2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மரணதண்டனை: தீர்வில்லாத தீர்வு

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில், நால்வருக்கு மரணதண்டனையை உறுதிசெய்து, ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சி, கொஞ்சமல்ல. ஆனால், இப்படியொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்று எண்ண நியாயமில்லை. அவரது நடத்தை, அதையே காட்டி நிற்கின்றது.   

மரணதண்டனை வழங்குவதற்கு, அடிப்படையாக அமைவது, அந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வும் அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமேயாகும். இலங்கை போன்ற நாடுகளில், சட்டம் ஒழுங்கின் யோக்கியம் எமக்குத் தெரியாததல்ல.   

 பொலிஸார் குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து, அந்தக்க குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து, நீதிமன்றங்களின் முன்பாக நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரும் விதங்களை நாம் அறிவோம்.   

பல்வேறு சந்தர்ப்பங்களில், உண்மையைப் பெறுவதற்கான கருவியாக சித்திரவதையுள்ளது. இலங்கையின் பொலிஸ் நிலையங்களில், சித்திரவதை சர்வவியாபகமான ஒன்றாகியுள்ளது. 

இந்நிலையில், உண்மைகள் எவ்வாறு நிறுவப்படுகின்றன? அவ்வுண்மைகளின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள், எவ்வாறானவை என்பதெல்லாம் ஊகிக்கக் கடினமானவையல்ல.   

மரணதண்டனையானது ஒரு குரூரமான தண்டனை முறை மட்டுமின்றி, எந்த வடிவிலும் திரும்பப் பெறவே முடியாத ஒரு தண்டனையாகும். தண்டனையின் நோக்கம், சீர்படுத்துவதேயன்றி, பழிவாங்கலோ அல்லது வேறெதுவுமாகவும் இருக்க முடியாது.  

 சட்டமானது, ஒருவருக்கு வாழ்வு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டுமேயன்றி, மாறாக, எந்தச் சூழலிலும் ஒருவரது உயிரைப் பறித்தலுக்குத் துணையாக இருக்க முடியாது. எனவே, மரண தண்டனையானது அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானது.   

தூக்குத் தண்டனை, முதலில், ஒரு மனிதன் திருந்தி வாழும், வாய்ப்பைப் பறித்து விடுகிறது.   
இரண்டாவதாக, ஒரு முறை குற்றம் செய்தவன், மீண்டும் அந்தக் குற்றங்களைச் செய்யாமல், குற்றங்களைக் கைவிட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதை, இயலாமலாக்குகிறது.   

மூன்றவதாக, குற்றவாளிகளைச் சட்டத்தின் பாதுகாப்போடு, அரசாங்கமே கொலைதான் செய்கிறது.  

 நான்காவதாக, சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீங்கள் ஒருவரைக் கொலை செய்யும்போது, கொலை செய்தவரின் பழி வாங்கும் உணர்வுகளையே நீங்களும் பங்கு போட்டுக் கொள்கிறீர்கள்.   

ஐந்தாவதாக, உங்களால் திருப்பித் தர முடியாத, உயிரை பறிக்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது. ஆறாவதாக, நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால், நேரில் பார்த்த சாட்சியங்கள் பல சந்தர்ப்பங்களில் சொல்லிக் கொடுத்து, தயார் செய்து பெறப்படும் சாட்சியங்களாகும்.   

இனி, தண்டனைகள் குற்றங்களைக் குறைக்கின்றன என்று வைக்கப்படும் வாதங்களுக்கு வருவோம். 
இன்றும், மோசமான சித்திரவதைத் தண்டனைகளையும் மரணதண்டனைகளையும் நிறைவேற்றும் நாடு சவூதி அரேபியா. அவை பெரும்பாலும் பொதுவெளியில் நிகழ்த்தப்படுபவை.   

கல்லால் எறிதல், சவுக்கடி, கழுத்துவெட்டுதல் என்பன அதில் சில. இவை ஆண்டாண்டு காலமாக அங்கு நடைபெற்று வருகின்றன. தண்டனைகள் குற்றங்களைக் குறைப்பதாயின் சவுதி அரேபியாவில் குற்றங்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.   

மரண தண்டனை பற்றிப் பேசும் பலர், அவதானிக்கத் தவறும் இன்னோர் அம்சம் உண்டு. குற்றமிழைத்தவரைக் கொல்வது ஒருபோதும் பாதிக்கப்பட்டவருக்கான நீதியாகாது. வெறுமனே அது பழிவாங்கும் செயலாகும். உணர்ச்சி மீறலில், ஒருவர் நிகழ்த்திய குற்றத்துக்குத் திட்டமிட்ட கொலை தண்டனையாக முடியாது.   

நாட்டின் சட்டத்தின் ஆட்சி, சரியாக இயங்குமானால், தண்டனைக் காலத்தில், பக்குவப்பட்ட மனிதனாக மாற்றி, மீண்டும் சமூகத்தோடு இணைப்பதற்கு வழி செய்யும். அதுவே நாகரிகமான ஒரு சமூகத்தின் தேவையாகும். 

திருந்துவதற்கும் மறுவாழ்வுக்குமான வாய்ப்பைப் பெற எல்லோருக்குமே உரிமை இருக்கிறது.   
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை என்கிற போது, இது குற்றங்களுக்குத் தனிநபர்களைப் பொறுப்பாக்குவதன் மூலம், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகிறது. இப்பிரச்சினையின் மூலம் என்ன, இதைச் செய்யச் சொன்னவர் யார், ஏன் செய்தார் போன்ற கேள்விகள் கேட்கப்படுவதோ ஆராயப்படுவதோ இல்லை.   

 எந்தவொரு பிரச்சினைக்கும் மரணதண்டனை தீர்வல்ல; சமூகம் ஆழமாக ஆராய வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. அவை ஆராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதைவிடுத்து மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது பிரச்சினைகளுக்கு இலகுவானதும் பொறுப்பற்றதுமான தீர்வை நாடும் செயலே. 

இது குறித்த திறந்த கலந்துரையாடல் இன்றைய அவசியத் தேவையாகிறது. ஏனெனில், முட்டாள்களைத் தெரிவதன் பலன்களை, மக்களே அனுபவிக்க நேருகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .