2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாலைத்தீவு மையவாடியா?

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.எஸ்.எம். ஐயூப்

இலங்கையில், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மாலைத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாரா? 

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீத், தமது ‘டுவிட்டர்’ கணக்கில், வெளியிட்டு இருந்த ஒரு தகவலின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்துள்ளார். ‘இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயவின் வேண்டுகோளுக்கு இணங்க, கொவிட்-19 நோயால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகளை, மாலைத்தீவில் நடத்தும் விடயத்தில், இலங்கைக்கு உதவும் முகமாக, ஜனாதிபதி சொலிஹ் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்’ என ‘டுவிட்டர்’ கணக்கில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், தமக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கை அரசாங்கம், இந்தச் செய்தியை இதுவரை மறுக்கவில்லை. எனவே, ஜனாதிபதி அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்திருக்கிறார் போலும்! 
ஜனாதிபதி, அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்தாரேயானால், அவர், அதை மாலைத்தீவிடம் ஏன் விடுத்தார்? 

மாலைத்தீவு, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதாலா? 
அந்நாட்டில், மக்கள் குடியேறாத பல நூறு தீவுகள் இருப்பதாலா? 

மாலைத்தீவு, முஸ்லிம் நாடு என்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தால், அது, ‘உங்கள் ஆட்களின் சடலங்களை, நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்பது போலாகும். 

ஆனால், இலங்கை முஸ்லிம்கள் இலங்கைப் பிரஜைகளேயன்றி, மாலைத்தீவு பிரஜைகள் அல்லர். மலைத்தீவுக்கு, இந்த விடயத்தில் எவ்வித கடமைப்பாடும் இல்லை.

அதேவேளை, இது நடைமுறையில் கஷ்டமான விடயமாகும். உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்ளை, மாலைத்தீவுக்கு எடுத்துச் செல்வது விமானத்திலா, கப்பலிலா? அவ்வாறு ஜனாஸாக்களைக் கையாளும் போது, நோய் பரவும் அபாயம் இல்லையா? 

கொவிட்- 19 நோயால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதன் மூலம், நிலத்தடி நீர் மாசுபடும் என்பதே, இலங்கை அரசாங்கத்தினதும் அதிகாரிகளினதும் வாதமாகும். அவ்வாறாயின், மாலைத்தீவில் கொவிட்-19 நோயால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதால், அந்நாட்டு நிலத்தடி நீர் மாசடையாதா என்ற கேள்வியும் எழுகிறது.   

மாலைத்தீவு வெளிநாட்டு அமைச்சர், தமது அரசாங்கம் இலங்கையின் இந்தக் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்த போதிலும், இலங்கை முஸ்லிம்களோ, சர்வதேச சமூகமோ அதைப் பொருத்தமான நடவடிக்கையாகக் கருதவில்லை. சமயத்துக்கும் நம்பிக்கைச் சுதந்திரத்துக்குமான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீத், மாலைத்தீவின் இந்த அறிவிப்பை நிராகரித்தார். 

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்வதற்கான கோரிக்கை, இலங்கை முஸ்லிம்களிடம் இருந்தோ, அவர்களது விருப்பத்துடனோ வந்ததாகத் தெரியவில்லை என்றும் எனவே, இந்தச் செயற்பாடு இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை மேலும் அந்நியப்படுத்திவிடும் என்றும் ஐ.நா அதிகாரி, ‘அல் ஜஸீரா’ தொலைக்காட்சிக்கு வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்டு இருந்தார். 

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சரின் ‘டுவிட்டர்’ பதிவையடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கொங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்யும் யோசனையை நிராகரித்திருந்தார். 

‘மாலைத்தீவின் கரிசனை, இலங்கை விடயத்தில் அந்நாட்டின் சகோதரத்துவத்தையும் குறிப்பாக, இலங்கை முஸ்லிம்கள் மீதான அனுதாபத்தையும் வௌிப்படுத்துவதாக இருந்த போதிலும், தகனம் மட்டுமே என்ற தமது நியாயமற்ற கொள்கையை, இலங்கை அரசாங்கம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றே, நாம் கோருகின்றோம்’ என ஹக்கீம், இலங்கையிலுள்ள மாலைத்தீவு தூதுவருக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார். சமயத்துக்கும் நம்பிக்கைச் சுதந்திரத்துக்குமான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீத்தும் இதைப் பாராட்டியிருந்தார். 

மாலைத்தீவிலும் பலர், இந்த ஆலோசனையை நிராகரித்திருந்தனர். இது, ‘இஸ்லாமிய வீரம்’ என்ற போர்வையில், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை ஆதரிப்பதாகும் என, சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

‘இனத்தையும் மதத்தையும் பொருட்படுத்தாது, வெளிநாட்டவர்கள் மாலைத்தீவுக்கு வருவதையும் இங்கு மகிழ்ச்சியாகத் தங்குவதையும் நாம் வரவேற்கிறோம். ஆனால், கொவிட்-19 நோயால் இறப்போரது சடங்களை அடக்கம் செய்வதற்காக, மாலைத்தீவுக்கு கொண்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கையூம், தமது ‘டுவிட்டர்’ கணக்கில் குறிப்பிட்டு இருந்தார். இதுபோன்ற எதிர்ப்புகளால், தற்போது இரு நாடுகளும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைத்தீவில் அடக்கம் செய்யும் திட்டத்தைக் கைவிட்டு உள்ளதாகவும் ஒரு செய்தி கூறியது.

இவ்வாறானதொரு கோரிக்கையை, ஜனாதிபதி ஏன் விடுக்க வேண்டும்? கொவிட்-19 நோயால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை, அவர்களது உறவினர்களின் விருப்பத்துக்கு மாறாக எரிக்கும் அரசாங்கத்தின் கொள்கை, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சர்வதேச அமைப்புகளாலும் நிராகரிக்கப்பட்டும் கண்டிக்கப்பட்டும் வருகிறது. இது, உள்நாட்டில் ஓர் அரசியல் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. இது, வெறும் இனவாத முடிவு என்பது, இப்போது உலகமெங்கும் மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். 

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி, கொவிட்-19 நோயால் இறப்போரின் உடல்களைத் தகனம் செய்வதென்ற முடிவை, அரசாங்கம் எடுத்த உடனேயே, சர்வதேச மன்னிப்புச் சபை அதனை எதிர்த்தது. ‘நோய்த் தடுப்புக்கு, தகனம் கட்டாயமாக அவசியமாகிறது என்பதை நிரூபித்துக் காட்ட முடியாவிட்டால், இலங்கை அரசாங்கம், தமது நாட்டு சிறுபான்மை மக்கள், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் தமது உறவினர்கள் விடயத்தில், சமயக் கடமைகளை நிறைவேற்றுவதை மதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை, மன்னிப்புச் சபை, ஏப்ரல் மூன்றாம் திகதி அறிக்கை ஒன்றின் மூலம் வௌிப்படுத்தியிருந்தது.  

இதையடுத்து, 54 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின், இலங்கையிலுள்ள தூதுவர்கள், மே மாதம் 13 ஆம் திகதி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார்கள். தமது நாடுகள், பல்வேறு புவியியல் நிலைமைகளைக் கொண்ட நாடுகள் என்பதையும் கொவிட்-19 நோயால் உயிரிழப்போரின் ஜனாஸாக்கள் விடயத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டிகளையும் அவர்கள் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்கள். 

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுதந்திர நிரந்தர மனித உரிமை ஆணைக்குழுவும் நவம்பர் ஆறாம் திகதி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அடக்கம் செய்வதை, தடை செய்வதற்கான எவ்வித நியாயமான காரணமும் இல்லை என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

நவம்பர் 12 ஆம் திகதி, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார். அதில் ஓரிடத்தில், கீழ்காணுமாறு குறிப்பிடுகின்றார். ‘உலக சுகாதார நிறுவனத்தின் ஆதாரங்களின் அடிப்படையிலான வழிகாட்டியையும் சகல சமூகங்களினதும் உரிமைகளை மதிக்கும், பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டையும் கருத்தில் கொண்டு, கொவிட்- 19 நோயால் இறப்போரைப் பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் அடக்கம் செய்வதற்கு, அனுமதி வழங்கும் வகையில் தற்போதைய கொள்கை மாற்றப்படும் என நம்புகிறேன்’.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையகம், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு, இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும், தமது கவலையைத் தெரிவித்தது.

உள்நாட்டிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அடக்கம் செய்வதை எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்து, பலமுறை கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, வெளியிட்டு இருந்த அறிக்கையில், ‘மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, கொவிட்-19 நோயால் இறப்போரின் உடல்களை, அடக்கம் செய்வதால் பிறருக்கு எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை’ எனக் குறிப்பிட்டு இருந்தது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, உலகப் புகழ் பெற்ற வைரஸ்இயல் நிபுணரும் ‘சார்ஸ்’ வைரஸைக் கண்டு பிடிப்பதில் முக்கிய பங்காற்றியவரும் ஹொங்கொங் பல்கலைக்கழக பேராசிரியரும் இலங்கையருமான பேராசிரியர் மலிக் பீரிஸ், தெரிவித்த கருத்து முக்கியமானதாகும். “வைரஸ்கள் உயிருள்ள கலங்களில் மட்டுமே வாழும். இறந்த உடலில் அது வாழாது.  அவ்வாறு வாழ்ந்தாலும், மண்ணை ஊடறுத்துக் கொண்டு போகும் சக்தி, அதற்கு இல்லை” என்றும், அரச சார்புப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கூறியிருந்தார். 

இதற்கிடையே, உலகில் பல நாடுகளில், அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. எனவே, அரசாங்கம் தமது கொள்கையை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால், அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதானது, தாமும் பேரினவாதிகளும் அடையும் தோல்வியாகும் என, அரசாங்கம் கருதுகிறது போலும்! எனவேதான், மாலைத்தீவுக்கு சடலங்களை ஏற்றுமதி செய்வதைப் பற்றியும் கொங்கிறீட் சவக்குழிகளை அமைப்பதைப் பற்றியும், அரசாங்கம் சிந்திக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .