2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முஸ்லிம்களின் ஒப்பீட்டுத் தெரிவு

மொஹமட் பாதுஷா   / 2019 நவம்பர் 08 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முஸ்லிம் ஒருவர், ஜனாதிபதியாக வர முடியாது என்பது போலவே, இலங்கையிலுள்ள நூறு சதவீதமான முஸ்லிம் மக்களினதும் மனப்பூர்வ ஆதரவைப் பெற்ற ஒரு சிங்களப் பெருந்தேசிய அரசியல் தலைவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடைமுறைச் சாத்தியங்களும் இல்லை.   

அதுபோலவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்‌ஷ, அநுர குமார திஸாநாயக்க போன்ற பிரதான வேட்பாளர்களில், யாருக்கும் முழுமனதுடன் சென்று வாக்களிக்கும் மனோநிலையிலும் முஸ்லிம்கள் இல்லை; தமிழர்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.  

ஆதலால், முஸ்லிம்கள் தமக்கு முன்னே இருக்கின்ற தெரிவுகளுக்குள், கொஞ்சம் பரவாயில்லை; அதைவிட இது பொருந்தும் என்ற வகையறாவுக்குள் வருகின்ற ஒரு வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டியுள்ளது.   

இந்த நாட்டின் தலைவராக, யார், வர வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ, யாரால் ஆளப்பட வேண்டும் என்று, நீங்கள் கனவு காண்கின்றீர்களோ, அவருக்கே வாக்களிக்க வேண்டும். அந்த நபர், முஸ்லிம்களையும் அரவணைத்து, இலங்கைத் தேசத்தை முன்கொண்டு செல்லக் கூடிய ஆளுமையைப் பெற்றவராக இருத்தல் இன்றியமையாததாகும். அப்படியான ஓர் ஒப்பீட்டுத் தெரிவையே, முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  

ஒவ்வொரு வேட்பாளருடைய கடந்தகால அனுபவம், அரசியல் அறிவு, குடும்பப் பின்புலம், நேர்மை, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தன்மை, முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், நாட்டின் எல்லா மக்களையும் சமமாக நோக்கும் நடுநிலை, ஊழலுக்கும் மோசடிக்கும் எதிரான நிலைப்பாடு, மக்கள் சேவைக்காக முன்னிற்றல், அடித்தட்டு மக்கள் உட்பட எல்லா வர்க்க மக்களது உணர்வுகளையும் மதிக்கும் ஆற்றல், சொன்னதைச் செய்யக் கூடிய ஆற்றல் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில், முஸ்லிம்கள் தமது வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.  

இதுவரை நடைபெற்ற எல்லா ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம்கள் இரு பெருந்தேசியக் கட்சிகளுக்கும் தமது வாக்குகளைப் பிரித்துக் கொடுத்து வந்திருக்கின்றனர். 2004, 2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகள் ஒரு வேட்பாளருக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகவும் இன்னுமொருவருக்கு ஒப்பீட்டளவில் குறைவாகவும் கிடைத்தன.   

ஆனால், எல்லாக் காலங்களிலும் முஸ்லிம்கள் இரு தரப்புக்கும் வாக்களித்தே வந்தனர்; அதற்கு நியாயங்களும் இருந்தன. இம்முறையும் அதுதான் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கணிசமான முஸ்லிம் வாக்குகளையும் ஐ.தே.க ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் கொண்டுள்ள இரு கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கின்றன.  நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து, உள்ளூராட்சி மன்ற ஆட்சிகளைத் தக்கவைத்திருக்கின்ற தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் மஹிந்த சார்பு நிலைப்பாட்டுடன், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்ற கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்கின்றது.   இதேவேளை, எம்.ரி. ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரால் பொறுப்பேற்கப்பட்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, பொதுஜனப் பெரமுனவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டதன் பேரில், கோட்டாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.   

மறுபுறத்தில், முஸ்லிம் அரசியலில் மாற்றுச் சிந்தனைக்கான கட்சியாக ஒருகாலத்தில் பார்க்கப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இம்முறை திசைகாட்டிச் சின்னத்தில் களமிறங்கியுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.  

‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது’ என்று அர்த்தப்பட, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மிகுவேல் செர்வென்ற்ஸ் என்ற ஸ்பெயின் எழுத்தாளர், தனது நாவலில் எழுதினார். இலங்கை முஸ்லிம் அரசியல் பரப்பில், இதை ஒரு தாரக மந்திரமாக உட்புகுத்தியவர் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான சாணக்கியமிக்க அரசியல்வாதியும் கல்விமானுமாகிய ரீ.பி. ஜாயா ஆவார்.  

“அரசியலை, முஸ்லிம்கள் ஒரேயொரு பக்கத்தில் மாத்திரம் நின்று ஆதரவு தெரிவிப்பார்களாயின், முஸ்லிம்கள் ஆதரவு வழங்கும் அந்தத் தரப்புத் தோல்வியை, அரசியல் அதிகார இழப்பைச் சந்திக்கும் போது, முஸ்லிம் சமூகத்துக்கு மறுதரப்பில் இருந்து எந்தவித அரவணைப்பும் பாதுகாப்பும் வரப்பிரசாதங்களும் கிடைக்க மாட்டாது. எனவே, முஸ்லிம்கள் எல்லாக் கூடைகளிலும் தங்களது முட்டைகளை வைக்க வேண்டும்” என்று ரீ.பி. ஜாயா கூறிவந்தார்.  

அந்தவகையில் பார்த்தால், இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எல்லாப் பக்கத்திலும் நிற்கின்றார்கள். முஸ்லிம்களின் அரசியல் ஆதரவு எனும் முட்டை, எல்லாக் கூடைகளிலும் இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு இது மேற்கொள்ளப்படவில்லை.   

மாறாக, முஸ்லிம் கட்சிகள் தமது சொந்த இலாப நட்டங்களின் அடிப்படையில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், தானாகவே முட்டைகள் பல கூடைகளுக்குள் விழுந்திருக்கின்றன என்பதே உண்மையாகும்.   

வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இவ்வாறு பிரதான இரு தரப்புக்கும் முஸ்லிம் அரசியல் குழுக்களும் மக்களும் ஆதரவளிப்பது ஒருவிதத்தில் பார்த்தால் ‘காப்பீட்டு ஏற்பாடு’ என்றும் கருதலாம்.  

இவ்வாறான ஒரு பின்னணியில், முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்ற நிலையில், இலங்கை முஸ்லிம் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுத்து, வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதே எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாகும்.   

அந்த அடிப்படையில் நோக்கினால், பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு முஸ்லிம்களில் அரைவாசிக்கும் அதிகமான வாக்குகள் கிடைப்பதற்கும், மற்றையவர் ஒப்பீட்டளவில் குறைவான வாக்குகளைப் பெறுவதற்கும் சாத்தியமுள்ளது. அநுர குமார திஸாநாயக்கவுக்கும் ஹிஸ்புல்லாஹ்கும் சுமார் இரண்டு இலட்சம் முஸ்லிம் வாக்குகள் பகிரப்படலாம் என இப்போதைக்கு அனுமானிக்க முடிகின்றது.  

பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கு முஸ்லிம்களின் அதிகமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றாலும், இவர்கள் இருவரில் யாருக்கு வாக்களிப்பது என்ற ஒப்பீட்டுத் தெரிவை மேற்கொள்வதில் பல விடயங்கள் சாதகமான, பாதகமான தாக்கத்தைச் செலுத்தும் காரணிகளாக உள்ளன என்பதை மறுக்க முடியாது.   

நேரடியாக கோட்டா, மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் சஜித், ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்புபட்ட விடயங்களுக்குப் புறம்பாக, வேறு சில வெளிப்புறக் காரணிகளும், முஸ்லிம்களின் இறுதித் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தும் எனலாம்.  

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டமை, துரித அபிவிருத்தித் திட்டங்கள், மஹிந்தவின் தற்றுணிபு போன்ற விடயங்கள், முஸ்லிம்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாக்களிப்பதில் சாதகமான தாக்கத்தைச் செலுத்தும்.  

அதேபோன்று, மஹிந்த ஜனாதிபதியாகவும் கோட்டாபய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவிவகித்த காலத்தில், இனவாதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டமை, கடும்போக்குச் சக்திகள் வளர்ச்சியடைவதற்குக் கோட்டா வினையூக்கியாக இருந்தார் என்ற சந்தேகம், அளுத்கம கலவரம், வசீம் தாஜூதீன் போன்றவர்களின் கொலைகளும் கடத்தல்களும், கிறிஸ் மனித விவகாரம், 2015 இற்குப் பின்னர் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத நெருக்குதல்களின் சூத்திரதாரிகள் மொட்டுக் கட்சியில் சங்கமமாகி இருக்கின்றமை, ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆளுகை பற்றிய அச்சம் போன்ற விடயங்கள், பாதகமான தாக்கத்தைச் செலுத்த இடமுள்ளதாகக் குறிப்பிடலாம்.  

மறுபுறத்தில், அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவளிப்பதில், அவரது தந்தை ரணசிங்க பிரேமதாஸவின் சேவைகள், அஷ்ரப் போன்ற முஸ்லிம் தலைமைகளுடன் அவர் கொண்டிருந்த உறவு, சஜித் ஒரு சேவை மனப்பாங்குடைய அரசியல்வாதியாகக் கருதப்படுகின்றமை, ஊழலற்ற அவரது அரசியல், சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பாக அவர் தெரிவித்து வரும் கருத்துகள், அடிமட்ட மக்களின் உணர்வுகளை அறிந்த குடும்பப் பின்புலத்தைச் சேர்ந்தவர் என்ற தோற்றப்பாடு, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் இனவாதம் காணப்பட்டாலும் ஒப்பீட்டளவில் சிறிதளவேனும் இனவாதிகளுக்கு எதிராகச் சட்டம் செயற்பட முனைந்தமை போன்ற காரணிகள் சாதகமான தாக்கம் செலுத்தும்.  

இதேவேளை, இவ்வளவு காலமாக சஜித் பிரேமதாஸ, முஸ்லிம்களுக்காகக் குரல்கொடுக்காமை, கடந்த நல்லாட்சி தோல்வியடைந்ததாக மக்கள் கருதுகின்றமை, திகண, அம்பாறைக் கலவரங்கள், இனவாதிகளையும் மோசடிக்காரர்களையும் முன்னர் வாக்குறுதி அளித்ததன்படி சிறைப்பிடிக்காமை, மத்திய வங்கி பிணைமுறி ஊழல் போன்ற விவகாரங்கள் பாதகமான செல்வாக்கைச் செலுத்தலாம்.  

இதேவேளை, இரு தரப்பிலும் இனவாத சிந்தனை கொண்டவர்கள் இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பில்தான் இருக்கின்றார்கள்; சஜித் பக்கத்தில் யாரும் இல்லை என்று சொல்வது தவறான கற்பிதமாகும்.   

ஆனால், எந்தத் தரப்பில் அதிகமானவர்கள், தீவிரபோக்குடைய இனவாத அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் என்று ஒப்பிட்டு பார்ப்பதைத் தவிர, முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை.  

இது இவ்வாறிக்க, முஸ்லிம்கள் இம்முறை வாக்களிப்பது யாருக்கு என்பதைத் தீர்மானிப்பதில் இன்னுமொரு காரணி மிகவும் செல்வாக்குச் செலுத்தும் என்று குறிப்பிடலாம்.   

அதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தலைநகர் போன்ற ஓரிரண்டு இடங்களிலும் செறிவாக, முஸ்லிம்கள் வாழ்கின்ற பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள், சுதந்திரமாக யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.  

ஆனால், கொழும்புக்கு அப்பாலிருந்து தென்மாகாணம் வரையும், வடமேல் மாகாணம் புத்தளம் வரையும் அதேபோன்று மலையகம், ஊவா, சப்ரகமுவ, போன்ற இடங்களில் சிங்கள மக்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் சொற்பளவில் வாழ்கின்ற முஸ்லிம்களின் முடிவுகளில், அங்குள்ள சிங்கள மக்களின் தீர்மானங்கள் கடுமையான செல்வாக்கைச் செலுத்தும். அருகிலுள்ள சிங்கள மக்கள் விரும்பும் வேட்பாளருக்கே, அங்கிருக்கும் முஸ்லிம்களில் கணிசமானோர் வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஒன்று இருப்பதை யாரும் மறந்து விடலாகாது. எது எப்படியோ, நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம்கள் கட்டாயம் வாக்களிப்பதுடன், வேட்பாளர்களை ஒப்பிட்டுப் பார்த்து, ‘இருப்பதில் சிறந்ததை’ தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.   ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் மறுமையில் விளக்கம் கோருவான் என்பதை நம்புகின்ற முஸ்லிம் மக்கள், அதற்கேற்றால் போல் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல், நவம்பர் 16இல் தமது வாக்கை அளிக்க வேண்டும்.   

இனவாதத்துக்கு ‘விடுமுறை காலம்’

அரசியல்வாதிகளும் பெருந்தேசியக் கட்சிகளும் அரசியலுக்காக எதையும் செய்வார்கள் என்பதுதான், இலங்கை அரசியல் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற முதலாவது பாடமாகும்.   

ஏதாவது ஒரு நிகழ்ச்சி நிரலுக்காக, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து, இனவெறுப்புக் கருத்துகளைப் பரப்பவும், தேவை ஏற்பட்டால் வாயை மூடி மௌனம் காக்கவும் இந்நாட்டின் இனவாத சக்திகள் கற்றுக் கொண்டுள்ளன.  

அதுபோலவே, தமது நோக்கங்களை அடைந்து கொள்ள, இனவாதத்தைத் தூண்டி விடுவதிலும் அந்தச் சமூகத்தின் ஆதரவு, வாக்கு அவசியம் என்றால் இனவாதப் பேயை ஒரு சிறிய குடுவையில் அடைப்பதிலும் நமது பெருந்தேசியம் கைதேர்ந்தது என்பது வெளிப்படையானது.  
கடந்த சில வருடங்களாக, இந்த நாட்டில் பரவலாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தியல் விதைக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் ஹலால், ஆடைகள், சட்டவிதிமுறைகள், கலாசாரம் என்பன, கொள்கை ரீதியாக இலக்கு வைக்கப்பட்டதுடன், பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும் எரித்து, நொருக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. இந்த இனவாதத் தீயில், முஸ்லிம்கள் உடமைகளை மட்டுமன்றி உயிர்களையும் காவு கொடுத்தார்கள்.  

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 இல் படுமுட்டாள்தனமான, கேவலமான ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலால், அப்பாவி கிறிஸ்தவர்கள் பலியாகினர். இதன் விளைவாக, முஸ்லிம்கள் கூனிக் குறுகிப்போனது ஒருபுறமிருக்க, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான, கடும்போக்குக் கருத்துகளும் பரவலாக முன்வைக்கப்பட்டன.  

முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்றனர், முஸ்லிம் வீடுகளைச் சோதனை செய்ய வேண்டும் என்றார்கள், ஒவ்வொரு பள்ளிவாசலையும் கண்காணிக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய சட்டத்தை நடைமுறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இனவாத அரசியல்வாதிகள் கூறினார்கள். முஸ்லிம் பெண்களின் ஆடைகள் உள்ளடங்கலாக பல தனித்துவ அடையாளங்களில் கைவைத்தனர்.  

சமகாலத்தில், பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முஸ்லிம் அரசியல் மீது, தொடர்ச்சியாக இனவாத முத்திரை குத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதற்கொண்டு, சில சிங்கள ஊடகங்கள் வரை மும்முரமாக இருந்தன. 

பொதுபலசேனா, ராவண பலய, சிங்கள ராவய, சிங்ஹலே எனப் புற்றீசல் போல முளைத்த கடும்போக்கு இயக்கங்கள், சில காவியுடைதாரிகள், முக்கியஸ்தர்கள் என ஒரு பெரிய குழுவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்புப் பிரசாரத்தில் முழுநேரத்தையும் செலவிட்டது.  
ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், எல்லாம் அடங்கிப் போனது; அடக்கப்பட்டது. முஸ்லிம்களின் வாக்குகள், எல்லோருக்கும் தேவையாக இருப்பதால், இனவாதத்தின் வாய்க்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது. யாராவது முஸ்லிம்களை விமர்சித்தால், வாக்குகள் குறைந்து விடும் என்ற அச்சத்தால், இனவாதச் செயற்பாட்டாளர்கள் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்திருக்கின்றார்கள் எனலாம். 

அல்லது, ஆட்சி அதிகாரத்தை வேண்டி நின்ற ஒரு தரப்பு, இத்தனை குழப்பங்களையும் விளைவித்துவிட்டு, தேர்தல் காலத்தில் ஓய்வெடுப்பதாகவும் சொல்ல முடியும். இப்போது, பெரிதாக இனவாத பிரசாரங்களைக் காண முடியவில்லை.  

இனவாதிகள் நல்லிணக்கம் பேசுகின்றார்கள். கடும்போக்கு அரசியல்வாதிகள், முஸ்லிம்களை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களை, ஷாபி போன்ற வைத்தியர்களை, முன்னர் பிழை கண்டவர்கள், இப்போது சமாளிக்கின்றார்கள். எல்லாம் ஒரு நாடகம் போல, சொல்லி வைத்தாற்போல் மாறியிருக்கின்றது.  

எது எப்படியோ, ‘இந்த இனவாத முன்னெடுப்புகளுக்குப் பின்னால், ஒரு பெரிய அரசியல் இருக்கின்றது’ என்று நாம் இப்பக்கத்தில் எழுதியிருந்த அனுமானம், கிட்டத்தட்ட நிதர்சனமாகி இருக்கின்றது. இவ்வாறு இனவாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை காலம், தேர்தல் முடிந்த சில நாள்களுக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .