2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் கட்சிகளின் தேசியப் பட்டியல் கதை

மொஹமட் பாதுஷா   / 2018 மே 25 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூக அரசியலில், பதவிகள் என்பது மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு விடயமாக மாறியிருக்கின்றது.   

பதவிகளும் அதனூடான அதிகாரமும் இருந்தால், மக்களுக்கு நிறையச் சேவை செய்வதற்கான பலம், தானாகவே வந்துவிடுவதாக ஒரு கருத்துநிலை தோன்றியிருக்கின்றது. இதில் உண்மையில்லாமலும் இல்லை.   

ஆனால், முஸ்லிம் அரசியலில் பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர், இந்தச் சமூகத்துக்காக, அந்தப் பலத்தை உச்சமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்? பதவியிருந்தால் சாதித்துக் காட்டுவோம் என்று சொன்ன எத்தனைபேர், நிஜத்தில் அதைச் செய்து காட்டியிருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு, வெட்கப்பட வேண்டிய விடைகளையே அளிக்க வேண்டியிருக்கும்.   

ஆனாலும், முஸ்லிம் அரசியலில் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை, பதவி மற்றும் அரசியல் அதிகாரம் குறித்த அடங்காத ஆசை இன்னும் நீண்டு கொண்டுதான் இருக்கின்றது.   

குறிப்பாகத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக இவ்வளவு முரண்பாடுகளையும் பிரளயங்களையும் சந்தித்த, இந்த அளவுக்கு நேரகாலத்தைச் செலவழித்த இனக்குழுமம் என்றால் அது முஸ்லிம்கள் மட்டும்தான் என்றே சொல்ல வேண்டும்.   

இந்த ஆட்சிக்காலத்தில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் தேசியப்பட்டியல் எம்.பி பதவி சார்ந்த நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றமை முக்கியமானது. அதில், மிகவும் பிரபலமான தேசியப்பட்டியல் கதை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடையது.   

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு உரித்தான தேசியப்பட்டியல் கதை, அந்த அளவுக்குச் சர்ச்சைகளுக்குள் சிக்கவில்லை என்றாலும், அப்பதவியை வகித்தவரான எம்.எச்.எம். நவவி இப்போது அதிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதை அடுத்து, அது தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடித்திருப்பதாகச் சொல்லலாம்.   

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் கடைசிக் கட்டமாக ஏற்பட்ட மிகப் பெரிய பிளவுக்கு, இந்தத் தேசியப் பட்டியலும் ஒரு காரணமாக அமைந்தது.   

அதிகாரம் குறைக்கப்பட்ட முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹசன்அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி தருவதாகக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, மீறப்பட்டமையே கட்சியில் பெரும்வெடிப்புக்குத் தூண்டுதலாக அமைந்தது.  

அந்த வாக்குறுதி, உரிய முறையில் நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இன்னும் கொஞ்சக்காலம் இந்த உடைவைத் தடுத்திருக்கலாம்.   

ஹசன்அலி அணியினர், பிரிந்த பிறகும், அந்தத் தேசியப்பட்டியல் எம்.பி பதவியைத் தருவதாக இரகசியமாகவும் பகிரங்கமாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த பல தனிநபர்கள், ஊர்களுக்கு இடையில் ஒரு பனியுத்தமே நடந்தது.   

ஆனால், அந்தப் பதவியை வகித்துக் கொண்டிருந்த எம்.எச்.எம். சல்மானிடம் இருந்து மிகவும் நூதனமான முறையிலேயே அதைப் பெற்று, சாணக்கியமான முறையில் பொருத்தமான ஒருவருக்கு வழங்க வேண்டிய இக்கட்டான நிலையை, கட்சியின் தலைவர் ஹக்கீம் எதிர்கொண்டார்.   

அந்த அடிப்படையில், பல்வேறுபட்ட சாதக - பாதக அபிப்பிராயங்களுக்கு மத்தியில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீருக்கு, அந்த எம்.பி பதவியை வழங்கும் முடிவை ஹக்கீம் எடுத்தார். எவ்வாறிருப்பினும், தற்காலிகமாக வழங்கப்பட்ட எம்.பி பதவியை, மீளப் பெற்று உரிய ஒருவருக்கு வழங்க, முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு வருடங்களுக்கு அதிக காலம் சென்றது.   

இதற்குச் சமகாலத்திலான தேசியப்பட்டியல் கதையே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பி பதவி தொடர்பான இழுபறியாகும். மு.காவினுடைய பதவி போல, பெரிய சண்டை சச்சரவுகளை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பி பதவி சந்திக்கவில்லை. என்றாலும், கால அளவின் அடிப்படையில் நோக்கினால், மக்கள் காங்கிரஸ் அம்பாறை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி, இரண்டரை வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.   

இந்த நிலையிலேயே, மக்கள் காங்கிரஸ் தலைவரால் ஒரு முறையான அடிப்படையில் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டிருந்த எம்.எச்.எம். நவவி, கடந்த புதனன்று தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.   

எந்தவித தயக்கமும் இன்றி, இந்தப் பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்ற நவவி போன்றவர்கள், பாராட்டப்பட வேண்டியர்கள்.   

இவ்வாறிருக்க, இந்தத் தேசியப்பட்டியல் எம்.பி பதவியைக் கட்சித் தலைவர் யாருக்கு வழங்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கின்றன.  

“எனக்குத் தாருங்கள்” என்ற கோரிக்கைகளும் “இவருக்குக் கொடுங்கள்” என்ற அழுத்தங்களும் நேரடியாக ரிஷாட் பதியுதீனிடமும் முன்வைக்கப்படுவதோடு, சமூக வலைத்தளங்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.   

அத்துடன் சேகு இஸ்ஸதீன், எம்.ரி.ஹசன்அலி, ஜெமீல் போன்றோரின் பெயர்களும் அவரவர்களது ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் முன்மொழியப்படுகின்றன. ஆனால் ரிஷாட், இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை.   

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் போட்டியிட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், முதன்முறையாக களமிறங்கியிருந்தார்.  

பல சவால்களுக்கு மத்தியில், அந்தத் தேர்தலில் 33,000 வாக்குகளைக் கட்சி பெற்றுக் கொண்டது. சொற்ப அளவான வாக்குகளால் ஓர் எம்.பி தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இல்லாமல் போனது.   

இந்த 33 ஆயிரம் வாக்குகளும் தனியே வேட்பாளர் இஸ்மாயிலின் செல்வாக்கால் கிடைத்ததும் இல்லை; அல்லது அவரது சொந்த ஊரான சம்மாந்துறை மக்களால் அளிக்கப்பட்டவையும் அல்ல. மக்கள் காங்கிரஸின் கொள்கையை, அரசியலை நிரந்தரமாக உளப் பூர்வமாக ஏற்றுக் கொண்டுதான் வாக்களித்தார்கள் என்றும் கூற முடியாது.   

மாறாக, அந்தத் தொகுதிக்குள் வருகின்ற ஏனைய ஊர்களில் இருந்து அளிக்கப்பட்டவையும், அப்போது மஹிந்தவை ஆதரித்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளும் அதில் உள்ளடங்கியிருந்தன. இதை, இந்த உள்ளூராட்சித் தேர்தலில் ம.கா தலைவர் விளங்கிக் கொண்டிருப்பார்.   

அதேநேரம், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலை எம்.பியாக நியமிக்க வேண்டாம் என்றும், அவர் அதற்குப் பொருத்தமற்றவர் என்றும் சமூக ஊடகங்களிலும் கட்சி முக்கியஸ்தர்களிடமும் தற்போது அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.   

2015 தேர்தலுக்குப் பிறகு, தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்கப்படாத நிலையில், இஸ்மாயிலின் போக்குகளும் கட்சித்தலைமைக்கு பிடிபடவில்லை என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், மக்கள் சார்பு அரசியலில், சொந்த ஊருக்கு வெளியே அவர் ஜொலிப்பாரா என்ற சந்தேகங்கள், கட்சிக்குள்ளேயே ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.   

சம்மாந்துறைக்குத் தேசியப்பட்டியல் எம்.பி தருவதாகத் தேர்தல் காலத்தில் ரிஷாட் பதியுதீன் பகிரங்கமாகத் தேர்தல் மேடையில் வாக்குறுதி அளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.   

ஆனாலும், வாக்களித்த பல்லாயிரம் மக்களுக்குக் கைமாறாக அதைத் தருவதாக, தேர்தலுக்குப் பிறகு இஸ்மாயில் போன்றோரிடமும் தன்னைச் சந்திக்க வந்த குழுக்களிடமும் ரிஷாட் சொல்லியிருக்கின்றார் என்று அறிய முடிகின்றது.   

ஆயினும், அதே ஊரைச் சேர்ந்த இன்னுமோர் அணியினர், மக்கள் காங்கிரஸுக்குள் உள்நுழைந்ததை அடுத்து, இஸ்மாயிலின் ஆதரவாளர்களுக்கு ‘இது நமக்குக் கிடைக்காதோ’ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.   
இதனால் அவர்கள், பகிரங்கமாகவும் இரகசியமாகவும் மேற்கொண்ட அழுத்தங்கள், நகர்வுகளால் மக்கள் காங்கிரஸ் தலைவர் மனக்கிலேசம் அடைந்துள்ளார். அதுமட்டுமன்றி, அண்மையில் கூட, அப்பிரதேசத்தில் இருந்து ரிஷாட்டுக்கு எதிராக, யாரோ ஒரு தரப்பால் சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாகவும் ஒரு தகவல், ரிஷாட் பதியுதீனின் காதுகளுக்கு எட்டியிருந்ததாகவும் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.   

இந்தவேளையிலேயே, ஐ.தே.கட்சியால் ம.காவுக்கு கொடுக்கப்பட்ட அந்தத் தேசியப்பட்டியல் எம்.பி பதவி காலியாக்கப்பட்டுள்ளது. எனவே, கட்சித் தலைவரான ரிஷாட், இதை எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு வழங்குவாரா? அல்லது கடந்த இரு வருடங்களில் அவரில் மனமாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஐயப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? ஓர் எம்.பியைக் கொடுக்கும் போது, இவர் எக்காலத்திலும் தமது கட்சியோடு பயணிப்பாரா என்ற அடிப்படையில் ஏற்படும் தடுமாற்றமும், ரிஷாட்டுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது.   

எது எவ்வாறிருப்பினும், மக்கள் காங்கிரஸ் தலைவருக்கு ஒரு கடப்பாடு இருக்கின்றது. திடுதிப்பென அம்பாறையில் களமிறங்கிய அந்தக் கட்சியில், 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இஸ்மாயில் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். இதில் கணிசமான வாக்குகள் அவரது சொந்த ஊரில் இருந்து கிடைத்த வாக்குகள் என்பதை மறுக்க முடியாது. அத்துடன் பல தடவை இப்பதவியை இஸ்மாயிலுக்கு வழங்குவதற்கான விருப்பங்களையும் ரிஷாட் வெளிப்படுத்தியிருக்கின்றார்.   

பல விமர்சனங்கள் இருந்தாலும், இஸ்மாயில் என்ற ஒரு வேட்பாளரையும் அவர் ஊடாக மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களையும் கௌரவப்படுத்த வேண்டிய அவசியம் கட்சித் தலைவருக்கு இருக்கின்றது.   

எனவே, முன்னாள் உபவேந்தர், கல்வியியலாளர் என்ற அடையாளத்துக்கு அப்பால், 2015 தேர்தல் காலத்தில் கட்சியுடன் இருந்தவர்களில், இன்னும் இருப்பவர்களிடையே ஒப்பீட்டுத் தெரிவாக 
எஸ்.எம்.எம்.இஸ்மாயிலே இருப்பதாகக் கருத முடியும்.   

நாம் இன்னுமொரு தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். அநேகமாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்றிருக்கையில், இக்காலத்தில் கிடைக்கின்ற எம்.பி பதவியைத் தேர்தலில் பலத்தை அதிகரிப்பதற்கான கருவியாகவே ம.கா தலைவர் பயன்படுத்த வேண்டும். அதுதான் அரசியல் என்பது.   

அப்படிப் பார்த்தால், இவருக்குச் சரிசமமான வேறு தெரிவுகளும் மக்கள் காங்கிரஸுக்கு அம்பாறையிலோ அதற்கு வெளியிலோ இருக்க முடியும் என்பதை மறந்து விடக் கூடாது. இதுதான் ஒரு தலைமைத்துவத்தின் புத்திசாலித்தனத்துக்கு வேலை கொடுக்கும் தருணமாகும்.   

இருப்பினும், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலை விடுத்து, வேறு ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்படுமாக இருந்தால், சம்மாந்துறையில் மக்கள் காங்கிரஸ் சில ஆயிரம் வாக்குகளை இழக்கக் கூடும்.    

எனவே, எந்த அடிப்படையில் நோக்கினாலும், இருக்கின்ற தெரிவுகளில் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலே முன்னணியில் இருக்கின்றார். மக்களுக்கு ஏதோ ஓர் அடிப்படையில் வழங்கிய வாக்குறுதியை, இரண்டரை வருடங்களின் பின்னராவது காப்பாற்றிய கட்சித் தலைமை என்ற ஒரு நற்பெயர் ரிஷாட்டுக்குக் கிடைக்கும்.   
இது, இஸ்மாயிலின் செயற்றிறனைப் பொறுத்து, அம்பாறை மாவட்ட வாக்காளர் தளத்தில், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூற முடியும்.   

இப்போது வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் எம்.பி பதவியை யாருக்கு வழங்குவது என்று, இந்தக் கட்டுரை அச்சுக்குப் போகும் வரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், உத்தியோகபூர்மாக அறிவிக்கவில்லை.   

ஆனாலும், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அப்பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு அவர் அல்லது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வேறு யாராவது நியமிக்கப்பட்டால், அந்த நபர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் ஐந்தாவது முஸ்லிம் எம்.பியாக இருப்பார்.   

இவ்வாறு நியமிக்கப்படும் நபர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும், அவர் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கிழக்கில் இருந்து பிரதிநிதித்துவம் செய்யும் 11ஆவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார்.   

இப்போது, கட்டுரையின் ஆரம்பத்துக்கு மீண்டும் வருவோம். தேசியப்பட்டியல் எம்.பி போன்ற பதவிகளுக்காக, இந்த அளவுக்குப் படாதபாடுபடுகின்ற முஸ்லிம் சமூகம், தேசியப் பட்டியல் எம்.பிகளாலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களாலும் கண்ட பயன் என்ன?   

எனவே, ஒரு பிராந்திய மக்களே அணிதிரண்டு ஒருவருக்கு எடுத்துக் கொடுக்கின்ற அரசியல் அதிகாரங்களைக் கொண்ட பதவியை வகிப்பவர்கள், அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப் பாடுபட வேண்டும். கதிரையைச் சூடாக்கிக் கொண்டிருக்காமல் தீயாக வேலை செய்ய வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X