2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மூலதனம்’ - 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன.   

வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன.   

உலகில் அதிகளவான விமர்சனத்துக்கும் அவதூறுகளுக்கும் திரிப்புக்கும் ஆளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் ஒரு நூல் திகழ்கின்றது என்றால், அந்நூலின் சிறப்பை விவரிக்க வேண்டியதில்லை. காலங்கள் பல கடந்து, மாற்றங்கள் பல கண்டு, ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒரு புத்தகத்தால் நின்று நிலைக்க முடிகிறதென்றால், அது உலகைப் புரட்டிப் போட்டதொன்றாகவே இருக்க முடியும்.   

கார்ல் மார்க்ஸால் எழுதப்பட்டு, 1867இல் வெளியிடப்பட்ட ‘மூலதனம்’ நூல் தனது 150 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்நூல் போல், உலக அரசியலரங்கில், தத்துவத்தில், பொருளாதார விவாதங்களில் கலந்துரையாடப்பட்ட நூல் எதுவும் இருக்க முடியாது.   

உலகை உலுக்கிய ‘ரஷ்யப் புரட்சி’, மகத்தான ‘சீனப் புரட்சி’ உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வெற்றிக்கும் நலவாழ்வுக்கும் வழிவகுத்த பல சோசலிஷப் புரட்சிகளின் அடிப்படையாகவும் மார்க்ஸியம் என்கிற கோட்பாட்டின் வழிகாட்டியாகவும் அமைந்த புத்தகம் மார்க்ஸின் ‘மூலதனம்’ ஆகும்.   

இப்புத்தகம் மூன்று பாகங்களாக வெளிவந்தது. இதன் முதற்பாகம் மார்க்ஸால் 1867 ஓகஸ்டில் எழுதி முடிக்கப்பட்டு, செப்டெம்பர் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது. மற்ற இரு பாகங்களையும் எழுதி முடிக்க, அவர் உயிருடன் இருக்கவில்லை. அவர் தனது 65 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.   

எனினும், அவர் எழுதி வைத்த பெருந்தொகையான குறிப்புகளைத் தொகுத்து, இரண்டாம், மூன்றாம் பாகங்களாக மார்க்ஸின் மறைவுக்குப்பின் அவரது நண்பரான பிரட்ரிக் ஏங்கல்ஸ் வெளியிட்டார்.   

மார்க்ஸ் ‘மூலதனம்’ என்ற படைப்பில், அவரது பொருளியல் கோட்பாட்டுக்காகவே மிகவும் அறியப்பட்டவராவார். ‘மூலதனம் நூலின் முன்னுரையில் ‘நவீன சமுதாயத்தின் (அதாவது முதலாளித்துவ சமுதாயத்தின்) இயக்க விதியை, அதன் தூய வடிவில் வெளிப்படுத்துவதே இந்த நூலின் இறுதியான இலக்கு’ என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.  

முதலாளித்துவ ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான, நிதி நெருக்கடி மோசமாகியுள்ள இன்றைய சூழலில், மார்க்ஸ் உலகுக்கு வழங்கிச் சென்றுள்ள ‘மூலதனம்’ என்ற படைப்பு, மீண்டும் ஒரு முறை, தனது முக்கியத்துவத்தை நிரூபித்து நிற்கின்றது.  

2008 இல் உலகைச் சூழ்ந்த பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், முதலாளித்துவத்துக்கு ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி காரணமாக, சோசலிஷக் கருத்துகளை அறிந்து கொள்வதில் உலகெங்கிலும் மக்களிடையே ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் வங்குரோத்தாகத் தொடங்கிய பிறகு, எல்லோரும் ‘மூலதனம்’ நூலைத் தேடி வாசிக்கத் தொடங்கினர்.   

2008 இல் பெர்லினில் கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூலின் அனைத்து பிரதிகளும் சில மாதங்களில் விற்றுத் தீர்ந்தன. மார்க்ஸ் எழுதிய நூல்களின் முழுமையான தொகுப்புகளை வெளியிட்டு வரும், ஜெர்மன் பதிப்பாளர் ஜோர்ன் ஷட்ரம், “2004ஆம் ஆண்டுவரை மூலதனம் நூல் ஆண்டுக்கு 100 பிரதிகளுக்கும் குறைவாகவே விற்று வந்தது. 2008ஆம் ஆண்டில், கடந்த நான்கு மாதத்தில் 2,500 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுள்ளன. முதலாளித்துவம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது பற்றி, மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளதையே இது காட்டுகிறது” என்றார்.   

எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளின் பின்னரும் இவ்வளவு செல்வாக்குள்ளதாக அப்புத்தகம் ஏன் திகழ்கிறது. இக்கேள்விக்கு மார்க்ஸின் புகழ்பெற்ற கூற்றே பதிலாக அமைகிறது. “தத்துவவாதிகள் இதுவரை உலகைபப் பலவழிகளில் வியாக்கியானம் செய்து வந்துள்ளனர். ஆனால் தேவையானதும் நம்முன்னுள்ள சவாலும் உலகை எவ்வாறு மாற்றுவது என்பதுதான்” என்றார். அவ்வகையில் உலகில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் சுரண்டப்படும் மக்களுக்குமான விடுதலையை மார்க்ஸ் முன்மொழிந்தார்.  

உலகின் பொருளாதார அடிப்படைகளை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்குவதனூடு மூலதனம் எவ்வாறு செயற்படுகிறது? எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? யாருடைய நலன்களைக் காக்கிறது போன்ற கேள்விகளுக்கான ஆழமான விளக்கங்களை அவர் முன்வைத்தார்.   

அதேவேளை, முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஆதாரமாகவுள்ள அடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ ஆகியோரின் பொருளியல் கண்டுபிடிப்புகளை, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கி, அவற்றின் குறைபாடுகளை வெளிப்படுத்தியதன் ஊடு, பொருளாதாரக் கோட்பாட்டியலையே மறுபக்கம் திருப்பிப் போட்டார்.   

ஏனைய சிந்தனையாளர்களிடம் இருந்து மார்க்ஸ் வேறுபடும் இடம் யாதெனில், புத்தகப் புழுவாகவோ, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமூகம் பற்றிப் பேசும் அறிவுஜீவியாகவோ அவர் இருக்கவில்லை. மாறாக, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பல சமயங்களில் களத்தில் நின்றார்.   

1844 - 1850 காலப்பகுதியில், பல மக்கள் எழுச்சிகளில் பங்கேற்று பல ஐரோப்பிய அரசுகளால், பலமுறை நாடு கடத்தப்பட்டார். ‘மூலதனம்’ எழுதும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்டிருந்த பொழுதும் கூட, தொழிலாளி வர்க்கத்தின் முதல் அகிலத்தை உருவாக்குவதில், 1864 இல் அதன் முதல் மாநாட்டை இலண்டன் நகரில் நடத்துவதில், அதற்கான முக்கிய ஆவணங்களைத் தயாரிப்பதில் மார்க்ஸ் மிகப்பெரிய பங்கு ஆற்றினார். மாநாட்டின் தொடக்க உரையை மார்க்ஸ்தான் எழுதினார்.   

“சமூகம் என்பது தனிமனிதர்களைக் கொண்டதல்ல; மாறாக, அது மனிதர் உட்பட்டு நிற்கும், மனிதரிடையிலான உறவுகளின் ஒட்டுமொத்தத்தைக் கூறுவதாகும்” என்று கூறிய மார்க்ஸ், தனது ‘மூலதனம்’ புத்தகத்தை இதன் அடிப்படையில் எழுதினார்.   

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது சமூக ஆய்வு, பொருளியல், வரலாறு போன்ற துறைகளுக்கு இயங்கியல் பொருள்முதல்வாத அணுகுமுறையைப் பயன்படுத்தும் ஆய்வுமுறையைக் குறிக்கிறது என விளக்கினார்.   

‘மூலதனம்’ நூலின் அடிப்படைகள், மனிதனுக்கும் சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான உறவை விளக்குகிறது. ‘மூலதனம்’ இதைப் பின்வருமாறு விளக்குகிறது. ‘மனித இருப்புக்குரிய உற்பத்தியில், மனிதர் தங்கள் விருப்பத்துக்கும் அப்பால், திட்டவட்டமான உற்பத்தி உறவுகளுக்குள் அமைகின்றனர். அந்த உறவுகளின் திரட்சி, சமூகத்தின் பொருளியல் அமைப்பாக அமைகிறது. அந்த அமைப்பின் மீதே, சட்டத்தையும் அரசியலையும் கொண்ட ஒரு மேற்கட்டுமானமும் அதைச் சார்ந்து, குறிப்பான உணர்வு நிலைகளும் அமைகின்றன.  

பொருள் சார்ந்த உற்பத்தி முறை சமூக, அரசியல், ஆய்வறிவுச் செயற்பாடுகளின் பொதுவான விருத்திப் போக்கை ஆற்றுப்படுத்துகிறது. எனவே, மனிதரின் உணர்வுநிலை அவர்களின் இருப்பைத் தீர்மானிப்பதற்கு மாறாக, மனிதரின் இருப்பு மனிதரின் உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது.   

ஏதோ ஒரு நிலையில், சமூக உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளுடன் கடுமையாக முரண்படுகையில், பழைய சொத்துடைமை உறவுகள் விருத்திக்குத் தடையாகின்றன. அதன் பயனாகச் சமூகப் புரட்சி உருவாகிறது. பொருளாதார அடித்தளமும் முழு மேற்கட்டுமானமும் மாற நேருகிறது. இம் மாற்றங்களை உணர்வு நிலைகள் மூலமின்றிப் பொருள் சார்ந்தே விளக்க இயலும்.  

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பின்வரும் நியதிகளின் அடிப்படையில் விருத்தி பெறுகிறது என மார்க்ஸ் விளக்குகிறார்:   

1. மனித சமுதாயத்தின் அடிப்படை, மனிதர் தமது இருப்புக்கான உற்பத்திக்காக, இயற்கையுடன் பேணும் உறவு பற்றியது.  
2. உற்பத்திக்கான உழைப்பு, சொத்துடைமையின் அடிப்படையில் அமைந்த, வர்க்கங்களிடையே பங்கிடப்பட்டுள்ளது.  
3. வர்க்க அமைப்பு, உற்பத்தி முறை மீது தங்கியுள்ளது.  
4. உற்பத்தி முறை, உற்பத்திச் சக்திகளின் நிலையில் தங்கியுள்ளது.  
5. சமூக மாற்றம், ஆதிக்க வர்க்கத்திலும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது.  

வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறையின் பயனாக, அரசியல் நிகழ்வுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் தனிமனித அடிப்படையிலன்றி, வரலாற்று நிகழ்வுகளினதும் அவற்றின் சமூகக் காரணங்களினதும் போக்கின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள இயலுமாகியுள்ளது. முன்னைய அணுகுமுறைகள் விளக்கத் தவறிய, மனித சமூகச் செயற்பாடுகளையும் வரலாற்றியலையும், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இயலுமாக்கியுள்ளது.  

முதலாளியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அதன் நிலைபெறுதலையும் மார்க்ஸ் முன்மொழித்த ‘மூலதனம்’ உள்ளடக்கத்தின் அடிப்படையில் பின்வருமாறு விளங்கலாம்.   

n முதலாளித்துவத்தின் வளர்ச்சி, தனிப்பட்ட முதலாளியின் இடத்தில், முதலீட்டில் பங்காளிகளைக் கொண்டுவருகிறது. அடுத்துக் கூட்டுத் தாபனங்களும் ‘எவரும்’ பங்குகளைப் வாங்கக் கூடிய பங்குச்சந்தை உருவாகின்றன.  

​* மூலதனத்தின் இருப்புக்குத் தேவையான இலாபத்தின் இடையறாப் பெருக்கத்தை வேண்டி, மூலதனம் தேச எல்லை கடந்த சந்தைகளைத் தேடுகிறது. அதுவே, பின்னர் சந்தைகளுக்கான போட்டிக்கும் மூலதனத்தின் இடப்பெயர்வுக்கும் உழைப்பின் இடப்பெயர்வுக்கும் காரணமாகிறது.   

* முதலீட்டைப் பெருக்கும் தேவை, வங்கிகள் கடன் மூலம் முதலிட வழி செய்தது. இதன்பயனாக முதலாளித்துவத்தின் உச்சியில் இன்று உற்பத்தியுடன் தொடர்பற்ற நிதி நிறுவனங்கள் உள்ளன.  

* பங்குச் சந்தை முலதனத்தின் உண்மையான பெறுமதியுடன் தொடர்பற்ற ஒரு வணிகமாகி ஒரு சூதாட்டமாகிறது. அதன் வளர்ச்சிப் போக்கில் பணமும் ஒரு விற்பனைப் பண்டமாகிறது.   

* நவீன தகவல் தொழில் நுட்பம் மூலதனத்தின் துரித இடப் பெயர்வை இயலுமாக்கியுள்ளது.  
* உற்பத்திகளும் தேச, நிறுவன அடையாளங்களை இழக்கின்றன.  
nவளரும் உற்பத்தி, தேவைக்கு மேலான நுகர்வை வலியுறுத்தி, நுகர்வுப் பண்பாடு உருவாகிறது.   
*முதலாளித்துவம் இன்று உற்பத்தியில் இருந்தும், சமூகத் தேவைகளில் இருந்தும் அந்நியப்பட்ட முகமற்ற, நாடற்ற அருவ அமைப்பாகியுள்ளது.  

இப்புத்தகத்தின் மீது, முன்வைக்கப்படுகின்ற முக்கியமான விமர்சனம், இது வாசிக்கக் கடினமான புத்தகம் என்பது. ‘மூலதனம்’ நூலின் பிரெஞ்சுப் பதிப்புக்கான முன்னுரையில், ‘உண்மையைக் காணத் துடிக்கிற வாசகர்களை முன்கூட்டியே எச்சரித்து, முன்கூட்டியே ஆயத்தப்படுத்துவதன் மூலம் அல்லாமல், சங்கடத்தைச் சாமாளிக்கச் சக்தியற்றவனாய் இருக்கிறேன். விஞ்ஞானத்துக்கு ராஜபாட்டை ஏதுமில்லை; அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே, அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு’ என்று மார்க்ஸ் எழுதினார். இதுபோன்ற எச்சரிக்கைகள் படிக்கத் தூண்டுவதற்காக எழுதப்பட்டவையே ஆகும்.  

மார்க்ஸின் கல்லறையின் முன்னால், தனது இரங்கல் உரையை நிகழ்த்திய பிரட்ரிக் ஏங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டார். “சார்ல்ஸ் டார்வின், உயிர்ப் பொருள் இயல்பின் விருத்தி விதியை, எவ்வாறு கண்டறிந்தாரோ, அவ்வாறே மனித வரலாற்றின் இயங்கு விதியை, மார்க்ஸ் கண்டறிந்தார்.  அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம் என்பனவற்றில் ஈடுபடுவதற்கு முதல், மனித இனம் உண்ணவும் அருந்தவும் நிழல் பெறவும் உடுக்கவும் வேண்டும் என்ற எளிய உண்மையைக் கண்டறிந்தார்.   

எனவே, மனித வாழ்க்கைக்கு உடனடி அவசியமான பொருள்சார்ந்த வகை முறைகளின் உற்பத்தியும் அதன் விளைவாக, ஒரு காலப் பரப்பில் பெறப்பட்ட பொருளியல் வளர்ச்சியுமே அரச நிறுவனங்களினதும் சட்டக் கருத்தாக்கங்களினதும் கலைகளினதும் ஏன் மதங்கள் பற்றிய சிந்தனைகளினதும் அத்திபாரமாக அமைந்ததெனவும், முன்னையவற்றின் அடிப்படையிலேயே பின்னையவை விளக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.  

அது மட்டுமல்ல, இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றிய முதலாளித்துவ சமுதாயத்தையும் ஆளும் சிறப்பு விதியையும் அவர் கண்டறிந்தார்.   

எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, முதலாளித்துவ பொருளியலாளர்களும் சோஷலிச விமர்சகர்களும் அதுவரை இருளில் வழி தேடிக் கொண்டிருந்தார்களோ, அதன் மீது, உபரிமதிப்பு என்பதைக் கண்டறிந்து, ஒளியைப் பாய்ச்சியவர் மார்க்ஸ் ஆவார்” என்று உரையாற்றியிருந்தார்.  

மூலதனம் முதலாளித்துவத்தின் துணையுடன் வளர்ந்து, ஏகாதிபத்தியமாக வளர்ந்து, உலகமயமாக்கலின் ஊடு வியாபகமாகி, 2008 இல் நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியுடன் கேள்விக்குட்பட்டு, இன்று உலகமயமாதலின் தோல்வியையும் நவதாராளவாதத்தின் நெருக்கடியையும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற காலமொன்றில், 150 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது ‘மூலதனம்’ மீளவும் வாசிக்கப்படுகிறது.   

உலகமயமாக்கல் தோல்வியடைந்துள்ள இன்றைய சூழலில், கடும் சந்தைப்போட்டி யுகத்தில், மூடிய சந்தையையும் எல்லைகளின் முக்கியத்துவத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிகையில், அதற்கு நேரெதிராக நவதாராளவாதத்தையும் திறந்த எல்லைகளையும் ஜேர்மன் அதிபர் அஞ்செலா மேக்கலும் அவரது ஐரோப்பிய ஒன்றிய சகாக்களும் உயர்த்திப்பிடிக்கையில் ‘மூலதனம்’ நூலின் மீதான ஆழமான புரிதலை நாம் மேற்கொண்டாக வேண்டும்.   

இன்னமும் தீராத உலகப் பொருளாதார நெருக்கடியானது முதலாளித்துவத்தின் மீதான கடும் அதிருப்தியையும் பீதியையும் உருவாக்கியுள்ளது. வேலையிழப்புகள், சிக்கன நடவடிக்கைகள், சமூகநல வெட்டுகள் என்பன எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இன்றைக்கு உலகெங்கும் உள்ள மக்கள் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.   

கார்ல் மார்க்ஸ் சொல்வது போல, “ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், தவிர்க்க முடியாதபடி, அதிலிருந்து எழும் சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இப்போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் அதிமுன்னேறிய வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்கு முறையிலிருந்தும், ஈற்றில் வர்க்கப் போராட்டத்திலிருந்தும், நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கப்படாமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவிக்க இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது”. இதைத்தான் மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ புத்தகத்தில் விளக்கினார்.   

‘மூலதனம்’ தான் கடந்து வந்து 150 ஆண்டுகளில் உலகைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டு புரட்சிகளின் நூற்றாண்டாக இருக்கின்றதென்றால், அதற்கான பிரதான பணியை ‘மூலதனம்’ நூல் ஆற்றியிருக்கிறது எனக் கொள்ளவியலும். மார்க்ஸியத்தின் முடிவை பலதடவைகள் பலர் அறிவித்தாகிவிட்டது. ஆனால், இன்னமும் அது உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உலக விவகாரங்கள் காட்டிநிற்கின்றன.   

மூலதனமும் அதன் அடிப்படையான பொருள்முதல்வாதமும் விஞ்ஞான நோக்கில் ஆராய்வைக் கோருவன. அது வெறும் வரட்டுச் சூத்திரமன்று. மார்க்ஸியத்தின் இயங்கியலே அதை இன்னமும் காலத்துடன் பொருந்திவருவனவாய் ஆய்வியலுக்கான அடிப்படையாகத் தக்கவைத்துள்ளன.   

‘ரஷ்யப் புரட்சி’யின் நூறாவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம், அதன் 150 ஆவது ஆண்டைக் கடப்பது தற்செயல்தான். அதேபோல, மார்க்ஸ் தனது 200 ஆவது வயதை அடைவதும் தற்செயல்தான். தற்செயல்கள் தான் அருஞ்செயல்களுக்குக் கட்டியம் கூறுகின்றன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X