2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே

Gopikrishna Kanagalingam   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, ட்ரயல் அட் பார் முறையில் நடத்தப்பட்டு, நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என நீதிமன்றம் இனம்கண்ட அனைவருக்கும், உச்சபட்ச தண்டனையை வழங்கியிருப்பதாக, மன்று குறிப்பிட்டிருக்கிறது. தீர்ப்பின் சாதக, பாதகங்களை ஆராய்வது, இந்தப் பத்தியின் நோக்கம் கிடையாது.  

உலகமெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு, ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வகையில், ஒரு வித நிம்மதி உணர்வைத் தருவதை மறுத்துவிட முடியாது. ஆனால், இவ்வாறான வழக்குகள் முடிவுக்கு வரும் போது, வழக்கமாக எழுப்பப்படும் கேள்விகளை, மீண்டுமொருமுறை எழுப்புவது சாலச்சிறந்தது தான்: “நோயைத் தீர்த்திருக்கிறோமா, அல்லது நோயின் அறிகுறிகளுக்கு மருந்து வழங்கியிருக்கிறோமா” என்பது தான் அது.  

இதுபற்றிய கலந்துரையாடல்களைப் பதிவுசெய்ய முன்னர், இன்னொரு விடயத்தைக் குறிப்பிடுவது அவசியமானது. வித்தியா படுகொலையின் வழக்கு முடிந்து, குற்றவாளிகளுக்கான தண்டனைகளை அறிவிப்பதற்கு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சென்றமை என்பது, சிறிது அதிககாலம் எடுத்துக் கொண்டமை போல் தெரியலாம். ஆனால் உண்மையில், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், இவ்வாறான சாதாரண நபர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கான நீதி கிடைக்கும் காலத்தோடு ஒப்பிடும் போது, இந்த வழக்கின் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான நாட்களே எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது, குறைவான காலம் தான்.  

இவ்வளவு “விரைவாக” இந்த வழக்கு முடிக்கப்பட்டமைக்கு, நீதித்துறையோ அல்லது நாட்டின் நிறைவேற்று அதிகாரப் பிரிவுகளோ உரிமை கோர முடியாது. இதற்கான அத்தனை பெருமையும், மக்களையே சாரும். வித்தியாவுக்கு நடந்த கொடுமைகள் பற்றிய தகவல்கள் வெளியான பின்னர், மக்கள் நடத்திய போராட்டங்களும் எதிர்ப்புகளும், இவ்விடயத்தில் “துரிதமான” தீர்ப்பொன்றைப் பெறுவதற்கு வழிவகுத்தன என்பது தான் உண்மையானது. “போராட்டங்களால் என்னதான் நடக்கப் போகிறது?” என்று சலித்துக் கொள்ள முன்னர், மக்கள் போராட்டங்களுக்கு இருக்கும் பலத்தை, மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.  

இனிவரும் காலங்களில், உணர்வுகளுக்கு நெருக்கமான இவ்விடயங்களுக்கு மாத்திரமல்லாது, தமது வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற விடயங்களுக்கும், தமது எதிர்ப்பைப் பதிவுசெய்வது அவசியமென்பதை, மக்கள் அறிந்துகொள்வது அவசியமானது என்பதை, இச்சம்பவம் வெளிப்படுத்திச் செல்கிறது.  

இலங்கைப் பொலிஸாரின், கடந்தாண்டுக்கான பாரிய குற்றங்கள் தொடர்பான அறிக்கையின்படி, கடந்தாண்டில் கொலைகள் தொடர்பாக 502 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 478 சம்பவங்களுக்கான தீர்வுகள், கடந்தாண்டு முடிவுக்குள் பெறப்பட்டிருக்கவில்லை.  

அதேபோல், கடந்தாண்டில் 2,036 வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள், பொலிஸாரிடம் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில், எந்தவொரு சம்பவத்திலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. வெறுமனே 29 முறைப்பாடுகள் மாத்திரம், தீர்வு காணப்பட்டிருக்கின்றன அல்லது வேறு காரணங்களுக்காகத் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. 2,007 முறைப்பாடுகள், தீர்வின்றிக் காணப்படுகின்றன.  


இலங்கையில், மணமுடித்த பெண் மீதான கணவனின் வன்புணர்வு என்பது, இன்னமும் குற்றமாக இல்லாத நிலையில், அந்த வன்புணர்வு முறைப்பாடுகள் இதில் அடங்காது. இலங்கையின் சமூகக் கட்டமைப்புகள் காரணமாக, வன்புணர்வை வெளிப்படையாகச் சொல்வதில் பெண்களுக்குக் காணப்படும் நேரடியானதும் மறைமுகமானதுமான காரணிகளும் உள்ளன. தவிர, இவ்வாறு, வழக்குகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் நீண்ட காலம் காரணமாக, நீண்டகாலமாக நீதிமன்றத்துக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் செல்வதற்கு விரும்பாதோரும் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில், உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, நிச்சயமாக மிக அதிகமாக இருக்கும்.  

இந்த நிலையில் தான், வித்தியாவின் படுகொலைக்கும் வன்புணர்வுக்கும் எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்பது, இலங்கையில் காணப்படும் இவ்வாறான நிலைமையை மாற்றுவதற்கு, எந்தளவுக்கு உதவுமென்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. இல்லாதுவிடின், இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி ஆராய வேண்டிய அவசியத்தையும் பற்றி அலச வேண்டியிருக்கிறது.  

மக்களின் எதிர்ப்புகளுக்காக, வழக்குகளைத் துரிதப்படுத்துவது என்பது, வரவேற்கப்படத்தக்கது என்ற போதிலும், இவ்வாறான மக்களின் கவனம் பெறப்படாத, எங்கோவொரு மூலையில் வசித்து வருகின்ற, அதிகாரப் பலமோ அல்லது வேறு வகையான பலங்களோ இல்லாதவர்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு எப்போது தீர்ப்பு வழங்கப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறதல்லவா? கடந்தாண்டில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட பாரிய குற்றங்கள் தொடர்பான 36,937 முறைப்பாடுகளில், உண்மையானவையாகக் கண்டுபிடிக்கப்பட்ட 36,767 முறைப்பாடுகளில், எத்தனை பற்றி, மக்களின் கவனம் காணப்பட்டது என்பது கேள்விக்குரியது. ஆகக்கூடுதலாக, 100 குற்றங்களைக் கூடக் குறிப்பிட முடியாது.  

இந்த நிலையில், மக்களின் கவனம் பெறப்படாத குற்றங்களுக்கான வழக்குகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாகவும், அவற்றுக்கான நீதிகளை வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்படுவது அவசியமானதல்லவா?  

அடுத்ததாக முக்கியமாக, வன்புணர்வுக் குற்றங்கள் பற்றி, அதிகமான கவனத்தை நாங்கள் செலுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது, இலங்கையில் மாத்திரமன்றி, இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலும் காணப்படும் நிலைமையாக இருக்கிறது. பெண்களைப் போற்றுவதாகக் காட்டிக் கொள்ளும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், இவ்வாறான வன்புணர்வுகள் தொடர்பில் எங்களது கோபம் திரும்புவது, நியாயமானது தான்.  

ஆனால், வித்தியா விடயத்தில், அந்த அப்பாவி மாணவி, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை மாத்திரமன்றி, படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஆனால், இது தொடர்பான அதிகமான ஊடகச் செய்தி அறிக்கைகளிலும் சரி, மக்களின் கருத்தாடல்களிலும் சரி, கொலை வழக்கு என்பது முன்னிறுத்தப்பட்டமையை விட, வன்புணர்வு என்ற விடயம், முன்னிறுத்தப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது.  

அந்த மாணவி, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தான் பிரதான விடயமாக இருந்தது. அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டமை, வன்புணர்வை மறைப்பதற்கான முயற்சியே என்ற வாதம் முன்வைக்கப்படலாம். அதை மறுப்பதற்கும் முடியாது. கொலை செய்வது என்பது, குற்றவாளிகளின் நோக்காக இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு. 

வன்புணர்வு அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பவை, சாதாரணமான குற்றங்கள் கிடையாது. அதில், மாற்றுக் கருத்தேதும் கிடையாது. ஒருவர், தனது உடல் மீது கொண்டிருக்கின்ற கட்டுப்பாட்டை மீறி, அந்த உரிமையை இல்லாது செய்வதென்பது, மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், ஒருவரைக் கொல்வதை விட அது மோசமானதா என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி ஆராய முற்பட்ட போது, சர்வதேச ரீதியாகவும், இது தொடர்பான விவாதங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. இரண்டு தரப்பும், தங்கள் பக்க நியாயங்களை முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.  

குற்றங்கள் என்றால் குற்றங்கள் தானே, அதில் பெரிது, சிறிது என்று ஏதும் உள்ளதா என்ற கேள்வியெழுப்பப்படலாம். அதுவும் ஒருவகையில் நியாயமான வாதமே. ஆனால் இறுதியில், ஒருவரின் உயிரைப் பறிப்பதென்பது, உச்சபட்சமானது இல்லையா?  

எதற்காக இந்த ஒப்பீடு, அதற்கும் இந்த வழக்குக்கும் அல்லது இது தொடர்பான நிலைமைக்கும் ஏதும் சம்பந்தமிருக்கிறதா என்று கேட்க முனையலாம். இதில், கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று, இலங்கை போன்ற நாடுகளில், வன்புணர்வு தொடர்பாகக் காணப்படும் பார்வை காரணமாக, வன்புணர்வுகளை முறையிடுவது குறைவாகக் காணப்படுகிறது. “என்னை ஒருவர் வன்புணர்ந்தார்” என்று குறிப்பிடுவது, சமூகத்தில் தங்களை ஒதுக்கிவைக்கும் ஒன்றாக அமைந்துவிடும் என, பெண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணத்திலும் தவறு கிடையாது. நாங்கள் அனைவரும், வித்தியாவுக்கான நீதியைப் பற்றி உண்மையிலேயே சிந்தித்தோமென்றால், வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்பதும் முக்கியமானது அல்லவா?  

வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது, சம்பந்தமே இல்லாமல், ஒருவரின் கைகளை, யாரோ வெட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவரை ஒதுக்கிவிடுகிறோமோ? இல்லையே. அவரது உரிமை மீறப்பட்டுள்ளது என்பதைக் கூறுகிறோம், அவரை அரவணைக்கிறோம். வன்புணர்வில் பாதிக்கப்பட்டவர்களும், தங்கள் உடல்மீது கொண்டிருந்த உரிமையை, காடையர்கள் மீறிவிடுகிறார்கள். அதற்காக, அவர்களை ஒதுக்கிவைப்பது என்பது, எந்தளவுக்குச் சரியானது?  

வன்புணர்வுகளைத் தீண்டாமை போன்று கையாள்வது, முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு மாத்திரமல்லாது, குற்றங்களையும் அதிகரிக்கிறது. பழிவாங்க வேண்டுமென்றால், பழிவாங்க விரும்பும் பெண்ணை அல்லது பழிவாங்க விரும்பும் பகுதியினரில் காணப்படும் பெண்ணை, வன்புணர்ந்து விட்டால் போதுமானது என்ற எண்ணம் காணப்படுகிறது. வன்புணரப்பட்டு விட்டால், அவமானத்தின் காரணமாக, அந்தப் பெண்ணோ அல்லது அந்தத் தரப்போ கூனிக்குறுகிப் போய்விடுமென்பது, சிலரின் எண்ணமாகக் காணப்படுகிறது.  

எனவேதான், வன்புணர்வுகளுக்கான நீதியை நாங்கள் வேண்டிநிற்கின்ற அதே நேரத்தில், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்களை அரவணைப்பதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். வன்புணரப்பட்ட உங்கள் மனைவியுடன் வாழ்வதிலும், வன்புணரப்பட்ட உங்கள் காதலியை மணமுடிப்பதிலும், வன்புணரப்பட்ட ஒரு பெண்ணை விரும்புவதிலும் மணமுடிப்பதிலும், வன்புணரப்பட்ட உங்கள் உறவுகளோடு முன்னரைப் போலவே நெருங்கிப் பழகுவதிலும், வன்புணரப்பட்ட யாரென்று அறியாதவர்களை எந்தவித வித்தியாசமின்றி நடத்துவதிலும், வன்புணர்வுக்கு உள்ளான எத்தனை பெண்களுக்கான ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்கிறது.   

இதற்கு மறுபக்கமாக, வன்புணர்ந்தவர்களை, எந்தக் கட்டத்திலும் சமுதாயத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடாது. வெளிநாடுகளில் காணப்படுவது போன்று, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் விவரங்கள் பகிரங்கமாக்கப்பட்டு, அவர்கள் மீது வாழ்க்கை முழுவதற்குமான கண்காணிப்புக் காணப்பட வேண்டும். இதன்மூலமாக, வன்புணரப்பட்டவர்களன்றி, வன்புணர்ந்தவர்களுக்கே, அவமான உணர்வு ஏற்பட வேண்டும். அது தான் உண்மையான நீதி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .