2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மைத்திரியை மட்டும் விட்டுவிடுமா? பதவி ஆசை

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜனவரி 17 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி மாதம் 10 திகதி, நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்ற போதிலும், அதன் மீதான கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இரண்டு முக்கிய விடயங்கள், மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.   

ஒன்று, மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம். மற்றையது, தமது பதவிக் காலம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளப்பியுள்ள சர்ச்சை.  

கடந்த வாரம், அவர், இந்த விடயம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, கடந்த வியாழக்கிழமை அது தொடர்பாக, நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு, இப்போது அதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

ஜனாதிபதியின் பதவிக் காலம், 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி முதல், ஐந்து வருடங்கள் வரை மட்டுமே என, அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மைத்திரியின் பதவிக் காலம் முடிவடைகிறது.   

பொதுவாக, ஜனாதிகளின் பதவிக் காலம் தொடர்பாக அரசமைப்பில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தொடர்பாக, உண்மையிலேயே உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பை வழங்கும் வரையில், ஒருவித மயக்கமே இருந்தது. 
அதற்குக் காரணம், அவர் பதவிக்கு வந்ததன் பின்னர், அந்த விடயத்தையும் உள்ளடக்கியவாறு 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது தெளிவாக கூறப்படாமை ஆகும்.  

19 ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக, அரசமைப்பில் கீழ்க் காணுமாறு கூறப்பட்டு இருந்தது. ‘ஏற்கெனவே ஜனாதிபதியாக இல்லாத நிலையில், தேர்தலொன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட நபர், அத்தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் ஆரம்பித்து, ஆறு வருட காலத்துக்குப் பதவி வகிப்பார்’.  

இங்கு என்ன கூறப்படுகிறது என்பது, மிகவும் தெளிவாக இருக்கிறது. ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதன் பின்னர், அதேஆண்டு ஏப்ரல் மாதம், 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.   

தேர்தல் மூலம் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அரசமைப்பு மாற்றப்பட்டு, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டால், ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டவர், தாம் தெரிவு செய்யப்படும்போது இருந்த சட்டத்தின்படி, ஆறு வருட காலம் நாட்டை ஆள்வதா அல்லது கொண்டு வரப்பட்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பதா என்ற சந்தேகம் வருவது நியாயமே.  

19 ஆவது அரசமைப்புத் திருத்தம், காலத்தில் பின்னோக்கியும் செல்லுபடியாகும் என்று அத்திருத்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தால், அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம், ஐந்தாண்டுகள்தான் என்பது, தெளிவாகக் கூறியதாக அமைந்து விடுகிறது. அவ்வாறு அத்திருத்தத்தில் கூறப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி வினவியதில் தவறில்லை.  இதுபோன்ற பிரச்சினைகள், இதற்கு முன்னரும் ஜனாதிபதிகளுக்கு ஏற்பட்டு இருக்கின்றன. 

இங்கு காணப்படும், முக்கிய விடயம் என்னவென்றால், இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை, அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில், தமிழீழ விடுதலை புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரினால் கொல்லப்பட்ட ரணசிங்க பிரேமதாசவும் அவரது பதவிக் காலத்தின் மிகுதிக் காலப்பகுதியில் பதவி வகுத்த ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவும் தவிர்ந்த, ஏனைய சகல ஜனாதிபதிகளும் தத்தமது பதவிக் காலம் அல்லது பதவிக் காலங்கள் தொடர்பான சட்ட சிக்கல்களை எதிர்நோக்கியமையே ஆகும்.   

முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்தன, முதலில் பிரதமராக இருந்து, பின்னர் 1978 ஆம் ஆண்டு, அரசமைப்புத் திருத்தப்பட்ட போது, மேற்கொள்ளப்பட்ட பிரமாணங்களின் பிரகாரம், ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்.   

அதன்பின்னர் அவர், 1982 ஆம் ஆண்டு தேர்தல் மூலம், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதாவது, அவர் இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்தாலும், ஒரு ஜனாதிபதித் தேர்தலையே எதிர்நோக்கினார்.  

1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவரது இரண்டாவது பதவிக் காலம் முடிவடைந்தது. ஒருவர், ஜனாதிபதி பதவியை இரண்டு முறைதான் வகிக்க முடியும் என்ற வரையறையொன்று, அரசமைப்பினால் வகுக்கப்பட்டு இருந்தது.   

ஆனால், தமது இரண்டாவது பதவிக் காலம் முடிவடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், தமக்கு மற்றொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என வாதமொன்றை முன்வைத்து, ஜெயவர்தன சர்ச்சையொன்றைக் கிளப்பினார்.  

அவரது வாதம், எடுத்த எடுப்பில் நிராகரிக்கப்பட முடியாத அளவில், பலமாக இருந்தது. “ஒருவர், இரண்டு முறைக்கு மேல், ஜனாதிபதியாக ‘மக்களால்’ தெரிவு செய்யப்பட முடியாது என்றே சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. தாம் முதலாவது முறை, ‘மக்களால்’ தெரிவு செய்யப்படவில்லை; மக்கள் தம்மைப் பிரதமராகவே தெரிவு செய்து இருந்தனர். அதன்பின், அரசமைப்பு மாற்றத்தின் மூலமே, தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டேன்” என, அவர் வாதிட்டார்.   

ஆனால், அவரது வாதம் எவ்வளவு பலமாக இருந்த போதிலும், இந்தச் சர்ச்சை தீவிரமடையும் போது, அவரது அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச, குண்டொன்றை போட்டு,ஜெயவர்தனவின் வாயை மூடச் செய்தார்.  

ஜெயவர்தனவின் பதவிக் காலம், 1988 ஆம் ஆண்டு முடிவடைந்ததன் பின்னர், அந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், தமக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்காவிட்டால், தாம் சுயேச்சையாகப் போட்டியிடுவதாகப் பிரேமதாச எச்சரித்தார்.   

உண்மையில், பிரேமதாச அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக அது, எதிர்க் கட்சித் தலைவி சிறிமா பண்டாரநாயக்கவுக்கே சாதகமாக அமையும். அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.   
ஏற்கெனவே, அவரது குடியியல் உரிமையை ஆறு வருடங்களுக்கு இரத்துச் செய்து, அவரது கடும் கோபத்துக்கு ஜெயவர்தன உள்ளாகியிருந்தார். எனவே, சிறிமா, ஜனாதிபதியானால் அவர் தம்மையும் அவ்வாறே பழிவாங்குவார் என ஜெயவர்தன பயந்தார். எனவே, அவர் பிரேமதாசவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்.  

அதையடுத்துப் பதவிக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாச, தமது முதலாவது பதவிக் காலத்துக்குள்ளேயே புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி ஒருவருக்குப் பலியானார். அவரது பதவிக் காலத்தின் மிகுதிக் காலத்துக்காக, நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க, எவ்வித குழப்பமுமின்றித் தமது பதவிக் காலத்தின் முடிவில், அதாவது 1994 ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். அதன் மூலம் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியானார்.   

அவரது பதவிக் காலம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் வரை (ஆறு ஆண்டுகளாக) இருந்தது. ஆனால், ஒரு வருடத்துக்கு முன்னர், 1999 ஆண்டு டிசெம்பர் மாதம், ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்தி, அதில் அவர் வெற்றி பெற்றார்.   

ஒருவர், இரண்டாவது முறை ஜனாதியாகத் தெரிவு செய்யப்பட்டால், அவர் முதலாவது முறை, எந்த மாதத்தில் எந்தத் திகதியில் பதவியேற்றாரோ, அந்தத் திகதியிலேயே அவரது இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அரசமைப்புக் கூறுகிறது.   

எனவே, சந்திரிகாவின் இரண்டாவது பதவிக் காலம் 2000 ஆவது ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே, அவர் ஒரு வருடத்துக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுத்தாலும், அவர் தமது முதலாவது பதவிக்காலத்தில், ஒரு மாதத்தை மட்டுமே இழக்க நேர்ந்தது. 

ஆயினும், தமது இரண்டவது பதவிக் காலம் ஆரம்பிக்கும் முன்னர், அப்பதவிக் காலத்துக்காக அவர் சத்தியப் பிரமானம் செய்து கொண்டதால், சட்டச் சிக்கல் ஒன்று ஏற்பட்டது.  

முன்னர் கூறியது போல், சந்திரிகாவின் இரண்டாவது பதவிக் காலம் 2000 ஆவது ஆண்டு நவம்பர் மாதமே ஆரம்பிக்கப்பட இருந்தது. 

ஆனால், இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் களத்தில் புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த அவர், அந்தத் தேர்தல் முடிவடைந்து மூன்று நாட்களில், அதாவது 1999 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி அந்தக் காயங்களோடே இரண்டாவது பதவிக் காலத்துக்காகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.   

எனவே, அவரது பதவிக்காலம் சட்டத்தின் பிரகாரம், 2000 ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கின்றதா? அல்லது அவர் இரண்டாவது பதவிக் காலத்துக்காக சத்தியப் பிரமானம் செய்து கொண்ட, 1999 நவம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றதா என்ற கேள்வி எழுந்தது.  

அவரது பதவிக் காலம், 2000 ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2006 ஆம் ஆண்டிலேயே நடைபெற வேண்டும். 1999 நவம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இருந்தால், அந்தத் தேர்தல் 2005 ஆண்டு நடைபெற வேண்டும்.   

இந்தக் கேள்வியும் 2005 ஆம் ஆண்டிலேயே எழுந்தது. ஜாதிக்க ஹெல உருமய இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. 

அப்போது, சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற சரத் என் சில்வாவே பிரதம நீதியரசராக இருந்தார். அவருக்கும் சந்திரிகாவுக்கும் அக்காலத்தில் முறுகல் நிலையும் நிலவி வந்தது. அவர் சந்திரிகாவின் பதவிக்காலம், 2005 ஆம் ஆண்டு முடிவடைவதாகத் தீர்ப்பு வழங்கினார்.   

அதையடுத்துப் பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, 2010 ஆம் ஆண்டு 18 ஆவது அரசமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து, ஜனாதிபதியின் அதிகாரங்களையும் அதிகரித்துக் கொண்டு, ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்று இருந்த வரையறையையும் நீக்கினார்.  

 பின்னர், தமது இரண்டாவது பதவிக் காலம் முடிவடைய இரண்டு வருடங்கள் இருக்க, ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்த நடவடிக்கை எடுத்தார். அப்போது ஓய்வு பெற்றிருந்த சரத் என் சில்வா, ஒரு குண்டை எடுத்துப் போட்டார்.   

18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ், ஒருவர் மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமாக இருந்தது. ஆயினும் மஹிந்த ராஜபக்ஷ, 2010 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பதவியேற்றவுடன், அப்போது இருந்த சட்டத்தின்படி, அதற்கு மேல் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடும் தகைமையை இழந்துவிட்டார் என்றும், அதன்படி மஹிந்த முன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அவர் வாதிட்டார்.   

ஆனால், மஹிந்த அவரது வாதத்தைப் பொருட்படுத்தாது, 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், மைத்திரியிடம் தோற்றுப்போனார். 

முன்னைய ஜனாதிபதிகள், பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க எடுத்த முயற்சிகளையே இந்த வரலாறு காட்டுகிறது.  

தமது பதவிக் காலம், எப்போது முடிவடைகிறது என மைத்திரி உயர் நீதிமன்றத்திடம் கேட்பது நியாயமே. ஏனெனில், அரசமைப்பில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.   

ஆயினும், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஜனாதிபதியினதும் (அதாவது மைத்திரியினதும்) பிரதமரினதும் (அதாவது ரணில் விக்கிரமசிங்கவினதும்) பதவிக் காலம், 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் பிரகாரமே நடைமுறைக்கு வரும் என, அந்த அரசமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

அதன்படியே அவரது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  

அடுத்ததாக, அவரது கேள்வி நியாயமாக இருந்தபோதிலும், அவர் ஏன் அக்கேள்வி நடைமுறையில் எழ இரண்டு வருடங்களுக்கு முன்னர், அதைக் கேட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. அவர் சும்மா இருந்திருக்கலாம்; தேர்தல்களை நடாத்துவது அவரல்லவே. தேர்தல்கள் ஆணைக்குழுவே. 

2020 ஆம் ஆண்டு நெருங்கும்போது, இப்போது தேர்தலை நடத்த வேண்டுமா அல்லது மேலும் ஒரு வருடத்துக்குப் பின்னர் நடத்த வேண்டுமா என்ற கேள்வி தேர்தல் ஆணைக்குழு முன் தோன்றும். அதற்கு அவர்கள், பதில் தேடிக் கொள்ளட்டும் என, மைத்திரி சும்மா இருந்திருக்கலாம்.  

அதேவேளை, ‘எனது பதவிக் காலம், ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா’ என மைத்திரி கேட்கவில்லை. “நான், ஆறு வருடங்கள் பதவி வகிக்க, ஏதும் தடைகள் இருக்கின்றனவா” என்றே அவர் உயர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.   

அதாவது, அவர் ஆறு வருடங்கள் பதவியில் இருக்க விரும்புகிறார். தாம், நான்கு வருடங்கள் மட்டுமே பதவியில் இருப்போம் என அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கூறினார். பின்னர், 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், அது ஐந்து வருடங்களாக அதிகரிக்கப்பட்டது.   

இப்போது அவர், தமக்கு ஆறு வருடங்கள் பதவியில் இருக்க என்ன தடைகள் இருக்கின்றன என நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.   

அதாவது, மேலே குறிப்பிடப்பட்டது போல், இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள், எவ்வாறு பதவி ஆசையில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தினார்களோ, அதேபோன்ற ஆசை, மைத்திரியையும் விட்டுவிடவில்லைப் போலும்.   

தாம் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிப்பேன் என, மைத்திரி இதற்கு முன்னர் பல முறை கூறியிருக்கிறார். 

ஆனால், நான்கு வருடங்களுக்கென்று வந்து, ஆறு வருடங்கள் இருக்க முயற்சித்தவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும், ஆச்சரியப்பட வேண்டியதில்லை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .