2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் மாகாண எல்லை நிர்ணயம்

மொஹமட் பாதுஷா   / 2018 மார்ச் 23 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களின் எல்லை மீள் நிர்ணய இறுதி அறிக்கை, நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில்  கொண்டு வரப்பட்டுள்ளது.   

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின் அவற்றின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். அதாவது, மாகாண சபைகளுக்குள் அடங்குகின்ற தேர்தல் தொகுதிகள் மற்றும் தேர்தல் மாவட்டங்களின் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு, அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட அந்தஸ்து பெறப்பட வேண்டும்.   

அந்த அடிப்படையில், 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11)பிரிவைத் திருத்திய 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, எல்லை மீள்நிர்ணயக் குழு, தமது அறிக்கையை அண்மையில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்தது. இந்த அறிக்கையே, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்துக்காக முன்வைக்கப்படுகின்றது.  

இது மிக முக்கியமான விடயமாகும். குறிப்பாக இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்கள், இந்த எல்லை நிர்ணயத்தில், கூடிய கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.  

இதற்கு முன்னர் விட்ட தவறுகளை, வேறு புதிய வியாக்கியானங்களைச் சொல்லித் திரும்பவும் விட்டுவிடக் கூடாது. முஸ்லிம்களுக்குப் பாதகமான அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்க்க வேண்டிய சட்டமூலங்கள், சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு, தேர்தல் முறைமைகளுக்கு, முஸ்லிம் எம்.பிகளும் மாகாண சபை உறுப்பினர்களும் புரிந்தும் புரியாமலும் கூட்டத்தோடு கோவிந்தா எனக் கையை உயர்த்தி, அவற்றுக்கு ஆதரவளித்தார்கள்.   

திவிநெகும சட்டமூலம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னுமொரு தடவை ஜனாதிபதியாகப் போட்டியிடும் வாய்ப்பை வழங்கிய 18ஆவது திருத்தம், உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம், உள்ளூராட்சி வட்டார எல்லை நிர்ணயம், புதிய தேர்தல் முறைமை என்று, ஒரேயொரு சட்டத் திருத்தத்தைத் தவிர, மற்றெல்லாவற்றுக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். 

முஸ்லிம் முதலமைச்சருடன், முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியதிகாரத்தில் இருந்த கிழக்கு மாகாண சபையில், 20ஆவது திருத்தம், வர்த்தமானியில் வருவதற்கு முன்னரே, அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களும் உள்ளனர்.   

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், சட்ட ஏற்பாடுகளைச் சரிகண்டு, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்கவில்லை என்பதுதான் இங்கு முக்கியமானது. 

“அதில் தவறு இருக்கின்றது; முஸ்லிம்களுக்குப் பாதகம் ஏற்படும்; அதைத் திருத்தாவிட்டால், எதிர்ப்போம்” என்று கூறி விட்டு..., இறுதியில் ஆதரவளிக்கும் ‘தைரியம்’, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே இருந்தது.   

அப்போது மஹிந்தவுடனும், இப்போது பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனும் கொண்டுள்ள உறவு கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களுடைய பதவிகளுக்கு, ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ஆதரவாக வாக்களித்த ‘பெருமையும்’ அவர்களுக்கே இருக்கின்றது.   

இந்த நிலைதான், இன்று மாகாண எல்லை மீள்நிர்ணயத்திலும் உருவாகி விடுமா என்ற நியாயமான அச்சம், இப்போது ஏற்பட்டுள்ளது.   

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு, எவ்வாறு வட்டார மற்றும் உள்ளூராட்சி மன்ற எல்லை அவசியமோ, அதுபோலவே, மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்கு, தொகுதிகள் மற்றும் தொகுதிகளை உள்ளடக்கிய மாகாணங்களின் எல்லைகள் மீள் வரையறை செய்யப்பட வேண்டும். 

இதற்கு அடிப்படைக் காரணம், முறையே வட்டார மற்றும் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, புதிய முறையில் தேர்தல் நடத்தப்படுகின்றமையாகும்.   

அந்தவகையில், வட்டார முறையால்  ஏற்பட்ட சிக்கல்கள், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நமது நிகழ்கால அனுபவமாக இருக்கின்றன.  

அதிலும் முக்கியமாக, முஸ்லிம்கள் சரிக்குச் சமமாக அல்லது சிறுபான்மையாக வாழ்கின்ற சில உள்ளூராட்சி சபைப் பிரதேசங்களில், விகிதாசாரச் சமன்பாட்டின் படி, உறுப்பினர்களையும் முஸ்லிம்களால் பெற முடியாமல் போயிருக்கின்றது. ஆனால், மாகாண சபைகளுக்காக, இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொகுதி நிர்ணயம் நிறைவேற்றப்பட்டு, அதன்படி தேர்தல் நடைபெறுமாக இருந்தால், முஸ்லிம்கள் இதைவிடவும் அதிகமான பாதிப்புகளை எதிர் கொள்வார்கள் என்பது திண்ணம். அதனாலேயே மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கின்றது.   

மாகாண சபைகளின் எல்லைகளை, மீள்நிர்ணயம் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட ‘எல்லை நிர்ணய குழு’ நியமிக்கப்பட்டது. கலாநிதி கே. நவலிங்கம் தலைமை தாங்கிய இக்குழுவில், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இருவரும், தலைவருக்கு மேலதிகமாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இன்னுமொருவரும் முஸ்லிம்கள் சார்பாக பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வும் அங்கம் வகிக்கின்றனர். ஒவ்வொரு சமூகமும் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள முனைப்புக்காட்டுகின்ற போதிலும், எல்லை நிர்ணயக் குழுவானது, ஒரு தேசிய ரீதியான கண்ணோட்டத்துடனேயே நடந்து கொள்ள வேண்டியிருந்தது.   

எவ்வாறாயினும், இலங்கையில் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளே அதிகம் என்றபடியால், அவர்கள் சார்பான மக்கள் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்புகள் ஏற்படப் போவதில்லை.   
அதேபோன்று, தமிழ்த் தேசியமும் இந்த நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கின்ற பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து, எச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்கின்றது.   

குறிப்பாக, தமிழர் பெரும்பான்மைத் தொகுதிகளை உறுதி செய்வதில், தமிழ் அரசியல்வாதிகளும் ஆணைக்குழுவின் தமிழ்ப் பிரதிநிதிகளும் கனகச்சிதமாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்றே அறிய முடிகின்றது. ஆனால், முஸ்லிம்களின் நிலை என்ன?  

மாகாணங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாகச் சிபாரிசு செய்யும் ஐவர் அடங்கிய குழுவில், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஒரே ஒருவர் உள்ளடங்கியிருந்தார். இவர், முஸ்லிம் சமூக ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான புவியியல் துறை பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் ஆவார். அவர், தான் அறிந்த, தனக்கு முடியுமான எல்லா முயற்சிகளையும் செய்திருக்கின்றார்.   

புதிய தேர்தல் முறைமையின் கீழ் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை ஓரளவுக்கேனும் உறுதிப்படுத்துவதற்கான சிபாரிசுகளைச் செய்திருக்கின்றார். ஆனால், ஒரு சில விடயங்களைத் தவிர, கணிசமான விவகாரங்களில் அவரது நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.   

மிகக் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் முன்வைத்த பல யோசனைகள் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர், அக்குழுவின் உத்தியோகபூர்வ  அறிக்கைக்கு மேலதிகமாக, இன்னுமோர் அறிக்கையையும் அமைச்சரிடம் சமர்ப்பித்து மன ஆறுதல் அடைந்திருக்கின்றார்.   

இந்தவகையில், சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதி அறிக்கையில், 222 தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் 13 தொகுதிகளே, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, ஏனைய தொகுதிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் இரட்டை அங்கத்தவர் யோசனை, பல இடங்களில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிகின்றது. 

அத்துடன், பல இடங்களில் நியாயமாக இடம்பெற்றிருந்தாலும், வேறு சில முஸ்லிம் ஊர் அல்லது முஸ்லிம் ஊர்களின் பிரதிநிதித்துவம் கைநழுவும் விதத்தில் இணைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.   

இதன் பிரகாரம், 20இற்கும் மிகக் குறைந்த மாகாண சபை உறுப்பினர்களையே முஸ்லிம்களால் பெறக் கூடியதாக இருக்கும் என்று அனுமானிக்கப்படுகின்றது. பெரும்பான்மையினக் கட்சிகள் பட்டியலின் ஊடாக, சில ஆசனங்களைப் பெற, கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலையே ஏற்படும்.   

முஸ்லிம்களின் இன விகிதாசாரப்படி பார்த்தாலும், இப்போது இருக்கின்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பார்த்தாலும், இது மிகவும் குறைவானதும் நியாயமற்றதும் ஆகும். 

எனவே, இவ்வாறான உள்ளடக்கங்களுடனான சிபாரிசு அறிக்கையே, இப்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளது. அது விடயத்தில், தமது நிலைப்பாடு என்ன என்பதை முஸ்லிம் எம்.பிக்கள், முடிவு செய்ய வேண்டியிருக்கின்றது. அப்படியென்றால் என்ன செய்வது?  

இதைச் சட்டமாக்குவதற்கு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும். அது கிடைக்காவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவின் ஊடாக, செயன்முறைப்படுத்துவதற்கான ஓர் ஏதுநிலையும் காணப்படுகின்றது.   

எப்படியிருப்பினும், இப்போதிருக்கின்ற நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியமில்லை. எனவே, அடுத்த தெரிவை அரசாங்கம் மேற்கொள்ளலாம். அல்லது மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் விருப்பம் இல்லையென்றால், தோற்கடிக்க விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், முஸ்லிம் எம்.பிக்கள் தமது பங்களிப்பை கட்டாயமாகச் செய்தாக வேண்டும்.   

எல்லாவற்றுக்கும் ஆதரவளித்து விட்டு, “கண்ணைத்திறந்து கொண்டு படுகுழியில் விழுந்து விட்டோம்”, “வலுக்கட்டாயமாக எம்மை வாக்களிக்க வைத்தார்கள்” என்று கண்கெட்ட பிறகு அழுது புலம்புகின்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், எல்லை நிர்ணயம் குறித்து, தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.  
இந்தத் தேர்தல் முறைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, இது பாதகமான தேர்தல் முறை என்று அறிக்கை விடுவதை நிறுத்தி, தவறு என்றால், சட்ட ரீதியாக அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.   

இப்போது அமுலுக்கு வந்திருக்கின்ற புதிய 50இற்கு50 என்ற கலப்பு (மாகாண சபை) தேர்தல் முறைமையின்படி, தேர்தல் நடக்கின்ற ஒரு சூழலில், மேலும் சில முஸ்லிம் தொகுதிகளை உருவாக்கினாலும் நாம் எதிர்பார்க்கின்ற அளவு உறுப்பினர்களைப் பெற முடியாது.

இருப்பினும், அவ்வாறு செய்வதன் மூலம், பாதிப்புகளைக் குறைக்கலாம். அதேபோன்று, இரட்டை அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்க, நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இரட்டை அங்கத்தவர் தொகுதிகளும் இன்றி, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளும் இன்றி, முஸ்லிம்கள் தங்களது உறுப்புரிமையை உறுதிப்படுத்த முடியாத விதத்தில், மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பான சட்டமூலம், நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுமாக இருந்தால், எந்த யோசனையும் இன்றி, அதற்கெதிராக முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் வாக்களித்தே ஆக வேண்டும்.   

இது அரசியல்வாதிகளின் அமைச்சு, பிரதியமைச்சு, கொந்தராத்து, கொடுக்கல் வாங்கல், வரப்பிரசாதங்கள், வாகனங்கள் பற்றிய பிரச்சினையல்ல. இது - முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய பிரச்சினை. 

இத்தனை எம்.பி.க்களும் மாகாண, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் இருந்தும் முஸ்லிம்களுக்கான நலன்கள், அரசியல் உரிமைகள், மத உரிமைகளை நிலைநாட்ட முடியாதிருக்கின்ற ஒரு ஜனநாயக நாட்டில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி சபைகளில் தொங்கு ஆட்சியை அமைத்து, மாகாண சபைகளிலும் அதன்பிறகு நாடாளுமன்றத்திலும் குறைந்தளவான உறுப்பினர்களையே முஸ்லிம்கள் பெறுவார்கள் என்றால், எதிர்காலம் எப்படியிருக்கும் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் சிவில் சமூகத்துக்கும் இருக்கின்றது.   

சோடாப் போத்தல்களைத் திறக்கின்ற போது, வெளியில் பீச்சியடிக்கும் அமுக்கவாயு போல, உணர்ச்சிப் பிரவாகம் கொண்டெழுந்து பின்னர், ஆட்சியாளர்கள் தருகின்ற சலுகைகளுக்காக ‘ஜால்ரா’ அடிக்காமல், சமூகத்துக்கு எதிராக, ஏதாவது நடந்தால், அதை எதிர்க்கின்ற தைரியத்தை, சிரிய நாட்டு சிறுவர்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X