2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முடிவுற்றும் முடிவுறாத மல்லர் விசாரணை

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

கடந்த வார இறுதிப்பகுதியில் மல்லரின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை விசாரணையின் அடிப்படையில் 37 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதுடன், அதில் 7 பேர் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இது தவிர, குறித்த மல்லரின் 300 பக்க விசாரணை அறிக்கை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டமையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நேரடியான தொடர்பில்லை எனக் கூறிய போதிலும், நீதித்துறைக்கு களங்கம் விளைவித்தமைக்கு அவர் குற்றம் சாட்டப்பட்ட முடியுமா என்பது தொடர்பில் ஒரு முடிவான விடயம் கூறப்படவில்லை என்றே ஐக்கிய அமெரிக்காவின் சட்டமா அதிபர் காங்கிரஸுக்கு அறிவித்துள்ளார்.

இங்கு, மல்லரின் அறிக்கை இன்னமும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், கடந்த புதனன்று, குறித்த அறிக்கையை காங்கிரஸுக்கு தாக்கல் செய்யுமாறு நீதி அமைச்சுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ட்ரம்ப்பினது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் குழுவுக்கும் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலையிட ரஷ்யா முயன்றது என்ற குற்றச்சாட்டுக்களுக்கும் இடையிலான தொடர்புகளை விசாரிக்கும் ஒரு சிறப்பு வழக்கு தொடருநராக மல்லரை நியமிப்பதாக பிரதி சட்டமா அதிபர் ஜெனரல் றொட் றொஸன்டைன் 2016இல் அறிவித்திருந்தார். குறித்த நியமனத்தை தொடர்ந்து மல்லர் தனது சட்டபூர்வமான அதிகாரத்தின் கீழ், குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை தொடங்கியிருந்திருந்தார். அதன் படி, ஏற்கனவே ஐக்கியஅமெரிக்க நாடாளுமன்ற பல குழுக்களால் ஜனாதிபதி தேர்தலிலான ரஷ்யத் தலையீடு பற்றிய விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும் இந்நிலையில் - குறிப்பாக ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான சாத்தியமான கூட்டணி பற்றிய விசாரணைகளின் ஒரு பகுதியாகவும், குற்றவியல் நடைமுறை அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யும் வண்ணமும், தேர்தலிலான நிதிப்பரிவர்த்தனை, இரகசிய புலனாய்வு தொடர்பான ஆய்வு, சாட்சிகள் முன்வைத்தல் அடிப்படையில் குறித்த இவ்விசாரணை ஏற்கெனவே அமெரிக்க அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பெருமளவான தாக்கத்தை செலுத்தியிருந்தது.

குறித்த விசாரணை, மல்லர் குழுவின் நியமனத்துக்கு முன்னராகவே தேசிய விசாரணைக்கான ஆணைக்குழுவால் (FBI) 2016 மார்ச் அளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இது அடிப்படையாக ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் உள் மின்னஞ்சல்களை திருடியது, அம்மின்னஞ்சல்களில் உள்ள இரகசியத் தகவல்களை கசியச்செய்தமை (hacking and leaking internal emails) தொடர்பிலேயே கவனம் செலுத்தியது. மேலதிகமாக, தேசிய புலனாய்வு ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவினது தலையீடு நடந்திருப்பதற்கான வாய்ப்புக்கள், சந்தர்ப்பங்கள், அது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் அல்லது அவரது தேர்தல் பிரசாரக் குழுவுக்கு உள்ள தொடர்புகள் தொடர்பிலும் விசாரணைகளை விரிவாக்கம் செய்திருந்தது. இது தொடர்பில் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA), தேசிய பாதுகாப்பு முகமை (NSA), கருவூலத் திணைக்களத்தின் நிதியியல் குற்றவியல் பிரிவு ஆகியவற்றின் உதவிகள் பெறப்பட்டமையுடன் அவை ரஷ்ய மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்பினது தேர்தல் பிரசாரக் குழுக்கிடையிலான நிதி பரிவர்த்தனை, ரஷ்ய தகவல் தொடர்புகள் தொடர்பில் ஆய்வு செய்திருந்தது.

அந்நிலையில் தேசிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராகவிருந்த ஜேம்ஸ் கோமி குறித்த விசாரணைகளை மேற்பார்வை செய்திருந்ததுடன், அவரே உச்ச நீதித்துறை அதிகாரிகளோடு இறுதியில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படுமா என்பதை முடிவு செய்வது தொடர்பில் பணியாற்றியிருந்தார். எனினும், கோமி அவர்கள் மே 9ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்பால் பதவிநீக்கப்பட்டிருந்தார். இது ஜனாதிபதி டிரம்ப் ரஷ்யாவின் தலையீடு தொடர்பிலான விசாரணையை FBI கையாள்வதில் கொண்டிருந்த மகிழ்ச்சியற்ற தன்மை, கோமி அவர்கள் தனிப்பட்ட முறையில் ட்ரம்புக்கு அவரது விசுவாசத்தை உறுதியளிக்காமையின் விளைவாகவே ஏற்பட்டது என கோமி மற்றும் பத்திரிகைகள் காட்டமாக முன்வைத்ததைமையை தொடந்தே, மல்லர் குறித்த விடையம் தொடர்பில் விசாரிக்கவும், அறிக்கை வெளியிடவும், வழக்கு தொடுத்தலுக்கான சந்தர்ப்பங்களை முடிவெடுக்கவும் விசேட வழக்குதொடுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னணியிலேயே அடிப்படையில் ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை திருடியமை, கசியச்செய்தமை, ஜனாதிபதி ட்ரம்ப்பினது மகன் டிரம்ப் ஜூனியர் ஜூன் மாதம் 2016ஆம் ஆண்டு ரஷ்ய வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்தியமை, பிரதான மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை இலக்குவைத்து போலியான பிரச்சாரங்களை முன்னெடுக்க ரஷ்யா முயன்றிருந்தமை அல்லது போலியான பிரச்சாரங்கள் மேற்கொண்டிருந்தமை, தேர்தல் தொடர்பான கணினிகள் ஊடுருவப்பட்டு தகவல்கள் மற்றும் வாக்குக்கள் மாறியிருந்தமைக்காக வாய்ப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலதிகமாக, ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னராக ஜனாதிபதி ட்ரம்ப் கூட்டாளிகளிடமிருந்து நிதிப் பரிவர்த்தனைகள் ரஷ்யாவுக்கு மேற்கொண்டிருந்தமை, ஜனாதிபதியோ அல்லது அவரது அலுவலகத்தில் மேல்நிலை மட்டங்களில் இப்போதிருக்கும், அப்போது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் ஏதேனும் வழியில் நீதிக்குத் தடை செய்ய முயன்றார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் செய்வது மற்றும் அது தொடர்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இதனடிப்படையில் இதுவரை ஜனாதிபதி ட்ரம்ப்பினது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட அல்லது ட்ரம்ப்பினது அரசாங்கத்தில் பணியாற்றிய பின்வரும் மூன்று உயர்நிலை அதிகாரிகள் தமது நீதிக்கு புறம்பான செயல்பாடு தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அமெரிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் பிளின், FBI க்கு ரஷ்ய தொடர்பிலான விசாரணைகளில் தான் பொய் உரைத்ததாக தெரிவித்திருந்தமை, அதன்பிரகாரம் ரஷ்யா, ஜனாதிபதி ட்ரம்ப்பினது தேர்தல் பிரசாரக் குழுவுக்கு இடையில் தொடர்பாடல்கள் நடந்திருத்தமை மற்றும் தனக்கும் அமெரிக்காவுக்கான ரஷ்யாவினது இராஜதந்திர தூதுவருக்கு இடையிலான தொடர்பாடலை உறுதிப்படுத்தியிக்கின்றமை, அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில் மீண்டும் ஒருமுறை பதவிக்காலத்துக்கு முன்னராக இன்னுமொரு ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யப்படுவாரோ என்ற நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .