2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோடியை எச்சரிக்கும் ‘உத்தரபிரதேச கூட்டணி மொடல்’

எம். காசிநாதன்   / 2018 மார்ச் 19 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேச அரசியல், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.  

 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 71 இடங்களைப் பெற்று, மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. அக்கட்சி பெற்ற 282 எம்.பிக்களில், இந்த 71 தான் மிக முக்கியமான எண்ணிக்கை.   

அதுமட்டுமின்றி, பா.ஜ.கவின் நீண்ட காலக் கூட்டணிக் கட்சிகளான, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், மஹாரஷ்டிராவில் பால்தக்ரேவின் சிவசேனா கட்சியும் சேர்ந்து, 34 எம்.பிக்கள் பா.ஜ.கவுக்குத் துணையாக இருந்தார்கள்.   

ஆனால், மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், இதுவரை ஆறு தொகுதிகளில், தொடர்ந்து பா.ஜ.க தோல்வியை தழுவியிருப்பதாலும் மேலும், மூன்று தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற வேண்டியிருப்பதாலும் இன்றைக்கு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு 273 எம்.பிக்களின் ஆதரவு இருக்கிறது.   

அதாவது, ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மையான 272 
எம்.பிக்களை விட, ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் அதிகமாக இருக்கிறார்.   
இப்படியொரு மிகஇக்கட்டான நெருக்கடியை, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தல்கள் பா.ஜ.கவுக்கு உருவாக்கி விட்டன. 

ஆனால், மாநிலக் கட்சிகள், இந்த எதிர்ப்பை, நெருக்கடியை பா.ஜ.கவுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முதலாக எலியும் பூனையுமாக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் கட்சியும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சியும் கூட்டணி அமைத்து, பா.ஜ.கவின் நாடாளுமன்றப் பலத்தின் குரல் வளையைப் பிடிக்க வைத்து விட்டன.   

பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி தொடங்கியதிலிருந்து, அவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், மாநில உரிமைகளைப் பதம் பார்க்கும் விதத்தில் அமைந்து விட்டன. அரசியல் சட்டப்படி, மாநில அரசாங்கங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் பொதுவாக இருக்கும் பொதுப்பட்டியலில் உள்ள பல்வேறு விடயங்களில், மத்திய அரசாங்கம் மூக்கை நுழைத்து, மாநிலங்களுக்குத் தொல்லை கொடுத்து, மாநில உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளியது.  

 ‘கூட்டுறவு கூட்டாட்சி’ என்பது பா.ஜ.கவின் கொள்கைப் பிரகடனம் என்றாலும், செயலில் மீண்டும் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடமே சென்று குவியும் வண்ணம், அடுத்தடுத்து நிகழ்வுகள் அரங்கேறின. பா.ஜ.க விடயத்தில், ‘பூனைக்கு முதலில் மணி கட்டுவது யார்’ என்ற கேள்வி, பல மாநிலக் கட்சிகள் மத்தியிலும் எழுந்தது.  

முதலில் மேற்குவங்கத்திலிருந்து அந்தக் குரல் ஒலித்தது. அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.கவுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். அடுத்ததாக, தமிழகத்திலிருந்து அந்தக் குரல் ஒலித்தது. தி.மு.கவின் சார்பில் அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்து, சென்னையில் மாநாடு போன்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, மத்திய பா.ஜ.க அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.  
 பிறகு, மஹாராஷ்டிராவில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் சிவசேனா வம்பு செய்தது. பீஹாரில் முன்னாள் முதல்வர் மாஞ்சி தலைமையிலான கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது. ஆனால், இவை எல்லாம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி விடவில்லை.   

அதேநேரத்தில், உத்தரபிரதேசத்தில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் வைத்த இடைத் தேர்தல் கூட்டணி, பா.ஜ.கவுக்குள்  அதிர்வு அலைகளை உருவாக்கி விட்டது.  

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தான் வெற்றி பெற்ற கொரக்பூர் மக்களவைத் தொகுதியை இராஜினாமாச் செய்தார். அவருடன் இருக்கும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, புல்பூர் தொகுதியை இராஜினாமாச் செய்தார்.  

 உ.பி முதலமைச்சர், “என்கவுன்டர் மூலம் ஆட்சி நடத்துகிறார்” என்றும், “இந்துத்துவா கொள்கையை மிகக் கடுமையாக முன்னெடுத்துச் செல்கிறார்” என்றும் குற்றச்சாட்டுக்க உள்ளான, யோகி ஆதித்யானாத்தை தோற்கடிக்க, இதுதான் தக்க தருணம் என்று பகுஜன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைந்தது.   

எதிர்பார்த்தது போலவே, இரு மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வியடைந்து விட்டார்கள். இந்தக் கூட்டணி, 2019  நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்தால், உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், பா.ஜ.க சென்ற 2014 தேர்தலில் வெற்றி பெற்ற எண்ணிக்கையில், தொகுதிகளைப் பெற முடியாது.    

இது தெரிந்துள்ள சூழ்நிலையில்தான், இப்போது ஆந்திர முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார். ஏற்கெனவே பா.ஜ.கவுக்குள் பிரதமர் மோடிக்கு, எதிர்க்கருத்து உள்ளவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். குறிப்பாக, முன்னனித் தலைவர்களில் ஒருவரான அத்வானி, முழுமையாக ஓரங்கட்டப்பட்டுள்ளார்.   

முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா போன்றவர்கள், மோடி அரசாங்கத்தை விமர்சித்த வண்ணம் இருக்கிறார்கள். டாக்டர் சுப்ரமண்யம் சுவாமியோ, தன் தாக்குதலையும் முனை தீட்டி வருகிறார்.   

ஆகவே, உ.பி தேர்தல் தோல்வி, அகில இந்திய பா.ஜ.கவிலும் கருத்து மோதல்களுக்கு நிச்சயம் வழி வகுக்கும் என்பதே இன்றைய நிலவரம். ஆகவே காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்த முடியாத நெருக்கடியை மாநிலக் கட்சிகள் ஏற்படுத்தி விட்டன.  

மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.க, இதற்கு முன்பு, குறிப்பாக வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும், மாநிலக் கட்சியால்தான் பிரச்சினையை சந்தித்தது. மறைந்த ஜெயலலிதா, அ.தி.மு.கவின் சார்பில், டெல்லியில் சோனியா காந்தியுடன் ஒரு ‘ரீ பார்ட்ட’ நடத்தி, வாஜ்பாய் ஆட்சியை 1999இல் கவிழ்த்தார்.  

 அதன்பிறகு, ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, ஆதரித்த மாநிலக் கட்சிகளையே குறி வைத்து அரசியல் செய்ததன் விளைவாகத் தானும் தோற்று, தன்னுடன் இருந்த கூட்டணிக் கட்சிகளையும் தோற்க வைத்தது.

அதன் விளைவு, மாநிலக் கட்சிகளும் பலவீனப்பட்டு, காங்கிரஸும் பலவீனப்பட்டு, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி அமோக வெற்றி பெற்றார். ஆனால், காங்கிரஸ் செய்த அதே தவறை பா.ஜ.கவும் இப்போது செய்துள்ளது. சி.பி.ஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பது சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை என்றாலும், கூட்டணியில் இருக்கும் அவரது கட்சி எம்.எல்.ஏவுக்கு வேண்டியவர்கள் வீட்டிலேயே, பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் அவரைச் சூடேற்றின.

அதேபோல், சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் புகார்கள் அடங்கிய புத்தகத்தை, ஜெகன் ரெட்டியிடம் இருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டது, சந்திரபாபு நாயுடுவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, ஆந்திர மாநில சிறப்பு நிதி என்பதைக் காரணம் காட்டி, பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேற, சந்திரபாபு நாயுடு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

உத்தரபிரதேச இடைத் தேர்தல் தோல்வியில், பா.ஜ.க மாட்டியிருக்கும் இந்த நேரம்தான் சரியான நேரம் என்று கருதி, அக்கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டார் சந்திரபாபு நாயுடு.  

பா.ஜ.கவுக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ‘மாற்றுச் சக்தி இல்லை’ என்ற முழக்கமும், நாடு முழுவதும் மோடி வாக்கு வங்கிதான் இருக்கிறது என்ற உத்தரபிரதேச முதலமைச்சரின் பேச்சும் இனி எடுபடாது என்ற வாதத்தை, உத்தரபிரதேச இடைத் தேர்தல் தோல்வி மட்டுமல்ல, பீஹார் மாநிலத்தில் ஊழல் குற்றத்தில் சிக்கி, சிறையிலிருக்கும் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் வெற்றியும் பறைசாற்றியிருக்கின்றன.

தேசிய கட்சிகள் தவறு செய்யும் போது, மாநிலக் கட்சிகளால்தான் அந்தக் கட்சிகளுக்கு நெருக்கடியைக் கொடுக்க முடியும் என்பது, மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.   

ஆகவே, வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் இனி, ‘உத்தரபிரதேச கூட்டணி மொடல்’ பேசப்படும். எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸால் நேரடியாக பா.ஜ.கவை தோற்கடிக்க முடியவில்லையோ, அந்த மாநிலங்களில் எல்லாம், பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி அமைந்து, ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவுக்கு  மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கும்.   

2014இல் பா.ஜ.கவுக்குக் கிடைத்த 282 எம்.பிக்களில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட, வடமாநிலங்களில் இருந்துதான் 210 தொகுதிகள் கிடைத்தன. அந்த எண்ணிக்கையை மீண்டும் பெற, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான சவாலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு பா. ஜ. க தள்ளப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்ல, இனி எஞ்சியிருக்கும் ஆட்சியின் காலத்தை, ‘கத்தி மேல் நடப்பது போல்’ நடத்த வேண்டிய நெருக்கடிக்கும் மோடி ஆளாகியிருக்கிறார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .