2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தனிமைப்படுத்தலும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 மே 27 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் 'தனிமைப்படுத்தல்' என்றும் ஆங்கிலத்தில் 'கொரண்டைன்' அல்லது, 'கொரொன்டீன்' என்றும் குறிப்பிடப்படும் செயல்முறை, ஒரு தண்டனையா? இது வரை, அவ்வாறு எவரும் நினைக்கவில்லை. 

ஆனால், வடபகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தால், அதை ஒரு தண்டனையாகவும் கருத முடிகிறது.

'தனிமைப்படுத்தல்' என்ற சொல், இந்நாள்களில் ஊடகங்களில் தொடர்ந்து வாசிக்கின்றோம்ளூ கேட்கின்றோம். இந்நாள்களில், அதில் குறிப்பிட்டதோர் அர்த்தம் தான் இருக்கிறது. 

உலகத்தை உலுக்கும், கொவிட்-19 போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காகச் சுகாதாரத் துறையினர், கொரோனா வைரஸ் தாக்கியவர்களையும் தாக்கியவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்களையும் தனிமைப்படுத்தி வைப்பதே, தனிமைப்படுத்தல் என்பதன் அர்த்தமாகும். 

ஆனால், கடந்த 18ஆம் திகதி, யாழ்ப்பாணம் அருகே, செம்மணியில் நடைபெற்ற ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற, வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரனைப் பார்த்து, பொலிஸ் அதிகாரி ஒருவர், 'ஒபதுமா ஒய வெடே கலொத் அப்பி ஒபதுமாவ தவஸ் 14க்கட நிரோதாயனயட்ட யவனவா' (நீங்கள் அதனைச் செய்தால் நாங்கள், உங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவோம்) என்று கூறுவதைத் தொலைக்காட்சி மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது.

விக்னேஸ்வரனை, கொரோனா வைரஸ் தாக்கியதாக அறிந்தோ, அது தாக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார் என்று ஆராய்ந்தோ, அந்தப் பொலிஸ் அதிகாரி அவ்வாறு கூறுவில்லை. தாம் சொல்வதைக் கேட்டு, விக்னேஸ்வரன் அந்த இடத்தை விட்டு விலகவில்லை என்பதற்காகவே, அவர் அவ்வாறு மிரட்டுகிறார். போரில் இறந்தவர்களை, அவ்விடத்தில் நினைவு கூர்ந்துவிட்டு, அவ்வாறு 14 நாள்கள் தனிமைப்பட விரும்பாத விக்னேஸ்வரன் திரும்பிச் சென்றார். 

அரசாங்கம், வடக்கில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளைத் தடை செய்திருக்கவில்லை. விக்னேஸ்வரன், ஊரடங்குச் சட்டத்தை மீறியிருக்கவும் இல்லை. இரவு எட்டு மணிக்குப் பின்னரே, அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்  அமலில் இருந்தது. அவர், சுகாதார அறிவுறுத்தல்களை மீறவும் இல்லை. அவர், முகக் கவசம் அணிந்து இருந்தார். அவரும், அவருடன் சென்றவர்களும் வேறுவேறு வாகனங்களில் பயணித்து, சமூகஇடைவெளி பேணும் கொள்கைக்கு அமையவே செயற்பட்டிருந்தனர். எனவே, விக்னேஸ்வரன் சட்டத்தை மீறினார் எனக் கூற முடியாது. 

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதை அறிந்து, மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என, வடபகுதிப் பொலிஸாருக்கு அரசாங்கம் பணித்திருந்தது. நினைவேந்தல் நிகழ்ச்சிகள், சுகாதார ஆலோசனைகளின் படியே நடைபெறும் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், அவ்வாறு பொலிஸாரை அரசாங்கம் பணிப்பதைக் குறை கூற முடியாது. ஏனெனில், அவ்வாறான கூட்டம் கூடும் ஓரிடத்தில், தொற்று ஏற்பட்ட ஒருவர் இருந்தால், சிலவேளை பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடும். 

தென் கொரியாவில், ஒரு தேவஸ்தானத்தில் சமய நிகழ்ச்சியொன்றில், 31ஆவது நோயாளர் கலந்து கொண்டதை அடுத்து, நோயாளர் எண்ணிக்கை 1,000க்கு மேல் அதிகரித்தது. இலங்கையில், கடற்படையினர் மத்தியில் இன்னமும், புதிய தொற்றாளர்கள் காணப்படுகிறார்கள்;. இலங்கையில் மொத்தத் தொற்றாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கடற்படை வீரர்களேயாவர். 

எனவே, அரசாங்கத்தின் ஆலோசனை பிழையானதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. அது சரியென்றால், போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, போரில் இறந்த ஆயுதப் படையினரையும் பொலிஸாரையும் நினைவு கூரும்முகமாக, கடந்த 19ஆம் திகதி, நூற்றுக் கணக்கானவர்களை அழைத்து, கொழும்பில் பாரியதொரு நிகழ்ச்சியை, அரசாங்கம் எவ்வாறு நடத்த முடியும் என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். 

சமூக விலகலைப் பேணுவதாக, தம்மைப் பற்றி உத்தரவாதமளிக்க முடிந்த போதிலும், அடுத்தவர்களைப் பற்றி உத்தரவாதமளிக்க, நோய்த் தடுப்புக்கான பொறுப்பை ஏற்றிருக்கும் அரசாங்கத்துக்கு முடியாததால், வடபகுதி நினைவேந்தல்களை நிறுத்த முடிவெடுத்ததாக, அரசாங்கத் தரப்பினர் வாதிடலாம். அந்த அடிப்படையில், அரசாங்கத்தின் முடிவு சரியென ஏற்றுக் கொண்டாலும், ஒருவர் அதை மீறினால், அவரைத் தனிமைப்படுத்தலாமா? தனிமைப்படுத்தல் ஒரு தண்டனையா?

ஊரடங்குச் சட்டத்தை மீறி, அனுமதியின்றியும் அநாவசியமாகவும் வெளியே சென்றார்கள் என்று, 60,000க்கும் மேற்பட்டோர், நாட்டின் ஏனைய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள் பயணித்த 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக, எவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதும் முறையாகாது.

 

எமது வாதத்தை நிரூபிப்பதைப் போல்த்தான், யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல், கடந்த 19ஆம் திகதி, ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அக்கட்சியின் 11 பேர், யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முறையிட்டனர். 

அதன்படி, அந்த 11 பேரும் 14 நாள்கள், தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என, நீதிவான் கடந்த 17ஆம் திகதி உத்தரவிட்டார். அத்தோடு, அவர்களைக் கண்காணித்து 14 நாள்களுக்குப் பின்னர், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஐந்து சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் பணித்திருந்தார்.

ஆனால், மறுநாள் பொன்னம்பலத்தின் சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நகர்த்தல் பத்திரமொன்றை ஆராய்ந்த நீதிவான், தனது முன்னைய உத்தரவை மீளப்பெற்றார். சந்தேக நபர்களுக்கு கொவிட்-19 தொற்றின் அறிகுறிகள் உள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவில்லை என்ற அடிப்படையிலேயே அவர், தமது முன்னைய உத்தரவை மீளப் பெற்றார்.

நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை, வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உளைச்சலுக்கும் வேறுபல நோய்களுக்கும் உள்ளாகக்கூடும் என்று கூறியே நீதிவான், 11 சந்தேக நபர்களையும் விடுவித்தார். அவர்கள் செய்தது குற்றமா, இல்லையா என்று நீதிவான் கூறியதாகச் செய்திகள் எதனையும் அறியமுடியவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக் கொண்ட நடவடிக்கை, பொருத்தமானதல்ல என்றே, நீதிவான் கூறியிருக்கிறார். அதாவது, அவர்கள், பொலிஸார் கூறும் குற்றத்தைச் செய்திருந்தாலும், தனிமைப்படுத்தல் அதற்குத் தண்டனையாக இருக்க முடியாது என்பதே, நீதிவானின் கருத்தாக இருப்பதாகத் தெரிகிறது.

தனிமைப்படுத்தலானது, நோய் பரவலைத் தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றேயல்லாது, அதைத் தண்டனையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது, இதன் மூலம் தெரிகிறது. எனவே, விக்னேஸ்வரனையும் தனிமைப்படுத்துவோம் எனப் பொலிஸார் எச்சரித்தமை, எவ்வகையிலும் பொருத்தமானதல்ல என்பது, இதன் மூலம் மேலும் தெரிகிறது.

நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றவர்கள், சட்டவிரோதமான நடவடிக்கை ஒன்றைச் செய்யப் போவதாகப் பொலிஸார் எங்கும் கூறியதாகத் தகவல் இல்லை. அரசாங்கமும் அவற்றைத் தடை செய்யவில்லை. 

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் நிலையில், கூட்டங்கள் கூடுவதைத் தடுக்குமாறே, அரச உயர் அதிகாரிகள் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதாவது, இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகளை, ராஜபக்ஷ அரசாங்கம், இம்முறை சட்ட விரோதமாகக் கருதவில்லை என்பதே, அதன் மூலம் தெரிகிறது.

ஓரிடத்தில் மட்டும், அதாவது, மட்டக்களப்பில் மட்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியொன்றுக்கு எதிராக, நீதிமன்றத் தடையுத்தரவொன்றைப் பொலிஸார்  பெற்றிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி, அந்த நீதிமன்ற உத்தரவின் காரணமாக இடைநிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால், அந்தக் கூட்டத்துக்கு எதிராகவும் சட்ட விரோதமான கூட்டம் என்ற அடிப்படையில், தடையுத்தரவு பெறப்பட்டு இருக்கவில்லை. மாறாக, அக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படலாம் என்ற அடிப்படையிலேயே, அந்த உத்தரவும் பெறப்பட்டு இருந்தது.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்திலும், வடக்கில் தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ஆனால், அக்காலத்தில் அவற்றைச் சட்டவிரோதமாகக் கருதிய பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்நிகழ்வுகளுக்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்தனர்; அவற்றில் கலந்து கொண்டவர்களைக் கைது செய்தனர். 

பின்னர், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம், அந்நிகழ்வுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் செய்யவில்லை; ஆதரவும் வழங்கவில்லை. எனினும், நல்லாட்சி அரசாங்கம், புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளித்து வருவதாக, மஹிந்த அணியினர் கூறி வந்தனர். ஒவ்வொரு வருடமும் புலிகளையும் அரசாங்கத்தையும் முடிச்சுப் போட்டு, விமர்சித்து வந்தனர். 

ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக ராஜபக்ஷக்களும் அவர்களது சீடர்களும் கடந்த நவம்பர் மாதம், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், இந்த விடயத்தில் அவர்களது நடத்தையில் ஒரு மாற்றத்தைக் காட்டுகின்றனர். அதைக் கடந்த நவம்பர் மாதமே, காணக்கூடியதாக இருந்தது. 

கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்து, எட்டு நாள்களுக்குப் பின்னர், அதாவது நவம்பர் மாதம் 26, 27ஆம் திகதிகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட வடக்கில் பல இடங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அத்தினம், புலிகளாலேயே குறித்தொதுக்கப்பட்ட நாளாக இருந்தும், அரச படைகளோ பொலிஸாரோ, அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 

இம்முறை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளையும் பிழையெனக் கூறியோ, சட்ட விரோதமானவை எனக் கூறியோ, எவரும் தடுக்க முற்படவில்லை. இது, ராஜபக்ஷக்களின் கொள்கை மாற்றமா என்பதை, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அவர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்துத் தான், முடிவு செய்ய முடியும்.

ராஜபக்ஷக்கள், அவர்களது பொதுஜன பெரமுனவினர் ஒருபோதும் தமிழ்த் தலைவர்கள் மே மாதத்தில் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களையோ, நவம்பர் மாதம் நடத்தும் புலிகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகளையோ அங்கிகரிக்கப் போவதில்லை. அவற்றை, நிராகரிப்பதைப் பற்றிய பிரச்சினைக்கே இடமில்லை. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் இம்முறை, அவற்றைச் சட்ட விரோதமானவையாகக் கருதிச் செயற்படவில்லை. 
அவர்கள், தனிமைப்படுத்தல் மற்றும், நோய்த் தடுப்புச் சட்டத்தை, நினைவேந்தல் நிகழ்ச்சிகளைத் தடுப்பதற்காகப் பாவித்தார்களா அல்லது, உண்மையிலேயே நினைவேந்தல் நிகழ்ச்சிகளால், கொரோனா வைரஸ் பரவும் நிலை ஏற்படும் என அஞ்சி, அவற்றைத் தடுக்க முற்பட்டார்களா என்பதும், தற்போதைய நிலையில் சற்றுச் சிக்கலானதாகத் தான் தெரிகிறது. 

எவ்வாறாயினும், தற்போதைய சுகாதாரப் பணிப்புரைகளை மீறுவோரை, அவர்கள், கோவிட்-19 இன் அறிகுறிகளைக் காட்டாத நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதோ, வீடுகளில் தனிமைப்படுத்துவதோ நகைப்புக்குரிய விடயமாகும். 

அதேவேளை, தமது கருத்துகளை, சுதந்திரத்தைத் தடுப்பதற்காக, அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பாவிக்கிறது என்றதோர் எண்ணத்தை, மக்கள் மனதில் ஏற்படுத்தும். அது, சட்டத்தைப் புறக்கணிக்க மக்களைத் தூண்டக் கூடும். இன்னமும் கோவிட்-19 பரவுகையின் அச்சுறுத்தல் முற்றாக நீங்காத நிலையில், பயங்கரமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.   
  


   
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X