2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்களை நோக்கிய நெருக்குவாரங்கள்

Johnsan Bastiampillai   / 2021 மே 04 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா   

பிச்சைக்காரனின் புண்போல, நாட்டில் குழப்பங்களை எப்படிப் பேணிக் கொள்வது என்பதையும், சிறுபான்மைச் சமூகங்களை வைத்து, எப்படி அரசியல் செய்வது என்ற சூட்சுமத்தையும் திறம்பட ஆட்சியாளர்களும் பெருந்தேசியக் கட்சிகளும் கற்றுக் கொண்டிருக்கின்றன. வரலாற்றில் இருந்து, இவைதவிரத் தேவையான வேறு எதையும் அவர்கள் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.   

இந்தப் பின்புலத்தில், யுத்தகாலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் துணைகொண்டு, தமிழ் மக்கள் எவ்விதம் உளவியல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார்களோ, எவ்வாறாறு வகைதொகையற்ற கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டனவோ, கிட்டத்தட்ட அதேமாதிரியான ஓர் அனுபவத்தையே, இன்று முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்.   

தமிழ்ச் சமூகம், ஏற்கெனவே உரிமையும் நீதியும் வேண்டிப் போராடிக் கொண்டிருக்க, இப்போது கத்தோலிக்க சமூகமும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்தில் நீதி, நேர்மையான அடிப்படையில் நிலைநாட்டப்பட வேண்டுமென, நேரடியாகவே அரசாங்கத்திடம் கோரி, முரண்பட்டு வருகின்றது.   

முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு, சிங்கள தேசியவாத சக்திகள், அரசாங்கத்துடன் கடுமையாக முரண்பட்டிருப்பதுடன், பகிரங்கமாகவே ஆட்சிக் கவிழ்ப்புப் பற்றி, சவால் விடுவதையும் காணக் கூடியதாகவுள்ளது. இந்த ஆட்சி எதன்மேல் நிறுவப்பட்டதோ, அதில் அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளதாகவே, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.   

இந்தியாவும் சீனாவும் இலங்கையைத் தமது பந்தயக் களமாகப் பயன்படுத்துகின்றன. வல்லரசுக் கனவுகளோடு, தொடர்ந்தும் சின்னத்தனமான ஆதிக்க அரசியலைச் செய்து கொண்டிருக்கின்ற நாடுகளின் ‘நவீன நிழல் கொலனித்துவத்துக்குள்’ இலங்கை போன்ற நாடுகள் வருவதென்பது, ஒருபோதும் கடைசியில் நல்ல பெறுபேறுகளை விட்டுச் செல்லப் போவதில்லை.   

இந்தப் பின்னணியில், மாகாண சபைக்கான தேர்தல்கள், கொழும்புத் துறைமுக நகர் விவகாரம், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்ற சர்ச்சை என, திரும்புகின்ற பக்கமெல்லாம் பெரும் சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.   

சமகாலத்தில், கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இரண்டாவது அலை, அதுவாகக் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னர், வலிந்து நாட்டை வழமைக்குத் திருப்பியதன் மூலம், மக்கள் மனங்களில் ‘கொரோனா இல்லை’ என்ற உணர்வுக்குக் காரணமானவர்கள், இன்று தலையில் அடித்துக் கொண்டு ஓடித் திரிகின்றனர்.   

பி117 எனும் புதிய ரக, உருமாறிய வைரஸே இலங்கையின் பல பாகங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, பிரித்தானியா, இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய வைரஸ் வகையைச் சேர்ந்தது எனக் கூறப்படுகின்றது.   

நாட்டை மொத்தமாக முடக்கினால் மட்டுமே பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்று மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். ஆனால், முற்றாக முடக்க மாட்டோம். எது வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. நாட்டில் கணிசமான பகுதிகள், தினமும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது வேறுவிடயம்.   

இப்படியான இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் தருணங்களில், சாதாரண மக்களின் மனங்களில் ஒருவித இரக்க குணமும், இனபேதமற்ற சிந்தனையும் எழுவதுண்டு. போலியான இன, மத முகமூடிகளைத் தூக்கியெறிந்து விட்டு, மக்கள் ஒற்றுமைப்படுவதைப் பல தடவைகள் கண்டிருக்கின்றோம்.   

இத்தனை நெருக்கடிச் சூழல்களிலும் அரசாங்கம் சற்றும் மனம் இளகவோ, மசியவோ இல்லை என்பதையே, நடப்பு நிலைவரங்கள் உணர்த்தி நிற்கின்றன. மாறாக, எல்லாக் கோபங்களும் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக, முஸ்லிம்கள் மீது திருப்பி விடப்படுவது போலவே தோன்றுகின்றது.   

2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியில், இலங்கை அரசியலின் முக்கிய கருவியாக, முஸ்லிம்களின் விவகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, ‘பிச்சைக்காரர்களுக்கான புண்போல’ இலங்கையின் அரசியலில் முஸ்லிம் சமூகம் மீது, இன, மத நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

சொல்லப் போனால், முஸ்லிம்களுக்கு எதிராக மேலெழுந்த இனவாதத்தைக் காட்டி ஓர் ஆட்சியும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, இன்னுமோர் ஆட்சியும் மாற்றப்பட்டது என்றால் மிகையில்லை.  

ஆனால், இத்தனை காலம் நெருக்கடிகளைக் கொடுத்த பின்னரும், இன்றைய கொவிட்-19, அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியிலும், முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகளும் உளவியல் ரீதியிலான பலவீனப்படுத்தும் நெருக்குவாரங்களும் குறைந்தபாடில்லை. அரசாங்கம், முஸ்லிம்கள் விடயத்தில், மிகக் கிட்டிய காலத்தில் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்ளும்  என்பதற்கான அறிகுறிகள் அரிதாகவே தென்படுகின்றன.   

வகைதொகையற்ற கைதுகள், தடைகள், முஸ்லிம் அரசியல்வாதிகளைப் ‘பிடி’க்குள் கொண்டு வருதல், இஸ்லாமிய மார்க்க விடயங்களில் ‘நாட்டாமை’ வேலை பார்த்தல் என்று, தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பட்டியலில், இப்போது புர்கா தடை கையிலெடுக்கப்பட்டுள்ளது.  

முஸ்லிம் சமூகத்தின் மீதான நெருக்குதல்கள், நீண்டகாலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்ச்சி நிரலாகும். உள்நாட்டு, பிராந்திய இனவாத சக்திகள், மேற்குலக நாடுகள், உள்நாட்டு, சர்வதேச அரசியல், இஸ்லாமோபோபியா அச்சம் எனப் பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன.   

ஆயினும், இலங்கைச் சூழலில் முஸ்லிம்கள் மீதான இனத்துவ நெருக்கடியை அதிகரிக்கச் செய்தமைக்கும், அது இஸ்லாமிய மத அடிப்படையிலான கெடுபிடியாக உருமாற்றம் அடைந்தமைக்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தது, படுமுட்டாள்தனமான சஹ்ரான் கும்பல் மேற்கொண்ட மிலேச்சத்தனமான உயிர்ப்பலி தாக்குதல்கள் என்பதை மறுக்கவே முடியாது.   

ஏமாற்றுப் பேர்வழிகள், பெண்பித்தர்கள் சாமியார் வேசம் போடுவதுபோல, அரசியலில் பணம் உழைக்க நினைப்பவர்கள் சமூக சேவகன் வேடம் தரிப்பது போல, இந்தப் பயங்கரவாதக் கும்பல், இன்னும் அறியப்படாத ஏதோவொரு காரணத்துக்காக இஸ்லாமிய அடையாளத்தை அணிந்து கொண்டு வந்துள்ளனர் என்பதே யதார்த்தமாகும்.   

எவ்வாறிருப்பினும், பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட அக்கும்பலின் அடிவேர், கிளைகள் மட்டுமன்றி, அதற்குக் கீழ் நின்ற புற்களும் விசாரிக்கப்பட வேண்டும். அது, உண்மைக் குற்றவாளிகளைக்  கண்டுபிடித்து, நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு போலித் தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் ‘பம்மாத்தாக’ இருக்கக் கூடாது.   

பின்னோக்கிப் பார்த்தால், நாட்டில் தடை செய்யப்பட வேண்டிய எத்தனையோ பொருட்கள் இருக்கத்தக்கதாக, ஹலாலை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், முஸ்லிம் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைத்தார்கள். பள்ளிவாசல்கள், புனித குர்ஆன் அவமதிக்கப்பட்டது. முஸ்லிம்களின் வியாபாரங்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டன.   

இப்போது மீண்டும் புர்கா தடை பற்றி கதைக்கப்படுகின்றது. 2019இல் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நல்லாட்சி அரசாங்கமே இத்தடையை அமுலாக்கியது.    

இரு மாதங்களுக்கு முன்னரும், புர்காவை தடை செய்யப்போவதாக அரசாங்க தரப்பில் சொல்லப்பட்டது. பின்னர், “இல்லையில்லை! இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். இப்போது, அமைச்சரவை அனுமதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

முற்றாக முகத்தை மூடும் ஆடையை, இலங்கையில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான முஸ்லிம்களே அணிகின்றனர். ஏனைய முஸ்லிம் பெண்கள், முகம் தெரியும் விதத்திலான ஆடைகளையே அணிகின்றனர். எனவே, புர்காவைத் தடை செய்வது, எல்லா முஸ்லிம்களுக்கும் பாதிப்பான விடயம் எனக் கூற முடியாது.   

ஆனால், தமக்குரிய உரிமையில் ஆட்சியாளர்கள் கைவைக்கின்றார்கள் என்ற மனக் கவலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய காலத்தில், அதுவும், முகத்தை முகக் கவசத்தால் மூடாதவர்கள் கைது செய்யப்படுகின்ற சூழலில், இவ்வாறான தடையொன்றைக் கொண்டுவர முற்படுவது வேடிக்கையானது.   

இதேவேளை, முஸ்லிம் அரசியல்வாதிகளான அசாத் சாலி, ரிஷாட் பதியுதின் போன்றோர் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற வேறுபலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுகளை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை.   ஆனால், அதற்கான காரணமும், கைது இடம்பெறும் விதமும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. 

அத்துடன், வகைதொகையற்ற கைதுகளும் விசாரணையில் ஏற்படுகின்ற தாமதமும், யுத்தகாலத்தில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டதைப் போன்ற நிலைமையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.   

தமிழர்களும் கத்தோலிக்கர்களும் சிங்களத் தேசியவாதிகளும், அரசாங்கத்துடன் முரண்பட்டு நிற்கின்ற இக்காலத்தில், முஸ்லிம் சமூகம் அவ்வாறான நிலைப்பாடு ஒன்றை இன்னும் எடுக்கவில்லை. அரசாங்கம் மேற்கொள்கின்ற கைதுகள், தடைகள், சட்ட நடவடிக்கைகளுக்கு, பூரண ஒத்துழைப்பை பொறுமையுடன் வழங்கி வருகின்றார்கள்.    

முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு, இன்னும் நீதி நிலைநாட்டப்படாத சூழலில், அந்த நீதி கத்தோலிக்க மக்களுக்காவது கிடைக்கட்டும். ஆனால், கைதுகளும் கெடுபிடிகளும் நேர்மையானவையாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, முஸ்லிம்களை நசுக்குவதற்கான இன்னுமொரு சந்தர்ப்பமாக, இதனைப் பயன்படுத்தக் கூடாது என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .