2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜூலை 18 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார்.   

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்.  

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறையிலிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.   

ஆனால், பொதுவாகவே பாரியளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் விடயத்திலேயே, அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.   

ஜனாதிபதி கூறுவது சரியென்றால், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்னர், அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது.  

 அதாவது, சிறையில் இருந்துகொண்டே அந்தப் போதைப் பொருள் வியாபாரிகள், தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உதவும் சிறைச்சாலை அதிகாரிகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவதே ஆகும்.   

சிறைக் கைதிகளுக்கு, அவர்கள் விளக்கமறியல்க் கைதிகளாக இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்பட்ட கைதியாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.  

 ஆனால், இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட செல்வந்தர்களும் போதைப்பொருள் தொடர்பாகச் சிறைக்குச் சென்றவர்களும் பாதாள உலகக் குண்டர்களும் சிறைச்சாலைகளில் அலைபேசிகளைப் பாவிப்பது, சாதாரண விடயமாகிவிட்டது.   

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில், சந்தேக நபர்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் அலோசியஸ்,  கசுன் பலிசேன ஆகியோர், படுத்துறங்கும் மெத்தையின் கீழ், ஐந்தாறு அலைபேசிகளை மறைத்து வைத்திருந்தபோது, அவை கைப்பற்றப்பட்டதாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

 ஏனைய கைதிகள், தரையில் வெறும் ‘கன்வஸ்’ பாயை விரித்துப் படுக்கையில், அலோசியஸும் பலிசேனவும் மெத்தையில் படுப்பது, அப்போதுதான் தெரிய வந்தது.   

அதாவது, பணம் இருந்தால், சிறைச்சாலைகளில் பல வசதிகளைப் பெற முடியும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. சிறைச்சாலைகளிலுள்ள போதைப் பொருள் விற்பனையாளர்களும் பணத்தை வீசித்தான், தமது காரியத்தைச் செய்து கொள்கிறார்கள் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.   

இது இவ்வாறு இருக்க, சிறைக்குச் சென்ற பின்னரும், போதைப்பொருள் தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி கூறுகிறார்.   

சிறைச் சாலைகளுக்குள் போதைப் பொருள் செல்வதைத் தடுக்கத் தம்மால் முடியாது என, ஜனாதிபதி முடிவு செய்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது.   

ஏனெனில், போதைப்பொருள், சிறைக்குள் செல்லும் வழிகளை அடைக்க முடியும் என்றால், எவரும் சிறையிலிருக்கும் போதே, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட முடியாமல் போய்விடும். அப்போது, அவ்வாறானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் அவசியமும் ஏற்படாது.   

ஜனாதிபதியின் வாதத்தைப் பாவித்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த கோட்டாபயவாதிகளான சில அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் 2012 ஆம் ஆண்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில், 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முயற்சிப்பதையும் இதற்குள் அவதானிக்க முடிகிறது.   

சிறைச் சாலைகளில் இடம்பெறும் இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காகவே, அன்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அதற்காக இன்று சில அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த, அரசியல்வாதிகளும் பிக்குகளும் வாதிடுகின்றனர்.   

ஆனால், குற்றமிழைத்தாலும் நீதிமன்றத்துக்கன்றி, பொலிஸாருக்கோ இராணுவத்தினருக்கோ, தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை என்பது, அவர்களுக்குத் தெரியாது போலும்.   

உண்மையிலேயே, மரண தண்டனை என்பது, பெரும் சிக்கலான விடயமாகும். அதை நிறைவேற்ற வேண்டுமா, இல்லையா என்பதற்கு, நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிக்க முடியாது.  

 நாட்டுக்கும் சமூகத்துக்கும் தீங்கிழைக்கும் சிலரைத் திருத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை எதிர்க்க முடியாது. 

அதேவேளை, சட்டத்துறையும் நீதித்துறையும் ஊழலில் மூழ்கியிருக்கும் நிலையில், நிரபராதிகள் தண்டிக்கப்படும் அபாயம் இருப்பதால் மரண தண்டனையை ஆதரிக்கவும் முடியாது.   

மரண தண்டனை வழங்குவதன் மூலம், சமூகத்தில் குற்றங்கள் குறையுமா என்ற கேள்வியும் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது.   

மக்களைக் குற்றமிழைக்கத் தூண்டும் வறுமை, கலாசாரச் சீரழிவு, அரசியல்வாதிகளினதும் நாட்டின் தலைவர்களினதும், குற்றங்களுக்கான ஒத்துழைப்புகள் போன்ற சூழ்நிலைமைகள் மாறாதிருக்க, வெறுமனே மரண தண்டனையால் மட்டும், குற்றங்களைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாது.   

சிறுவர் விவகார‍ங்களுக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் பலமாக இருந்த காலத்தில் சமூக ரீதியான குற்றங்கள், இடம் பெறவில்லை என்பதைக் கூற முனைந்ததில், தமது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்தார்.   

புலிகளின் நிர்வாகத்தின் கீழிருந்த பகுதிகளில், குற்றங்கள் குறைய, புலிகளின் மரண தண்டனை உள்ளிட்ட, கடுமையான தண்டனைகளே காரணமாகின  என்பது, சகலரும் அறிந்த விடயமாகும். 

புலிகளும் கல்வியின் மூலம், மக்களின் மனதை மாற்றிக் குற்றங்களைக் குறைத்தார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், அவ்வாறாயின் புலிகள் தோல்வியடைந்த பின்னர், அந்த அறிவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுகிறது.   

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், வறுமை இருந்த போதிலும், தமது இரும்புப் பிடியால், தலைவர்கள் குற்றங்களுக்கு உதவுவது, குற்றவாளிகளைப் பாதுகாப்பது போன்ற ஏனைய நிலைமைகள் தலைதூக்க, புலிகள் இடமளிக்கவில்லை.   

எனவே, அவர்கள் மறைந்த உடன் குற்றச்செயல்கள் தலைதூக்கின. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால், அவ்வாறானதோர் நிலைமையை உருவாக்க முடியாது.   

அண்மையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடபகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கேட்டுக் கொண்டார்.   

மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைவதில்லை என்றால், ஏனைய தண்டனைகள் மூலம் குற்றச் செயல்கள் குறைகின்றனவா என்றும் கேள்வி எழுப்பலாம்.   

அவ்வாறு தொடர்ந்து தர்க்கித்தால், எந்தவொரு தண்டனையும் அர்த்தமற்றது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றனவா, இல்லையா என்பதைக் குற்றமிழைக்க மக்களைத் தூண்டும் அல்லது குற்றங்களுக்குள் மக்களைத் தள்ளிவிடும் சூழ்நிலைமைகளற்ற ஒரு சமூகத்தில் தான், சரியான முறையில் பார்க்கலாம். அவ்வாறானதொரு சமூகம் எங்கே இருக்கிறது?  

மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றன என்று வைத்துக் கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்த அத்தியாவசியமான, ஊழலற்ற பாதுகாப்புத் துறையும் நீதித்துறையும் நாட்டில் இருக்கின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.  

 ஊழல் தொடர்பாக ஆராயும் ‘டிரான்பெரன்ஸி இன்டர்நஷனல் நிறுவனம்’ வருடாந்தம் வெளியிடும் அறிக்கையின் பிரகாரம், கடந்த காலங்களில், இலங்கை பொலிஸ் திணைக்களமும் நீதித்துறையும் கல்வித் துறையும் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தன.   

தென் பகுதியில், கொட்டதெனியாவையில் 2015 ஆம் ஆண்டு சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட போது, பொலிஸார் ‘கொண்டயா’ என்றழைக்கப்படும் நபரொருவரைக் கைது செய்து, அந்தக் குற்றச் செயலை, அவரே செய்ததாக, அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலமொன்றையும் பெற்றிருந்தனர்.   

ஆனால், அதே கொட்டதெனியாவ பொலிஸார், பின்னர் மற்றொருவரைக் கைது செய்து, வழக்குத் தாக்கல் செய்து, ‘கொண்டயா’வை விடுவித்தனர். முன்னர் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், எவ்வாறு பெறப்பட்டது என்பதை, அதன் மூலம் ஊகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.   

அதே ஆண்டு, வடபகுதியில் புங்குடுதீவில், வித்தியா என்னும் மாணவியும் அதேபோல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சிலரைப் பாதுகாக்க, உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் முன்வந்தமை பின்னர் அம்பலமாகியது.   

இப்போதும், வட பகுதியில் போதைப்பொருள் போன்ற குற்றங்களோடு, பொலிஸாருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.   

இதேபோல், அரசியல்வாதிகளின் தேவைக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சிலருக்குச் சாதகமாகவும் பொலிஸார், நடவடிக்கை எடுத்த சம்பவங்கள் உள்ளன.   

தமிழீழ விடுதலை புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த ‘தயா மாஸ்டர்’ அவ்வாறான ஒருவராவர். புலிகளின் சார்பில், ஆயிரக் கணக்கில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு, பல ஊடகவியலாளர் மாநாடுகளை ஏற்பாடு செய்தவர் அவர். ஆயினும், அவருக்குப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறுவதற்கு, ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.   

அண்மையில், இனக் கலவரங்கள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய போன்ற பகுதிகளிலும், அதற்கு முன்னர் இனக் கலவரம் ஏற்பட்ட அளுத்கம, பேருவல, வெலிபன்ன போன்ற பகுதிகளிலும், பொலிஸார் பக்கச் சார்பாகச் செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.   

இவ்வாறு குற்றத்தடுப்பு விடயத்தில், பொலிஸார் எதையும் செய்யக்கூடிய நிலையில் இருக்க, நீதித்துறையும் இப்போது சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.   

அண்மையில், சுகந்திகா பெர்னாண்டோ, நாகாநந்த கொடிதுவக்கு என்ற இரண்டு சட்டத்தரணிகள், பகிரங்க மேடையில் நீதித்துறையில் காணப்படும் பல விடயங்களை அம்பலப்படுத்தினர்.   

குற்றத்தடுப்புத்துறையும் நீதித்துறையும் இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி வரும் நிலையில், மரணதண்டனை நிறைவேற்றப்படும் நிலையும் நாட்டில் இருந்தால், ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.   

ஆயிரம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது பயங்கரமான நிலைமையாகும் எனப் பலர் இதனாலேயே கூறுகின்றனர். 

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வாறிருந்திருக்கும்?  

சில சமயத் தலைவர்களும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவை வரவேற்றுள்ள நிலையில், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதை எதிர்த்துள்ளன.   

சில அரசியல்வாதிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், பலரது எதிர்ப்பில், நேர்மையில்லை என்றே கூற வேண்டும். 

ஏனெனில், இந்த நாட்டில் ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் ஒன்றில், சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டுள்ளன. அல்லது, அவற்றை அங்கிகரித்துள்ளன. அதாவது, சட்ட விரோதமான மரணதண்டனையை, அவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களும் எப்போதாவது அங்கிகரித்துள்ளனர்.   

1970 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால், 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணியினரும், தமது எதிரிகளான சாதாரண மக்களை, எவ்வித சட்டபூர்வமான விசாரணையுமின்றிக் கொலை செய்தனர்.   

கைது செய்யப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேரை, அரச படைகளும் எவ்வித விசாரணையுமின்றிக் கொலை செய்தனர். அப்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சம சமாஜக் கட்சியும் கொம்யூனிஸ்ட் கட்சியுமே பதவியில் இருந்தன.  

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி, 1988-89 ஆண்டுகளில் இடம் பெற்ற போதும், இரு சாராரும் சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டனர். அப்போது, அரச படைகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் மேலெனக் கூறப்படுகிறது.   

மக்கள் விடுதலை முன்னணியினர் கொம்யூனிஸக் கொள்கை கொண்டவர்கள் என்பதால், மேற்கத்திய மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, ‘ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்’ போன்ற அமைப்புகளும் அவற்றைப் பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.   

வடக்கு, கிழக்கு போரின் போது, காணாமல் போனவர்களில் 19,000 பேர் விடயத்தில், பரணகம ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அவ்வாறு காணாமற்போனவர்கள் போர்க்களத்தில் சண்டையில் ஈடுபட்ட போதோ அல்லது போரின் போது இரு சாராருக்கும் இடையில் சிக்கியோ கொல்லப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு நடந்த கதியையும் மதகுருமார்கள் உள்ளிட்ட வடக்கிலும் தெற்கிலும் பலர் வரவேற்றுள்ளனர். அல்லது அங்கிகரித்து நியாயப்படுத்தியுள்ளனர்.   

புலிகளும் மரண தண்டனை விதித்தார்கள். அவற்றைப் பல தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வரவேற்றன; அல்லது அங்கிகரித்தன. எனவே, தாம் விரும்பாதவர்களுக்கு சட்டபூர்வமாகவோ சட்ட விரோதமாகவோ மரண தண்டனை வழங்குவதையே, ஏறத்தாழ சகலரும் விரும்புகின்றனர். அத்தோடு, தாம் விரும்புவோர் அல்லது நேசிப்போர் விடயத்தில், மனித உரிமைகளையும் வலியுறுத்திக் கொள்வர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .