2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்: அரசாங்கம் கையிலெடுக்கும் இன்னுமொரு ஆயுதம்

மொஹமட் பாதுஷா   / 2017 செப்டெம்பர் 24 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் கிட்டத்தட்ட தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மைப் பலத்துடன் நிரூபித்திருக்கின்றது.  

இதனால் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் அரசாங்கம் தனது கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கின்றது. ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு இச்சட்டமூலம், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுடன், இதுவிடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மீண்டுமொரு தடவை நம்பவைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இருப்பதாகவே உணர முடிகின்றது.   

இப்போது, நாட்டில் நான்கு திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்பு பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இலங்கையின் அரசமைப்பை மறுசீராக்கம் செய்வதற்கே அரசாங்கம் நினைத்தது. 

இது, தமக்கும் மக்களுக்கும் விரும்பிய யாப்பு ஏற்பாடுகளோடு, 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்புக்குப் பதிலாக, புதியயொரு அரசமைப்பை நிறுவும் முயற்சியாகும்.   

ஆனால், அதை அவசரமாகச் செய்து முடிக்க, முடியாத நிலை காணப்படுவதால் அரசமைப்பு மறுசீரமைப்புப் பணிகள் சற்று தாமதமடைந்திருக்கின்றன.   

இருப்பினும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையிலும் அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முறை மற்றும் ஆட்சிக்காலத்திலும் அரசாங்கத்துக்குத் திருத்தங்கள் அவசியப்பட்டன. அதற்கமையவே உள்ளூர் அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தில், அண்மையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.   

இதற்குச் சமாந்திரமாக, மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவர, நல்லாட்சி அரசாங்கம் விரும்பியது. அதற்கான சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வேளையில் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டுவர வேண்டிய அரசியல் தேவைப்பாடு இருந்தமையால், அந்த வியூகத்தின்படி அரசாங்கம் செயற்பட எண்ணியது.   

அதன் அடிப்படையிலேயே 20ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டது. அதாவது, மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், தேர்தல், கலைப்பு போன்ற முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தும் ஒரு திருத்தமாக, 20ஆவது திருத்தம் அமைந்துள்ளது.   

குறிப்பாக, எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவதே, இதில் பிரதான நோக்கமாக இருந்தபோதும், அந்த நோக்கத்துக்காகத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அல்லது மாகாணசபைகளின் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு வழியேற்படுத்துவதாகவும் அதேபோன்று மாகாணங்களின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கத்தின் செல்வாக்கை அதிகரிப்பதாகவும் அத்திருத்தம் காணப்படுகின்றது.   

எனவே, இந்த 20ஆவது திருத்தத்தை 9 மாகாண சபைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுதல் என்ற முதலாவது தேவைப்பாட்டைக் கூட நிறைவேற்ற முடியாதவாறு அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது எனலாம். ஊவா, தென் மாகாண சபைகள், 20ஆவது திருத்தத்தை தோற்கடித்ததும் வட மாகாண சபை நிராகரித்ததும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை சிதறடித்துள்ளது.   

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தையும் கருத்தையும் கடந்த வார இறுதியில் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைத்திருந்தது.   

அதைச் சபாநாயகர் கரு ஜயசூரிய 19ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய வேளையில் அறிவித்தார். அதன்படி, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது என்றால், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பது மட்டுமன்றி, அதற்காக பொதுசன வாக்கெடுப்பு ஒன்றும் நடாத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் கூறியிருக்கின்றது.   
நாட்டில் ஒன்றிணைந்த எதிரணியின் பலம் அதிகரிப்பதான தோற்றப்பாடு, இனவாத செயற்பாடுகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றமை, சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப் போர் போன்ற பல காரணங்களை வைத்துப் பார்க்கின்ற போது, தேர்தல் ஒன்றை உடனடியாக எதிர்கொள்வதற்கு கூட்டு அரசாங்கம் அஞ்சுகின்றது.   

அவ்வாறு தேர்தல் ஒன்று இடம்பெற்றால் சு.க - ஐ.தே.க அதிகாரப் போரே பல்வேறு பாதிப்புகளைக் கொண்டு வரும். எனவே தேர்தல் ஒன்றுக்கே தயங்குகின்ற அரசாங்கம், 20 இற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றாலும் கூட, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்வது சிரமமானது. அதில் பல சவால்களும் சிக்கல்களும் உள்ளன.   

எனவேதான், கிட்டத்தட்ட 20ஆவது திருத்தத்தை கைவிடும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளதாக அனுமானிக்க முடிகின்றது. ஆனபோதும், குறிப்பாக மாகாண சபைகளின் தேர்தலை ஒரேநாளில் நடத்துவதிலும் அதைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் உத்தேசிக்கப்பட்டுள்ள திகதியில் இருந்து, ஒரு சில காலமாவது பின்தள்ளிவைப்பதிலும் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகத் தோன்றுகின்றது. அந்த அடிப்படையிலேயே, இன்னுமொரு ஆயுதமாக இப்போது மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் கையிலெடுக்கப்பட்டிருக்கின்றது என்றால் மிகையில்லை.   

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம், பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், மாகாண சபைத் தேர்தல் ஒன்றில் பெயர்குறித்து நியமிக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை சதவீத அடிப்படையில் வரையறை செய்கின்றது.   

அதாவது, ‘ஒவ்வொரு நியமனப் பத்திரத்திலும் காணப்படுகின்ற மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 30 வீதத்துக்கும் குறையாத பெண் வேட்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்’ என்பதை இது கட்டாயமாக்குகின்றது. அத்துடன் அவ்வாறில்லாத வேட்புமனுப்பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதற்கான ஏற்பாட்டையும் இது கொண்டிருக்கின்றது.   

இதேவேளை, இந்தச் சட்டமூலம் தொடர்பில், அதற்குப் பின்னர் குறைநிரப்பு என்ற அடிப்படையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ‘குறித்துரைக்கப்பட்ட திகதி ஒன்றிலிருந்து ஒரு வாரத்துக்குள் எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தலொன்றை (நடத்துதல்)’ எனத் திருத்தப்படுவதாக, மற்றுமொரு புதிய ஏற்பாடும் உள்வாங்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், இறுதியாக நாடாளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலம் மீதான வாசிப்பு இடம்பெற்ற வேளையில், மேலும் பல புதிய திருத்தங்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.   

புதிய தேர்தல் முறைமை, அதாவது தொகுதிவாரியையும் விகிதாசாரத்தையும் உள்ளடக்கிய கலப்பு முறைமை ஒன்றினூடாக, அடுத்த மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் அறிவித்திருந்தது.   

இந்நிலையில் அதற்கான சட்ட ஏற்பாட்டை மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் ஊடாக அரசாங்கம் கொண்டு வந்துள்ளது எனலாம். முன்னதாக, தொகுதிவாரிக்கும் விகிதாசாரத்துக்கும் இடையிலான விகிதத்தை 60:40 என உத்தேசித்த அரசாங்கம், சிறுபான்மைக் கட்சிகளின் கடைசிநேர அழுத்தம் காரணமாக குழுநிலை அரங்கில் வைத்து 50:50 என்பது உள்ளிட்ட புதிய திருத்தங்களோடு நிறைவேற்றியிருக்கின்றது. ஆனால், உண்மையிலேயே திருத்தங்கள் உள்வாங்கப்பட்டதா என்பதன் உண்மைநிலை சந்தேகமாகவே இருக்கின்றது.   

அரசமைப்பின் இருபதாவது திருத்தத்தை நிறைவேற்றுவது சாத்திமற்றுப் போன சூழலில், அதனூடாக அரசாங்கம் மேற்கொள்ள எதிர்பார்த்த ஒரு சில விடயங்களை சாதிப்பதற்கான ஒரு மாற்று ஆயுதமாகவே மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அமுலுக்கு வரவுள்ள 2017ஆம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தின் கீழ், ஒரே நாளில் தேர்தல் நடாத்துதல், 30 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம், கலப்பு தேர்தல் முறைமை போன்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளன எனலாம்.   

ஒரேநாளில் தேர்தல் நடாத்துவதாலும் அதுவும் புதிய முறைப்படி வாக்கெடுப்பு இடம்பெறுமானால், தேர்தல்கள் ஆணைக்குழு தம்மை தயார்படுத்திக் கொள்ளப் பல மாதங்கள் எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.   

டிசெம்பரில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த, தேர்தல்கள் ஆணைக்குழு நாட்குறித்திருந்தாலும், மார்ச் மாதமளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் எனப் பிரதமர் அறிவித்திருந்தாலும், தேர்தல்கள் இன்னும் தள்ளிப்போவதற்கு சாத்தியமிருக்கின்றது.   

அப்படி இடம்பெறுமாயின், தேர்தலை இழுத்தடித்தல் என்கின்ற, அரசாங்கத்தின் நோக்கமும் நிறைவேறும். ஆனால், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இது, எவ்விதமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போது நம்முன்னுள்ள வினாவாகும்.  

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்த முற்படுகின்ற போது, கிழக்கு உள்ளிட்ட சில மாகாண சபைகளின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் ஆளுநரின் கீழ், அல்லது மத்திய அரசாங்கத்தின் பலம் ஓங்கியிருக்கும். வேறு ஏதேனும் அடிப்படையில் அந்த மாகாண சபைகளின் ஆட்சி பல மாதங்களுக்கு நீடிக்கப்படலாம்.   
ஏனைய மாகாண சபைகள் முன்கூட்டி கலைக்கப்படாதவிடத்து, எல்லா சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துதல் என்ற சட்டத்தை கடைப்பிடிப்பதற்காக, காலம் முடிவடைந்த சபைகளுக்கு இரண்டு வருடம் வரை தேர்தல் தள்ளிப்போகவும் வாய்ப்பில்லாமல் இல்லை. அவ்வாறு நடந்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும்.  

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கும், நியதிகளுக்கும் இணங்கி நடக்க வேண்டிய தேவைப்பாடு அரசுக்கு எழுந்துள்ள ஒரு சூழ்நிலையில், 30 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது இலங்கையிலும் தவிர்க்க முடியாததாகி இருக்கின்றது. 

ஆனால், யதார்த்த பூர்வமாகச் சிந்தித்தால், தமிழ்ச் சமூகத்திலும், விசேடமாக முஸ்லிம் சமூகத்திலும் 30 சதவீத பெண்களைத் தேர்தலில் களமிறக்குவது ஆரம்பகாலத்தில் பெரும் சிக்கல் வாய்ந்ததாகத்தான் இருக்கும். இது பற்றிச் சிந்திக்காமல், ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகள் அதை வரவேற்றிருப்பது மறுபுறத்தில் வேடிக்கையானதும் கூட.   

இதேநேரத்தில், புதிய கலப்பு முறை என்பது சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தினாலும் கூட, சிறுபான்மையினர் சிறுஅளவில் வாழும் பகுதிகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட வழிவகுக்கும்.   

விகிதாசாரத் தேர்தல் முறை மற்றும் வெட்டுப்புள்ளியால் கிடைத்த அனுகூலங்களை முழுமையாகத் தென்பகுதி முஸ்லிம்கள் பெற முடியாது போகலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

தொகுதிவாரி முறைமையை முதன்மையாகக் கொண்ட ஒரு தேர்தல் முறைமையின் கீழ், குறித்த தொகுதியில் பெரும்பான்மையாக வாழும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியின் வேட்பாளர்களே, தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றமையே, இதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.   

எனவே, இதைக் கருத்தில் கொண்டே சிறுபான்மைக் கட்சிகள் சில முயற்சிகளை ‘கடைசிக் கட்டத்தில்’ எடுத்திருக்கின்றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் அரச உயர்மட்டத்தினரைச் சந்தித்து, 60:40 என்ற விகித முறைமையால் சிறுபான்மையினருக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு குறித்து எடுத்துரைத்துள்ளனர்.   

சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு கிடைக்காவிடினும் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்றியே தீர்வது என்ற தோரணையில் அரசாங்கம் இருந்தது எனலாம். ஆனால், இந்த மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என்று, சட்டமா அதிபர் - சபாநாயகருக்கு அறிவித்தார்.   

எனவே, உடனடியாக மீண்டும் சிறுபான்மைக் கட்சிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கப் பேச்சுக்களை நடாத்தியுள்ளார். அதன்பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், த.மு.கூட்டணி போன்ற மேற்படி கட்சிகளும் ஐ.தே.க, சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இத்திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. பொது எதிரணி எதிர்த்துள்ளது. இரு சிறு தமிழ்க்கட்சிகளின் எம்.பிக்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்துள்ளனர்.   

சரியாக சிந்தித்தால், 60:40 என்றோ, அன்றேல் 50:50 என்றோ எந்தவொரு விகித அடிப்படை வந்தாலும், வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்றிருக்கையில், இச்சட்டமூலத்தை முழுமையாகத் திருத்த வேண்டும் என்றே சிறுபான்மைக் கட்சிகள் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.  

 அவ்வாறில்லாத பட்சத்தில், எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும். அதைவிடுத்து வழக்கம் போல வாக்குறுதியை நம்பி ஆதரவாக கையையுயர்த்தியுள்ளனர்.   

பிரதமருடனான சந்திப்பில், கலப்புத் தேர்தல் முறைமையின் கீழ், தொகுதிவாரிக்கும் விகிதாசாரத்துக்கும் இடையிலான விகிதத்தை 60இற்கு 40 என்ற அடிப்படையில் இருந்து, 50:50ஆக மாற்றியமைக்க அரசாங்கம் சம்மதித்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிறுபான்மைக் கட்சிகளுக்கு எவ்வாறான வாக்குறுதி வழங்கப்பட்டது என்றும், அவ் வாக்குறுதிக்கு அமைவாகப் புதிய திருத்தம் ஒன்று உண்மையாகவே உள்வாங்கப்பட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதா என்பதும் தெளிவற்றதாகவே உள்ளது. வாயால் கூறிவிட்டு திருத்தாமல் விட்டு விடுவார்கள் என்றே நமது அனுபவம் சொல்கின்றது.   

பெருந்தேசியக் கட்சிகள் பல தடவை சிறுபான்மை முஸ்லிம்களை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கின்றன. அரசாங்கம் தமது தேவையை முன்னிறுத்திக் கையிலெடுக்கின்ற இவ்வாறான ஆயுதங்களைக் கண்டும், அவர்கள் வழங்கும் வெற்று வாக்குறுதிகளை நம்பியும் முஸ்லிம் கட்சிகள் கையை உயர்த்திய சம்பவங்கள் உள்ளூராட்சி அதிகார சபை சட்டமூலம் வரை தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன.   

இணக்க அரசியல் என்ற பெயரில் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக வைத்திருக்கவே ஆட்சியாளர்களும் அவர்களின் விசுவாசிகளான சிறுபான்மைக் கட்சிகளும் பெரிதும் பிரயாசைப்படுகின்றன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X