2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் கருத்தியலும் மேடைப் பேச்சுகளும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2017 நவம்பர் 29 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிப் பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு - கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமான மாவீரர் துயிலும் இல்லங்களில், அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது.

கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து, அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி, மாவீரர்களின் அர்ப்பணிப்பை, ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள். 

அலுவலகங்களுக்குள் மட்டும், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்திய, அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் கூட, மக்களோடு மக்களாக, மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி, இம்முறை வருகை தந்ததைக் காண முடிந்தது. அதுபோல, கடந்த ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்களையும் மாவீரர்களுக்கான பொதுச்சுடர் மேடைகளையும் ஆக்கிரமித்திருந்த சில அரசியல்வாதிகள் அதிலிருந்து கீழிறங்கி, மக்களுக்குப் பின்னால் நின்றதைக் காண முடிந்தது.  

மேலுள்ள விடயங்கள் மகிழ்வளித்தாலும், ‘மாவீரர்களை நினைவு கூருவதற்கான தகுதியை யார் யாரெல்லாம் கொண்டிருக்கின்றார்கள்? யாருக்கெல்லாம் அந்தத் தகுதி கிடையாது?’ என்கிற தரப்படுத்தல் கருத்தியலை முன்னிறுத்தும் செயற்பாடுகளும், புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மேடைப் பேச்சுகள் ஆக்கிரமித்திருந்ததும் எரிச்சலாக மிஞ்சியது.  

உரிமைகளுக்காக முப்பது ஆண்டு காலமாக, ஆயுதப் போராட்டத்தை மூர்க்கமாக முன்னெடுத்த தரப்பொன்று, அந்தப் போராட்ட வடிவத்தை மௌனித்த புள்ளியிருந்து, புதிய போராட்ட வடிவத்தை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. இது, நடைமுறை உலக அரசியலையும் கடந்த காலப் போராட்டப் படிப்பினைகளையும் உள்வாங்கியதாகவும் இருக்க வேண்டும்.   

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த எட்டரை ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியல், அந்தக் கட்டத்தை நோக்கி மிகமிக மெதுவாகப் பயணித்து வருகின்றது.  

 தற்போதைய பயணத்தை விரும்பியோ விரும்பாமலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையுமே வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பு மீதும், அதன் தலைமை மீதும் மக்கள் வெளிப்படுத்தும் அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னொரு பக்கம், கூட்டமைப்பு அழைத்துச் செல்லும் பாதையை நோக்கி, மக்கள் வேண்டா வெறுப்பாகவேனும் திரள்கின்றார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.  

இந்தநிலை, தமிழ்த் தேசிய அரசியலின் ஆரோக்கியமான கட்டம் என்று சொல்ல முடியாது. ஆனால், மாற்றுப் பாதையையோ, அல்லது புதிய பாதைகளுக்கான கட்டங்களையோ கடந்த எட்டரை ஆண்டுகளில் யாராலும், எந்தத் தரப்பாலும் வடிவமைக்க முடியவில்லை.   

அப்படியான நிலையில், தமது இயலாமைக் கட்டங்களை மறைப்பதற்காக, மாவீரர் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்கிற மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களை இன்னுமின்னும் உணர்ச்சிகரமான கட்டங்களாக மாற்றி, அதைக் கட்சிசார் அரசியலாக மாற்றுவதற்கான முனைப்புகளைச் சில தரப்புகள் செய்கின்றனவோ என எண்ண வேண்டியிருக்கின்றது. அதன்போக்கிலேயே, மாவீரர் தினத்தை யார் யாரெல்லாம் அனுஷ்டிக்க முடியும் என்கிற தரப்படுத்தல் கருத்தியலையும் அணுக வேண்டியிருக்கின்றது.  

‘தமிழீழம்’ என்கிற ஒற்றை இலக்கை நோக்கி, தமிழீழ விடுதலைப் புலிகள் பயணித்தாலும், சமஷ்டி பற்றிய அதிகாரப் பகிர்வு அரசியல் பற்றியும், உரையாடல்களை நடத்தியிருக்கிறார்கள்.   

விடுதலைப் புலிகளின் சார்பில், சமாதானப் பேச்சுகளை வழிநடத்தியிருந்த ‘தேசத்தின் குரல்’ அன்டன் பாலசிங்கமும் சமஷ்டி பற்றி வெளிப்படையாகவே உரையாடியிருக்கிறார்.   
அவரின் இறுதிக் காலங்களில், அது அதிகமாகவே நிகழ்ந்தும் இருக்கின்றது. ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சமஷ்டி பற்றிய உரையாடலே பிரதான இடம் வகித்திருந்தது.

 ‘தமிழீழம்’ என்கிற இலக்குக்காகப் போராடி வீழ்ந்தவர்களுக்குத் துரோகம் செய்யும் சந்தர்ப்பமாக, சமஷ்டி பற்றிய ஒஸ்லோ பேச்சுவார்த்தையைக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி, அப்போதே எழுந்திருந்தது. அந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்களும் வியாக்கியானங்களும் அப்போதும் அதிகளவாக முன்வைக்கப்பட்டிருந்தன.  

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான காலத்தில், சமஷ்டி அதிகாரப் பகிர்வு என்கிற கோரிக்கையைப் பிரதானமாகக் கொண்டே, அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பயணிக்கின்றன.  

அதையே, தமிழ் மக்களும் தமது பிரதான கோரிக்கையாகத் தற்போது வரிந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படியாயின், தமிழீழம் என்கிற ஒற்றை இலக்கை வைத்துப் போராடி வீழ்ந்த மறவர்களுக்கு, தமிழ்ச் சமூகம் ஒட்டுமொத்தமாகத் துரோகம் இழைப்பதாகக் கொள்ள முடியுமா? அதன்போக்கில், மாவீரர்களை நினைவு கூருவதற்கான தகுதியை தமிழ் மக்கள் இழந்து விட்டார்களா? என்கிற விடயத்தையும் இந்தத் தரப்படுத்தல் கருத்தியலாளர்கள் முன்வைக்க வேண்டும்.  

உலகம் பூராவும் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்களின் போராட்ட வடிவங்கள் மாறுகின்ற போது, அதன் தன்மைகளுக்கு ஏற்ப, ‘இலக்கின்’ எல்லைகள் சற்று மாறியே வந்திருக்கின்றன.   

அதன்போக்கிலேயே, தமிழ்த் தேசியப் போராட்டத் தளமும் தற்போது இருக்கின்றது. உலக ஒழுங்கையும் கடந்த காலப் படிப்பினைகளையும் உள்வாங்காத எந்தப் போராட்டத்தையும் உலகம் என்றைக்குமே விட்டு வைத்ததில்லை.  

ஆக, எல்லாவற்றையும் உள்வாங்கி, அதிக விட்டுக்கொடுப்பில்லாத அரசியலையே தமிழ்த் தேசிய அரசியலாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அந்தக் கட்டத்தை நோக்கி செல்வது என்பது, மாவீரர்களுக்கான துரோகமாகக் கொள்ள வேண்டியதில்லை.   
வீரமறவர்களின் ஆன்மாக்களுக்கு, அதை உணர்ந்து கொள்ளும் திறனும் நேர்மையும் அதிகமாகவே இருக்கும். 

அப்படியான நிலையில், தரப்படுத்தல் கருத்தியல் வழி, தமது குறுகிய அரசியலை முன்னெடுக்க நினைப்பது அபத்தமானது. அது, முன்னோக்கிய அரசியல் பயணத்தைப் பின்னோக்கி இழுக்கும் நிலை. தாயகத்தில் தமிழ் மக்கள் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்துத் தருணங்களிலும், தமிழ்த் தேசியப் போராட்டங்களின் சில முக்கியமான கட்டங்களைப் புலம்பெயர் தேசங்கள் தாங்கிப் பிடித்திருக்கின்றன.   

அவற்றில், மாவீரர் நினைவேந்தல் முக்கியமானது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தாயகத்தில் நினைவேந்தலுக்கான வெளிகள் முற்றாக அடைக்கப்பட்டன. அப்படியான நிலையில், தாயக மக்களின் பெரும் ஏக்கக் குமுறலைப் புலம்பெயர் நினைவேந்தல் நிகழ்வுகள் குறைத்திருக்கின்றன.   

ஆனால், இன்னொரு வகையில், அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் அரங்கேறும் காட்சிகள் மற்றும் குறுஅரசியல், தாயக மக்களை இன்னுமின்னும் பெரும் அழுத்தங்களுக்குக் கொண்டு சென்ற காட்சிகளையும் கடந்த எட்டு ஆண்டுகளில் கண்டிருக்கின்றோம்.  

புலம்பெயர் அமைப்புகளுக்கிடையிலான குறு அரசியலும் அடிதடிகளும் இப்போதைக்கு நிற்கப்போவதில்லை என்ற நிலையில், தாயகத்திலிருந்து அதுபற்றி கவலைப்படவும் முடியாது. ஏனெனில், கவலைப்படுவதற்கு ஆயிரமாயிரம் விடயங்கள் இங்கு இருக்கின்றன.   

ஆனால், புலம்பெயர் தேசத்து மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஆக்கிரமிக்கும் மேடைப் பேச்சுகள் பெரும் எரிச்சலை மாத்திரமல்ல, போராட்டத்தின் மாவீரத்தை, ஏதோ விளம்பரம் செய்வது போன்றதொரு தோரணையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.  

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உரையே பிரதானமானது. பிரித்தானியாவில், அன்ரன் பாலசிங்கமும் தலைவரின் உரை ஒலிபரப்புக்குப் பின்னர், உரையாற்றி வந்திருக்கின்றார்.   

வேறு யாரின் உரைகளுக்கும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் இடமில்லை. இதுதான், அதன் அடிப்படை வடிவமாகவும் இருந்திருக்கின்றது. தலைவரின் உரைக்கான வாய்ப்புகள் இல்லாத கடந்த எட்டு ஆண்டுகளிலும், அதையே தாயகத்திலுள்ள மக்கள் பிரதிபலிக்கின்றார்கள். வேறு யாரையும் உரையாற்ற அனுமதிப்பதில்லை.   

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவீரர் தினத்தை வெளிப்படையாக அனுஷ்டிப்பதற்கான வெளி உருவாகிய போதிலும், தலைவர் பிரபாகரனின் உரைக்கான வெற்றிடத்தைச் சிலர் கைப்பற்ற முயற்சித்த போதிலும், அதை மக்கள் மிக மூர்க்கமாகத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.  

அப்படியான நிலையில், புலம்பெயர் தேசத்து மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக, தமிழகத்திலிருந்தும் வேறு பகுதிகளிலிருந்தும் மேடைப் பேச்சாளர்கள் அழைக்கப்படுவது ஏற்புடையதல்ல. அதுவும், அந்த மேடைப் பேச்சாளர்களின் தொனியும் பேசும் விடயங்களும் மக்களை எரிச்சல்படுத்துகின்றன.  

 புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெருமளவான மக்கள், இந்த மேடைப் பேச்சுகளுக்கு அதிருப்தி வெளியிட்டு வருகின்ற நிலையில், ஏற்பாட்டாளர்கள் ஏன் தொடர்ந்தும் இந்த மேடைப் பேச்சாளர்களை அழைத்து வருகின்றார்கள் என்று தெரியவில்லை.   

மாறாக, அவர்களை அழைத்து வருவதற்காகச் செலவிடும் பணத்தை, இன்னொரு நல்நோக்கத்துக்காகவும் பயன்படுத்த முடியும் என்கிற விடயமும், மேல் நோக்கி வருகின்றது. ஏனெனில், இந்த மேடைப் பேச்சாளர்கள் தான், எமது போராட்டத்தைப் பற்றியும் மாவீரர்களின் அர்ப்பணிப்புப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை.  

எப்போதுமே அதிகமாகப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு, ஒப்பீட்டளவில், அதிகம் பாதிக்கப்படாத தரப்பொன்று முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கையில், தாயக மக்களுக்கு முன்மாதிரியாக, புலம்பெயர் தேசமே இருக்க வேண்டும்.   

ஆனால், இங்கு எல்லாமும் மாறியே இருக்கின்றன. தாயக மக்களின் மனங்களோடு இணைய முடியாத புலம்பெயர் அமைப்புகளும் அதன் செயற்பாட்டாளர்களும் ஏதோ தனிப்பயணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால், புலம்பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்குமான இடைவெளியின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.   

அப்படியான கட்டங்களை, இந்த மேடைப் பேச்சுகள்தான் ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மை. எதிர்வரும் காலத்திலாவது இதைச் சம்பந்தப்பட்ட தரப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X