2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூன்று காரணங்களும் மூக்குடைவும்

கே. சஞ்சயன்   / 2018 நவம்பர் 16 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி வெளியிட்ட அந்த நீண்ட அறிக்கையின் தொடக்கத்திலேயே, 14 நாள்களுக்குள் மூன்றாவது தடவையாக, உங்கள் முன் உரையாற்றுவதாகக் கூறியிருந்தார்.  

முதல் உரையில், ரணில் விக்கிரமசிங்கவை ஏன் பதவிநீக்கினேன், என்று நீண்ட விளக்கங்களையும் மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்த நோக்கத்தையும் விவரித்திருந்தார்.  

இரண்டாவதாக, பத்தரமுல்லவில் கட்சிப் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, வண்ணத்துப் பூச்சிகள் பற்றிப் பேசி, மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளர்களைக் குஷிப்படுத்தினார்.  

மூன்றாவது, அவரது உரையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணி பற்றிக் கூறியிருந்தார். மூன்று காரணங்களை முன்வைத்தே நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக அவர் குறிப்பிட்டார்.  

அந்த நாடாளுமன்றக் கலைப்பு, இப்போது உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அந்த முடிவை எடுத்தமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால கூறிய காரணங்கள் மூன்றும் வலிமையானவை அல்ல.   
நாடாளுமன்ற உறுப்பினர்களை, விலைக்கு வாங்க நடத்தப்பட்ட பேரம் காரணமாகவே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்குத் தான் வந்ததாக, முதலாவதும், முக்கியத்துவம்மிக்க  காரணியாக, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டது.  

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தலைக்கு, 500 மில்லியன் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது என்று, ஜனாதிபதி கூறியிருந்தார். இந்தப் பேரத்தை நடத்தியது யார் என்பதை, ஜனாதிபதி கூறவில்லை. எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு, இந்தளவுக்குப் பணம் கொடுக்க முற்பட்டது என்பதையும் கூறவில்லை. மொட்டையான ஒரு காரணத்தை முன்வைத்து விட்டு, அதுவே முக்கியமானதும் முதன்மையானதுமான காரணி என்று குறிப்பிட்டார்.  

இரண்டு தரப்புகளுமே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கக் கடும் முயற்சிகளில் ஈடுபட்டன. ஐ.தே.கவில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமது பக்கம் இழுத்துக் கொள்வதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு பேரம் நடத்தியது. அதுபற்றிய, ஓர் ஒலிப்பதிவும் வெளிச்சத்துக்கு வந்தது.  

மக்களால்த் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைக்கு, மில்லியன் கணக்கில் விலை பேசப்படுவது, படுமோசமான ஜனநாயக மீறல் தான். அதையிட்டு ஜனாதிபதிக்குக் கோபம் வந்திருப்பது ஆச்சரியமானதே என்றாலும், அது நியாயமானது. அதேவேளை, இந்த நிலைமைக்குத் தானே பொறுப்பு என்பதை, அவர் எப்படி மறந்து போனார்?   

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமர் ஆக்கியதும், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார் அவர். எம்.பிக்களை வளைத்துப் போடவே, இந்தக் காலஅவகாசம் பயன்படுத்தப்படவுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஜனாதிபதியும் கூட, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது, அதற்காகத் தான்.  

புதிய பிரதமரை நியமித்தால், உடனடியாகவே நாடாளுமன்றத்தில் அவர், தனக்கிருந்த பெரும்பான்மையை நிரூபித்து விட்டுப் போயிருந்தால், இத்தனை குழப்பங்களும் வந்திருக்காது. அதற்கு வழியை ஏற்படுத்தாமல், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, குதிரைப் பேரத்தை உருவாக்கிக் கொடுத்த பொறுப்பு யாருடையது? சரி, குதிரை பேரம் நடக்கிறது என்று தெரிந்ததும், அதைத் தடுத்து நிறுத்த- நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, மைத்திரிபால சிறிசேன என்ன நடவடிக்கையை எடுத்திருந்தார்? எதையுமே செய்யவில்லை.   

தமக்குப் பெரும்பான்மை பலத்தைக் காண்பிக்க முடியவில்லை என்று தெரிந்ததும், மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கக் கூடாது என்பதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னர், குதிரை பேரம் பற்றி பேசினார் ஜனாதிபதி.  

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைக்கு விலை பேசப்பட்டது என்பதை அறிந்திருந்த ஜனாதிபதியினால், அதை யார் செய்தார்கள் என்பதையும் அறிந்திருக்க முடியும். அவ்வாறாயின் அதை அவர் வெளிப்படுத்தி, உரிய விசாரணைகளுக்கு உத்தரவிடுவது தான் பொறுப்பான செயலாகும்.  

இனி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு, ஜனாதிபதி கூறியுள்ள இரண்டாவது காரணி என்னவென்று பார்க்கலாம்.  

இது, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு. அவர் சபாநாயகருக்குரிய நடுநிலையைப் பேணத் தவறி விட்டார்; தனது உத்தரவுகளை ஏற்க மறுத்தார்; நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக, நடக்க முயன்றார் என்றும் குற்றங்களைச் சாட்டியிருந்தார்.  

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள, சபாநாயகர் மறுத்த விவகாரம் பற்றி மாத்திரமன்றி, அவருக்குப் பிரதமர் அலுவலகத்தைக் கொடுக்கவும் மறுத்தார் என்று குற்றம்சாட்டினார்.   

பெரும்பான்மையை நிரூபிக்க முன்னரே, அவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டபோது, ஏற்கெனவே இருந்த அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அலுவலகத்தைத் திறந்து விட்டு, அங்கு பணியைப் பொறுப்பேற்க, ஏற்பாடு செய்திருந்தார் நாடாளுமன்றச் செயலாளர். இதேவழியில், மஹிந்த ராஜபக்‌ஷவும், நாடாளுமன்றத்தில் தனது அலுவலகத்தைப் பெற்றிருக்க முடியும். சபை முதல்வரின் அறையைக் கைப்பற்றுவதற்கு, சபாநாயகரின் அனுமதி தேவைப்படாத போது, பிரதமருக்கு மாத்திரம் ஏன் தேவைப்பட்டது?  

அடுத்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சபாநாயகரின் உத்தரவைத் தாங்கள் ஏற்க முடியாது என்றும், ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கமையவே செயற்படுவோம் என்றும் நாடாளுமன்றச் செயலாளரும், படைக்கல சேவிதரும் கூறியிருந்தனர்.  

நாடாளுமன்ற ஆசன ஒழுங்கமைப்புகள் இவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள், ஜனாதிபதியின் உத்தரவை நிறைவேற்றத் தயாராகவே இருந்தனர். எனவே, மஹிந்தவுக்கு ஆசனம் கொடுக்க மறுத்தார், அலுவலகம் கொடுக்க மறுத்தார் என்பதெல்லாம் வீண் குற்றச்சாட்டுகளே.  

கடந்த புதன்கிழமை (14) நாடாளுமன்றம் கூட்டப்பட்ட போது, பிரதமருக்குரிய ஆசனத்தில் தான் மஹிந்த ராஜபக்‌ஷ அமர்ந்திருந்தார். எனவே, ஜனாதிபதி ஊகத்தில் அடிப்படையில்தான், இரண்டாவது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.  

நாடாளுமன்றம் கூடும் முதல் நாளில், பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய மரபு இல்லை. நிலையியல் கட்டளையில் அவ்வாறு கூறப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.   

தம்மிடம் பெரும்பான்மை பலம் உள்ளதாகக் கூறிய மஹிந்த ராஜபக்‌ஷ, அதை வெளிப்படுத்தி விட்டுப் போயிருந்தால், எல்லாமே முடிந்து போயிருக்கும்.  

கடைசியில், மஹிந்த ராஜபக்‌ஷவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையே, நாடாளுமன்றத்தில் ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலையில் இல்லை.  
மூன்றாவதாக, ஜனாதிபதி முன்வைத்த காரணி விந்தையானது. 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டினால்,நாடாளுமன்றத்தில் இரத்தக்களரி ஏற்பட்டிருக்கும் என்று காரணம் கூறினார்.  

ஒரு நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் அடிபட்டுச் சாகும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால், சபாநாயகருடன் பேசி, உரிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தான் முறையானது. இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசி, சுமூகமான நிலைமையை அவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  

அதை விட்டு விட்டு, அடிபட்டுச் சாக நேரிட்டிருக்கும் என்று கூறி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, ஏதோ தெருப்பொறுக்கிகள் போலவும், கொலைகாரர்கள் போலவும் அடையாளப்படுத்த முற்பட்டார். மோதலைத் தடுப்பதற்காக, வேறு வழியின்றி நாடாளுமன்றத்தைக் கலைத்தேன் என்று பொறுப்பின்றிக் கூறினார்.

ஆனால், அவரது மூன்றாவது காரணமும் பொய்யே என்பதை நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற அமர்வு நிரூபித்தது. அவ்வாறாயின், நாடாளுமன்றக் கலைப்புக்கு, ஜனாதிபதி வைத்த மூன்றாவது காரணமும் வலுவற்றது என்று தானே அர்த்தம்.  

அரசமைப்பு, பொருளாதார இழப்பு, அரசியல் கொந்தளிப்பு, நாட்டின் எதிர்காலம், சர்வதேச அழுத்தங்கள் என்று எதைப் பற்றியும் யோசிக்காமல், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை எடுத்து விட்டு, சப்பையான நியாயங்களைக் கூறி, நியாயப்படுத்த முனைந்திருக்கிறார் ஜனாதிபதி.  

ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால, தனது முன்னைய தவறுகளை மறைக்கவும், மறுக்கவும் அடுத்தடுத்துத் தவறான நகர்வுகளையே முன்னெடுக்கிறார். இது, அவரை மாத்திரமன்றி, நாட்டையும் கூட மிகமோசமான நிலைக்கே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .