிலே மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், என்பவற்றின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இச்சட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.   

இலங்கையில் கடந்த 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 5 ஆயிரத்து 879 யானைகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், யானை மனித மோதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 2015 - 2016ஆம் ஆண்டில் மாத்திரம் 844 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறான நிலையில் யானைகளின் பிறப்பு வீதம் இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுவதான தகவல்களும் வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்களின் அடிப்படையில் அறியமுடிகின்றது.  

2012ஆம் ஆண்டு 300 யானைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையிலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் 300 யானைகளுக்கும் குறைவான அளவிலேயே பிறப்பு வீதம் பதியப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.   

யானைகளின் ஆயுட்காலம் சுமார் 70 வருடங்களாகும். பெண் யானையொன்று 09 தொடக்கம் 12 வயதாகும்போது இனப்பெருக்கத்துக்குரிய உடற்தகுதியைப் பெறுகிறது. யானையொன்றின் கர்ப்ப காலம் 22 மாதங்களாகும். பாலூட்டிகளில் நீண்ட கர்ப்ப காலத்தைக் கொண்ட விலங்கு யானை என்றே கூறப்படுகிறது.  
 மேலும், யானைகளுக்கு ஒரு பிரசவ காலத்தில் ஒரு குட்டி மட்டுமே கிடைக்கிறது. ஒன்றுக்கு மேல் கிடைப்பது என்பது மிகமிக அரிதாகும். இவை தவிர, நான்கு வருடங்களுக்கு ஒரு தடவைதான் யானைகள் கருத்தரித்து குட்டியை ஈனும். யானைகளின் இனப்பெருக்கம் குறைந்தளவில் காணப்படுவதற்கு இவையும் காரணங்களாகும்.   

இது இவ்வாறு இருக்கையில், ரயிலில் விபத்துக்குள்ளாகி யானைகள் இறக்கின்றமையும் கவலையான விடயமாகும். குறிப்பாக, வவுனியா பறயநாலங்குளத்தில் அண்மையில் யானையொன்று ரயிலில் மோதி இறந்துள்ளதுடன், அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்துள்ள சம்பவமும் இடம் பெற்றுள்ளது.   

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் வன்னி மண்ணில் குறிப்பாக வவுனியாவில் யானைகளின் தாக்கம் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டன. உள்நாட்டு போர் முடிவடைந்து மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் அதிகளவான யானைத்தாக்கத்துக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர்.  

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை, தென்னிலங்கையில் இருந்து யானைகள், வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, வவுனியா வடக்கு மற்றும் செட்டிகுளம் காட்டுப்பகுதியில் இறக்கி விடப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

தென்பகுதியில் யானை வளர்ப்பவர்கள் யானை வயதாகியவுடன் அல்லது அந்த யானையைப் பராமரிக்க முடியவில்லை போன்ற காரணங்களினால் இப்பகுதியில் கொண்டு வந்து விடுவதாகவும் அந்தப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

இவ்வாறாக யானைகள், காட்டுப்புறங்களை அண்டிய கிராமப்பகுதிகளில் பல தடவைகள் விடப்பட்டுள்ளதைப் பொதுமக்கள் நேரில் பார்த்த சந்தர்ப்பங்களும் உண்டு. பாகனால் பராமரிக்கப்பட்டு காட்டுவாசம் படாமல் நாட்டுக்குள் வாழ்ந்த யானைகள், திடீரென்று தனித்து காட்டுக்குள் விடப்பட்டவுடன், அவை செய்வதறியாது கிராமங்களுக்குள்ளேயே பிரவேசிக்கின்றன.   

 இதனாலும் இப்பகுதிகளில் யானையினால் ஏற்படும் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், மனிதர்களுக்கும் யானைகளுக்குமான நேரடி மோதலை உருவாக்கியுள்ளது.   

இதனைத் தடுப்பதற்கு மின்சார வேலி அமைப்பதே ஒரே வழி என்றும் அப்படிச் செய்தாலே, மனித - யானை மோதலைத் தவிர்க்க முடியும் எனப் பல ஆலோசனைகள் கூறப்படுகின்றன.   

இருந்தபோதிலும், இதுவரை ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் இன்றுவரை மக்கள் யானையுடன் மோதிக்கொண்டே இருக்கின்றனர். எனவே, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களின் பாதுகாப்பான வாழ்வியல் நோக்கிய பயணத்தில் அக்கறை கொண்டு, அவர்களைப் நிம்மதியாக வாழவைப்பதற்கு முன்வரவேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .