2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யானைச் சவாரி

முகம்மது தம்பி மரைக்கார்   / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன.  

 அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  

களத்தில் எதிராளி பலமாக இருக்கும் போதும், மற்றைய தரப்புகளுக்குக் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எழுகிறது. சிலருக்குக் கூட்டணி என்பது இராஜதந்திரமாகும்.   

கூட்டாளிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, மிக இலகுவாக வெற்றிக் கனிகளைப் பறித்துக் கொள்வதற்காக, இவர்கள் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றனர். கூட்டணி அமைத்தமையினாலேயே தோற்றுப் போனவர்களும் இருக்கின்றனர்.  

யானைச் சின்னத்தில் மு.கா  

தற்போதைய அரசியல் களத்தில், ஐ.தே.கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணியும், சுதந்திரக் கட்சியின் தலைமையில் இன்னுமொரு கூட்டணியும் பிரதானமாக உருவாகியுள்ளன.  

 இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் 
ஐ.தே.கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பது, முஸ்லிம் அரசியலரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.  

ஐ.தே.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிடுவதொன்றும் புதிய விடயமல்ல. நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், முஸ்லிம் காங்கிரஸ் பல தடவை போட்டியிட்டுள்ளது.   

ஆனாலும், உள்ளூராட்சித் தேர்தலொன்றில் தனது அடையாளத்தை இழந்து, ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய தேவை, முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏன் உருவானது என்கிற கேள்வி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது.  

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதென முடிவு செய்துள்ள அனைத்துப் பிரதேசங்களிலும், 
ஐ.தே.கட்சியுடன் இணைந்து, யானைச் சின்னத்திலேயே களமிறங்கத் தீர்மானித்துள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.   

அக்கரைப்பற்றுக்கு சனிக்கிழமை (02) வருகை தந்திருந்த மு.கா தலைவர் ஹக்கீம், அங்கு சந்தித்த கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்களிடம், இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீர்மானத்தை எடுப்பதாயின், அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் அதற்கான அங்கிகாரத்தைப் பெறுதல் வேண்டும். ஆனால், வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்துதான் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடப் போகிறது எனும் செய்தியை, முஸ்லிம் காங்கிரஸின் சில உயர்பீட உறுப்பினர்கள் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டனர். மு.கா தலைவரின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே, இந்தக் கூட்டணி அமைந்துள்ளது என்கிற விமர்சனமும் கட்சிக்குள் உள்ளது.  

உள்ளக எதிர்ப்பு  

உள்ளூராட்சித் தேர்தல்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடத் தேவையில்லை என்கிற கோசம், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸுக்குத் தனது சுயத்தையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டு, அடி மட்டத் தேர்தலொன்றை எதிர்கொள்வதற்கு ஏன் முடியாது என்கிற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.  

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதேச மத்திய குழுவினர், இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (03) தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர். அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுவின் தலைவராக, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் 
ஏ.எல்.எம். நசீர் பதவி வகிக்கின்றார். 

ஞாயிற்றுக்கிழமை (03) கூடிய முஸ்லிம் காங்கிரஸின் மேற்படி மத்திய குழுவினர், இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.  

1. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு உறுதியளித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக வழங்க வேண்டும்.  

2. உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், தனது மரச்சின்னத்திலேயே போட்டியிட வேண்டும். 

ஆகிய, இரண்டு தீர்மானங்களை எழுத்து மூலம் நிறைவேற்றியுள்ளனர்.  
இந்த மனநிலையில்தான், அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களும் உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

சவால்  

இவ்வாறானதொரு நிலைவரத்தை மு.கா தலைவர் ஹக்கீம், எவ்வாறு கையாளப் போகின்றார் என்கிற கேள்வி, இங்கு முக்கியமானதாகும். அதேவேளை, இப்படியான சூழ்நிலைகளை எதிர்கொள்வதென்பது, மு.கா தலைவருக்குப் புதியதோர் அனுபவமுமல்ல.  

 யானையின் முதுகில் சவாரி செய்வதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கும் போதெல்லாம், இவ்வாறான கூக்குரல்கள் எழுவதென்பது, மு.கா தலைவரின் அனுபவங்களில் சாதாரண விடயங்களாகும்.   

ஆனாலும், இம்முறையும் மேற்சொன்ன எதிர்ப்புக் குரல்கள் சாதாரணமானவையாகத்தான் இருக்குமா என்பதுதான் கேள்விக்குரியதாகும்.  

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில், ஐ.தே.கட்சிக்குச் சொல்லிக் கொள்ளுமளவு ஆதரவுடன்தான் இருக்கின்றதா என்பது, கடந்த காலத் தேர்தல் பெறுபேறுகள் காட்டிய வெளிப்படையான உண்மையாகும். 

எனவே, அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியுடன், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அமைத்து, யானைச் சின்னத்தில் போட்டியிடுவதால், குறித்துச் சொல்லத்தக்க நன்மைகள் எவையும் மு.காவுக்கு கிடைத்து விடவும் போவதில்லை.   

இவ்வாறானதொரு நிலையில், “ஏன் ஐக்கிய தேசியக் கட்சியுடன், நமது கட்சி கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான், மு.கா தொண்டர்களின் கேள்வியாகும்.  

சாத்தியங்களும் அசாத்தியங்களும்  

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் பலவீனமாக உள்ள இடங்களில் 
ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கும், பலமான இடங்களில் தனித்துக் களமிறங்குவதற்கும் ஐ.தே.கட்சித் தலைமை விட்டுக் கொடுக்குமா என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.   

ஏனெனில், அவ்வாறான கூட்டணி அமைத்தமையால், கடந்த காலங்களில் முஸ்லிம் பகுதிகளில் ஐ.தே.கட்சி மிகவும் நலிந்து போய் விட்டதாக, ஐ.தே.கட்சியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் போன்றோர், விசனம் தெரிவித்து வருவது இங்கு கவனத்துக்குரியதாகும்.  

அடையாளமிழக்கும் அபாயம்  

எது எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு அடிக்கடி கூட்டணியமைத்து வருவதனால், தனது தனித்துவத்தையும் அடையாளத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அந்தக் கட்சிக்குள் கூறப்படும் கருத்தை, அத்தனை இலகுவில் தட்டிக் கழித்து விடவும் முடியாது.   
முஸ்லிம் காங்கிரஸின் தளம் என்று அறியப்படும், அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலொன்றிலேயே, அந்தக் கட்சியானது தனது அடையாளத்துடன் களமிறங்கவில்லை என்பது, அங்குள்ள மு.கா தொண்டர்களுக்கு ஜீரணிக்க முடியாத விடயமாகத்தான் இருக்கும்.  

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யாரையெல்லாம் வேட்பாளர்களாகக் களமிறக்குவது என்பதும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. வட்டாரத் தேர்தல் முறைமையிலேயே தேர்தல் நடைபெறவுள்ளது என்பதால், உள்ளூரில் மிகவும் அறியப்பட்ட ஆளுமையுள்ள நபர்களைக் களமிறக்கினால் மட்டுமே வெற்றியீட்டலாம்.   

விகிதாசாரத் தேர்தலில் அங்குமிங்கும் வாக்குகளைக் கூட்டிப் பொறுக்கியெடுத்து வெற்றிபெற்றவர்களின் கதைகளெல்லாம், வட்டாரத் தேர்தலில் பலிக்காது. எனவே, கடந்த உள்ளூராட்சிச் சபைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் பலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் கிடைக்காது.   

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட எட்டு உள்ளூராட்சி சபைகளில், ஐந்து சபைகளைக் கடந்த முறை மு.கா கைப்பற்றியிருந்தது. அந்தச் சபைகளிலிருந்த மு.காவின் கணிசமான உறுப்பினர்களுக்கு இம்முறை வேட்பாளர் சீட்டுக் கிடைக்குமா என்பது கேள்விதான்.  

களமிறங்க வேண்டிய மாகாணசபை உறுப்பினர்கள்  

இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தள்ளிப் போயுள்ளதால், அந்தச் சபையில் உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்கள், தற்போது எந்தவிதமான அரசியல் பதவிகளுமின்றி ‘வெறுமனே’ உள்ளனர்.   

எனவே, நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களையும் களமிறக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத் தொண்டர்கள் முன்வைத்து வருகின்றனர்.   

இது குறித்தும் மு.கா தலைமை சிந்திக்க வேண்டியுள்ளது. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களை உள்ளூராட்சித் தேர்தல்களில் களமிறக்கினால், அவர்கள் போட்டியிடும் வட்டாரங்களை இலகுவாக வென்றெடுத்து விடலாம் என்று, மு.கா தொண்டர்கள் நம்புகின்றனர்.   

இன்னொருபுறம், மாகாணசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், உள்ளூராட்சித் தேர்தலில் தோற்று விட்டால், கதை கந்தலாகி விடும் அபாயமும் உள்ளது.   

அச்சம்  

அம்பாறை மாவட்டத்திலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் களமிறங்குவதற்கு ஏன் தயங்குகின்றது என்கிற கேள்வி இன்னொருபுறம் கவனத்துக்குரியதாகும். 

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் 
எம்.ரி. ஹசன் அலி, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.   

அதேபோன்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த 
எம்.ஏ.எம். தாஹிர் ஆகியோரும் மு.காவை விட்டும் வெளியேறியுள்ளனர்.   

மேலும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் மு.கா உறுப்பினர்கள் இருவர், ஹசன் அலி தரப்புடன் இணைந்துள்ளனர். அதேவேளை, பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக மு.கா சார்பில் பதவி வகித்த தாஜுதீன் என்பவரும் ஹசன் அலி அணியுடன் இணைந்துள்ளார்.  

 அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இத்தனை வெளியேற்றங்கள் இடம்பெற்றுள்ளமையினால், அந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களைத் தனித்து எதிர்கொள்வதென்பது மு.காவுக்கு சவால்கள் மிகுந்த விடயம்தான்.   

இதனை மனதில் வைத்துக் கொண்டு கூட, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு மு.கா தலைமை தீர்மானித்திருக்கக் கூடும்.   

சாத்தியமான கூட்டமைப்பு   

இவ்வாறானதொரு சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறியுள்ள 
ஹசன் அலி மற்றும் பஷீர் தரப்பினர், ‘ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கட்சியாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.  

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்கிற கட்சியின் தவிசாளராக பஷீர் சேகுதாவூத்தும், செயலாளர் நாயகமாக எம்.ரி. ஹசன் அலியும் பொறுப்பு வகிக்கின்றனர்.  

அந்தக் கட்சிக்கு தலைவர் என்று யாரும் கிடையாது. பல உறுப்பினர்களைக் கொண்ட தலைமைத்துவ சபையொன்று உள்ளதாக அறிய முடிகிறது. இந்தக் கட்சியும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டணியமைத்து, உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறியக் கிடைக்கிறது.   

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில்தான் இந்தக் கூட்டணி அமையவுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தக் கூட்டணியானது மு.காவுக்குச் சவாலாகவே இருக்கும். 

மேலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் ஆகியவையும், அம்பாறை மாவட்டத் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளன. இவற்றில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், ஹசன் அலி - பஷீர் தரப்பினரின் கூட்டணியும் அம்பாறை மாவட்ட தேர்தல் களத்துக்குப் புதிய வரவாகும்.  

எனவே, இவ்வாறானதொரு தேர்தல் களத்தைக் கடந்த காலங்களைப் போன்று முஸ்லிம் காங்கிரஸினால் இலகுவாக எதிர்கொள்ள முடியும் எனச் சிந்திக்க முடியாது. கட்சிகளும், போட்டிகளும் களத்தில் அதிகமாக இருக்கும். அதுவும், முஸ்லிம் காங்கிரஸ் மீது பல்வேறுபட்ட விமர்சனங்களும் அதிருப்திகளும் முஸ்லிம் மக்களிடத்தில் உள்ளன.   

குறிப்பாக, அண்மையில் இடம்பெற்ற கிந்தோட்ட வன்செயல்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து, முஸ்லிம் மக்களிடம் பாரிய விசனங்கள் உள்ளன. இப்படியானதொரு சூழ்நிலையில், அதுவும் ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்குவதென்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை.   இன்னொரு புறம், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு சட்ட முதுமானியாக உள்ளார். நாடாளுமன்ற அரசியலில் அவருக்கு சுமார் 25 வருடகால அனுபவம் உள்ளது. 

மேலும் அவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக 17 வருடங்கள் பதவி வகித்து, ஏராளமான சவால்களைச் சந்தித்து, அவற்றில் வெற்றிகளையும் கண்டவர்.   
அவ்வாறான ஒருவர், தற்போதைய சூழ்நிலையில், ஐ.தே.கட்சியுடன் கூட்டு வைப்பதால் ஏற்படும் நன்மை - தீமைகள் குறித்து விளங்காமல் இருப்பார் என்று கூறி விடவும் முடியாது.  

இருந்தாலும், ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்கிற பழமொழியையும், இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியும் உள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .