2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மறைக்கப்படுகின்றதா அஷ்ரப் மரண அறிக்கை?

மொஹமட் பாதுஷா   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு இனக் குழுமத்தையும் அல்லது மக்கள் பிரிவினரையும் அரசியல், சமூக ரீதியாக வழிப்படுத்திய தலைவர்களின் வாழ்வும் மரணமும் அடுத்த தலைமுறைக்கு சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றன. கி.மு 48ஆம் ஆண்டில், ரோமானியா அரசியல்வாதி பம்பேய் தி கிரேட், படுகொலை செய்யப்பட்டது முதற்கொண்டு, இன்று வரைக்கும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா அரசியல் படுகொலைகளுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்திருக்கின்றது. 


அதேபோன்று, 1943ஆம் ஆண்டு, போலாந்தின் பிரதமரும் இராணுவப் பிரதானியுமான வேல்டிஸ்லவ் சிகாரொஸ்கி, விமான விபத்தில் உயிரிழந்தது தொடக்கம், இன்றுவரை விமான விபத்துகளின் ஊடாக இடம்பெறும் படுகொலைகளுக்குப் பின்னாலும் ஒரு காரணகாரியம் இருந்திருப்பதை  மறுக்க முடியாது. ஒருவேளை அந்தக் காரணம், இயற்கையானதாகவோ செயற்கையானதாகவோ அல்லது மர்மமானதாகவோ இருக்கலாம். எப்படியிருப்பினும் அதைச் சம்பந்தப்பட்ட மக்கள் தேடியறிந்திருக்கின்றார்கள். இலங்கை வரலாற்றிலும் படுகொலை செய்யப்பட்ட அல்லது விபத்தில் கொல்லப்பட்ட அரசியல்வாதிகளின் மரணம் குறித்த தெளிவைப் பெறும்வரை, அந்த அரசியல்வாதியைப் பின்தொடர்ந்த மக்கள் ஓய்வெடுத்ததில்லை. 

இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு தனித்துவ அடையாள அரசியல் வேண்டும் என்றும், அவர்கள் பிரத்தியேக அபிலாஷைகளும் அடையாளங்களும் கொண்ட இனக் குழுமம் என்றும் உரக்கச் சொல்லி, பெருந்தேசியக் கட்சிகளோடு பேரம்பேசி, ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் அரசியலை மாற்றிய எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற தலைவர்கள், அதற்கு முன்னரும் பின்னரும் பிறக்கவேயில்லை. அவரைப் போல, உரிமை அரசியலிலும் அபிவிருத்தி அரசியலிலும் சமகாலத்தில் ஜொலித்த முஸ்லிம் தலைவர்களையும் காண்பதரிது. 
ஆனால், அப்படிப்பட்ட ஒரு தலைவரின் மரணம், எவ்வாறு நேர்ந்தது என்பதை, அவரை நேசித்த இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உண்மையில், இது விமான விபத்தா அல்லது விபத்தொன்று திட்டமிடப்பட்டதா என்பதைக் கூட, அறிந்து கொள்ள வக்கற்றவர்களாகவே இந்த நாட்டில் வாழும், 20 இலட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் மனதில், முடிசூடா மன்னனாக இருந்த எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம், எங்ஙனம் நேர்ந்தது என்பதை, அவர் சார்ந்த மக்களுக்குச் சொல்ல வேண்டிய பாரிய பொறுப்பு, அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் இருந்தது. 
அவரது நண்பர்களுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் அவரிடம் அரசியல் அரிச்சுவடி கற்று, இன்று தம்மைத்தாமே பெரிய தலைவர்கள் போல, காட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் இருந்தது. 
இந்தச் சம்பவம் தொடர்பில், விசாரணை நடாத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் வீரசேகரவை உள்ளடக்கிய தனிநபர் விசாரணைக்குழு ஒன்றை, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள், விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 
ஆனால், அந்த ஆணைக்குழு கண்டறிந்த உண்மைகளை,  ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முஸ்லிம் மக்களுக்கு வெளிப்படுத்தி, அஷ்ரப் வழங்கிய ஆதரவுக்கு, நன்றிக்கடன் செலுத்தவில்லை. 
அதற்குப் பின்வந்த ஆட்சியாளர்களோ, அஷ்ரபினால் அரசியல் முகவரி பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளோ அதைச் செய்யவில்லை. தந்தை இறந்த பிறகு, இருக்கின்ற சொத்துகளைப் பங்குபோட்டுக் கொண்ட பிள்ளைகள் போல, அஷ்ரப் எனும் அரசியல் தந்தையின், மரணத்தின் பின்னாலிருக்கும் மர்மத்தை துலக்காமல், அவர் சேர்த்து வைத்த, ‘அரசியல் சொத்துகளை’ ஆளுக்காள் பங்குபோட்டுக் கொண்டு, தமது ‘வியாபாரத்தை’ பார்த்தனர் என்பதுதான், அரஷ்ரபின் மரணத்தைக் காட்டிலும் மோசமானது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அவ்வறிக்கையைத் தருமாறுகோரிச் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்ட பொறுப்பற்ற விதத்திலான பதில்களும் தற்போது தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு விசாரணையில் அரச அதிகாரிகள் சொல்கின்ற முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் இந்த மரணத்துக்குப் பின்னால் ஏதோ இருப்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன. 
இந்த விசாரணை அறிக்கையில், மர்மங்கள் எதுவும் இல்லை என்றால், அது ஒரு விபத்து என்றால், அதை நேரிடையாகச் சொல்வதற்கு, அந்த நேரத்தில் சந்திரிகா அம்மையாரோ அல்லது இப்போதிருக்கின்ற அரசாங்கமோ இவ்வளவு தயக்கம் காட்டியிருக்க மாட்டாது. 
ஆனால், அன்றைய அரசாங்கம் அதை வெளியிடவில்லை என்பதும், அது தொலைந்து விட்டது என்ற தோரணையில் இப்போது அதிகாரிகள் பதிலளிப்பதும், முஸ்லிம்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 
கணிசமான முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட் ஒரு முற்போக்கு சிந்தனை, அடையாள தலைமைத்துவமாக அஷ்ரப் இருந்தபோது, முஸ்லிம்களின் அரசியலுக்கென்று, ஓர் அடையாளம் இருந்தது. முஸ்லிம் அரசியல் செல்வாக்குமிக்கதாகவும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தது. 
ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகு, திட்டமிட்ட அடிப்படையில், முஸ்லிம்களின் அரசியல் பலமிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அஷ்ரப் விரும்பாத முஸ்லிம்களுக்குப் பாதகமான பல விடயங்கள், அவரது மரணத்துக்குப் பின்னர், அவரது அரசியல்வாரிசுகளின் துணையுடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் உற்றுநோக்கும் போது, ‘யாரோ’ அஷ்ரபின் ‘முடிவை’ எழுதியிருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 
2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி, அரநாயக்க, ஊரக்கந்தை மலைப்பகுதியில் உயிரிழந்த அஷ்ரப் என்பவர், ‘கேட்பதற்கு நாதியற்ற ஒரு பரதேசியல்ல’; ‘மாறாக, ஓர் இனத்துக்கே அரசியல் விளக்கேற்றிய பெருந்தகை’ எனவே, அவரது பாசறையில் பயின்றவர்கள், ஒற்றைக்காலில் நின்று, இந்த மரணத்தின் பின்னாலிருக்கின்ற மர்மத்தை வெளியில் கொண்டு வருவார்கள் என்று முஸ்லிம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், பஷீர் சேகுதாவூத் விண்ணப்பிக்கும் வரைக்கும், அதுநடக்கவே இல்லை. 
மர்ஹூம் அஷ்ரபின் பாரியார், பேரியல் அஷ்ரப், அவரது மறைவுக்குப் பின்னால், பதவிக்கு வந்த தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளடங்கலாக, எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் தலைவரின் மரணம் எப்படி நேர்ந்தது என்பதை உறுதிசெய்து, அவ்விடயத்தை மக்களுக்குக் கூறவில்லை. 
அவர் உருவாக்கிய கட்சியால், அரசியல் செய்த எம்.ரி.ஹசன்அலி, எம்.எச்.சேகு இஸ்ஸதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ரிஷாட் பதியூதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா என யாருமே இப் பணியைச் செய்தவர்களல்லர். 
அஷ்ரப், கொழும்பில் மையம் கொண்டிருந்த முஸ்லிம் அரசியலின் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை, கிழக்குக்குக் கொண்டு வந்ததைத் தென்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட  விரும்பியிருக்கவில்லை. 
அத்துடன், சிங்கள அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மு.காவும் அதன் தலைவரும் இருப்பதைப் பிற்போக்குச் சிந்தனையுள்ள பெருந்தேசிய சக்திகள் வெஞ்சக் கண்கொண்டே பார்த்தன.  
அஷ்ரப், விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுத இயக்கங்களாலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எல்லா நெருக்குவாரங்களுக்கு எதிராகவும் நெஞ்சை நிமிர்த்தி நின்றார். 
இதன் விளைவாக, ஆயுதக் குழுக்களினால் ஒரு எதிரிபோல, அவர் பார்க்கப்பட்டார். புலிகளின் படுகொலைப் பட்டியலில் தனது பெயரும் இருப்பதை அவரே அறிந்தும் இருந்தார். 
அதுமட்டுமன்றி, தமிழ் ஆயுத இயக்கங்களால் பல தடவை இலக்கு வைக்கப்பட்டு, சுடப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பிய வரலாறுகளும் இருக்கின்றன.  
முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமைந்து விடக் கூடிய, மேற்கத்தேய நிகழ்ச்சி நிரல்களுக்கு முட்டுக்கட்டை போடுபவராக அவர் இருந்தார். அஷ்ரபைக் கையாள்வதற்கு, தங்களது இராஜதந்திர மூளையை, வெளிநாடுகளும் அரசாங்கமும் கடுமையாகக் கசக்கிப் பிழிய வேண்டியிருந்தது.
மிகக் குறிப்பாக, கடும்போக்குச் சக்திகள், முஸ்லிம்களுக்கு எதிராகப் புறப்பட்ட சந்தர்ப்பத்தில், தொலைக்காட்சி விவாதத்தில் சோமதேரரைத் தோற்கடிக்குமளவுக்குத் தன்னுடைய விவாதத் திறனை நிலைநிறுத்திக் காட்டியமை மிக முக்கியமானது. அதுமட்டுமன்றி, மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன், சந்திரிகாவின் ஆட்சியுடனான தனது மனக் கசப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். 
இவ்வாறான பல பின்னணிகளுடனேயே அஷ்ரபின் மரணத்தை நோக்க வேண்டியிருக்கின்றது.  அதாவது அந்த மரணம் இயற்கையான ஒரு விபத்தால் ஏற்பட்டதாக இல்லாமல், செயற்கையாகத் திட்டமிடப்பட்டதாக இருக்குமாயின், அதற்குப் பின்னால் மேற்குறிப்பிட்ட எந்த சக்தியும்  தனித்தோ கூட்டாகவோ பங்கெடுத்திருக்கலாம் என்ற அனுமானம் முஸ்லிம் அரசியல் நோக்கர்களிடையே இருக்கின்றது.
அந்தவகையில், பார்த்தால், அந்த விமானத்தில் பயணித்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகம் எழுந்தது. பிற்காலத்தில், புலிகள் அவருக்கு மாவீரர் பட்டம் கொடுத்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் முஸ்லிம்கள், புலிகளைச் சந்தேகித்தனர். அதேபோல், கடும்போக்கு சக்திகள் தனித்தோ அல்லது அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களின் ஒத்துழைப்புடனோ ஓர் இயந்திரக் கோளாறைத் திட்டமிட்டிருக்கலாம். அல்லது, விமானத்தின் இருக்கைகளின் பின்புறமாகக் குண்டுகளைப் பொருத்தியிருக்கலாம் எனப் பலதரப்பட்ட சந்தேகங்களும் இருக்கின்றன.  
இதுவெல்லாம், வெறும் சந்தேகங்களும் அனுமானங்களும்தான். ஆனால், இச்சம்பவம் எவ்வாறு நேர்ந்தது என்ற உண்மையான காரணத்தை, ஓய்வுபெற்ற நீதியரசர் வீரசேகர சமர்ப்பித்த விசாரணை அறிக்கையிலேயே உள்ளடங்கியிருக்கும். ஆனால், இது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்தச் செய்யும் விடயத்தில் அவர், இவர் என எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் பெரும் தவறையும் அஷ்ரபுக்கு நம்பிக்கைத் துரோகத்தையும் செய்திருக்கின்றார்கள். 
அவ்வாறானவர்களுள் ஒருவராக, இதுகாலவரைக்கும் இருந்த பஷீர் சேகுதாவூத், இலங்கையில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டமூலம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார். 
அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, அஷ்ரபின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் உள்ளடங்கியுள்ள குறிப்பிட்ட தகவல்களைத் தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்தில், முறைப்படி விண்ணப்பித்திருந்தார். 
அதற்குப் பதிலாக, 25.04.2017 திகதியிட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன், விண்ணப்பதாரியான பஷீருக்கு அனுப்பியிருந்தார். “உங்களால் கேட்கப்பட்ட தகவலை (12 வருடங்களுக்கு மேற்பட்டது) தேடியெடுக்க முடியாமல் இருக்கின்ற காரணத்தால், உங்களுடைய மேற்படி கோரிக்கையை நிராகரிப்பதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன்” என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, இச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் இருக்கின்ற தகவல்கள், 10 வருட காலத்துக்குப் பேணப்பட வேண்டும் என்பதுடன், அமுலுக்கு வந்த திகதிக்குப் பின்னர் உருவாகும் தகவல்கள், 12 வருடங்களுக்குப் பேணப்பட வேண்டும். இக்காலப்பகுதிக்கு மேற்பட்ட தகவல்களை, வழங்க வேண்டிய கடப்பாடு இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். அதன்படி பார்த்தால் தகவல் அதிகாரியான ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பிய கடிதம் சரியானதே. 
ஆனால், அஷ்ரபின் மரணத்தை இவ்வாறு விட்டுவிட முடியாது என்ற அடிப்படையில், விண்ணப்பதாரியான பஷீர் சேகுதாவூத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 32(1) பிரிவின் படி, இத்தீர்மானத்துக்கு எதிராக, அடுத்த கட்ட நடவடிக்கையாக, தகவல் உரிமை ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்திருந்தார். 
இது தொடர்பாக, வாய்மொழிமூல விளக்கம் பெறும் அமர்வு, இம்மாதம் 16ஆம் திகதி இடம்பெற்றது. ஆணைக்குழுவின் முன்னிலையில் பஷீர் சேகுதாவூதும் ஜனாதிபதி செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்து பிரதிச் செயலாளர் ஒருவரும் கலந்து கொண்டு வாக்குமூலம் அளித்தனர்.  
அரச தரப்பு அதிகாரி, ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், அந்தக் குறித்த கோவை, தேசிய சுவடிக் கூடத்துக்கு 2007 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. சேகுதாவூதின் விண்ணப்பத்துக்குப் பதிலனுப்புவதற்காகச் செயலகம் அந்தக் கோவையை மீண்டும் சுவடிக் கூடத்திடமிருந்து பெற்றது. 
ஆனால், அந்தக் கோவைக்குள், உண்மையைக் கண்டறிந்த ஆணைக்குழுவின் அறிக்கை இருக்கவில்லை என்று, பிரதிச் செயலாளர் பதிலளித்ததாக அறியமுடிகின்றது. இந்நிலையில் அடுத்த அமர்வு நவம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்குச் சுவடிக்கூட திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்படுவார்கள். 
முன்னதாக, ஜனாதிபதியின் செயலாளர், பஷீர் சேகுதாவூதின் விண்ணப்பத்தை நிராகரித்து அனுப்பிய கடிதத்தில், அவ்வறிக்கையைத் தங்களால் தேடியெடுக்க முடியவில்லை என்றே சொல்லியிருந்தார். ஆனால், இப்போது கோவை கிடைத்ததாகவும் அதில் அறிக்கை இருக்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளமையானது, குழப்பமாக இருக்கின்றது. 
மர்ஹூம் அஷ்ரப் என்பவர், யாரென்று அடையாளப்படுத்த முடியாத ஒருவரல்ல. இந்த நாட்டின் சொத்துகளைக் கொள்ளையடித்தவரோ, அரச துரோகம் செய்தவரோ, குண்டுவைத்தவரோ, கட்சியையும் கொள்கைகளையும் விற்று அரசியல் செய்தவரோ அல்லர். 
அவர், ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தவர். அவரது மரணத்தில் சந்தேகம் இருந்த காரணத்தினாலேயே விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. எனவே, இப்போது அதைக் காணவில்லை என்று கூறவியலாது.
இலங்கையில், தொன்றுதொட்டு ஆட்சியதிகாரத்தில் இருந்த சிறிய பெரிய அரசர்கள், சிங்கள சிற்றரசர்களின் வாழ்க்கையைப் பாடப் புத்தகங்களில் உள்ளடக்கினார்கள். பௌத்த வரலாற்றில் முக்கியமானவர்களின் வாழ்வும் மரணமும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் இன்னும் அரசாங்கச் சுவடிக் கூடத்திலும் தேசிய நூதனசாலையிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மேலதிகமாக, இந்த மண்ணில் முற்காலத்தில் வாழ்ந்த பௌத்த மக்களின் ஆதாரங்களை தேடி ஆங்காங்கே தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
இப்படியிருக்க, ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைவரது மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவிடமிருந்து அறிக்கையே பெற முடியாதிருக்கின்றது அல்லது தொலைந்துவிட்டது என்றால், சுவடிக் கூடமும் சம்பந்தப்பட்டோரும் அதை முறையாகப் பாதுகாக்கவில்லை என்றுதானே அர்த்தம்? ‘அந்தக் கோவை இருக்கின்றது, அதில் அறிக்கையில்லை’ என்ற பதில்களே பல சந்தேகங்களை எழுப்புகின்றன. 
எனவே, அறிக்கை காணாமல் போயிருக்கின்றதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிந்து சொல்ல வேண்டிய பொறுப்பு தகவல் உரிமை ஆணைக்குழுவுக்கு உள்ளது. 
அஷ்ரபின் மரணம் ஒரு கொலையாக இருந்து, அதை முஸ்லிம்கள் உறுதிப்படுத்தாமல் இருப்பார்களேயானால், எதிர்காலத்தில் பெருந்தேசியத்துக்குச் சிம்மசொப்பனமாக இருக்கும் ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கும் இதுவே நடந்தாலும் நடக்கும் என்பதை நினைவில் வைத்து, பஷீர் மட்டுமன்றி எல்லா அரசியல்வாதிகளும் இவ்வறிக்கையை வெளிக்கொணரப் பாடுபடவேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .