2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலையகப் பாடசாலைகளின் பிரச்சினை குதிரைக் கொம்பல்ல

Editorial   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தனுஷன்ஆறுமுகம் LL.B (Hons)

இலங்கையில், ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரையிலான கல்வி நடவடிக்கைகள் அரசாங்கத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. 

யாமறிந்த பிரதான உலக நாடுகளின் வரிசையில், பல்கலைக்கழக கல்வி வரையில் இலவசமாக வழங்கும் ஒரே நாடு இலங்கை தான். 

பெரும்பாலான நாடுகளில், ஆரம்பக் கல்வி மட்டும் இலவசம் எனினும், பல்கலைக்கழக கல்வி அப்படியல்ல; அதுமாத்திரமன்றி, நல்லதொரு கற்பித்தல் சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கில், இலவசப் பல்கலைக்கழக கல்வியோடு, மாணவர்களுக்கு உதவித் தொகையும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றமை வரவேற்க கூடிய ஒன்றே. 
இந்த முறையமைவில், மலையக உறவுகள் பலர் நேற்றும் இன்றும் நாளையும் உயர் கல்வியைப் பெற்றும், பெறவும் இருக்கிறார்கள்.

இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசமைப்பு, சமத்துவத்துக்கான உரிமையையும் சமமாக நடாத்தப்படுவதற்குமான உரிமையையும் அடிப்படை உரிமைகளாக அடையாளப்படுத்தியுள்ளது. 

இதை அரசமைப்பின் 12 ஆம் உறுப்புரையின் 4 உபபிரிவுகளையும் வாசிக்கும் போது தெரிந்துகொள்ள முடியும். 

உண்மையில் இந்த உறுப்புரைகளின் நோக்கம் என்ன? அனைத்து மக்களும் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். இது ஒரு சாதாரண பார்வை. ஆளமாக இதன் உட்பொருளை நோக்கின், சமமானவர்கள் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பதாகும்.  அதாவது சமமானவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். 

மலையகக் கல்வியைப் பொறுத்த வரையில், பல மலையக மாணவர்கள் தோட்டப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்றப்பவர்கள்; வெகு சிலரே நகர்ப்புறப் பாடசாலைகளில் கல்வியைப் பெறுகிறார்கள். 

நகர்ப்புறப் பாடசாலைகளில் சிறந்த கல்வியும் தோட்டப்புறப் பாடசாலைகளில் மோசமான கல்வியும் வழங்கப்படுகின்றது என்பது இதன் கருத்தல்ல. இரு தரப்பும், ஓர் அரசாங்கத்தின் பாடத்திட்டத்தையே கற்பிக்கின்றன. 

ஆனால், வளப்பங்கீடு என்ற விடயத்திலும், முறையான வழிகாட்டல் என்ற விடயத்திலும் பல மலையகப் பாடசாலைகள் பின்னிற்கின்றன என்பதே உண்மையாகும்.

உதாரணமாக, கொழும்பிலுள்ள ஒரு பிரபல பாடசாலையில், உரிய பாடத்துக்குப் பட்டதாரி அல்லது பயிற்றப்பட்ட ஆசிரியரின் வழிகாட்டலில் கல்வி கற்கும் ஒரு மாணவன், தனது பரீட்சைக்கு முன்பதாக 40க்கு மேற்பட்ட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களில் பயிற்சியை மேற்கொள்ளத் தூண்டப்பட்டு, ஆற்றுப்படுத்தப்படுகின்றான். 

அத்தகைய மாணவனும் சரி, மலையகத்திலே (மலையகம் தவிர்ந்த பல இடங்களிலும் இப்பிரச்சினை இருக்கின்ற போதும், அதிகமாகத் தமிழ் மாணவர்கள் இப்பிரச்சினையை எதிர் நோக்குவது மலையகத்திலேதான்) என்பதால், மலையகத்தை முதன்மைப்படுத்துகின்றேன்) 

தோட்டப்புற பாடசாலையில் பொதுவாக, பாடத்துக்கு உரிய ஆசிரியர் இல்லாது, கடந்த வருடங்களில் தங்களது பாடசாலைகளில் இருந்து வெளியேறிய, கற்பித்தல் அனுபவமோ பயிற்சியோ இல்லாத, சிரேஷ்ட மாணவர்களால் கற்பிக்கப்படும் மாணவர்களும் ஒரே வகையான பரீட்சைக்கே முகங் கொடுக்கின்றனர். 

அது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையாயினும் சரி, உயர் தரப் பரீட்சையாயினும் சரி, இன்று ஒரே பாடத்திட்டத்தை, வெவ்வேறுபட்ட முறைமைகளில் கற்ற, வேறுபட்ட இரு தரப்பினர் பரீட்சைக்கு முகங் கொடுக்கின்றனர். 

ஒரு தரப்பு பெற்ற சலுகைகளும் வழிகாட்டல்களும் அதிகம், மற்றத் தரப்பு, அதனிலும் குறைவு. ஆனாலும் இரு தரப்பும் ஒரு தராதரத்தின் அடிப்படையில் சித்தியடைந்தோர், பல்கலைக்கழகம் தெரிவானோர் என தெரியப்படப் போகின்றனர். 

இவ்விரு தரப்பினரையும் சமமான மாணவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? ‘சமமானவர்கள் சமமாக நடாத்தப்படல்’ என்பது இங்கு கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. 
பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்ற எத்தனையோ பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி காணப்படுகின்றனர். அவர்களுக்குள் மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளும் உள்ளடக்கம்.

இவ்வாறிருக்க, அந்தப் பட்டதாரிகளுக்கு உரிய பயற்சிகளோடு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதை ஆலோசிக்கும் அரசாங்கம்தான், நியமங்களைத் தாண்டி நியமனங்களை வழங்கிக் கொண்டு இருக்கின்றது. 

இங்ஙனம் பட்டம் பெற்ற ஒரு தரப்பு வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, சில முக்கிய பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. 

இன்னும், பல நகர்ப்புற பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கு மேலதிகமாகக் காணப்படுகின்றனர். சமீபத்தில் ஒரு மலையகப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக மாகாண முதலமைச்சரிடம், ஆலோசித்தபோது, “உங்களது பாடசாலைக்கு வர விரும்பும் ஆசிரியர், எங்கு இருந்தாலும் சொல்லுங்கள், இடமாற்றம் செய்து தருகிறேன்” என்றாராம்.  

இதன் அர்த்தம், பாடசாலை நிர்வாகம், தமது பாடசாலைக்கு வர விரும்பும் ஆசிரியர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அதிகாரிகள் முன் நிறுத்த வேண்டும் என்பதே.  
அதிகமான மலையகப் பாடசாலைகளில், ஒரு பாடவேளையில், சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வகுப்புகள் ஆசிரியர்கள் இன்றி இருக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே, அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு யார் பொறுப்பு? 

இலவச கல்வி என்ற பெயரில், பாடசாலையில் மாணவர்களை வெறுமனே அமரச் செய்திருப்பது மட்டும் போதுமானதா? மலையக மாணவர்களை ஏனைய மாணவர்களோடு போட்டியிடும், சமமான மாணவர்களாக ஆக்குவதில் இந்த ஆசிரியர் பற்றாக்குறை பாரிய சவாலாகவே திகழ்கின்றது. 

இது ஒன்றும் தீர்க்க முடியாத, குதிரைக் கொம்பு போன்ற விடயமல்ல. அதிகாரிகளின் உரிய திட்டமிடல், உரிய வளப்பங்கீடு. அரசியல் இடமாற்றங்களை தடுத்தல் போன்ற சில அணுகு முறைகளின் வாயிலாக சரி செய்யப்படக் கூடியதே.

தொடர்ந்து, பாடசாலைகளில் மாணவர் ஆலோசனை வழிகாட்டல்களைச் செய்வதற்கு உரிய நபர்கள் இல்லாமையும் பாரிய ஒரு பிரச்சினையாகும். 

இன்று, அதிகமான மலையகப் பாடசாலைகளில், மாணவர்கள் கல்வியின் அவசியத்தை உணராது, கல்வி நடவடிக்கைகளைக் கைவிடுவதற்கும், சமூகச் சீர்கேடான விடயங்களில் கவனத்தைச் செலுத்துவதற்கும் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படாமையே காரணமாகும். 

தவறு என்கின்ற போது அதற்கான தீர்வு, பிரம்பு என எண்ணிக் கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் அதிகமாக இலங்கையில் இருக்கின்றார்கள். 

பிரம்பு வழங்கும் தீர்வு உடலில் ரணங்களை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால், மாணவனின் மனதை மாற்ற, ஆலோசனை வழிகாட்டல் கட்டாயம் தேவை. 

சில பாடசாலைகளின், ஆலோசனை வழிகாட்டல் வழங்கும் ஆசிரியர்களைப் பாடசாலை நிர்வாகம் நியமிக்கும், இருந்தபோதும், குறித்த விடயத்தில் போதிய அனுபவமில்லாத நபர்கள் நியமிக்கப்படும்போது, அது வெற்றான ஒன்றாகவே காணப்படப் போகின்றது. 

எனவே, ஒவ்வொரு பாடசாலைக்கும், மாணவர் ஆலோசனை வழிகாட்டல் செய்யக்கூடிய, உரிய பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர் அல்லது வழிகாட்டி நியமிக்கப்பட வேண்டும். பிரபல பாடசாலைகள், இத்தகைய நியமனத்தை வழங்கி, சிறந்த மாணவர்களை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். 

அதேபோன்றே, இலவசக் கல்வி, இலவசமாகக் கற்பிப்போம், நாங்கள் எமது மாணவர்களுக்காக உழைக்கின்றோம் என மாலை நான்கு அல்லது ஐந்து மணி வரையில் வகுப்புகளை நடாத்தும் பாடசாலை நிர்வாகங்கள் அதிகம்.  

குறிப்பாக, மலையகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரப்போகின்றோம், பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்தப் போகின்றோம் என்ற அடிப்படையில் நீண்ட நேரம் கற்பிக்கும் தரப்பினர் அதிகம். 

பல்கலைக்கழத்தில்கூட, ஒரு பாடத்தை ஆகக்கூடியது இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கற்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு நேரசூசி இடப்படும் நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு அதுவும் விடுமுறை நாட்களில், காலை முதல் மாலை வரை, ஒரே பாடத்தைக் கற்பிப்பது வெற்றியளிக்கும் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்கள் தமது எண்ணம் எந்தளவு சரியானது என்பதை, மீளப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். 

மாறாகத் தாம் கற்பிப்பதை,  சிரத்தையோடு கற்கக் கூடிய நிலைமையில் இருந்து, மாணவர்கள் கற்கின்றார்களா என நோக்குவதும் மிக முக்கியமானது. அதிக கற்பித்தல் நேரம் மாத்திரம், கல்வி நிலையை உயர்த்தி விடாது. 

 கல்வித் திணைக்களங்கள் இது தொடர்பில் ஆராய்ந்து, கற்பித்தல் நேரம் தொடர்பான விதிகளை விதிக்க வேண்டும். பாடசாலை நேரத்தில் பாடவேளைகளுக்கு மாத்திரம் இருக்கும் நேரக் கட்டுப்பாடு, பாடசாலையில் மேலதிக வகுப்பெனும் பெயரில் மீறப்படுகின்றது. 

(நாளை ​தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X