2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முஸ்லிம்களை வசப்படுத்தும் முயற்சியில் மஹிந்த

மொஹமட் பாதுஷா   / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் என்பது, மக்களின் தீர்ப்பாயமாகும். இதற்கான வழக்கில் எதிர்த்துப் போட்டியிடும் கட்சி எதிர்த்தரப்பாகவும், மக்கள் சாட்சியாளர்களாகவும் கருதப்படலாம்.   

அப்படியாயின், அரபு நாடுகளின் மன்னர்களைப் போல, நீண்டகாலத்துக்கு ஆட்சியிலிருப்பதற்குப் பெரும் அவாவுற்றிருந்து, பின்னர் அவர்களைப் போலவே யாரும் எதிர்பாராத விதமாக, மக்கள் ஆணையால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்போது மக்களைத் தம்வசப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கியிருக்கின்றார்.   

இதற்கு ஏதுவான சூழலையும் நல்லாட்சியே, ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது. குறிப்பாக, மஹிந்தவின் தோல்வியை உறுதிசெய்த வாக்காளர்களான முஸ்லிம், தமிழ் மக்களை, மனங்குளிர வைக்கும், வசப்படுத்தும் நகர்வுகளை அவர் மேற்கொண்டிருக்கின்றார்.   

சண்டைக்காரனை வெல்ல வேண்டுமென்றால், சாட்சிக்காரர்களின் கால்களில் விழுந்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு, மஹிந்த அணி வந்திருக்கலாம்.   

இலங்கைத் தீவின் வரலாற்றில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் என்பது பல அடிப்படைகளில் முக்கியத்துவமானது. அது இனிப்பான அல்லது கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, மஹிந்தவின் சாம்ராச்சியமும், அதில் நடைபெற்ற சம்பவங்களும், அது வீழ்ச்சியுற்ற வரலாறும் இலகுவில் மறந்து விடக் கூடியதல்ல.   

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, பெரும் எதிர்பார்ப்புகளோடு ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக, சந்திரிகா அம்மையாருக்குப் பதிலீடாகவே, மஹிந்த நிறுத்தப்பட்டிருந்தார். அவர் ஜனாதிபதியான பிறகு, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.  

ஆயுத மோதலின் முடிவு என்பது, விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கு ஆபத்தில் இருந்து, விடுதலையான சுதந்திர உணர்வொன்றை ஏற்படுத்தியிருந்த போதிலும், தமிழர்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம், அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சம்பவம் என்றும் அதைக் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. இந்த இடத்திலேயே தமிழர்கள், மஹிந்தவின் ஆட்சியோடு, அதிருப்தி கொள்ளத் தொடங்கினர் எனலாம்.   

குறிப்பாக, முள்ளிவாய்க்கால் உயிர்ப்பலிகள், வெள்ளைக்கொடி விவகாரம் தொடக்கம், இன்று முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா கூடப் பேசத் தொடங்கியிருக்கின்ற, போர்க் குற்றச்சாட்டுகள் வரை பல சம்பவங்கள், மஹிந்த ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த போதே நடந்தேறியதாகச் சொல்லப்படுகின்றன.   

ஆகவே, மஹிந்தவோடு உறவு கொண்டாடுவதற்கான எந்த முகாந்திரங்களும் பெரும்பான்மையான தமிழர்களுக்கு இருக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களின் பெரும்பாலானோர், அப்போதும் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். புலிகள் அமைப்பின் மீதான மனவெறுப்பும் இதற்குக் காரணமாக இந்தது.   
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, ஒரு வருடத்தில் அதாவது 2010இல், மஹிந்த ராஜபக்ஷவுக்கு காணப்பட்ட எழுச்சி அலைகளுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய, சமபலமுள்ள ஒருவர் அவரை எதிர்த்து போட்டியிடாத ஒரு சூழலில், மீண்டும் வெற்றி மஹிந்தவின் வசமானது.   

அவரது இரண்டாவது ஆட்சிக்காலம், வேறு மாதிரியாக அமைந்திருந்தது. பெரும் பெரும் அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருந்தாலும், சிங்களப் பெருந்தேசிய ஆட்சியாளர்களின் மனநிலை விருத்தியடையவில்லை என்பதையும் இனவாதம் இன்னும் ஒழியவில்லை என்பதையும் அவ்வாட்சிக் காலம் எடுத்துக் காட்டியது என்றே சொல்ல வேண்டியுள்ளது.   

லிபியாவின் கடாபியைப் போல அல்லது புரூணை சுல்தானை போல, இலங்கையின் ஜனாதிபதி எனும் சிம்மாசனத்தில் நீண்டகாலம், தான் அமர்ந்திருக்க வேண்டும் என்றும், தான் இறங்கிய பிறகு யாராவது ஒரு ‘ராஜபக்ஷ’ அதில் அமர வேண்டும் என்ற எண்ணமும் மஹிந்தவுக்கு இருந்தது.   

அதன் ஓர் அங்கமாகவே அரசமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். பின்னர், மாகாணங்களின் அதிகாரங்களைப் பின்கதவால் பிடுங்கிக் கொள்ளும் விதத்திலமைந்த ‘திவிநெகும’ சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.   

இவ்வாறு இன்னும் எத்தனையோ.....! இவற்றில் பலவற்றை தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்தனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும், இது பாதகமானது என்று தெரிந்து கொண்டே ஆதரவளித்தன. கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் தாமும் விழுந்து, மக்களையும் விழுத்தியது. அப்போதும் முஸ்லிம்கள் மஹிந்தவைப் பகிரங்கமாக எதிர்க்கவில்லை.  

ஆனால், 2012 நிலைமைகள் விஸ்வரூபம் எடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும். தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு இலக்கானது. அதைத் தொடர்ந்து பல இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்கள், இனவாதிகளின் காடைத்தனத்தால் பாதிக்கப்பட்டன. சமகாலத்தில், ஹலால் சான்றிதழ் விவகாரமும், அபாயா விவகாரமும் கையிலெடுக்கப்பட்டது.   

கடைசியில், பேருவளையிலும் அளுத்கமையிலும் திட்டமிட்ட கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதற்கான, நாடுதழுவிய கலவரத்துக்கான  ஓர் ஒத்திகையாகவே இது தோன்றியது. ஆனால், பொதுபலசேனா, ராவண பலய, சிங்ஹல ராவய போன்ற அமைப்புகளும் கலகொட அத்தே ஞானசார போன்ற தேரர்களும் இனவாதத்துக்குத் தூபமிட்டுக் கொண்டு, சுதந்திரமாகத் திரிந்தனர்.   

இந்தக் கட்டத்திலேயே, முஸ்லிம்கள், அரசாங்கத்தோடு அதிருப்தியுற்று முரண்படத் தொடங்கினர். இலங்கையில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னால், சர்வதேச சதி ஒன்று இருக்கின்றது என்பதும் தம்புள்ளையே அதன் தொடக்கப் புள்ளி என்றும் ஆய்வாளர்கள் கூறுவது உண்மையாக இருக்குமாயின், எங்கு தொட்டால் முஸ்லிம்களுக்கு ஆத்திரம் வருமோ, அங்கு கைவைப்பதற்கான ஒரு நீண்ட திட்டமாகவும் இது இருந்திருக்கலாம். 

எது எவ்வாறிருப்பினும், உள்நாட்டில் அரசாங்கத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் காவியுடைக்காரர்களுக்குப் பக்கபலமாகப் பலர் இருந்தனர் என்பதை மறுக்க முடியாது.   

வான்வழி, தரைவழி, கடல்வழி யுத்த தந்திரங்களையும் கொரில்லா உத்தியையும் கொண்டிருந்த பென்னம்பெரிய விடுதலைப் புலிகள் அமைப்பையே அழித்த மஹிந்தவின் அரசாங்கத்துக்கு, சில இனவாதிகளைக் கட்டுப்படுத்த முடியாது போனமை, ஆச்சரியம் கலந்த உண்மையாகும்.   

இது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி எனத் தெரிந்திருந்தால், அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். கண்ணுக்கு முன்னே இனவாத நடவடிக்கையில் ஈடுபடுவோரை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.   

ஆனால், மஹிந்த அதைச் செய்யவில்லை. அவர் தனது பலத்தை மிகை மதிப்பீடு செய்திருந்தது மட்டுமன்றி, மக்களின் பலத்தைக் குறைமதிப்பீடு செய்துமிருந்தார். மக்கள் தமது உண்மையான பலத்தை, 2015 ஜனவரி எட்டாம் திகதி, ஜனாதிபதி தேர்தலில் காட்டினர். அதன் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அதை மீள உறுதிப்படுத்தினர்.   

எத்தனையோ தேர்தலில் தோல்வியுற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கோ, மக்களிடம் பிரசாரம் செய்து வாக்குக் கேட்பதற்கு, கைவசம் பெரிதாக ‘சரக்குகள்’ இருக்கவில்லை.   

மஹிந்த ஆட்சியில், ஊழல் மோசடி என்ற பேசுபொருள் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அதைவிடப் பலமான, தமிழர்களையும் முஸ்லிம்களையும் தம்பக்கம் இழுக்கக் கூடிய ஒரு கருவி தேவைப்பட்டது. அப்போதுதான், நாட்டில் வியாபித்திருந்த இனவாதம், மறுதலையாக அவர்களுக்குப் பயன்பட்டது.   

“ராஜபக்ஷகளின் ஆசீர்வாதத்தோடு நாட்டில் இனவாதம் வளரவிடப்பட்டுள்ளது” என்ற விடயத்தை, மைத்திரியும் ரணிலும் சந்திரிகாவும் நன்றாகச் சந்தைப்படுத்தினர்.  
“நாம் ஆட்சிக்கு வந்தால், இனவாதிகளைக் கூண்டில் அடைப்போம்” என்றனர். 

“முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் இன, மத சுதந்திரம் பேணப்படும்” என்றனர். எனவே, மைத்திரிக்கு ஆதரவளிக்க, முஸ்லிம்கள் முடிவெடுத்தனர். இது மக்கள் எடுத்த முடிவே அன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த முடிவல்ல. மாறாக, மக்களின் முடிவுக்குப் பின்னாலேயே, முஸ்லிம் கட்சிகள் வந்தன என்பதையும் மறப்பதற்கில்லை.   

எனவே, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி உருவாக்கப்பட்ட போதிருந்த எதிர்பார்ப்பை விடவும், மைத்திரியின் ஆட்சி உருவாக்கப்பட்ட வேளையில் இருந்த எதிர்பார்ப்புகள் அதிகமாகும்.   

முஸ்லிம்களின் பிரதான எதிர்பார்ப்பு, இந்நாட்டில் இனவாதத்தைக் கட்டுப்படுத்துவதாகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, யுத்தத்தாலும் இனவாதத்தாலும் இழப்புகளைச் சந்தித்த முஸ்லிம்களுக்கும் நிலைமாறுகால நீதி நிலைநாட்டப்பட வேண்டியிருக்கின்றது.  

இப்போது, ஒப்பீட்டளவில் நல்லாட்சி முஸ்லிம்களுக்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்ற போதிலும், அந்த ஆறுதல் எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ, என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. சிறிது காலம் ஓய்வெடுத்திருந்த இனவாதிகள், அண்மைக்காலமாக மீண்டும் இனவெறுப்புப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   

பள்ளிவாசல் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. ஆனால், இனவாதிகளைக் கைது செய்து கூண்டில் அடைப்போம் என்றவர்கள், இன்று தங்களது அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே கூடிய கவனம் செலுத்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.   

இந்தச் சந்தர்ப்பத்தை ஒன்றிணைந்த எதிரணியினர், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ இப்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மைத்திரியும் ரணிலும் எந்தக் கருவியைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தனரோ, அதே கருவியைக் கையிலெடுக்கும் முயற்சியில், மஹிந்த இறங்கியுள்ளார். இனவாதத்தால் இழந்த ஆட்சியை, இனவாதச் சூழலைப் பயன்படுத்தியே கைப்பற்றுவதற்கு, மஹிந்த தரப்பு பலவாறான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது.   

நாட்டில் இனவாதம் வெளிக்கிளம்பியுள்ளது மட்டுமன்றி, அரசாங்கத்துக்கு எதிராக ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் சார்ந்த விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.  

சுருங்கக்கூறின், ஆட்சியை மாற்றிய போதும் காட்சிகள் மாறவில்லையே என்ற எண்ணம், கணிசமான முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. முன்னைய ஆட்சியில் நடைபெற்றதுதான் இந்த ஆட்சியிலும் நடைபெறுகின்றதோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.   

மஹிந்தவுக்கு ஆதரவளித்த சிலர்,“மைத்திரி ஆட்சியைவிட மஹிந்த ஆட்சியையே வைத்திருக்கலாம்” என்ற தோரணையிலும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிடுகின்றனர்.   

இதற்கெல்லாம் இடமளித்தது, இன்றைய அரசாங்கத்தின் போக்காகும். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமே தமக்கு முதலீடாக அமைந்தது என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள ஜனாதிபதியும் பிரதமரும் ஏனைய அதிகாரத் தரப்பினரும், அதைக் கட்டுப்படுத்தி, தாம் வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.   

ஆனால், அதை அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு செய்யவில்லை என்பதுடன், ‘நல்லாட்சி’ என்ற அழகான சொல்லுக்குள்ளே ஒழிந்து கொண்டால், எல்லாம் நலமாகி விடும், என்ற தோரணையிலும் செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.   

மறுபக்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்ட பனிப்போர் ஒன்று ஆரம்பமாகியிருக்கின்றது. ஐ.தே.க, சு.க உறவைப் பலமாக வைத்திருப்பதற்கு ஒரு சிலரும், மைத்திரி அணியையும் மஹிந்த அணியையும் ஒன்றிணைப்பதற்கு இன்னும் சிலரும் இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.   

அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ, இப்போதெல்லாம் முஸ்லிம்களின் அனுதாபியாகவும் சில வேளைகளில் தமிழர்களில் நல்லெண்ணம் கொண்ட நண்பனாகவும் தன்னை பிரதிவிம்பப்படுத்த விளைவதைக் காணமுடிகின்றது. இனவாதத்தை தான் வளர்க்கவில்லை எனவும், ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் வெளிநாடு செல்ல, தன்னுடைய ஆட்சி அனுமதிக்கவில்லை என்றும், மஹிந்த சொல்லியுள்ளார்.

“இனவாதம் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றது என்றால், உண்மையில், அதை உருவாக்கியவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்” என்று ஒன்றிணைந்த எதிரணியினர் கூறிவருகின்றனர்.   

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்த, காலம் எடுக்கும் என்றாலும், ஆட்சிக்கட்டமைப்பில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்த, ஒன்றிணைந்த எதிரணியினர் முயன்று வருகின்றனர்.  

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களுக்குச் செய்த அநியாயங்களுக்குப் பரிகாரம் செய்வது போல காட்டிக் கொள்ள முனையும் மஹிந்த தரப்பினர், அடுத்த தேர்தலை முன்னிட்டு, முஸ்லிம்களின் ஒருபகுதியினரைத் தம்பக்கம் கவர்ந்திழுக்கவும் பகிரதப் பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்.  

எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான 
இரா. சம்பந்தனையும் மஹிந்த ராஜபக்ஷ, வேறு ஒருவிடயமாகச் சந்தித்துப் பேசியிருக்கின்றமை கவனிப்புக்குரியது.  

சுதந்திரக் கட்சியின் இரு அணிகளிலும், அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் துணைகொண்டு, சுதந்திரக் கட்சிக்கும் மைத்திரி, மஹிந்தவுக்கும் ஆதரவு தேடும் படலம் வேறுவேறு கோதாக்களில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.   

சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா போன்றோர் கூறிவருகின்ற கருத்துகளின் ஆழஅகலத்தையும், அவை யாருக்கு நன்மை பயக்கும் என்பதையும் சொல்லத் தேவையில்லை.   

மஹிந்த ராஜபக்ஷ, தன்பக்கமுள்ள முஸ்லிம்களை, அடிப்படையாகக் கொண்ட அடிமட்டக் கட்சியின் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி வருகின்றார். 

முஸ்லிம் மக்கள் குழுக்களை அழைத்துச் சந்திக்கின்றார். கடைசியாக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த குழுவொன்று ‘கால்டன்’ இல்லத்துக்குச் சென்று திரும்பியிருக்கின்றது. 

இவ்வாறு, முஸ்லிம் ஊர்களில் இருந்து வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்ற ஆட்கள், சாதாரண வாக்காளப் பெருமக்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்தமாட்டார்கள்.   
அதேபோன்று, மைத்திரி ஆட்சி இப்போது சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதற்காக, மஹிந்த செய்தது சரி என்றோ, அவருக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு சரி என்றோ, நியாயப்படுத்தவும் இயலாது.   

ஆனால், மீண்டும் நாட்டில் இனவாதம் தலைதூக்குகின்றமையும், அன்று மஹிந்த இருந்தது போல, அதைக் கண்டும் காணாமல் நல்லாட்சியும் இருக்கின்றமையும், சமகாலத்தில் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம்களை ஆசுவாசப்படுத்தவும் வசப்படுத்தவும் முனைகின்றமையும் சாதாரண விடயங்கள் அல்ல.   

எனவே அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டும். ஆட்சியைத் தீர்மானிப்பது சிங்கள பெரும்பான்மை வாக்குகள் என்றாலும், அதை உறுதிப்படுத்தவும் தக்கவைக்கவும் தமிழர்கள், முஸ்லிம்களின் ஆதரவு என்றென்றும் அவசியம் என்பதை அரசாங்கம் மறந்து விடாமல் செயற்பட வேண்டும். 

மஹிந்த ஆட்சி விட்ட தவறை, மைத்திரி - ரணில் ஆட்சியும் விடுமாக இருந்தால், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு, மக்கள் பொறுப்பாளிகள் அல்லர்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .