2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா?

காரை துர்க்கா   / 2020 ஜனவரி 28 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், அவ்வாறானவர்கள் நொண்டிச்சாட்டுகளைக் கூறித் திரிகின்றனர், என தெரிவித்துள்ளார்.   

“மாற்று அணியொன்று தேவையில்லை; மாற்று அணியொன்றை உருவாக்குவதென்பது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதியாகும். அத்துடன், கூட்டமைப்புக்குள் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமூகமாகத்தான் பேசித் தீர்த்துக் கொண்டு வருகின்றோம்.தேர்தல் சம்பந்தமாகக் கூட, சுமூகமான தீர்வுகள் ஏற்பட்டு உள்ளன. எதிலும், எந்தப் பிரச்சினைகளும் இல்லை” எனவும், அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.   
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை” எனச் சுமந்திரன் தெரிவிப்பது போல, அதுவோர் இலகுவான காரியமா, நடக்கக் கூடிய காரியமா?   

நேற்று வரை, ‘நீயா நானா’ என, எலியும் பூனையும் போல இருந்தவர்கள், இன்று முதல் ‘நகமும் தசை’யுமாக இருப்பார்களா? தங்கள் பகையை மறந்து, எங்கள் (தமிழ் மக்களுடைய) பிரச்சினை பற்றிச் சிந்திக்கும் அரசியல் முதிர்ச்சி, எந்தத் தமிழ்த் தலைவரிடம் தற்போது இருக்கின்றது?   

கூட்டமைப்பிலிருந்து பிடுங்குப்பாடுகளோடும் முரண்பாடுகளோடும் வெளியேறியவர்கள்,  வெளியேறியும் உடனடியாவே புதிதாகத் தனிக்கட்சிகள் அமைத்து அரசியல் செய்பவர்கள், இலகுவாக இவற்றையெல்லாம் உதறித் தள்ளி விட்டு, மீண்டும் வருவார்களா? 

சரி! அவ்வாறாக அவர்கள் மீள வந்தாலும், கூட்டமைப்புக்குள் அவர்களினதும் அவர்களது கட்சிகளினதும் வகிபாகம் என்ன?   

அரசியல்வாதிகள் (தலைகள்) அனைவருமே, தலைமை தங்களுக்கே வேண்டும் என, அடிபடுகின்ற இக்காலப் பகுதியில் மீளவருபவர்கள், கூட்டமைப்பின் தலைமை சொல்லுவதை, சிரமேற் கொண்டு செயற்படத் தயாராக இருக்கின்றார்களா?   

“மாற்று அணி உருவாகுவதாக இருந்தால், அது தமிழ் மக்களின் ஒற்றுமையை, மிக மோசமாகப் பிளவுபடுத்துகின்ற ஒரு நோக்கம் ஆகும்” எனவும், சுமந்திரன் தெரிவித்து உள்ளார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகும்.   

ஆனாலும், சிதறும் தமிழ் மக்களின் ஒற்றுமை, சிதையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி என, அனைத்தையும் மறந்தே, தமிழ் மக்களின் மத்தியில் புதிதாகக் கட்சிகளும் அணிகளும் உருவாகி வருகின்றன.   

மறுவளமாக, புதிதாகக் கட்சிகள் முளைப்பதற்கு, தாய்க்கட்சிகளும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக உள்ளன என, ஏன் கூற முடியாது? ஆனால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்களா?   

தமிழ் மக்களது விடுதலைக்கான அறப் போராட்டம், ஆயுதப் போராகத் தோற்றம் பெற்றது. அக்காலப் பகுதியான எண்பதுகளில், பிரிவினைகள் பல்கிப் பெருகி, பல ஆயுதப் போராட்ட இயக்கங்கங்கள் தோற்றம் பெற்றன. பின்னாள்களில், அவை தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டன.   

அவர்கள், தங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகள், தங்கள் இனத்தின் பலத்தைப் பாதிக்கும் என, எக்காலத்திலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

அன்று அவர்கள், தாங்களும் தங்கள் இயக்கங்களுமே மேலானவை எனக் கருதின. அதுபோலவே, இன்று தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தாங்களும் தங்கள் கட்சிகளுமே புனிதமானவை; விவேகமானவை என்றே கருதுகின்றன.   

ஆகவே, தமிழ்த் தலைவர்கள், கடந்த காலத்தைப் படிப்பினையாகக் கொண்டு, பாடம் படிக்கவும் இல்லை; இனியாவது படிக்கத் தயாராகவும் இல்லை என்பதே, வேதனையிலும் வேதனையாக இருக்கின்றது.   

இதற்கிடையே, மாற்று அணி என்பது, தேவை இல்லாததாக இருந்தாலும், தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, தமிழ் மக்கள் கூட, மாற்று அணி தொடர்பில் அவ்வப்போது சிந்தித்து உள்ளார்கள்; சிந்தித்து வருகின்றார்கள் என்பதை, ஏற்றுக் கொள்ள வேண்டியே உள்ளது.  

அது ஏன்? 

அரசியல்வாதிகளின் பார்வையில் நோக்குகையில், தங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மையால், மாற்று அணிகளைப் புதிதாகத் தோற்றுவிக்கின்றார்கள். மக்களின் பார்வையில், ஏற்கெனவே இருக்கின்ற கட்சிகளின் மீது, நம்பிக்கை குறைதல்; நம்பிக்கை இல்லாமல் போவதால் மாற்று அணிக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.    

நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என, எல்லோரும் கதைத்துக் கொண்டாலும், அங்கு கூட, தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமே, அதிகமாக உள்ளது என, மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். 
தமிழ் மக்களின் தாய்க்கட்சி; தந்தை செல்வாவால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சி (1949) எனப் பல காரணங்களால், தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டு.  

 யுத்தம் 2009இல் ஓய்ந்திருந்தாலும், தமிழ் மக்கள் சத்தம் இல்லாத யுத்தத்துக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு தசாப்தம் காலங்களில், போர் இல்லாது போருக்குள் வாழும் மக்களை, தமிழரசுக் கட்சியால் எந்தளவு தூரம் அமைதி நிலைக்கு இட்டுச் செல்ல முடிந்தது?   

இந்நிலையில், கூட்டமைப்பின் தலைமை என, பிற தமிழ் அரசியல் கட்சிகளது தலைவர்கள், தமிழரசுக் கட்சியின் தலைமை மீதே, சுட்டு விரல் நீட்டிக் குற்றங்களையும் குறைகளையும் கொட்டித் தீர்க்கின்றனர்.   

கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகளாக, டெலோவும் புளொட்டும் இருக்கின்றன. அவை, கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியுடன் சமநிலையில் உள்ளனவோ, சகிப்புத்தன்மையுடன் உள்ளனவோ என, அவர்களுக்கு மட்டுமே தெரியும்.   

ஆனால், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவது தொடர்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யதார்த்தபூர்வமாகக் கருத்துத் தெரிவித்து உள்ளார்.  

“அதாவது, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், உள்நுழைவதே சிறப்பானது; அதேவேளை, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் கூட்டமைப்புக்குள் வருவதென்பது, சாத்தியக் குறைவாகவே உள்ளது. ஏனெனில் அந்தளவுக்குப் பிரிவுகள் வளர்ந்து விட்டன” என்று கூறி உள்ளார்.   

மீண்டும், இணைய முடியாதவாறு விலகல்கள் வலுப் பெற்று விட்டன. இது தொடர்பில், யாருடைய வாதம் சரி; யாருடைய வாதம் பிழை எனத் தமிழ் மக்களுக்குப் பரிபூரணமாகத் தெரியாது. ஆனால், பாதிக்கப்பட்டு ஆண்டியாக அலையும் தமிழ் மக்களுக்காக, கட்சி மறந்து, இணைந்து செயற்பட மறுப்பவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளா?   

“ஒற்றுமையில்தான், எமது எதிர்காலம் உள்ளது. தற்போது முக்கியமானதொரு காலகட்டத்தில் உள்ளோம். இதில் நாங்கள் அனைவரும், ஒருமித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என, சம்பந்தன் வலியுறுத்தி உள்ளார்.   

“கூட்டமைப்பின் தலைமை மாறினால், அதில் இணையத் தயார் என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து, என்னைப் பொறுத்தவரையில் நல்ல விடயமாகப்படுகின்றது. அவரை உள்வாங்கும் போது, கூட்டமைப்பு பலமான சக்தியாகத் திகழும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து உள்ளார்.   

இவ்வாறாக, ஒற்றுமை பற்றியும் பிரிந்தவர்களை மீளவும் இணைப்பது தொடர்பிலும் பொதுவெளியில் உரையாடி வருகின்ற கூட்டமைப்பின் பிரமுகர்கள், அதற்குச் செயல் வடிவம் கொடுக்க, களம் இறங்க வேண்டும். 

தமிழரசுக் கட்சியின் தலைமையில் பிரதான பாத்திரம் வகிப்பவராக சுமந்திரன் உள்ளார். அவர் சட்டப்புலமை, மொழிப்புலமை, பேச்சாற்றல், இராஜதந்திரம் எனப் பல திறமைகளைத் தன்வசம் கொண்டு உள்ளார். தற்போதைய நிலையில், தமிழ் மக்களுடைய அரசியலை, முன்கொண்டு செல்வதற்குத் தேவையான நபர்.   

ஆனாலும், அவர் அரசியலுக்குள் அரசியல் செய்து, கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை, விலக வைக்கப்பட்டவர்களை மனமுவந்து உள்வந்து இணைவதற்கான களத்தை உருவாக்க வேண்டும்.   

இதை செய்யத் தவறுமிடத்து, மாற்று அணியொன்றை உருவாக்குவதென்பது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதி என்றால் கூட, மாற்றாகப் பல அணிகள் உருவாகிக் கொண்டே இருக்கும். அத்தகைய போக்கில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.   

இவ்வாறாக உருவாகி வருகின்ற மாற்று அணிகள், கூட்டமைப்புக்குச் சவாலாக அமையாது விடலாம். பெருமளவிலான வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறாது விடலாம். ஆனாலும், பெருமளவிலான தமிழ் வாக்குகளைச் சிதைக்க அவற்றினால் முடியும்.  மக்களுக்கு வாக்களிப்பில் இருக்கும்  ஆர்வத்தைத் தவிடுபொடி ஆக்க முடியும்.    

இலங்கையில், கடந்த 70 ஆண்டு காலமாக, சிங்கள - தமிழ் இனப்பிணக்கைத் தீர்க்கும் முகமாக, பல உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.   

அவை அனைத்தும், தோல்வியிலேயே முடிவடைந்தன. இதற்கு முற்று முழுதாகக் கடந்த அரசாங்கங்களைக் குறை கூற முடியாது. ஆகக்குறைந்தது, ஒரு சதவீதமான தவறையேனும், தமிழ்த் கட்சித் தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் கூட்டாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  

 ஆகவே, ‘நீ சரியா, நான் சரியா’ என வேண்டாத பட்டிமன்றம் செய்வதை விடுத்து, நாங்கள் (தமிழ் மக்கள்) சரியாக வாழ்வதற்கான வழிவகைகளை, ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்துவார்களா?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X