2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் அரசியலில் பேஸ்புக் ‘போராளிகள்’

மொஹமட் பாதுஷா   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்கள் என்பது, ஒரு போதையாகவும் அதேநேரத்தில் எல்லா விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் மாறியிருக்கின்ற ஒரு காலத்தில், இலங்கை முஸ்லிம் அரசியலில், அதனது வகிபாகம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.  

நல்லதொரு நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல கண்டுபிடிப்புகள், பிற்காலத்தில் மோசமான எதிர்விளைவுகளைக் கொண்டு வந்தன. அவ்வாறே ‘பேஸ்புக்’ போன்ற, சமூக வலைத்தளங்களின் முறைகேடான பாவனையும் சமூகத்தில் மட்டுமன்றி, அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.  

ஒரு காலத்தில், ஊடகவியலாளர்களாலேயே தொடர்புகொள்ள முடியாதிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பொது சனங்களுக்கு, ஊடகங்கள் ஊடாகச் செய்தியொன்றைச் சொல்வதற்குப் பின்வாங்கிய முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இன்று, குறிப்பாக ‘பேஸ்புக்’ இன் ஊடாகச் சிறிய சம்பவங்களையும் பதிவு செய்து, பகிரங்கப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.   

முன்னொருபோதும் இல்லாதவாறு, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக, கணிசமான அரசியல்வாதிகள், கண்மூடித்தனமாக ‘பேஸ்புக்’ ஐ இன்று நம்புகின்றார்கள்.   

ஜனநாயக நாடொன்றின் நான்காவது தூண் ஊடகம் என்றும், அதனால் எதையும் மாற்றியமைக்க முடியும் என்பதையும் இளக்காரமாகப் பார்த்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூட இன்று, ‘பேஸ்புக்’க்காக நிறைய நேரத்தையும் பொருளையும் செலவு செய்கிறார்கள். இதைப் பார்க்கின்ற போது, காலமாற்றம் அவர்களை, எந்தளவுக்கு மாற்றியிருக்கின்றது என்பது, வினோதமாக இருக்கின்றது.   

இன்று, உலகளவில் சமூகவலைத்தளங்களின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்றது. சமூக மாற்றம் தொடக்கம், ஆட்சி மாற்றம் வரையில் அனைத்துவிதமான முன்னெடுப்புகளுக்கும் ஒரு முக்கிய கருவியாக ‘பேஸ்புக்’ பயன்படுத்தப்பட்டு வருகின்றது.   

விவசாயி தொடக்கம், அமெரிக்க ஜனாதிபதி வரையும் இதில் ஈடுபாடு காட்டுகின்றனர். ‘பேஸ்புக்’ மூலமாகப் பல முற்போக்கான மாற்றங்கள் உலகிலும் இலங்கையிலும் இடம்பெற்றிருக்கின்ற போதிலும் கூட, அது என்ன நோக்கத்துக்காக மார்க் ஸக்கர்பேர்க்கால் உருவாக்கப்பட்டதோ, அதற்கு மாற்றான, முறைகேடான காரியங்களுக்கான ஊடகமாக, அது பயன்படுத்தப்படுவதற்கு வாழும் சாட்சிகள், நானும் நீங்களும்தான்.   

அந்தவகையில், இலங்கையில் முஸ்லிம்களைச் சார்ந்துள்ள அரசியலில், ‘பேஸ்புக்’ இன் செல்வாக்கு, முன்னரை விட அதிகரித்து வருகின்றது. முஸ்லிம் தலைமைகள் தொடக்கம், உள்ளூர் அரசியல்வாதிகள் வரை, தமக்கான உத்தியோகபூர்வ ‘பேஸ்புக்’ பக்கங்களையும் சினிமா பிரபலங்களுக்கு இருப்பது போன்ற ‘லைக்’ பக்கங்களையும் நடத்தி வருகின்றனர்.   

அன்றாடம் நடக்கின்ற சம்பவங்களையும் சிறியபெரிய நிகழ்வுகளையும் தமது கட்சியின் பார்வையாளர்களுக்குப் ‘பேஸ்புக்’ ஊடாகப் பதிவேற்றம் செய்கின்றனர்.   

‘பேஸ்புக்’ இல் ஒரு புகைப்படத்தைப் போட்டுவிட்டு, ‘லைக்’ (விருப்பம்), ‘செயார்’ (பகிர்வு)களுக்காகக் காத்திருக்கின்ற ஒரு சாதாரண பயனாளியைப் போல, பெரிய அரசியல்வாதிகளும் சின்னச்சின்ன விடயங்களையெல்லாம் ‘பேஸ்புக்’ ஊடாக இன்று  பகிர்ந்து கொள்வதைக் காண முடிகின்றது.   

முஸ்லிம் சமூகம், பெரும் அபிலாஷைகளைக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில், அந்த மக்களது அரசியல் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறாதிருக்கின்ற நேரத்தில், ஒரு சிறிய நிகழ்வை ‘பேஸ்புக்’கில் போட்டுவிட்டு மகத்தான சாதனை போலக் காட்ட நினைப்பதைப் பார்க்கும் போது, என்னவோ போலிருப்பதுண்டு.   

ஏதோ, முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷையை நிறைவேற்றி விட்டதாக, முஸ்லிம்களுக்கான அரசியலின் நோக்கத்தில், காததூரத்தைக் கடந்துவிட்ட தோரணையில், சில அரசியல்வாதிகளின் பதிவுகள் இருக்கக் காண்கின்றோம்.   

இது ஒருபுறமிருக்க, ‘பேஸ்புக்’கில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவருக்கு, அமைச்சருக்காகப் பரிந்து பேசுகின்ற, ‘ஜால்ரா’ அடிக்கின்ற, சாமரம் வீசுகின்ற, ஒத்துஊதுகின்ற ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்களை ‘பேஸ்புக் போராளிகள்’ என்று செல்லமாக அழைக்கின்றார்கள்.   

முதலாவதாக, போராட்டம் என்பதை என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். பலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்வதுதான் போராட்டம். நமது சகோதர இனமான தமிழர்கள் இன்னும் சாத்வீக வழியில் முன்னெடுத்துக் கொண்டிருப்பதும் போராட்டத்தின் ஒரு வடிவமே.   

அடுத்ததாக, முஸ்லிம்களின் இன்றைய அரசியல், போராட்ட குணத்தோடு பயணிக்கின்றதா என்பதையும் நோக்க வேண்டியிருக்கின்றது. அவ்வாறு, முஸ்லிம் அரசியலே போராடும் தன்மையுடன் முன்செல்லாதவிடத்து, அங்கு போராளிகள் என்று ஒரு வகையினர் இருக்க வாய்ப்பில்லை.   

முஸ்லிம்கள், இலங்கையில் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள்; ஆங்கிலேயருக்கு எதிராகவும் நாட்டின் இறைமைக்காகவும் போராடினார்கள்; கடும்போக்குவாதத்துக்கு எதிராகப் போராடினார்கள்; இன்றும் சிலர் அதே குணத்தோடு இருக்கின்றனர்.   

விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற, தமிழ்க் கட்சிகளில் இணைந்து கொண்டு, சிறுபான்மை மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்கள். இவர்களை ஒரு வகையில் ‘சமூகப் போராளிகள்’ என்று சொல்ல முடியும்.   

முஸ்லிம் இளைஞர்கள், முப்படைகளிலும் இணைந்து நாட்டுக்காக போராடினார்கள்; போராடிக் கொண்டிருக்கின்றார்கள். சமகாலத்தில், தமிழ் இனத்தின் அபிலாஷைகளை  நிறைவேற்றுவதற்காகப் பெருமளவிலான முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள், ஈரோஸ், ஈ.பி.டி.பி உள்ளிட்ட எல்லா இயக்கங்களிலும் இணைந்து, ஆயுதமேந்திப் போராடி, தமிழ் மக்களின் கனவுக்காகத் தங்களைப் பலியாக்கினர். இவர்கள் மீதான விமர்சனங்களை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால், இவர்களையும் போராட்டக்காரர்கள் எனச் சொல்ல இடமுண்டு.   

முஸ்லிம் அரசியலில், போராளிகள் என்று இப்போது அழைக்கப்படுகின்ற பண்பியல்புகளைக் கொண்ட செயற்பாட்டாளர்கள், 80களில் உருவானார்கள் எனலாம். அதாவது, தமிழர் அரசியலில் இருந்து விலகி, மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் போன்றோர், தனித்துவ அடையாளத்தோடு செயற்பட முற்பட்ட வேளையில், முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.   

பெருந்தேசியம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் சக்திகளோடு, மல்லுக்கு நிற்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்த சமகாலத்தில், தமிழ் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலும் மேலெழுந்தது.  

முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை ஸ்தாபிக்க வேண்டியிருந்த வேளையில், ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரின் பெயர்கள் ‘இலக்குப் பட்டியலில்’ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்ததுடன் ஒருசிலர் மீது குறிவைக்கவும் பட்டது. அத்தோடு, முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியானது.   

இத்தனைக்கும் மத்தியிலேயே, தனித்துவமான அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டியிருந்ததுடன், முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையும் இருந்தது.   

முஸ்லிம் அரசியலில், ‘போராளிகள்’ என்ற சொற்பதத்தின் பிரயோகம், இவ்விடத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது என்றால் மிகையில்லை. முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை நிறுவுவதற்காக, உயிர் அச்சுறுத்தலையும் மீறிப் பாடுபட்ட அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களையும் முஸ்லிம் கட்சிக்காகத் தமது சொந்தப் பணத்தை, உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தவர்களையும் அதேபோன்று, அக்காலத்தில் முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்புக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கடமையில் ஈடுபட்ட அரசியல்கட்சிசார் காவல்வீரர்களையும் இந்தப் போராளிகள் என்ற வகுதிக்குள் அடக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.   

மாறாக, உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட காலத்தில் ஓடி ஒளிந்து கொண்டவர்களோ, எல்லா அச்சுறுத்தல்களும் ஓய்ந்தபின் சிம்மாசனத்தில் அமர்ந்தவர்களோ, சமூக சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் கொந்தராத்துக்காக, தொழிலுக்காக, பணம், பொருள் சம்பாதிப்பதற்காக அரசியல்வாதிகளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்களோ, போராளிகள் என்ற வகைக்குள் உள்ளடக்க முடியாதவர்கள்.   

வேண்டுமென்றால் ‘கட்சி ஆதரவாளர்கள்’ என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், மேற்சொன்ன எல்லா வகையினரும், இன்று தம்மை அரசியல் விடுதலைப் போராளிகளாகக் காட்டிக் கொள்ள முனைவதை அவதானிக்க முடிகின்றது. இதில் ஓர் உப பிரிவினராகவே ‘பேஸ்புக் போராளிகள்’ என, நாம் சொல்கின்ற ‘முகநூல்’ செயற்பாட்டாளர்களை வகைப்படுத்த முடிகின்றது.   

இன்றிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கும், அரசியல் கட்சிகளைச் சார்ந்திருப்போர் பலருக்கும், இந்த அடைமொழி பொருத்தமற்றது. சரியாகப் பார்த்தால், உண்மையான சமூக நோக்கமின்றி, வெறுமனே கட்சிசார்பு, அரசியல் தலைவர் சார்பு, ஊர் சார்பு நிலைப்பாடுகளை எடுக்கின்றவர்களையும் கண்மூடித்தனமாகத் தமது ஆஸ்தான அரசியல்வாதியை நம்புகின்றவர்களையும் அந்த நிலைப்பாடுகளை, ‘பேஸ்புக்’கில் வெளியிட்டு, சகட்டுமேனிக்கு வாதாடுகின்றவர்களையும் உண்மைப் போராளிகள் என்ற வகுதிக்குள் அடக்க முடியாது.   

வேண்டுமென்றால் அவர்களை, ஒரு தலைவரின், கட்சியின், அரசியல்வாதியின் ஆதரவாளர்கள், தீவிர விசிறிகள், தொண்டர்கள், ஆதரவுக் குழுக்கள், உறுப்பினர்கள் என்று சொல்லலாம். போராட்டம் என்பது, ஆயுத ரீதியானது மட்டுமல்ல.  

இருந்தபோதிலும், சமூகத்துக்காகவோ முஸ்லிம்களின் அபிலாஷையை நிறைவேற்றுவதற்காகவோ, தம்மை அர்ப்பணிக்கத் தயாரில்லாமல், எங்கோ இருந்து கொண்டு ‘பேஸ்புக்’கில் ஆரோக்கியமற்ற விதத்திலேனும் வாதிட்டால் விடிவு கிடைத்துவிடும் என்று நினைக்கின்ற கூட்டத்தாரை, ‘போராளிகள்’ என்று சொல்வது, அந்தப் பணியை முன்செய்தவர்களைக் கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.   

இன்று அரசியல்வாதிகளால், அவர்களது பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ‘பேஸ்புக்’ கணக்குகள் இயக்கப்படுகின்றன. கட்சிகளுக்காகவும் தனியான ‘பேஸ்புக்’ பக்கங்கள் இருக்கின்றன. சாதாரணமாக நாட்டின், முஸ்லிம்களின் அரசியலில் நடக்கின்ற அன்றாட விவகாரங்கள் தொடர்பாகக் கட்சிசார் உள்நோக்கங்கள் இன்றி, சர்வசாதாரணமாக ‘பேஸ்புக்’இல் கருத்துகளைப் பதிவு செய்கின்ற பெருவளவானோர் இருக்கின்றனர்.   

இவர்கள், ஏனைய விவகாரங்களைப் போலவே, அரசியலையும் அலசுகின்றனர் என்பதுடன் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சிசார் நிகழ்ச்சிநிரல்கள் இருப்பதில்லை.   

ஆனால், இதற்கு மேலதிகமாக, இன்னும் ஒரு தரப்பினர் இருக்கின்றனர். கண்மூடித்தனமாகவும் நடுநிலைக்கான எந்த அறிகுறிகள் இன்றியும் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதிக்கு, கட்சிக்குச் சார்பாகக் கருத்துகளைப் பதிவிடுவதோடு, அது சரியென்று நாள்கணக்காக வாதிடுவோராக இவர்கள் உள்ளனர். இவர்களையே நாம் இங்கு ‘பேஸ்புக்’ போராளிகள் என்று கூறலாம்.   

அதாவது, தமக்குச் சார்பான அரசியல் கட்சி, அரசியல்வாதியின் நிலைப்பாடுகளை எல்லாக் காலத்திலும் சரி காண்பவர்களும், அதற்காக ‘பேஸ்புக்’இல் மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்பவர்களும் என்று இவர்களை அடையாளப்படுத்த முடியும்.   

உண்மையான போராளிகள் என்போர், எப்படிப்பட்டவர்கள் என்பதை, மேலே கூறியிருக்கத் தக்கதாக, இவர்கள் ‘பேஸ்புக்’ இல் மறுதரப்பினருடன் போராடுவதன் மூலம், குறித்த அரசியல் அணியின் போராளிகளாகவும் சமூக சிந்தனையாளராகவும் தம்மைக் காட்சிப்படுத்த விளைகின்றனர்.   

உண்மையில், இவ்வாறான சிலர், கட்சிசார்பு கருத்துகளைப் பதிவிட்டாலும் அதை, எவ்வித பிரதியுபகாரமும் இன்றி, தன்னார்வமாகச் செய்கின்றனர். இன்னும் பெருமளவானோர், முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘பேஸ்புக்’ எடுபிடிகளாக இருந்து கொண்டு, அவர்களது ஏவல்களுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றாற்போல் துதிபாடுகின்றனர்.   

மாற்றுக் கட்சியினரைத் தாக்குவதற்காகக் கணிசமான போலி ‘பேஸ்புக்’ கணக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு, ‘ஜால்ரா’ அடித்துக் கருத்துகளைப் பதிவிடும் சிலரை, முக்கிய அரசியல்வாதிகள் பணிக்கு அமர்த்தி இருப்பதாகவும் அரசியல் களரியில் பேசப்படுகிறது.   

ஆரம்பத்தில் ஒரு முஸ்லிம் கட்சியை மேம்படுத்தும் பிரசாரக் களமாகவே ‘பேஸ்புக்’ இருந்தது. பின்னர், இரண்டு முஸ்லிம் கட்சிகள் தமக்கிடையே கருத்துகளால் மோதும் இடமானது. ஆனால், இன்று ஒரு கட்சிக்குள்ளேயே குழுக்கள் வாரியாகவும் பிரதேச வாரியாகவும், ஒரு கட்சியின் அரசியல்வாதிகளுக்கு இடையே ஏட்டிக்குப் போட்டியாகவும் ‘பேஸ்புக்’ போராளிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.   

 ஊருக்குள்ளேயே பல ‘பேஸ்புக்’ குழுமங்கள் இயங்குகின்ற நிலையும் இல்லாமலில்லை. இதனால் கட்சிக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் பல முரண்பாடுகள் உருவாகியுள்ளன.   

‘பேஸ்புக்’ ஐ கட்சி நலனுக்காகவும் பிரசாரத்துக்காகவும் பயன்படுத்துவது நல்லதே; அதில் யாரும் தவறு காண முடியாது. ஆனால், அளவுக்கதிகமாக அரசியல்வாதி ஒருவருக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு, முகம்சுழிக்கும் வகையில் விவாதம் புரிவதையும் அதற்காக நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களை, ‘பேஸ்புக்’ இல் வெளியிடுவதையும் முஸ்லிம்களின் ஆரோக்கியமாக அரசியல் கலாசாரமாக ஒருபோதும் அணுகமுடியாது.   

 அதேபோல், ஒரு கட்சிக்குள்ளேயோ, ஊருக்குள்ளேயோ உருவாக்கப்படும் போட்டாபோட்டி அடிப்படையிலான ‘பேஸ்புக்’ செயற்பாட்டாளர்களும் குழுமங்களும் முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஒற்றுமையையும் கெடுப்பதற்கே வழிவகுக்கும்.   

மேற்கத்தேய நாடுகளில் சமூக வலைத்தளங்கள் பெரும் மாற்றங்களுக்காக மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இலங்கையில் குறிப்பாக முஸ்லிம் அரசியல் களத்தில் அந்த நிலை இதுவரை இல்லை. இவ்விடயங்களைத் திருத்திக் கொண்டால், அந்த நிலைமை உருவாகலாம்.   

ஆனால், இப்போதைய சூழலில், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைமைகளும், அரசியல்வாதிகளும் மக்களின் முன்னால் வந்து பேசாமல், அவர்களது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்காகப் பாடுபடாமல் இருந்துகொண்டு, ‘பேஸ்புக்’ ஊடாக அரசியல் செய்ய முனைவதும், பிரதேச வாரியான மத்திய குழுக்களைக் கட்டியெழுப்பி, அதன்மூலம் கட்சிக்காக, சமூகத்துக்காகக் களத்தில் நின்று போராடும் உண்மையான ஆதரவாளர்களை உருவாக்காமல், இவ்வாறான ‘பேஸ்புக்’ போராளிகளைப் போஷிக்கும் முட்டாள்தனமான மாய உலகத்துக்குள்  இருந்து வெளியில் வர வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .