2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூக்குடைபட்ட ‘எழுக தமிழ்’

கே. சஞ்சயன்   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஆறு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (16) ‘எழுக தமிழ்’ நிகழ்வு நடத்தப்பட்டு இருக்கிறது.   

மூன்றாவது தடவையாக, நடந்திருக்கிறது இந்த நிகழ்வு.   
தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பங்காளியாக இருந்த, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதல் இரண்டு தடவைகளும், இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில், முதுகெலும்பாக இருந்தது.   

அப்போது, ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தமக்கு எதிரான பேரணியாகப் பார்த்து, அதைத் தோற்கடிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்றது. ஆனால், இந்தமுறை நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவையை விட்டு வெளியே வந்து, ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தோற்கடிக்க, முனைப்பாகப் பிரசாரங்களில் ஈடுபட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.   

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ, இம்முறை ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்ததாயினும், அதன் முக்கிய தலைவர்கள் எவரும், நேரடியாகப் பங்கேற்கவில்லை.   

‘எழுக தமிழ்’ கோரிக்கைகள் நியாயமானவை என்று ஏற்றுக் கொண்ட, ஆனால், ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ஆதரவளிக்காத, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கூட்டத்தோடு கூட்டமாக பேரணியில் தமது ஆதரவாளர்களுடன் பங்கேற்றிருந்தார். ஆனால், ‘எழுக தமிழ்’ கூட்டத்தில் பங்கேற்கவில்லை.   

இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பு முறைகளைப் பார்த்தபோது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல்லாத குறையை, அப்பட்டமாக உணர முடிந்தது என்றே கூறலாம்.   

தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில், இந்தப் பேரணி வெற்றி பெற்றுவிட்டால், அது தமக்கான பாதிப்பாக அமையும் என்று உணர்ந்திருந்தது.   

முதல் இரண்டு பேரணிகளின் போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு தான் பார்த்தது.   
ஏனென்றால், அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே, மாற்றுத் தலைமையைத் தோற்றுவிக்கும் கலகக்காரராக சி.வி. விக்னேஸ்வரன் மாறியிருந்தார்.   

சி.வி.விக்னேஸ்வரனின் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் அணி திரண்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு, அவரது பக்கம், ஆதரவாளர்கள் சாய்ந்து விட்டனர் என்ற கருத்து, உருவாகி விடும் என்ற பதற்றம் அப்போது, கூட்டமைப்பின் தலைவர்கள் பலருக்கு ஏற்பட்டிருந்தது.   

இப்போது அந்தப் பதற்றம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வந்திருந்தது.   
முதல் இரண்டு, ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நடத்துவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தது.   

அதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்தலாம் என்று வியூகம் வகுத்திருந்தது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி.   

ஆனால், தான் வெட்டிய குழியிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போது வீழ்ந்திருக்கிறது.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல்லாமலேயே விக்னேஸ்வரன், தனது பலத்தைக் காட்டி விட்டார் என்ற நிலை வந்து விடக்கூடாது என்றே அவர்கள் பயந்தனர்.   

அதனால் தான், இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூச, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முற்பட்டது. அதற்கு எதிரான பிரசாரங்களையும் மேற்கொண்டது.   

ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அச்சம் கொள்ளும் அளவுக்கு, இந்தப் பேரணி இருக்கவில்லை என்பதே உண்மை.   

அவ்வாறாயின், தமிழ் மக்கள் பேரவை எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லையா என்ற கேள்வியை எழுப்பலாம். நிச்சயமாக, அதுதான் உண்மை.   

‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு முதல் நாள், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், 15 ஆயிரம் மக்களை, இந்தப் பேரணியில் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.   

ஆனால், அந்த எதிர்பார்ப்பை ‘எழுக தமிழ்’ பேரணி நிறைவேற்றவில்லை என்பது கசப்பான உண்மை.   

இது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இனிப்பான செய்தியாக இருக்கக் கூடும். தாங்கள் இல்லாமல், சி.வி. விக்னேஸ்வரனால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மை, உணர்த்தப்பட்டு விட்டது என்று அவர்கள் கருதக் கூடும்.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை, சி.வி. விக்னேஸ்வரன் இப்போதும் கூட, அவர்களது எதிரியல்ல; அவர் தோற்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை.   

ஆனால், அவர் கூட்டு வைத்திருக்கின்றவர்களிடம் இருந்து விலகித் தம்முடன் தனியாக வந்து சேர வேண்டும் என்பதே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பு.   

எனவே, இந்தப் பேரணி பெரியளவில் வெற்றிகரமாக அமைந்திருந்தால், அது சி.வி. விக்னேஸ்வரனின் அரசியலைப் பலப்படுத்தியிருக்கும். அவர் தன் வழியில், துணிச்சலுடன் நடக்கும் தைரியத்தைக் கொடுத்திருக்கும்.   

அது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்புக்குப் பாதகமானதாக அமைந்திருக்கும். ஆனால், நடந்திருக்கும் விடயங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குச் சாதகமானதாகவே தெரிகிறது.   

சி.வி.விக்னேஸ்வரன் தனித்துச் செயற்பட்டு, மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிக் கொள்வது சாத்தியமில்லை என்பது உறுதியாகியிருக்கிறது,   

‘எழுக தமிழ்’ பேரணியோ, சி.வி.விக்னேஸ்வரனோ, யாழ்ப்பாணத்தைக் கடந்து, வெளியே பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்பது, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.   

இங்கு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஈ.பி.ஆர்.எல். எவ்வும், டெலோவும் பலம்வாய்ந்தவையாக இருப்பதாகச் சொல்லப்படும் மன்னாரிலும், வவுனியாவிலும், முழு அடைப்புப் போராட்டத்துக்கான அழைப்பு, தோல்வி கண்டிருக்கிறது.   

இந்த நிகழ்வுக்குத் திரட்டப்பட்ட கூட்டம், சி.வி. விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக கூடிய கூட்டம் அல்ல. அரசியல் சார்பின்றி அனைவரையும் பங்கேற்குமாறே, அழைப்பு விடுக்கப்பட்டது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூடக் கலந்து கொண்டார். எனவே, அவர் சி.வி. விக்னேஸ்வரனின் அணியைப் பலப்படுத்துவார் என்று கற்பனை பண்ண முடியாது.   

இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வில் அதிகளவான மக்கள் பங்கேற்கவில்லை என்பதை வைத்து, பிரமாண்டமான ஒரு கூட்டத்தைக் காட்ட சி.வி.விக்னேஸ்வரன் தவறியிருக்கிறார். இது அவரைப் போட்டியாக நினைக்கின்ற தரப்புகளுக்கு, ஆறுதலை அளிக்கக் கூடும்.   

அதேவேளை, சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பான, மீள் பரிசீலனைகளை மேற்கொள்வதற்கும் இந்த நிகழ்வு, ஒரு காரணியாக அமையக் கூடும்.  ஏனென்றால், அவரது அரசியல் வியூகத்துக்கு, இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்.   

எதிர்காலத்தில் எத்தனை அரசியல் கூட்டணியை, வியூகத்தை உருவாக்க வேண்டும் என்ற தெளிவு அவருக்கு உருவாகக் கூடும்.  ஆனால், இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வு, தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்றுதான் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.  ஏனென்றால், இது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கோரி, அவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட நிகழ்வாகும்.   

அந்த இலக்கை, இந்த நிகழ்வு எட்டியதா என்ற கேள்விக்கு, நிச்சயமாக இல்லை என்றே பதிலளிக்க வேண்டும்.  ஏனென்றால், அவ்வாறு அழுத்தம் கொடுக்கக் கூடிய திரட்சியை இந்த நிகழ்வு அடையவில்லை.   

இது ஏற்பாட்டுக் குறைபாடா, தவறான புரிதலா, அரசியல் ஈடுபாடு இன்மையா, இங்கு முன்வைக்கப்பட்டவை எவையும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இல்லையா? இவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை.   

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தான், அடுத்த கட்டம் நகர்த்தப்பட வேண்டுமே தவிர, அரசியல் நோக்கங்களை அடைவதற்காக, அடுத்தடுத்த கட்டங்களிலும் நகர்த்தப்பட்டால், மீண்டும் மீண்டும் மூக்குடைபட்டுக் கொள்ளவே வழிவகுக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X