2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்

Editorial   / 2019 மே 23 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக வேண்டும். மே 18 நினைவுகூரல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், அஞ்சலி, நீதிக்கான கோரிக்கை, வீரப்பேச்சுக்கள் என்பவற்றுடன் முடிகின்றன. ஒரு மே, அடுத்த மே, அதற்கத்த மே என ஆண்டுகள் பத்து கடந்துவிட்டது. இப்போது மே18 ஆண்டு நாட்காட்டியில் சடங்குக்கு உரிய ஒரு தினம் மட்டுமே. 

பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து இந்த நினைவுகூரல்கள் அவலங்களுக்கான வடிகால்கள் என்பதைத் தாண்டி என்ன சமூகப் பெறுமதியைக் கொண்டிருந்தன என்ற வினா தொக்கி நிற்கின்றது. இந்த பத்தாண்டுகளில் புதிய தலைமுறையொன்று இலங்கையிலும் புலம்பெயர் சமூகத்திலும் உருவாகியுள்ளது. அவர்கள் தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை அறிவார்களா, மேற்குலகக் தலைநகர வீதிகளில் தவங்கிடந்தும் தவிர்க்கவியலாமல் போல மனித அவலத்தையும் அந்த இயலாமைக்கான அரசியல் வங்குரோத்தையும் அறிவார்களா. 

தமிழ்த்தேசியவாதம் தமிழ் மக்களை இத்தகைய அரசியல் வனாந்தரத்தில் அந்தரிக்க விட்டதன் காரணங்களை ஆராய்வதற்கான தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனால் அதை யாரும் செய்ததாகத் தெரியவில்லை. அதன் ஒருபகுதியே மே 18யை சடங்குகளினூடு கடந்து போதல். 

கடந்த பத்தாண்டுகளில் எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா? தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா? இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது? அதை எவ்வாறு மாற்றுவது?

தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் சாத்தியமாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இதையே மே 18 நினைவுகூரல்களும் செய்து கொண்டிருக்கிறது. 

புலம்பெயர்ந்து வாழ்வோர் இலங்கையில் நடப்பதை இலங்கையில் உள்ளவர்களை விடத் தாங்களே முழுமையாக அறிவார் என நம்புகிறார்கள். தாங்களே போராட்ட குணத்தோடு இருப்பதாகவும் இலங்கையில் உரிமைக்கான தாகம் நீர்த்துப் போய்விட்டதாகவும் எண்ணுகிறார்கள். தமிழ் மக்களின் விடுதலையை ஜெனீவாவிலும் பல மேற்குலகக் தலைநகரங்களிலும் கண்டெடுக்கலாம் என்பது அவர்கள் முடிவு. மே 18 சடங்காகவும் வீரப்பேச்சுக்களாகவும் குறுகுவதன் பின்னாலுள்ள எண்ணவோட்டம் இதுவே. 

விடுதலை என்பது காலக்கெடு வைத்து சொல்லப்படுவதல்ல. விடுதலை என்பது எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவொரு அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள் தனது தோள்கள் மீது விடுதலைப் போராட்டத்தை ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல. ஒரு ஆயுதப் போராட்ட வெற்றியை எடுத்து அதை விடுதலையாக மாற்றுகிற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள் இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையைக் குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறக்கவிடலாகாது.

ஒரு சமூகப் பெறுமானத்தைக் கொண்டிராத நினைவுகூரல்கள் அரசியல் பெறுமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தப்பித்தவறி இந்த நினைவுகூரல்கள் அரசியல் பெறுமானம் பெற்றுவிட்டால் குத்தகைக்காரரின் அரசியல் வெறுமையை அடுத்த தலைமுறை காறி உமிழும். இன்னும் பல மே 18க்கள் வரும். அப்போதும் நாம் சடங்குகளுடனும் சம்பிரதாயங்களுடனும் கடந்து போவோம். அது அவர்களின் இருப்புக்குப் பாதுகாப்பானது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X