2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா?

Gopikrishna Kanagalingam   / 2018 மார்ச் 08 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கிழக்கிலும் மத்தியிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள், அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருண்டதொரு யுகத்துக்கு, நாடு மீண்டும் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை, இவ்வன்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.  

இந்த வன்முறைகளின் உயிரிழப்புகளும் அழிவுகளும் பாதிப்புகளும் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தாமதமான, போதுமற்ற நடவடிக்கைகள், அதிக ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன.  

அண்மைய நாட்களில், அம்பாறையில் ஆரம்பித்த வன்முறைகள், பெருமளவுக்குப் பரவியிருந்தன. பின்னர், கண்டியில் இவ்வன்முறைகள் தொடர்கின்றன. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், வன்முறைகளை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்த பின்னர் தான், சிறிய சிறிய விடயங்களைப் பயன்படுத்தி, வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கண்டியிலும், தாக்குதலில் காயமடைந்திருந்தவர் எப்போது உயிரிழப்பார் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் போல, வன்முறைகளைத் தொடங்கியிருந்தனர். எனவே, இவை திட்டமிட்ட வன்முறைகள் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை. 

இதே குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவாகிய அநுர குமார திஸாநாயக்கவும் முன்வைத்திருந்தார். சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்லவும், அரசாங்கத்தின் தோல்வி என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். வன்முறைகள் இடம்பெறப் போகின்றன என்ற தகவல்கள் கிடைத்திருந்தன என்றும், அவற்றின் பின்னரும் அவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டது என்றும், அமைச்சர் கிரியெல்ல ஏற்றுக் கொண்டிருந்தார்.  

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும், இப்படியான வன்முறைகள் ஏற்பட்டிருந்தன. அப்போது, அவ்வன்முறைகளைத் தடுப்பதற்கு, அவ்வரசாங்கம் விரும்பியிருக்கவில்லை என்ற நியாயமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இப்போதைய அரசாங்கத்தின் மீது, அப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஏனென்றால், இப்படியான சூழ்நிலைகளில், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமாயின், பிரதானமாக இரண்டு காரணங்களே காணப்படக்கூடும். ஒன்று, வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. இரண்டு, வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான திறனை, அரசு கொண்டிருக்கவில்லை.  

முன்னைய மஹிந்த அரசாங்கத்தில், முதலாவது விடயமே அதிகமாகக் கூறப்பட்ட விடயமாக இருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தில், அரசாங்கத்துக்கு விருப்பமின்மை என்பது காரணமாக இருந்தாலும், பிரதானமான காரணமாக, அரசாங்கத்துக்குத் திறனில்லை என்பதே காணப்படுகிறது.  

இவ்வன்முறைகளை, அரசாங்கம் தான் ஏற்பாடு செய்தது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது, ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த கருத்து, இவ்வரசாங்கத்தின் நிலைமையை, நகைச்சுவையாகவும் தெளிவாகவும் கூறியது: “ஒரு பிரதேச சபையையாவது கைப்பற்றுமளவுக்கு, அரசாங்கம் ஒழுங்குபடுத்தலுடன் செயற்பட்டிருந்தால், ‘அரசாங்கம் தான் இந்த வன்முறைகளை ஒழுங்குபடுத்தியது’ என்பதைக் கூறுவது இலகுவாக இருக்கும்”.  

வெவ்வேறான இரண்டு கட்சிகள் இணைந்த அரசாங்கமாக இருப்பதனால் என்னவோ, தெளிவான தகவல்களை வழங்குவதற்கும் தெளிவான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அரசாங்கம் தடுமாறி வந்ததை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, வன்முறைகளைத் தொடர்ந்து, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது என, அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்கவும் மனோக கணேசனும், ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், “தேவைப்படின் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார். இதன் காரணமாகவே, உண்மையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டதா, இல்லையெனில் பிரகடனப்படுத்தப்பட சிந்திக்கப்படுகிறதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இவ்வரசாங்கத்தின் காலத்தை ஆராய்ந்து பார்த்தால், விடயங்களைத் திட்டமிட்டுச் செய்வதில், இது தடுமாறி வந்திருக்கிறது என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

வன்முறைகளுக்கான சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றாலும், அது தொடர்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. வன்முறைகள் தொடங்கிய பின்னரும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மாறாக, வன்முறையைத் தலைமை தாங்கி நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்படுவோரின் புகைப்படங்கள், தாராளமாக அடையாளங்காணப்பட்டுப் பரப்பப்பட்டிருக்கின்றன. எனவே, அவர்களைக் கைது செய்திருந்தாலோ அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தியிருந்தாலோ, நிலைமைகள் ஓரளவுக்கு சீராகியிருக்கக்கூடும்.  

அதேபோல், வன்முறைகள் பரவும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, போதுமான நடவடிக்கைகளை எடுக்காமலிருந்துவிட்டு, தற்போது, கண்டியின் பல பகுதிகளிலும், அலைபேசி மூலமான இணைய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்திலேயே, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கட்டுப்படுத்துவது என்பது, தோல்வியடைந்த ஆட்சியமைப்பின் ஓர் அடையாளமே ஆகும்.  

இலங்கையின் இருக்கின்ற சட்டங்களைக் கொண்டு, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இருக்கின்றன. ஏனென்றால், இவ்வன்முறைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சரான மங்கள சமரவீர, “போதும். இனரீதியான வன்முறைகளைத் தூண்டுதல், பிணை வழங்கப்பட முடியாத குற்றமாக மாற்றப்பட வேண்டும். அவ்வன்முறைகளுக்குத் தலைமை வகிக்கும் அரசியல்வாதிகளின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கைச் சட்டத்தின்படி, இனரீதியான வன்முறைகளைத் தூண்டுதல் என்பது, பிணை வழங்கப்பட முடியாத குற்றமாக, ஏற்கெனவே காணப்படுகிறது. எனவே, அரசாங்கத்துக்குத் திறனில்லை என்ற கருத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே, இக்கருத்தும் அமைந்து போனது.  

ஆனால், திறனில்லை என்பது, வன்முறைகளை அனுமதிப்பதற்கான நியாயப்பாடு கிடையாது. அரசாங்கமாக இருந்தால், நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அக்கடமையைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால், அவ்வரசாங்கம், பதவியில் இருப்பதற்குப் பொருத்தமற்றது.  

இதைத் தான், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.ஏ. சுமந்திரன், தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத் தலைவர்களுக்கு முதுகெலும்பில்லை எனக் கூறியதோடு, “சரியான ஒன்றுக்காக உங்களால் ஆதரவாக நிற்க முடியாவிட்டால், நாட்டில் எண்ணிக்கையில் குறைவான சமூகங்களுக்காக உங்களால் ஆதரவாக நிற்க முடியாவிட்டால், ஆளுவதற்கான எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது” என்று அவர் தெரிவித்திருந்தார்.  

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் நாடாளுமன்ற உரையும், முக்கியமானதாக அமைந்தது. இலங்கையின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினை காணப்படுகிறது என்றும், அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயல வேண்டும் எனவும் கோரியிருந்தார்.   

இதில், ஒரு விடயத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. முஸ்லிம் தலைவர்களை விட, தமிழ்த் தலைவர்கள், இவ்விடயம் தொடர்பான தெளிவான புரிதல்களை முன்வைத்திருந்தமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இலங்கையின் ஆட்சியாளர்களால், காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்த சமூகங்கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அது இருக்கலாம், ஆனால், இலங்கையின் கட்டமைப்பு ரீதியான இனவாதப் பிரச்சினை இருக்கிறது என்பதை, உரத்துக் கூறியதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.  

இது, இன்னொரு பாடத்தையும் சொல்லிச் சென்றிருக்கிறது: சிறுபான்மை இனங்களுக்கிடையில் எவ்வளவு வேறுபாடுகள் காணப்பட்டாலும் கூட, அந்த வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாகக் காணப்படுவது தான், காலத்தின் தேவையாக இருக்கிறது. அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை, சிறுபான்மை இனங்களின் கடமையாக இருக்கிறது.  

ஏனென்றால், இலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள், சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாக இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களை வெறுக்கின்ற அரசாங்கமாக இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களைச் சரிசமமாக நடத்தப் போவதில்லை, அவர்களை உடனடியாகக் காப்பாற்றப் போவதில்லை என்பது, வெளிப்படையாகத் தெரிகிறது.

எனவே, முதுகெலும்பில்லாத அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மைகளை விரும்பாத அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒன்று தான், அம்மக்களைக் காப்பாற்றப் போகிறது என்பது, வெள்ளிடை மலை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .